Advertisement

தமிழ் மகிழினி இருவரையும் சேர்ந்து நிற்க வைத்து, ராகவும் லலிதாவும் காரின் சாவியைக் கொடுக்க…

ஏன் மாமா நாங்களே வாங்கிறதா தான இருந்தோம்.” எனத் தமிழ் சொல்ல… “எங்க பெண்ணும் தான இந்த வீட்ல வாழப் போறா… எங்க பங்குக்கு நாங்களும் செய்யணும் தான.” என்றார் ராகவ் அவர்களிடம் சாவியைக் கொடுத்தபடி.

நேத்தே டெலிவரி எடுத்தாச்சு… இங்க தான் பின்னாடி நிறுத்தி வச்சிருந்தோம்.” என்றான் தருண்.

தமிழ் சாவியை மகிழினியிடம் கொடுத்து அவளையே எடுக்கச் சொன்னான். மகிழினி ஓட்ட… தமிழ் அவள் அருகில் உட்கார்ந்துகொள்ள… பின் இருக்கையில் தருணும், லேகாவும் ஏறிக்கொள்ள… அந்தக் குடியிருப்பைக் காரில் ஒரு சுற்றி சுற்றிவிட்டு வந்தனர். மகிழினிக்கு முன்பே கார் ஓட்ட தெரியும்.

அப்பா, இப்போ உங்களுக்கு நிம்மதியா… உங்க மருமகள் இனி கார்ல ஆபீஸ் போவா…” என தமிழ் கேட்க… மூர்த்திப் புன்னகைத்தார்.

பதினோரு மணிக்கு மேல் மகிழினி வேறு பட்டுப்புடவை மாற்றித் தயாராக… தமிழும் வேஷ்ட்டி சட்டையில் இருந்து பேண்ட் ஷர்ட் மாற்றிக் கொண்டான். பன்னிரண்டு மணியில் இருந்து உறவினர்கள் வர ஆரம்பித்தனர்.

மதிய உணவு அந்தக் குடியிருப்புக்கென அங்கே பொதுவாக இருந்த ஹாலில் பரிமாறினர். அதனால் இங்கே வருபவர்களுக்கு வீட்டை சுற்றி காட்டிவிட்டு, உணவு உண்ண அங்கே அழைத்துச் சென்றனர்.

தமிழின் மருத்துவமனையில் பணிபுரிவோர்கள் எல்லாம் மொத்தமாக வர முடியாது என்று கொஞ்சம் கொஞ்சம் பேராக வந்து உணவருந்தி சென்றனர். அங்கே வேலை செய்யும் பணியார்கள் கூட வந்து உணவருந்தி சென்றனர். தமிழ் யாரையும் விடவில்லை எல்லோரையும் அழைத்திருந்தான்.

தமிழும் மகிழினியும் இங்கே வீட்டில் இருந்து விருந்தினரை வரவேற்று வீட்டை சுற்றிக் காட்ட… பிறகு அவர்கள் உணவு உண்ண செல்லும் போது அங்கே ராகவனும் மூர்த்தியும் நின்று விருந்தினர்களை உபசரித்தனர்.

மகிழினியின் அலுவலகத்தில் இருந்து தாமதமாகத்தான் வந்தனர். அவள் அவர்களுக்கு வீட்டை சுற்றிக் காட்டியவள், மருத்துவமனையில் இருந்து வந்தவர்களை… உணவு உண்ணும் இடத்திருக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்த தமிழிடம் அவர்களை அறிமுகம் செய்தாள்.

எல்லோரையும் அறிமுகம் செய்தவள், சுபத்ராவை அறிமுகம் செய்யும் போது, “நான் வெளிநாடு போகாததுக்கு நீங்க சந்தோஷப்பட்டீங்களோ இல்லையோ… இவதான் ரொம்பச் சந்தோஷப் பட்டிருப்பா…”

கல்யாணம் ஆனதுனால நான் போக மாட்டேன்னு மேடம் நினைச்சாங்க.” என மகிழினி சிரிப்புடன் சொல்ல…

ஏன் எனத் தமிழ் கேட்க….

நான் போகலைனா இவ போகலாம்னு நினைச்சா…. ஆனா எங்க டீம் லீடர் சதீஷ் அந்தக் கனவுலேயும் மண்ணை அள்ளி போட்டுட்டார். வேற யாரையோ அனுப்பிட்டார்.” என்றாள்.

இப்போ எதுக்கு அதைச் சொல்ற?” என்றாள் சுபத்ரா சங்கடமாக.

அவங்களைச் சாப்பிட கூட்டிட்டு போ…. தமிழ் சொல்ல… மகிழினி அவர்களை உணவு உண்ண அழைத்துச் சென்றாள்.

விருந்தினர்கள் எல்லாம் வந்து உணவு உண்டு கிளம்பி இருக்க… வீட்டில் தமிழின் தாத்தா பாட்டி உணவு உண்டு ஓய்வெடுக்க…. கடைசியாக வீட்டு ஆட்கள் எல்லாம் சேர்ந்து உண்டனர்.

சாப்பிடும் இடத்தில் ஒரே கலாட்டா தான். இவர்கள் எல்லாம் சாப்பிடும் போது ஐஸ்கிரீம் காலியாகி இருக்க…. மகிழினி வருந்த…. தமிழும் தருணும் சென்று வாங்கி வந்தனர்.

மாலை வீட்டை சுத்தம் செய்து மகிழினி தங்கள் புது வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்ற… உணவு அருந்தும் அறையில், தமிழின் அம்மா புகைப்படத்தைப் பெரிதாக மாட்டி இருக்க…. அதன் முன்பும் விளக்கேற்றி வணங்கினார்கள்.

அன்று இரவு எல்லோரும் புது வீட்டில் தான் தங்கினர். மறுநாள் மதியம் அசைவ விருந்து முடிந்தே கிளம்புவதாக இருந்தது. இரவு எல்லோரும் சேர்ந்து இரண்டு அணிகளாகப் பிரிந்து அந்தாக்க்ஷரி விளையாட… தமிழ் அவ்வளவு சினிமா பார்க்க மாட்டான். அதனால் அவனுக்கு நிறையப் பாடல்கள் தெரியவில்லை. ஆனால் அவனுக்கும் சேர்த்து மகிழினி போட்டு தாக்கிக் கொண்டு இருந்தாள்.

என்ன டா இவ… இவளுக்குத் தெரியாத பாட்டே இருக்காது போலிருக்கே…” தமிழ் ஆச்சர்யப்பட…

ஆமாம் இதெல்லாம் பெரிய பெருமை தான்.” என தருண் கிண்டல் செய்ய…

ஹே உனக்குப் பாட தெரியுமா? தெரியாது இல்ல… அப்புறம் நீயெல்லாம் பேசக் கூடாது.’ என மகிழினி சொல்ல…

அவன் கிடக்கிறான் நீங்க பாடுங்க மேடம்.” என்றான் தமிழ்.

பாடிப் பாடி களைப்படைந்து, முன்தினமும் சரியாக உறங்கி இல்லாத காரணத்தால்… அன்று நேரமே படுத்து விட்டனர். அதிகாலையே பழைய வீட்டில் இருந்த சாமான்களைத் தமிழும் தருணும் சென்று ஆள் வைத்து இங்கே கொண்டு வந்து இறக்கி விட… ஒரு பக்கம் காலை உணவு தயராகிக் கொண்டு இருந்தது.

மதியம் வீட்டிலேயே ஆள் வைத்து சமைத்து, மட்டன் பிரியாணி, சிக்கென் வறுவல், மீன், முட்டை என மதிய விருந்து அமர்களப்பட…

மதிய உணவு உண்டு தமிழின் சித்தப்பா வீட்டினரும், தாத்தா பாட்டி மற்றும் மாமா வீட்டினரும் கிளம்ப… அதே போலக் கங்காவின் குடும்பமும் கிளம்ப… தாம்புலத்தோடு எல்லோருக்கும் ஆளுக்கு ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து தமிழும் மகிழினியும் வழியனுப்பினர்.

மாலை ராகவும் அவர் அம்மாவும் கிளம்ப… மகளுக்கு வீடு அடுக்கி கொடுக்க லலிதா மட்டும் இருந்தார். தருணும் லேகாவும் இரவு வரை இருந்தவர்கள் இரவு பேருந்தில் சென்னை சென்றனர்.

கீழே இருந்த இரண்டு அறைகளில் ஒன்று தமிழ் மகிழினிக்கும், இன்னொன்று மூர்த்திக்கு எனத் தயார் செய்திருந்தனர். இப்போதைக்கு மாடி அறைகளை விருந்தினர் அறைகளாகப் பயன்படுத்த நினைத்திருக்க… ஆனால் லலிதா இருந்ததால்… அவருக்குக் கீழே இருந்த அறையைக் கொடுத்து விட்டு தமிழும் மகிழினியும் மாடியில் இருந்த அறைக்குச் சென்றனர்.

“மூன்னு நாள் செம ஜாலி இல்ல….” மகிழினி சொல்ல…

ம்ம்… எல்லோரும் மூன்னு நாள் வந்து இருந்தது பெரிய விஷயம். நமக்காக வந்திருந்தாங்க.” என்றான் தமிழ்.

கணவனின் முகத்தையே பார்த்த மகிழினி, “ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றதும்,

அம்மா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். அவங்க ரொம்ப ஆசைபட்டாங்க, நான் இப்படி எல்லாம் இருக்கணும்னு. அவங்க பார்க்கலையேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு. ஏன் அவங்க இல்லாம போனாங்க?” என்ற கணவன் திடிரென்று சின்னப் பிள்ளையாக மகிழினிக்கு தெரிய… அவனைத் தன் மடி தாங்கியவள், “எங்க இருந்தாலும் அவங்க உங்களைப் பார்த்திட்டு தான் இருப்பாங்க. சீக்கிரம் நம்ம வீட்டுக்கே வந்திடுவாங்க.” மனைவி சொல்ல…

எப்படி?” என்றான்.

உங்க அம்மாவே நமக்குப் பாப்பாவா வந்து பிறப்பாங்க. நீங்க வேணா பாருங்க நமக்குப் பொண்ணு தான் பிறக்கும்.” மகிழினி நம்பிக்கையாகச் சொல்ல… மகள் என்றதும் தமிழுக்கும் குழந்தை ஆசை வந்துவிட… அவன் அதற்கான முயற்சியில் இறங்கினான்.

வீட்டிற்குத் தேவையானது எல்லாம் ஏற்கனவே வாங்கி இருக்க… அதையெல்லாம் கொண்டு வீட்டை ஒழுங்க படுத்துவதிலேயே… அடுத்த நான்கு நாட்கள் சென்றது. தமிழும் மாலை வந்து அவனால் முடிந்ததைச் செய்து கொடுப்பான். மகிழினி இந்த வாரம் முழுக்கவே லீவு எடுத்து இருந்தாள். வீட்டு வேலை எல்லாம் முடிந்திருக்க… லலிதாவும் தேனிக்கு கிளம்பி சென்றார்.

மகிழினியின் அலுவலகமும், தமிழின் மருத்துவமனையும் இந்த வீட்டில் இருந்து சற்றுத் தூரம் தான். காலை எட்டரை மணிக்கு கணவன் மனைவி இருவரும் ஒன்றாகப் புதுக் காரில் கிளம்பி சென்றனர்.

மகிழினிக்கு பழக வேண்டும் என்று தமிழ் அவளையே கார் ஓட்ட சொன்னான். மகிழினியின் அலுவலகம் சென்று அவளை விட்டுவிட்டுத் தமிழ் மருத்துவமனை சென்றான்.

அன்று மகிழினிக்கும் மீட்டிங் இருக்க.. மாலை வேலை முடிய தாமதமாக… கணவன் செல்லும் போது வந்து தன்னையும் அழைத்துச் செல்லும்படி சொன்னாள். மாலை சீக்கிரமே கிளம்பினால்… அவள் அலுவலக வண்டியில் வீட்டுக்கு சென்று விடுவாள்.

தமிழ் ஆறரை மணி போல மருத்துவமனையில் இருந்து கிளம்பியவன், மனைவியை அழைக்க… அவளது அலுவலகம் இருக்கும் பாதையில் சென்றான்.

ஊருக்கு சற்று வெளியே தான் மகிழினியின் அலுவலகம் இருக்கும். தமிழ் மெயின் ரோட்டில் இருந்து கிளை சாலையில் திரும்ப… எதிரில் பைக்கில் வந்தவனைப் பார்த்து திடுகிட்டான். அவன் அந்தக் கார் திருடன் போலவே இருக்க… அவனும் இவன் செல்ல வேண்டிய பாதையில் செல்ல… தமிழ் அவனைப் பின் தொடர்ந்தான்.

தன்னை ஒருவன் பின் தொடருவது தெரியாமல்…. அந்தப் பைக்காரன் சென்று கொண்டே இருந்தான்.

Advertisement