Advertisement

நீ என் நாயகன்

அத்தியாயம் 10

லலிதா வேறு மகள் வெளிநாடு செல்கிறாள் என்று, அவளுக்குக் கொண்டு செல்ல பலகாரங்கள், மிளகாய் பொடி எல்லாம் தயார் செய்ய நினைத்தவர், மகளிடம் எனென்ன வேண்டும் என்று கேட்க… அப்போதும் உண்மையைச் சொல்லாமல்…

அங்கயே எல்லாம் கிடைக்குது. அங்க நிறைய இந்தியன் ஸ்டோர்ஸ் இருக்கும், நம்ம வீட்ல பண்ணதை விட நல்லா வேறு இருக்கும்.” என மகிழினி நக்கல் செய்ய…

அத்தை, அவ அங்க போய்ச் சாப்பிட்டுப் பார்த்தா தான் தெரியும். விடுங்க அங்க போய் மேடம்க்கு என்ன கிடைக்குமோ அதை வாங்கிக்கட்டும்.” என்றான் தமிழ்.

ஆமாம் இவளுக்குப் போனாப் போகுதுன்னு பாவம் பார்த்தா ரொம்பப் பண்றா….” என்றார் லலிதாவும்.

மகிழினி கணவனுக்கு ஒழுங்கு காட்ட… யூ எஸ் போறோம்னு ரொம்பத் தான் டி நீ ஆடுற.” என்றான் தமிழ்.

வெளிநாடு போய் விடுவேன் என்று சொல்லியே வார இறுதியில் கணவனுடன் ஊர் சுற்றிக் கொண்டு இருந்தாள் மகிழினி. அவனும் அவள் வெளிநாடு சென்று விடுவாள் என்று… ஓய்வு நேரம் எல்லாம் மனைவியுடனே இருந்தான்.

தருணும் ஸ்ரீலேகாவும் தேனீ வந்திருந்தவர்கள், நேராக இங்கே மதுரைக்கு வந்துவிட்டு பிறகு தேனீ செல்லலாம் என இங்கே வந்து இறங்கினர்.

அண்ணனுக்கும் அண்ணிக்கும் விருந்து உபசரிப்பெல்லாம் மகிழினி பிரமாதமாகவே செய்திருந்தாள்.

தருணும் லேகாவும் வந்திருக்கிறார்கள் என மதியம் வீட்டுக்கு சாப்பிட தமிழும் வந்திருந்தான்.

இன்னும் ரெண்டு வாரம் தான். நான் யூ. எஸ் போயிடுவேன். என் புருஷனை விட்டு எப்படித்தான் இருப்பேனோ…” என மகிழினி வேண்டுமென்றே புலம்ப…. ஸ்ரீலேகாவும் நாத்தனருக்காக வருத்தப்பட…

இங்க பாரு அவ சும்மா சீன் போடுறா…. அப்படி அவ போய்த் தான் ஆகணும்னு கட்டாயம் இல்லை. ஆனா அப்படியும் கிளம்புறானா… அவளுக்கு வெளிநாடு போறதுக்கு இஷ்ட்டம் தான். ப்ளைட்டில ஏறினதும், நான் என் புருஷனை விட்டு ஊருக்கு போறேன்னு சந்தோஷமா குத்தாட்டம் போட்டாலும் போடுவா…” தமிழ் சொல்ல.. அதைக் கேட்டு தருணும், லேகாவும் சிரிக்க….

ச்ச… என்னைப் பத்தி உங்களுக்கு எவ்வளவு உயர்ந்த எண்ணம்.” என மகிழினி வராத கண்ணீரை துடைக்க….

ரொம்ப நடிக்காதடி.” என்றான் அவள் கணவன்.

இவ கொடுக்கிற பில்ட்அப் எல்லாம் பார்த்தா… போயிட்டு ஒருவாரம் ஊரு சுத்தி பார்த்திட்டு திரும்ப வந்திடுவான்னு நினைக்கிறேன்.” என்றான் தருண்.

உன் தங்கச்சியைப் பத்தி ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.” என்றான் தமிழும்.

இவர்கள் எல்லாம் ஹாலில் இருக்க… மகிழினி சமையல் அறைக்குச் செல்ல… அவள் பின்னே மூர்த்தியும் வந்தார்.

வெளிநாடு போறது விளையாட்டு இல்லை மகிமா… இங்க இருந்து கொஞ்சமாவது எடுத்திட்டு போ…. அங்க போனதும் உடனே போய்க் கடையைத் தேடி அலைவியா? கூட உன் பிரண்ட்ஸ் இருப்பாங்க தானே…. அங்க நீ சமாளிச்சிடுவியா?” என மூர்த்திச் சற்று படப்படப்பாக.

வயதானவரை மேலும் கவலைப்பட வைக்க வேண்டாம் என்று நினைத்தவள், “நான் வெளிநாடு போகலை மாமா… நானே ஆபீஸ்ல வரலைன்னு சொலிட்டேன்.” என்றாள். அதைக் கேட்டு மூர்த்தி மகிழ்ந்து போய் விட…

உங்க பையன்கிட்ட சொல்லாதீங்க. அவருக்கு நான் போறதுல இஷ்டம் இல்லை. ஆனா ஆவர் வாயில இருந்து போகாதேன்னு வரவே இல்லை. அவர் வாயில இருந்தே வரட்டும்.” என, மூர்த்தியும் மருமகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு சரி என்றார்.

நீ போகாத டி… என்னோடவே இருந்திடு.” எனக் கணவன் சொல்லி, தான் கேட்க வேண்டும் என்ற ஆசை தான்.

மாலை அண்ணன் அண்ணி கிளம்பும் போது, வீட்டு மருமகளாகத் தட்டில் வைத்து அண்ணிக்கு பட்டுப் புடவையும், அண்ணனுக்கு உடைகளும் வைத்து, அதோடு மஞ்சள் குங்குமத்துடன் தாம்பூலம் கொடுத்தாள்.

சென்னைக்கு வந்து தானே ப்ளைட் ஏறுவ…. ஒருநாள் முன்னாடியே வந்திடு.” எனச் சொல்லிவிட்டுத் தருண் சென்றான்.

அன்று இரவு அறையில் வைத்து, “சென்னைக்கு ப்ளைட் ஏற்றி விடவாவது வருவீங்க தானே….” மகிழினி கேட்க…

“ஏன் நான் வந்து தள்ளினா தான் ப்ளைட் போகுமா?” என நக்கலாக கேட்ட தமிழ், “அதுதான் உங்க அண்ணன் இருக்கானே நான் எதுக்கு?” என்றான். 

இப்போ என்னங்க உங்களுக்குப் பிரச்சனை? நான் போகட்டுமா… இருக்கட்டுமா… அதாவது சொல்லுங்க?” 

என்ன விளையாடிட்டு இருக்கியா நீ? ஒன்னு போகலைன்னு சொல்லு இல்லை அப்படிப் போறதுல உறுதியா இருந்தா… அதுக்கான வேலையை நீதான் பார்க்கணும். இப்போ வந்து என்னைக் கேட்கிற. நீ எனக்காக எல்லாம் போகாம இருக்க வேண்டாம். நீ கிளம்பு.” என்றதும், மகிழினிக்குக் கோபம் வர…. அவள் கட்டிலில் தள்ளி சென்று படுத்துக் கொண்டாள்.

தமிழ் ஏற்கனவே அவள் வெளிநாடு செல்லும் தவிப்பில் இருந்தான். அவன் அதை வெளியே காட்டிகொள்ளாமல் இருக்க… இவள் வேறு படுத்தி வைக்கிறாள் என்று நினைத்தவன், மனைவியைச் சமாதானம் செய்ய முயலவில்லை.

மறுநாள் காலையும் மகிழினி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தான் இருந்தாள். இருவரும் பேசாமல் வேலைக்குச் செல்ல கிளம்பினர்.

சாப்பிட்டு முடித்து மகிழினி தமிழுக்காகக் காத்திருக்காமல், அவள் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு கிளம்ப… அவன் தானே இத்தனை நாட்கள் அவளை அலுவலகத்தில் கொண்டு விட்டான், இன்று அவன் மீது இருக்கும் கோபத்தில், அவளே வண்டி எடுத்துக் கொண்டு செல்ல…

போயிட்டு வரேன் மாமா…” என்றவள், தமிழிடம் சொல்லிக் கொள்ளாமலே செல்ல… அவள் வண்டியை எடுத்துக் கொண்டு செல்லும் போது தான் மூர்த்திக் கவனித்தார்.

மகி தனியாவா வண்டியில போகுது.” என்று மூர்த்திக் கேட்க,

அதெல்லாம் ஒழுங்கா போயிடுவா?” எனத் தந்தைக்குச் சமாதானம் சொன்னவன், மனம் கேட்காமல், அவனும் வேகமாக அவன் வண்டியில் மனைவியைப் பின் தொடர்ந்தான்.

முக்கியச் சாலைக்கு அவள் சென்று விடுவதற்குள் பிடித்துவிட வேண்டும் என தமிழும் வேகமாகச் சென்றான். ஆனால் அவன் முக்கியச் சாலைக்குச் சென்ற போது, சாலையில் சிறு கூட்டம். தமிழ் யாருக்கு என்னவோ என்று நினைத்து பார்க்க… மகிழினி தான் சாலையில் விழுந்து கிடந்தாள்.

தமிழ் வண்டியை சாலை ஓரம் நிறுத்திவிட்டு இறங்கி ஓடினான். ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் காயம் இல்லை. கை கால்களில் அதிகச் சிராய்ப்பு. அங்கிருந்தவர்கள் முன்னால் சென்ற கார் மீது மோதியதில் விபத்து என்றனர்.

அவளுக்குக் கை கால்களில் தான் அடி. ஆனால் பயத்தில் மயங்கி இருந்தாள். அங்கிருந்தவர்கள் தண்ணீர் தெளிக்க… அவள் விழிப்பதும், கண்களை மூடுவதுமாக இருந்தாள். தமிழ் அவளுக்குப் பல்ஸ் பார்க்க… பல்ஸ் எல்லாம் நார்மல் தான்.

பயத்தில் தான் இப்படி இருக்கிறாள் என்று புரிந்தவன், சுற்றலும் பார்க்க… அதற்குள் அவனைத் தெரிந்தவர் ஒருவர், என் கார் இருக்கு அதுல ஹாஸ்பிடல் போயிடலாம் வாங்க என்றதும், தமிழ் மனைவியைத் தூக்கிக் கொண்டு காருக்குச் சென்றான்.

அவளைக் காரில் விட்டு மகிழினி வந்த வண்டியையும் சாலை ஓரத்தில் இருந்த கடை முன்பு நிறுத்திவிட்டு, தமிழ் சென்று காரில் ஏறினான். நேராக அவனது மருத்துவமனைக்கே சென்றனர்.

விஷயம் தெரிந்து வம்சியே வந்துவிட்டார். அவரைப் பார்க்க விட்டு தமிழும் அமைதியாக நின்று கொண்டான். அவனுக்கே இன்னும் படபடப்பு அடங்கவில்லை.

காயத்தை எல்லாம் சுத்தபடுத்தி மருந்து போட்டு, வேறு எதுவும் உள்காயம் இருக்கிறதா என ஆராய்ந்து, மகிழினிக்கு ட்ரிப்ஸும் போட்டு விட்டு நிமிர்ந்தவர், “இப்போதைக்கு எதுவும் பயப்படுற மாதிரி தெரியலை… எதுக்கும் இன்னைக்குச் சாயங்காலம் வரை அப்சர்வேஷன்ல இருக்கட்டும்.” என்றார்.

மகிழினி அடுத்த அரை மணி நேரத்தில் கண் விழித்து விட்டாள். தமிழ் எங்கையும் வலிக்குதா எனக் கேட்க… இல்லையென்றாள்.

நான் இங்க தான் இருப்பேன். எதுவும் பண்ணா சொல்லு.” என்றதும், “சரி…” என்றவள், கணவன் இருக்கும் தைரியத்தில் மீண்டும் உறங்கி விட்டாள்.

அந்த நேரம் மூர்த்தி அழைத்தார்.

தமிழ் மகிகிட்ட இருந்து ஆபீஸ் போயிட்டேன்னு தகவல் வந்துச்சா?” என்று கேட்க…

இப்போது விஷயத்தைச் சொன்னால் மூர்த்திப் பதறி விடுவார் என்று தெரியும். அதுவும் தனியாக வேறு இருக்கிறார் என நினைத்தவன், “நானும் அவ பின்னாடியே தான்பா போனேன். ஆபீஸ் போயிட்டாள்.” என்றான்.

ஓ அப்படியா… இன்னைக்கு வண்டியில போனது பரவாயில்லை… இனி வேண்டாம்னு சொல்லிடு.” என வைக்கச் சென்றவர்,

இன்னொரு விஷயம் நான் சொல்றேன், நீ மகிகிட்ட தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத.” என்றவர், “மகி வெளிநாட்டுக்கே போகலை… ஆபீஸ்ல வரலைன்னு சொல்லிட்டதா சொல்லுச்சு பா…”

அதுக்கு நீ போக வேண்டாம்னு சொல்லனும்னு ஆசை. அதுதான் உன்கிட்ட வம்பு பண்ணிட்டு இருக்கு.” என்றதும்,

எனக்கு மட்டும் அவளை விட்டுட்டு இருக்க முடியுமாப்பா… அதுவும் ஒரு வருஷம். அவளுக்குப் போக ரொம்ப இஷ்டம்னு தான் நான் என்னைக் கட்டுப்படுத்திட்டு இருந்தேன்.”

நேத்தும் இதை வச்சு தான் எங்களுக்குள்ள பிரச்சனை. என் மேல இருக்கக் கோபத்துல தான் வண்டு எடுத்திட்டு வந்தா…” என்றவன், “சரி நான் பார்த்துக்கிறேன்.” என வைத்து விட்டான்.

Advertisement