Advertisement

தமிழ் தருணை அழைத்து மகிழினிக்கு நடந்த விபத்து பற்றிச் சொன்னதும், தருண் தாங்கள் உடனே கிளம்பி வருவதாகச் சொல்ல… பெரிய அடி இல்லை தான். ஆனா எதுக்கும் நீங்க எல்லாம் அவளோட இருந்தா, கொஞ்சம் தைரியமா இருப்பா. வீட்டில் அப்பாவுக்குத் தெரியாது.” என்றவன், அவர்களை மருத்துவமனைக்கே வர சொன்னான்.

தருண், லேகா, ராகவ், லலிதா என அடுத்த அரைமணி நேரத்தில் காரில் கிளம்பி இருந்தனர். வழியெல்லாம் லலிதா புலம்பிக் கொண்டே வந்தார். இந்தப் பொண்ணுக்கு ஏன் இப்படி ஆகணும் எனக் கவலைப்பட்டுக் கொண்டே வந்தார்.

அவள் எழுந்ததும் தன்னை அழைக்கும்படி நர்சிடம் சொல்லிவிட்டு, தமிழ் தன் வேலையைப் பார்க்க சென்றான். ஏற்கனவே ஒருமணி நேரம் தாமதம் ஆகி இருந்தது.

வேறு வேலையாக இருந்தால்… நாளைக்கு வாங்க என்று சொல்லலாம். மருத்துவத்தில் அப்படியும் சொல்ல முடியாது. அன்று அவன் சற்று வேகமாகத்தான் வேலை பார்த்தான்.

அன்று நிறையப் பேர், முன்பே அறுவை சிகிச்சை செய்தவர்கள் தான். பரிசோதனைக்குத் தான் வந்திருந்தனர். அதனால் நேரமும் அதிகம் எடுக்கவில்லை.

மதிய இடைவெளி நேரம் தமிழ் அவன் அறையில் இருந்து வெளியில் வர…

என்ன டாக்டர் உங்க பொண்டாட்டிக்கு உடம்பு சரி இல்லைனதும், மின்னல் வேகத்துல வேலை செஞ்சீங்க போல… உங்க கொள்கை எல்லாம் காற்றில் போனதா?” எனத் திலீபன் நக்கல் செய்ய…

எந்த நோயாளியாவது நான் சரியா பார்க்கலைன்னு மனக்குறையோட போனாங்கன்னு தெரிஞ்சா வந்து பேசுங்க.” எனச் சொல்லிவிட்டுத் தமிழ் சென்றான்.

இருக்கும் டென்ஷன் போதாதென்று, இவன் வேறு என நினைத்தவன், அடுத்த இரண்டு நாட்களுக்கு யாருக்கும் முன்பதிவு கொடுக்க வேண்டாம் என நர்சிடம் சொல்லிவிட்டுச் சென்றான். அவனைப் பார்க்க வர… எப்போதுமே முன்தினம் தான் முன்பதிவு செய்ய முடியும். நடுநடுவே அறுவை சிகிச்சை இருக்கும் என்பதால்… வார முழுமைக்கும் முன்பதிவு இருக்காது.

நர்சை போகச் சொல்லிவிட்டு அவனே சென்று மனைவியைக் குரல் கொடுத்து எழுப்பினான். அவள் கண்ணைத் திறந்ததும்,

ஹே… உனக்கு ஒன்னும் இல்லைடி. என்னைப் பயபடுத்தாம எந்திரி.” என்றவன், அவளைக் கை கொடுத்து எழுப்பி, உட்கார வைத்தான். ட்ரிப்சும் முடிந்திருந்தது.

அவளது பல்ஸ் சரி பார்த்தவன், அவளைத் தன் மீது சாய்த்துக்கொண்டு,

உனக்கு இப்படி ஆனது அப்பாவுக்குத் தெரியாது. தெரிஞ்சா… அவரை உன் பக்கத்து பெட்ல தான் சேர்க்கணும். ஏன் டி நீயாவே கோவிச்சுகிட்டு வண்டியை எடுத்திட்டு வந்து இப்படி இழுத்து வச்சுகிட்ட….”

எனக்கு மட்டும் உன்னை வெளிநாடு அனுப்ப ஆசையா… நீதானே போறேன் போறேன்னு சொல்லிட்டு இருந்த… உன் ஆசையை ஏன் கெடுக்கனும்னு தான் நானும் பேசாம இருந்தேன். உன்னை விட்டு இருக்கிறது எனக்கு மட்டும் சந்தோஷமா என்ன?” என்றான்.

நான் போகலைன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்றதும்,

அப்பா தான் சொன்னார்.” என்றவன், அவள் உச்சியில் முத்தமிட்டு, “சாப்பிடலாமா?” என்று கேட்க… மகிழினி சரி என்றாள்.

அவன் யாருக்கோ அழைத்து அவர்கள் கான்டீனில் இருந்து உணவு எடுத்துக் கொண்டு வர சொல்ல…. அந்த நேரம் மகிழினியின் வீட்டினரும் வந்து விட்டார்கள்.

உனக்குத்தான் ஒழுங்கா வண்டி ஓட்ட துப்பு இல்லையே… நீ எல்லாம் எதுக்கு வண்டியில போற?” என லலிதா மகளை வைத்து வாங்க… அவள் வெளிநாடும் போகவில்லை. நம்மை எல்லாம் ஏமாற்றி இருக்கிறாள் என்பதையும் தமிழ் சொல்ல… லலிதா மருமகன் இருக்கிறார் என்று கூடப் பார்க்காமல், வாயில் வந்ததை எல்லாம் பேசினார். பிறகு அவரே பெரிதாக எதுவும் ஆகியிருந்தால் என நினைத்து அழுதார். எல்லோரும் அவரைச் சமாதானம் செய்தனர்.

அப்போது சொன்ன உணவு வந்துவிட… லலிதா மகளுக்கு ஊட்டிவிட தமிழும் சாப்பிட்டு, அவன் வேலையைப் பார்க்க சென்றான்.

லலிதா துணைக்கு இருக்க, ராகவ், தருண், லேகா மூவரும் சென்று சாப்பிட்டுவிட்டு வந்தவர்கள், லலிதாவுக்கும் வாங்கிக் கொண்டு வந்தனர்.

மாலை வந்த வம்சி மகிழினியை சோதித்துப் பார்த்தவர், அவளுக்கு எங்கெங்கே வலி இருக்கிறது எனக் கேட்டறிந்தார். பிறகு அவளை எழுந்து நிற்க, நடக்க வைத்தும், அவள் முதுகு தண்டில் அடி எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டவர், “வேற யாராவது இருந்தா நாளைக்குத் தான் அனுப்புவேன். தமிழ் கூட இருக்கிறதுனால பிரச்சனை இல்லை. சாயங்காலம் கிளம்புங்க.” என்றார்.

காயம் ஏற்பட்டதில் அவள் உடைகள் கிழிந்து இருக்க… தருணும் லேகாவும் சென்று அருகில் இருந்த கடையில் அவளுக்கு வேறு மாற்று உடை வாங்கி வந்தனர்.

மாலை தமிழும் வந்து விட… மகிழினியை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினர்.

இவர்கள் சென்ற நேரம் மூர்த்தி வீட்டில் இல்லை. தமிழ் நல்லவேளை என நினைத்துக் கொண்டான்.

அப்பா வர்றதுக்குள்ள நீ கொஞ்சம் பிரெஷ் ஆகிடு மகி. அவர் உன்னை இப்படிப் பார்த்தாருன்னா… அவ்வளவு தான்.” என்றான்.

மகிழினி தலை வாரி முகம் கழுவிகொண்டு வர… லலிதாவும் மகளுக்குக் குடிக்கப் பால் கொண்டு வந்து கொடுத்தார்.

தருணும் தமிழும் சென்று மகிழினி வண்டியை செர்விஸ் கடையில் கொடுத்து விட்டு, தமிழின் வண்டியை எடுத்துக் கொண்டு வீடு வந்தனர். மூர்த்தி அதன் பிறகு தான் வந்தார்.

என்ன இவங்க எல்லாம் திடிர்ன்னு வந்திருக்காங்க.” என மூர்த்தி நினைத்தாலும், அவர் ஒன்றும் கேட்கவில்லை.

உங்க மருமகள் வெளிநாடு போறேன்னு சொல்லி எல்லோரையும் ஏமாத்தினா இல்லை. அதுதான் அத்தை அவளை அடிக்க நேராவே கிளம்பி வந்துட்டாங்க.” எனத் தமிழ் சொன்னதும், மூர்த்தி நம்பியே விட்டார்.

ஓ… எனக்கு மட்டும் மருமகள் சொல்லிடுச்சு.” என்றதும்,

உங்க மேலையாவது பாசம் இருக்கே.” என்றார் லலிதா.

அதெல்லாம் ரொம்பப் பாசம் தான். மாமனாரை எந்த வேலையும் செய்ய விட மாட்டா.” என்றான் தமிழும் மனைவியைப் பற்றிப் பெருமையாக.

நான் இன்னைக்குச் சென்னைக்குப் போகணும். நல்லவேளை நீங்க எல்லாம் இருக்கீங்க. ரெண்டு நாள் இருந்திட்டு போங்க.” என மூர்த்திச் சொல்லிவிட்டு அவர் அறைக்குச் செல்ல… நல்லவேளை அவர் ஊருக்கு செல்கிறார் என எல்லோரும் நினைத்துக் கொண்டனர். அதனால் மகிழினிக்கு நடந்த விபத்து பற்றி யாரும் சொல்லவில்லை.

மகிழினியும் மாமனார் அறையில் சென்று நின்றவள், அதிக நேரம் நிற்க முடியாமல்… அங்கருந்த கட்டிலில் உட்கார்ந்து விட….

என்ன மா ஒருமாதிரி இருக்க?” என்றார்.

ஒன்னும் இல்லை மாமா கால் வலிக்குது.” என்றதும், மூர்த்தி அவள் பாதத்தைப் பிடித்து விட… பார்த்த மகிழினியின் வீட்டினருக்கு அவ்வளவு நெகிழ்ச்சியாக இருந்தது.’

ஆமாம் உங்க மருமகள் காலையில இருந்து ராத்திரி வரை நின்னுட்டு தான் வேலை பார்க்கிறாளா என்ன?” என்ற லலிதா, “நீங்க விடுங்க அண்ணா நான் அவளுக்குக் கால் அமுத்தி விடுறேன். மருமகள் காலை போய்ப் பிடிச்சிட்டு.” என்றதும்,

எனக்கும் பொண்ணு போலத்தான்.” என்றார் மூர்த்தி.

இரவுக்குக் குழம்பு இருக்க.. சட்னி அரைத்து எல்லோருக்கும் லலிதாவும் லேகாவும் இட்லி ஊற்றினர். மூர்த்தி உண்டுவிட்டு ஊருக்குச் சென்றதும், மகிழினி உண்டுவிட்டு மாத்திரையும் போட்டுக் கொண்டு கீழே இருந்த அறையிலேயே உறங்கி விட்டாள்.

தமிழ் தந்தையை விடப் பேருந்து நிலையம் வந்திருந்தான்.

ஏன் மகிழினி ஒரு மாதிரி இருக்கு?” என அவர் தமிழிடம் கேட்க… அவளுக்கு எப்பவும் வர்றது தான் என்றதும், மாதாந்திர தொந்தரவு என மூர்த்தி நினைத்துக் கொண்டார். அவங்க வீட்டு ஆளுங்களை நல்லா கவனிச்சு அனுப்பு என மகனிடம் சொல்லிவிட்டு சென்றார்.

தமிழ் வந்ததும் அவனும் தருணும் சேர்ந்து உண்டனர்.

தருனையும் லேகாவையும் மாடி அறையில் உறங்க சொன்ன தமிழ், மாமியாருக்கு ஹாலில் மெத்தையைக் கொண்டு வந்து வைத்துவிட்டு, அவர்களுக்கு வேறு எதுவும் வேண்டுமா எனக் கேட்டுவிட்டு, மனைவி இருந்த அறைக்குள் சென்றான்.

உடலும் மனமும் களைத்திருக்க… தமிழும் படுத்ததும் உறங்கி விட்டான்.

வெளியே ஹாலில், “நம்ம ஆளுங்க இல்லைன்னு வேண்டாம்னு நினைச்சோமே… ஆனா மாப்பிள்ளை எப்படிக் குணமா இருக்கார். அப்பா மனசையும் நோக விடாம… நம்மையும் எப்படிக் கவனிக்கிறார்.” என லலிதா சொல்ல…

ஆமாம் நம்ம மகிழினிக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்கணும் இருந்திருக்கு போல… அதுதான் முதல்ல முடிவான கல்யாணம் நின்னு போயிருக்கு.” என்றார் ராகவனும்.

எதோ இன்னைக்குத் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு.” எனப் புலம்பியபடி லலிதாவும் படுக்கத் தயாரானார்.

Advertisement