Advertisement

நேராக யுவனின் வீட்டிற்கு இருவரும் செல்ல… கதவை திறந்து விட்ட சபரி எதற்கு இருவரும் வந்திருக்கிறார்கள் என்பது போலப் பார்க்க… இருவரும் சோபாவில் உட்கார்ந்திருந்த யுவனிடம் செல்ல… தருண் அவன் சட்டையைப் பிடித்து எழுப்பி நிற்க வைத்தவன், “உனக்கு நாங்க என்ன பண்ணோம்? மகிழினியை எதுக்கு டா காரை விட்டு இடிச்ச?” என்று உலுக்கி கேட்க….

நான் மகிழினியை எதுக்கு அப்படிப் பண்ணனும்? நான் எதுவும் பண்ணலை… வீணா என் மேல பழி போடதீங்க.” என்றான். அப்போது அங்கே வந்த விஜயா… “அவன் இப்போதான் திருந்தி ஒழுங்கா இருக்கான். நாங்க அவனுக்குக் கல்யாணம் பண்ண போறோம். என் மகன் மேல வீணா பழிபோட்டு அவன் வாழ்க்கையை வீணாக்கிடாதீங்க.” என்றார். 

என்ன நடந்தது?” என சபரி கேட்க… தமிழ் நடந்ததைச் சொல்ல…

யாரா இருந்தாலும் உன் மீது தான் முதல்ல சந்தேகம் வரும். நீ பண்ண வேலை அப்படி.” என மகனை பார்த்து சொன்ன சபரி.

இவனைக் கவுன்செல்லிங் எல்லாம் கூட்டிட்டு போய்… இப்போ தான் ஒழுங்கா இருக்கான். நீங்க சொல்ற தேதியில நாங்க மைசூர்ல இருந்தோம்.” என்றவர், “நாங்க எங்கனாலும் வந்து சொல்றோம். எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை.” என்றார்.

அந்த நேரம் காவல்துறையில் இருந்து வந்த காவலர் ஒருவர், யுவனையும் அவன் தந்தையையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர சொல்ல… அவர்களும் கிளம்பினர். விஜயா, “நீங்க ஏன் போகணும்?” என்று கேட்க…

நான்தான் சொன்னேனே யாரா இருந்தாலும் நம்ம மீது தான் முதல்ல சந்தேகம் வரும். இப்போ போகலைனா… அப்புறம் அவங்க அடிச்சு இழுத்திட்டு போவாங்க. நாங்களே நேர்ல போய்ச் சொன்னா தான் போலீஸ் நம்புவாங்க.” என்ற சபரி மகனை அழைத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றார்.

யுவன் வெளியே ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் உள்ளே நடுங்கிப் போய்த் தான் இருந்தான். போலீஸ் அவனை நம்பாமல் பிடித்து உள்ளே உட்கார வைத்து விட்டால்…. அவனுக்கு அந்தப் பயம் இருந்தது.

காவல்துறையினர் மாற்றி மாற்றிக் கேள்விகள் கேட்டு, யுவனைப் போட்டு ஒருவழியாக்கி இருந்தனர்.

 “நீதான் பண்ணேன்னு ஆதரம் இல்லை. அதனால தான் இப்போ விடுறோம். ஆனா விசாரணை போயிட்டு தான் இருக்கு. அதனால கொஞ்ச நாள் வெளியூர் எங்கையும் போகக் கூடாது.” என்று சொல்லித் தான் யுவனை விட்டனர்.

தமிழுக்கும் தருணுக்கும் ஒரே குழப்பமாக இருந்தது. யுவனும் இல்லையென்றால் யாராக இருக்கும். வேறு யாருக்கு மகிழினி மீது அப்படி என்ன பகை இருக்க முடியும். ஒருவேளை இது விபத்து தானோ… என இருவருக்கும் எதுவும் சரியாகப் புரியாமலே இருந்தது.

வீட்டிற்கு வந்ததும் சபரி, “டேய் எங்களுக்கு தெரியாம… நீ ஆளு யாரையும் வச்சு இதை பண்ணி இருக்கலையே…” என மகனிடம் கேட்டுப் பார்க்க…

“அப்பா, எனக்கு அந்த அளவுக்கு எல்லாம் மகிழினி மேல முதல்ல கோபம் இல்லை. அதுவும் ஷில்பா வந்த பிறகு நான் அப்படி யோசிப்பேனா என்ன?” என்றான். 

மறுநாள் தமிழின் வீட்டிற்குச் சபரியும் விஜயாவும் வந்தனர். அவர்கள் வந்து மகிழினியை பார்த்து விபத்தைப் பற்றி விசரித்தாவர்கள், “யுவன் உனக்குச் செஞ்சது எல்லாம் தப்பு தான். அவன் நல்லவன்னு சொல்லலை… ஆனா அவன் உன்னை வண்டியில இருந்து இடிச்சு தள்ளுற அளவுக்கு எல்லாம் போக மாட்டான்.”

உன் மேல அவனுக்கு அவ்வளவு வெறுப்பு எல்லாம் இல்லை. எதோ அந்த நேரம் ஒரு மாதிரி இருந்தான் அவ்வளவு தான்.”

அவனை ஒரு பொண்ணு விரும்புறா… அவதான் அவனைக் கவுன்செல்லிங் எல்லாம் கூடிட்டுப் போய்ச் சரி பண்ணா… இப்போதான் எங்ககிட்டயே அப்பா அம்மான்னு மதிச்சுப் பேசுறான். கல்யாணம் வேலை ஆரம்பிக்கத்தான் ஊருக்கே வந்தோம். இப்போ நாங்களும் அவனோட தான் இருக்கோம்.” என்றார் விஜயா… அவர் சொன்ன பிறகு தான் மகிழினிக்கு, யுவனின் மீது சந்தேகப்பட்டுப் புகார் கொடுத்தது எல்லாம் தெரியும்.

அவர்களிடம் நன்றாகப் பேசி உபசரித்து அனுப்பினாள் மகிழினி.

என்னைப் போய் யாரு வேணும்னே இடிக்கப் போறா… யாரோ தெரியாமத்தான் இடிச்சிருப்பங்க. அதைப் போய்ப் பெரிசு பண்ணிட்டு.” என்றாள் மகிழினி கணவனிடம்.

வீட்டுக்கு சென்ற விஜயா, “மகிழினியை அவங்க வீட்ல அந்தத் தாங்கு தாங்கிறாங்க. புது வீடு எல்லாம் கட்டிட்டு இருக்காங்களாம். உனக்குக் கல்யாணம்னு சொன்னேன், கொஞ்சம் கூட மகிழினி முகம் மாறலை… சிரிச்ச முகமாத்தான் கேட்டுட்டு இருந்தா…. புகுந்த வீட்ல அவளை நல்லா வச்சுக்கிறாங்க.” என்றார்.

அதெல்லாம் தமிழ் ரொம்ப நல்லா பார்த்துப்பான்.” என்றான் யுவனும்.

அன்று இரவு தருணும் ஸ்ரீலேகாவும் பேருந்தில் சென்னைக் கிளம்ப… மறுநாள் காலை தமிழும் மூர்த்தியும் மட்டும் மதுரை கிளம்பி சென்றனர்.

தமிழுக்கு யாராக இருக்கும் என்று குழப்பம். அதே எண்ணத்தோடு மருத்துவமனை கிளம்பி சென்றான்.

மருத்துவமனையில் ஓய்வு நேரத்தில் திலீபன் தமிழிடம் மிகவும் அனுசரணையாக நடந்து கொண்டான்.

உங்க மனைவி நல்லா இருக்காங்களா?” என்று அவன் அதிக அக்கறை காட்டி விசாரிக்க… ஒருவேளை தான் செய்ததை மனதில் வைத்து, அதோடு மகிழினியும் அன்று அவனை நன்றாக வைத்து வாங்கினாளே… அந்தக் கோபத்தில் வேறு யாரையோ விட்டு மகிழினிக்கு விபத்து ஏற்படச் செய்திருப்பானோ என்ற சந்தேகம் தமிழுக்கு வந்தது.

மாலை காவல் நிலையம் சென்றவன், இது ஒரு யூகம் தான். அவனாக இல்லாமல் கூட இருக்கலாம், கூடப் பணி செய்பவர், அதுவும் மருத்துவரும் என்பதால்…. திலிபனுக்குத் தெரியாமல் விசாரிக்கும்படி காவலரிடம் கேட்டுக் கொண்டான்.

போலிசாரின் கண்காணிப்பில் தான் வந்தது தெரியாமல்… திலீபன் ஜாலியாகச் சுற்றிக் கொண்டு இருந்தான்.

காரின் எண் எல்லாம் சிசிடிவி பதிவில் கிடைக்கவில்லை. காரின் மாடல் மற்றும் நிறத்தை வைத்து தான் தேடிக் கொண்டு இருந்தனர். ஒருவழியாக் காரைக் கண்டுபிடித்து அந்த வீட்டிற்குக் காவல்துறையினர் சென்று விசாரிக்க… அந்தக் காரின் உரிமையாளர் மிகவும் பயந்து போனார்.

அவரைக் காவல் நிலையத்துக்கு வர சொல்லிவிட்டு காவலர் சென்று விட்டார். தமிழும் அன்று காவல் நிலையம் சென்றிருந்தான்.

காரின் உரிமையாளர் கிருஷ்ணகுமார் காவல் நிலையத்திற்கு வந்தவர் தயங்கி தயங்கித்தான் பேசினார். அது இன்னும் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சார் என்னோட கார் கொஞ்ச நாள் காணாம போய் இருந்தது சார்… அப்போ தான் இந்த விபத்து நடந்திருக்கணும். எனக்கும் இந்த விபத்துக்கும் சம்பந்தம் இல்லை.” என்றார்.

எங்கே எந்த ஏரியாவில் வைத்து என விசாரித்தவர்கள், “கார் காணாம போச்சுன்னா போலிஸ்ல புகார் கொடுத்திருக்கனுமே…” என்றதும்,

புகார் கொடுத்தேன் சார்…” என்றதும் காவலர்கள் கணினியில் அவர் புகார் கொடுத்ததை ஆராய… உண்மையில் அவர் கார் காணாமல் தான் போயிருந்தது.

திருமலை நகர்ல தெரிஞ்சவங்க வீட்டுக்கு போனேன். நைட் நேரம் மழை வேற பெஞ்சிட்டு இருந்தது. அவங்க தெருவுக்குள்ள காரும் போகாது. அதனால காரை அந்தத் தெருவுக்கு முன்னாடி தள்ளி நிறுத்திட்டு இறங்கி நடந்து போயிட்டு வந்து பார்த்தா… காரைக் காணோம். உடனே போலீஸ்ல புகார் கொடுத்தேன்.”

ரெண்டு நாள் கழிச்சுக் கார் தெரு ஓரமா நின்னுட்டு இருந்ததா… போலிஸ்காரங்க தான் போன் செஞ்சு சொன்னாங்க. அப்புறம் போய் எடுத்திட்டு வந்தேன்.” என்றார் கிருஷ்ணகுமார்.

சார் யாரோ கார் திருடனுங்க, காரை திருடிட்டு போனவங்க, ஆக்சிடெண்ட் பண்ணதும் பயந்து காரை விட்டுட்டுப் போயிருப்பாங்க சார்… எப்படியும் மாட்டிக்குவோம்னு தெரியும்.” என உதவி காவலர் சொல்ல… அப்படியும் இருக்கலாம் என்றார் மேல் அதிகாரி.

நாங்க இன்னும் விசாரிச்சு பார்க்கிறோம்.” என்று மேல் அதிகாரி தமிழிடம் சொல்ல… அவன் நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தான்.

இன்னும் இரண்டு வாரங்களில் அவர்கள் புது வீடு பால் காய்ச்சும் விசேஷம் இருக்க… தமிழ் அந்த வாரம் சென்று மனைவியைத் தங்கள் வீட்டுக்கு அழைத்தும் வந்து விட்டான். மகிழினியும் அலுவலகம் செல்ல ஆரம்பித்தாள்.

எங்க ஆளையே காணோம்.” என ஆளாளுக்கு அவளை விசாரிக்க… மகிழினி தனக்கு நடந்த விபத்தைப் பற்றிச் சொன்னவள், “யாரோ ஓட்ட தெரியாதவன் என் வண்டியை இடிச்சிட்டு போனதுக்கு, போலீஸ் இப்போ வரை அவங்களைத் தேடிட்டு இருக்கு. தமிழ் இப்போதான் நான் ஆபீஸ் வரவே விட்டாங்க. அதுவும் தனியா போகக் கூடாதுன்னு ஆயிரத்தெட்டு கண்டிஷன். சாயங்காலம் மாமா கூப்பிட வருவாங்க.” என்றாள்.

விபத்து என்றதும் எல்லோரும் அவளை நலம் விசாரிக்க… எல்லோருக்கும் பதில் சொன்னவள், சுபத்ராப்வை பார்த்து,

நான் யூ எஸ் போகலைனா… உனக்குத் தான் அந்த வாய்ப்பு தருவாங்கன்னு நினைச்சு சதீஷ் கிட்ட கூடக் கேட்டேன். ஆனா வேற யாரையோ அனுப்ப போறதா சொல்லிட்டார். நீ ரொம்ப ஆசைப்பட்ட இல்ல… சாரி.” என்றாள்.

ஹே… இதுக்கு நீ என்ன பண்ணுவ? விடு அடுத்தத் தடவை பார்த்துக்கலாம்.” என்றாள் சுபத்ரா இலகுவாக. எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்க சென்றனர்.

புது வீட்டிற்குச் சாமான்கள் வாங்க கணவனும் மனைவியும் வார இறுதியில் வெளியே சென்றிருந்தனர். தமிழ் மனைவியோடு எங்கே சென்றாலும், அவன் பார்வை கவனமாகச் சுற்றிலும் ஆராயும். மகிழினி அந்த விபத்தைப் பற்றி எல்லாம் மறந்தே போனாள். அவள் அவர்களின் புது வீட்டிற்குக் குடிப்போகும் நாளை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெளியே அங்கே இங்கே சென்ற போதும், அப்படி யாரும் சந்தேகப்படும்படி அவன் கண்ணில் சிக்கவில்லை. அதோடு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஒருவேளை இது விபத்து தானோ என்ற சந்தேகம் அவனுக்கே வந்து விட்டிருந்தது. 

Advertisement