Advertisement

அப்பா திரும்ப அவசரப்பட்டுத் தப்பு பண்ணாதீங்க. நம்ம மகிழினிக்கு வேற நல்ல இடம் அமையும். இஷ்ட்டம் இல்லாதவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம மகிழினி கஷ்ட்டபடுறதை விட…. இப்போ கல்யாணம் நின்னு போறது ஒன்னும் பெரிய தப்பு இல்லை. விடுங்க வேற இடம் பார்த்துக்கலாம்.” என்றான் தருண்.

ஊர்ப் பெரியவர்கள் சபரியை வைத்து நன்றாக வாங்கினார்கள். “இப்படி ஒரு பையனை வச்சிட்டு நீ எல்லாம் எப்படிச் சம்பம்தம் பேசின?”

இனி நம்ம ஊர்ல உன் பையனுக்கு யாரும் பெண் கொடுக்கவும் மாட்டாங்க.”

உன் பையன் ஊருக்குள்ள காலை எப்படி வைக்கிறான்னு நாங்க பார்க்கிறோம்.” என ஆளுக்கு ஒன்று பேச….

சபரி அங்கிருந்த இருபக்க உறவினர்களிடமும், தங்கள் மகன் மீது தான் தவறு. அதற்குத் தாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் எனச் சொல்லி, எல்லோரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு மன்னிப்புக் கேட்க…

பையன் வேற யாரையோ லவ் பண்றான் போலிருக்கு…” என உறவினர்களும் பேசிக் கொண்டனர்.

உணவு தயாராகி விட்டது, அதை வீணாக்க முடியாது இல்லையா… தருண் உறவினர்களிடம் உணவு உண்டுவிட்டு செல்லும்படி சொல்ல…. உறவினர்களும் உணவு உண்ண சென்றனர். தருணின் நண்பர்கள் நின்று எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டனர்.

ராகவும் லலிதாவும் உடைந்து போனார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு தருண் வீட்டிற்குக் கிளம்பினான். எட்டு மணிக்கு எல்லோரும் வீட்டிற்கு வந்து நிற்க…. மகிழினிக்கு ஒன்றுமே புரியவில்லை. 

இந்த யுவன் உனக்கு வேண்டாம். உன்னை வேண்டாம்னு சொல்றவனைக் கல்யாணம் பண்ணிட்டு நீ நல்லா வாழ முடியாது மகி. உனக்கு அண்ணன் மேல நம்பிக்கை இருக்கு தானே…. நான் உனக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செய்து வைக்கிறேன்.” என தருண் சொன்னதும் தான் மகிழினிக்கு இந்தக் கல்யாணம் நடக்காது என்பதே புரிந்தது. 

நாளை திருமணம் என்னும் நிலையில், அந்தத் திருமணம் நின்று போனால் எப்படி இருக்கும்? மகிழினி அழுதே கரைய…. நல்லவேளை தருண் அவளை மண்டபத்திற்கு வரவிடவில்லை. இல்லையென்றால் பலருக்கும் காட்சி பொருளாகத்தானே இருந்திருப்பாள்.

அவளது தோழிகளும் அவளை சமாதானம் செய்ய…. கங்கா அவர்களை மண்டபம் சென்று உண்டுவிட்டு செல்லும்படி தங்கள் காரிலேயே அனுப்பி வைத்துவிட்டு வந்தவர், அழுது  கொண்டிருந்த மருமகளின் அருகே உட்கார்ந்து, 

உனக்கு எப்படிபட்ட மாப்பிள்ளை வருவான் தெரியுமா? எனக்கு இந்தப் பொண்ணு தான் வேணும். நான் கல்யாணம் பண்ணா இந்தப் பெண்ணைத் தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லி வருவான் பாரு.” என அவளைத் தேற்ற…

போதும் நான் ஒரு தடவை முட்டாள் ஆனது. எனக்குக் கல்யாணமே வேண்டாம்.” என்றாள் மகிழினி அழுகைக்கு இடையில்.

இதற்குப் பயந்து தான் ராகவ் உடனே வேறு மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று நினைத்தார். பெற்றவர்களின் கலகத்தைக் கவனித்த தருண், தான் பார்த்துக் கொள்வதாகச் சொன்னவன்,

அவன் சரி இல்லைன்னு உனக்கும் தெரியும் மகிழினி. கல்யாணம் செஞ்சிட்டு அவன் விட்டுட்டு போயிருந்தா என்ன பண்ணி இருப்ப? உன்னை வேண்டாம்னு நினைக்கிறவனோட நீ சந்தோஷமா வாழ முடியுமா… இப்போ கல்யாணம் நின்னது உனக்கு வேணா பெரிசா தெரியலாம். ஆனா நீ அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு காலத்துக்கும் அழுறதுக்கு… இன்னைக்கு ஒருநாள் அழுதா பரவாயில்லை.” என அவன் தங்கைக்கு இறக்கம் காட்டாமல் பேச….

அண்ணன் சொல்வது சரிதானே… கல்யாணத்திற்குப் பின்னால் எல்லாம் சரி ஆகிவிடும் எனத் தான் எப்படி நம்பினோம் எனத் தனது முட்டாள் தனத்தை நினைத்து மகிழினி குன்றிப் போனாள்.

ராகவனின் நண்பர் என்பதால்… மகிழினியும் அவர்கள் வீட்டிற்குச் செல்வது உண்டு. ஒருமுறை வீட்டில் கொலு வைத்திருக்கிறோம் என அழைத்ததால்…. கல்லூரியில் இருந்து தோழிகளுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தாள். அப்போது யுவனைப் பார்த்து இருக்கிறாள். பார்க்க சினமா கதாநாயகன் போல அழகாக இருந்தான்.

இவளை மட்டும் அல்ல… அவன் இவள் தோழிகளையும் கவனித்துப் பார்க்கவில்லை. இவர்களைப் பார்த்ததும் எழுந்து உள்ளே சென்று விட்டான்.

ஆளு செமையா இருக்கான் இல்ல எனத் திரும்பி வரும் வழியில் பேசிக் கொண்டு வந்தனர். இவர்களைப் பார்த்ததும் வழியாமல் அவன் விலகி சென்றது, அவன் மீது நல்ல எண்ணத்தை உருவாக்கி இருக்க… பருவ வயதின் கோளாரில் சிறு மயக்கமும் தான் மகிழினிக்கு. அவனையே திருமணம் செய்து கொள்கிறாயா என்று வீட்டில் கேட்டதும், உடனே சரி என்று விட்டாள்.

எந்தக் காரணத்திற்காகவும் அவனை இழக்க மனமில்லாமல் கல்யாணமானால் எல்லாம் சரியாகி விடும். தன் அன்பு அவனை மாற்றி விடும் என்றெல்லாம் இவளே இவளை ஏமாற்றிக் கொண்டு இருந்தாள்.

கங்காவின் மகன்கள் மண்டபத்தில் உணவருந்தி விட்டு அப்படியே ஹோட்டல் அறைக்குச் சென்றிருந்தனர்.

தருணும் கங்காவும் தான் வீட்டினரிடம் எல்லாவற்றையும் எடுத்து சொல்லி… இப்போது திருமணம் நின்றது ஒன்றும் பெரிய பாதகம் இல்லை. இந்தத் திருமணம் நடந்திருந்தால் தான் பெரிய பாதகம் ஆகி இருக்கும் எனப் புரிய வைத்துக் கொண்டு இருந்தனர்.

அந்த நேரம் மண்டபத்தில் இருந்து இவர்களுக்கு உணவை எடுத்துக் கொண்டு தருணின் நண்பர்கள் வீட்டிற்கு வர…. பேத்தியின் திருமணம் நின்றதில் மகிழினியின் பாட்டிக்கு தான் அதிர்ச்சியில், மயக்கம் வந்து விட்டது.

தருணின் நண்பனே மருத்துவன் என்பதால்…. அவன் பல்ஸ் பார்த்து விட்டு, அதிர்ச்சி தான் வேறு ஒன்றும் இல்லை. ஏற்கனவே காஞ்சனாவுக்கு ப்ரெஷர் இருக்கிறது, அதனால் உணவு உண்டு மாத்திரையைப் போட்டுக் கொண்டால் போதும் என்றான்.

மகிழினி வேகமாக அறையில் இருந்து ஹாலுக்கு வந்தவள், “என்னால தான் எல்லாம். நான் முதலியே இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லி இருக்கணும். இதுல நீ வேற ஏன் பாட்டி இப்படிப் படுத்துற… உனக்கு எதாவதுனா அந்தப் பழியும் என் மேல தான்.” எனச் சொல்லி அழுதவள், பிறகு தான் அண்ணனின் நண்பன் அங்கிருப்பதைப் பார்த்து, அழுவதை நிறுத்திவிட்டுச் சாதாரணமாக இருக்க முயன்றாள்.

உள்ளுக்குள் நொறுங்கியே போயிருந்தாலும் வெளி ஆளின் முன்பு தனது நிலையைக் காட்டிக்கொள்ள அவள் விரும்பவில்லை.

பாட்டி இப்போ என்ன ஆச்சு. இங்க யாருக்கும் ஒன்னும் இல்லை. உங்க பேத்திக்கு இப்போதைக்குத் தான் கல்யாணம் நின்னிருக்கு. அது எப்போ வேணா திரும்ப நடக்கலாம். அதை நீங்க பார்க்க வேண்டாமா? மனசை குழப்பிக்காம இருங்க.” என அவன் காஞ்சனாவிடம் சொல்வது எல்லோருக்கும் சொல்வது போல இருந்தது.

தருண் பெற்றோரை சாப்பிட அழைக்க…. அவர்கள் இருவரும் வர மறுக்க… “சாப்பிடாம இருக்கிறதுனால ஒன்னும் ஆகப் போறது இல்லை.” என தருணின் நண்பன் சொல்ல… மகிழினிக்குத் தன்னால் தானே என்று தோன்ற….

எனக்குப் பசிக்குது நான் சாப்பிடட்டுமா?” என்றாள்.

வா டி கேட்டுட்டு இருக்க…” என்ற கங்கா உணவை எடுத்து பரிமாற… மகளே உணவு உண்ண வந்ததும், மகிழினியன் பெற்றோரும் வர…. கங்கா அவர் அம்மாவுக்கு உணவை தட்டில் போட்டுக் கொடுத்தார்.

இவர்கள் எல்லாம் உண்டதும், தருண் நண்பர்களுடன் மண்டபத்திற்குச் சென்று விட்டான்.

அங்கேயே அவர்களும் உண்டு. மண்டபத்தில் மறுநாளைக்குச் சமைப்பதற்கு இருந்த சாமான்களை மீண்டும் வாங்கிய கடைக்கே திருப்பி அனுப்பி, எல்லாம் செட்டில் செய்து முடிக்க நள்ளிரவு ஆகிவிட்டது.

தருணின் நண்பர்கள் அங்கிருந்தே கிளம்ப…. அந்த மருத்துவன் மட்டும் தருணிடம் தனியாக, “உன் தங்கச்சியைக் கொஞ்ச நாள் தனியா விடாத.” என்றான்.

தருண் பயந்து போய்ப் பார்க்க…. “ரொம்ப மன அழுத்தத்தில இருக்கா… பார்க்கும் போதே தெரியுது. வேற எதிலாவது டைவேர்ட் பண்ணி விடு. கொஞ்ச நாள் அவ போக்கிலேயே போங்க.” என்றவன், நண்பனிடம் விடைபெற்றுச் சென்றான்.

அவன் சென்றதும், தருணும் அவசரமாக வீட்டிற்கு வந்து தங்கையைப் பார்க்க… கங்காவுக்கும் அந்தப் பயம் இருந்ததால்… அவர் மகிழினியை விட்டு அங்கே இங்கே நகராமல் இருந்தார்.

அவளாகவே சாப்பிட்டாளே என்று நினைத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் பலதும் நினைத்துக் குழப்பிக் கொண்டு இருந்தாள்.

கண்ட கனவு எல்லாம் கானல் நீர் ஆனதில் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டு இருந்தது.

உன் கண்ணீருக்கு அவன் தகுதியானவனா… உன் மேல கொஞ்சமாவது அன்பு இருந்திருந்தா… அவன் உன்னை இன்னைக்கு இப்படித் தவிக்க விட்டிருப்பானா… நல்லா யோசிச்சு பாரு.” என்ற தருண் தங்கையின் கட்டிலுக்குக் கீழேயே தலையணையைப் போட்டுக் கொண்டு படுத்து விட…. கங்கா அவள் அருகில் கட்டிலில் படுத்துக் கொண்டார்.

அண்ணா நான் ஏதும் பண்ணிக்க மாட்டேன். நீ உன் ரூமுக்கு போ…” எனக் கட்டிலில் இருந்து எழுந்தபடி மகிழினி சொல்ல….

எங்க படுத்தாலும் நான் தூங்கப் போறது இல்லை. அதனால இங்கயே இருக்கேன்.” என்ற தருண் கண்களை மூடிக் கொண்டான்.

என்னால தான் நீங்க எல்லோரும் கஷ்ட்டபடுறீங்க.” என்ற தங்கையைத் தலை நிமிர்த்திப் பார்த்த தருண்,

உன்னால இல்லை… எங்களால தான் நீ இப்போ கஷ்ட்டப்படுற… உனக்கு ஒழுங்கான இடத்தில மாப்பிள்ளை பார்க்காததுனால…. நமக்கு யோசிக்க சபரி மாமா வீட்ல டைமே கொடுக்கலை…. எனக்கு என்னவோ உறுத்திட்டே இருந்தது. நான் ஆரம்பத்திலேயே கொஞ்ச நாள் போகட்டும் பார்க்கலாம்ன்னு சொல்லி இருக்கணும்.”

நீ வீட்ல சொன்னதைக் கேட்ட… அப்பா அம்மா நமக்கு நல்லது தான் செய்வாங்கன்னு நீ நம்பின… உன் மேல தப்பு இல்லைடா… நீ குழப்பிக்காத.” என்றான் தருண். அதன் பிறகு தான் மகிழினி அமைதியாக இருந்தாள்.

மகிழினி தனக்கு உறக்கமே வராது என்று நினைத்தாள். ஆனால் அவள் உறங்கி விட… அவள் உறங்கியதைப் பார்த்த தருணும் உறங்கி விட்டான்.

அடுத்த இரண்டு நாட்கள் அக்கம் பக்கம் இருப்பவர்கள், உறவினர்கள் என வந்து விசாரிப்பதில் செல்ல… யாரையும் தன் தங்கையைப் பார்க்க தருண் அனுமதிக்கவே இல்லை. கங்காவும் அவளுடனே இருந்தார். 

தான் இப்போது தங்கை மீது காட்டும் அக்கறையை… அவள் திருமண விஷயத்திலேயும் காட்டி இருந்தால்… தங்கைக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்காதே…. அவளை இந்த அளவுக்கு கஷ்ட்டப்பட விட்டு விட்டோமே என தருண் மனதிற்குள் தவித்துக் கொண்டு இருந்தான். 

தான் மீண்டும் வெளிநாடு செல்வதற்குள் தங்கைக்கு ஒரு நல்ல ஏற்ப்பாடு செய்துவிட்டு செல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

Advertisement