Advertisement

நீ என் நாயகன்

அத்தியாயம் 12

திலிபனை பற்றி இந்த வழக்கிற்காகப் போலீஸ் ரகசியமாக விசாரிக்க… அவன் வேறு வழக்குகளில் சிக்கிக் கொண்டான்.

ஏற்கனவே தமிழிடம் மாட்டியது போல… குறிப்பிட்ட மருந்து கம்பெனியின் மருதுக்களை மட்டும் நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்து… நிறையக் கமிஷன் வாங்குவது என ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலைகள் செய்து வைத்திருந்தான்.

அவனின் வழக்கு வருமான வரித்துரைக்கும் விசாரணைக்குச் சென்றது. அவன் விஷயம் தெரிந்ததும், மருத்துவமனை நிர்வாகம் அவனைப் பணியில் இருந்து நீக்கியது.

தான் எப்படி இதில் சிக்கினோம் என்றே அவனுக்குப் புரியவில்லை. அதிகமாக ஆசைப்பட்டு இப்போது விசாரணைக்கு அலைந்து கொண்டு இருந்தான்.

கிருஷ்ணகுமார் சொன்னதை வைத்து திருமலை நகருக்கு சென்ற போலீசார்… அவர் வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றதாகச் சொன்ன இடத்தில் இருந்த, சிசிடிவி காட்ச்சிகளை ஆராய்ந்து பார்த்தால்… அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான எந்தப் பதிவும் இல்லை.

இந்த ஆளு நம்மை முட்டாளுன்னு நினைச்சிட்டு இருக்கானா?” என்ற காவல் அதிகாரி அவரை மீண்டும் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். “இந்த முறை ஒழுங்கா உண்மையைச் சொல்லு… நீ சொன்ன மாதிரி திருமலை நகர்ல உன் கார் அந்தத் தேதிக்கு நிற்கவே இல்லை. நீயே ஆக்சிடென்ட் பண்ணிட்டு, சும்மா நாடகம் ஆடுறியா?” எனப் போலீஸ் மிரட்டிக் கேட்க….

சார்…. நான் ஒரு விஷயம் சொல்றேன். ஆனா இந்த விஷயம் வெளிய வரக் கூடாது.” என்றவர்,

திருமலை நகருன்னு நான் சொன்னது பொய் தான். எனக்கு இன்னொரு வீடு இருக்கு. அங்கதான் அன்னைக்குப் போய் இருந்தேன். காரை ரெண்டு தெரு தள்ளி நிறுத்திட்டு நடந்து போயிட்டு வந்து பார்த்தா காரை காணோம்.”

“என் பொண்டாட்டிக்கு ஏற்கனவே என் மேல சந்தேகம். இதுல முல்லை நகருன்னு சொன்னா நான் அங்க தான் போனேன்னு கண்டுபிடிச்சிடுவா… அதனால திருமலை நகருன்னு புகார் கொடுத்திருந்தேன். அதை அப்படியே உங்ககிட்ட சொன்னேன் சார்.” என்றதும், காவல் அதிகாரி தலையில் அடித்துக் கொண்டார்.

இந்த வழக்கிற்கான விசாரணையில் குற்றவாளி சிக்கினானோ இல்லையோ… ஆனால் மற்றவர்கள் எல்லாம் வேறு விஷயங்களில் மாட்டினர்.

இந்த ஆளு பேச்சை நம்ப முடியாது. இந்த ஆளையும் கூடிட்டு போய், அந்த ஏரியாவுல விசாரிங்க.” என உயர் அதிகாரி சொல்ல… காவலர்கள் அவரை அழைத்துக் கொண்டு சென்றனர். கிருஷ்ணகுமார் அழைத்துச் சென்று காட்டிய இடத்தின் அருகே இருந்த சிசிடிவி பதிவுகளை வாங்கிக் கொண்டு வந்தனர்.

அதிலிருந்து அவர்களுக்குக் கிடைத்த தேவையான பதிவுகளை மட்டும் தனியாக எடுத்து வைத்திருந்தனர். தமிழும் அன்று காவல் நிலையம் வந்திருக்க… அவனுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தெரிய… அவனுக்கும் போட்டுக் காட்டினர்.

மழை கொட்டிக் கொண்டு இருந்ததால்… சாலையில் ஆள் நடமாட்டம் இல்லை. கிருஷ்ணா குமார் காரை எதிர்சாரியில் நிறுத்திவிட்டு இறங்கி நடக்க… அப்போது அங்கிருந்த கடையில் இருவர் நின்றிருந்தனர். முகம் தெளிவாக இல்லை.

கிருஷ்ணகுமார் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் மின்சாரமும் போய்விட… சாலை விளக்குகளும் இல்லை. அதனால் சிசிடிசி பதிவு அவ்வளவு தெளிவாக இல்லை. அதனால் கிருஷ்ணகுமார் காரில் யார் ஏறினார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அந்தக் கார் கிளம்பும் போது அதிலிருந்து வந்த ஒளியில்… காரில் இரண்டு பேர் என்பது மட்டும் தெரிந்தது. ஆனால் காரை எடுக்கும் போதே… அதன் விளக்கை எல்லாம் உஷராக அனைத்து விட்டனர். அதனால் அதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை.

சார், கார்ல இருந்தவனோட ட்ரெஸ்ஸும், இதுக்கு முன்னாடி எதிர்க்கடையில இருந்தவனோட ட்ரெஸ்ஸும் ஒரே கலர் தான் சார். திரும்ப அந்தப் பதிவை போடுங்க.” தமிழ் சொல்ல… மீண்டும் அந்தப் பதிவை எடுத்து பார்த்தனர்.

எதிர்க்கடையில் நின்றிருந்தவனின் உடையும், காரில் இருந்தவனின் உடையும் பொருந்திப் போக… முகம் தெளிவாகத் தெரியவில்லை என்றலும், இவர்கள் இருவரும் தான் காரை எடுத்துப் போயிருக்கிறார்கள் என்று தெரிந்தது.

குற்றவாளிகள் இருவரும் அந்த ஏரியாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனப் போலீஸ் விசாரணையை அந்த இடத்தில் இருந்தே தொடங்கினர்.

முகம் தெளிவாக இல்லையென்றாலும் அடையாளம் காண முடிந்தது. இவனைப் பிடித்தால் எல்லாம் தெரிய வரும் என்ற காவல் அதிகாரி, “ஆளை பிடிச்சிட்டு உங்களுக்குத் தகவல் சொல்றோம்.” எனத் தமிழை அனுப்பி வைத்தனர்.

வீடு பால் காய்ச்ச இன்னும் இரண்டு நாட்களே இருக்க… தமிழும் விடுமுறை எடுத்துக் கொண்டு இருந்தான்.

புதுமனை புகுவிழாவுக்கு முன்தினமே மகிழினியின் வீட்டினர், கங்காவின் குடும்பம், தமிழின் சித்தப்பா, மாமா  வீட்டினர் மற்றும் அவனின் தாத்தா பாட்டி என ஆட்கள் வந்துவிட… வீடே களை கட்டியது.

மதிய உணவிற்கு மேல் புது வீட்டிற்குச் சென்றனர். அங்கே ஆட்களை வைத்து வீட்டை சுத்தம் செய்துவிட்டு… பின் அலங்காரம் செய்ய அரம்பித்தனர். வீட்டின் வெளியே மின் விளக்குகளாலும், வீட்டின் உள்ளே மலர்களாலும் அலங்காரம் செய்தனர்.

தமிழும் தருணும் வெளி வேலையாகச் சுற்றிக் கொண்டிருக்க… மகிழினி தான் இப்படிச் செய்யுங்க, அப்படிச் செய்யுங்க என ஆட்களை வேலை வாங்கிக் கொண்டு இருந்தாள்.

மாலையே பூஜாரிகள் வந்து மறுநாள் பூஜைக்குத் தயார் செய்ய… என அந்த வேலை ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது.

இரவு வரை புது வீட்டிலேயே இருந்து, மறுநாளைக்குத் தேவையானது எல்லாம் தயார் செய்துவிட்டு, வீட்டிற்குள் வாசலில் என அங்கங்கே அழகான ரங்கோலி கோலமும் வரைந்துவிட்டு, இப்போது இருக்கும் வீட்டுக்கு வர பத்து மணிக்கு மேல ஆகிவிட்டது. அதன் பிறகு இரவு உணவை முடித்தனர்.

பெரியவர்கள் எல்லாம் அறையில் உறங்கி இருக்க… இளசுகள் எல்லாம் ஹாலில் படுத்து பேசிக் கொண்டு இருந்தனர்.

மகிழினியை தான் எல்லோரும் கேலி செய்து கொண்டு இருந்தனர்.

மேடம் வெளிநாட்டுக்கு போறேன்னு ஒரு பில்டப் பண்ணா பாரு…” என தருண் தன் அத்தை மகன்களிடம் கேலி பேச… இப்படித் தானே கல்யாணமும் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தா என்றார்கள்.

அது எனக்காகச் சொன்னது. நான் அப்போ கல்யாணம் பண்ற நிலையில இல்லை. அதனால எனக்காக என் பொண்டாட்டி அப்படிச் சொன்னா…” என்ற தமிழ் மகிழினியை பார்த்து, அப்படித்தானே என்று கேட்க… அவள் புன்னகைத்தாள்.

அது என்னவோ உண்மை தான். அவ உங்களுக்குன்னு இருந்திருக்கு… அதுதான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்திருக்கா… ரெண்டு பேருக்கும் கல்யாண நேரம் வந்ததும், எல்லாம் தானா கூடி வந்திடுச்சு.” என்றார் கங்கா.

அத்தை என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி ரொம்பச் சொல்லிட்டே இருந்தாங்க.” என மகிழினி சொல்ல…

எனக்குதான் தெரியும், தனியா இருக்கிறதோட கஷ்ட்டம். அப்புறம் நான் சொல்லாம யார் சொல்வா?” என்றார்.

அம்மா, நாங்க உங்களை நல்லா பார்த்துக்கலையா மா….” மகன்கள் கேட்க….

நீங்க பார்த்துக்கலைன்னு சொல்லலை… உங்க அப்பா இருந்திருந்தா… அவர் என்னோட நேரம் செலவு பண்ற மாதிரி… நாங்க எங்களுக்குள்ள பேசிக்கிற மாதிரி, என்ன இருந்தாலும் இருக்காது இல்லையா…”

வயசு காலத்துல சம்பாதிக்க, குழந்தைகளை வளர்க்கிறதுலையே போயிடும். உண்மையா தம்பதிகள் மனசு விட்டுப் பேசிக்கிற காலம், அவங்க கடமை எல்லாம் முடிச்சு, வேலையில இருந்தும் ஓய்வாகிற நேரம் தான். இந்த நேரத்தில உங்க அப்பா இல்லாதது எனக்குக் குறை தான்.” என்றார் கங்கா. எல்லோரும் அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்டனர். அவர் சொல்வது உண்மை தான். முதுமையில் நமக்கே நமக்கு என்று ஒருவர் இருப்பது பெரிய பலம் தான்.

அதன் பிறகும் அரட்டை அடித்துவிட்டு நள்ளிரவுக்கு மேல் உறங்கியவர்கள், அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து குளித்துக் கிளம்ப ஆரம்பித்தனர்.

நான்கரை மணிக்கு எல்லாம் எல்லோரும் பது வீட்டுக்கு செல்ல… அங்கே புது வீட்டில் ஓமம் வளர்த்து பூஜை செய்தனர்.

பூஜை எல்லாம் முடிக்க ஆறு மணிக்கு மேல ஆகிவிட… பிறகு புதுப் பானையில் பால் காய்ச்சி விட்டு, அப்படியே சக்கரை பொங்கலும் செய்து எடுத்து வந்து சாமிக்கு வைத்து படைத்தனர்.

கடைசியில் பூஜாரி பூசணிக்காய் உடைத்து டிஷ்ட்டி கழிக்க…. எல்லாம் முடிய ஏழு ஏழரை ஆகிவிட… முதலில் ப்ரோகிதர்களை உட்கார வைத்து உணவு பரிமாறியவர்கள், அவர்கள் சாப்பிட்டுத் தக்ஷனை பெற்று கிளம்பியதும், வீட்டு ஆட்கள் சாப்பிட ஆரம்பித்தனர். காலை வேலைக்கு வீட்டு ஆட்கள் மட்டும் தான். மற்ற உறவினர்கள் நண்பர்களை எல்லாம் மதிய உணவுக்குத் தான் அழைத்திருந்தனர்.

காலை உணவு முடிந்து அங்கிருந்த அறைகளில் சென்று உட்கார்ந்தோ அல்லது படுத்தோ ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருக்க… அப்போது தருண் வந்து தமிழையும் மகிழினியையும், தாங்கள் அவர்களுக்குப் பரிசு கொடுக்க வேண்டும் என்று அழைக்க… வெளியே சென்று பார்த்தால்… இப்போது வந்த புது மாடல் கார் அலங்கரிகப்பட்டு நின்று கொண்டிருந்தது.

Advertisement