Advertisement

நீ என் நாயகன்

அத்தியாயம் 1

அண்ணன் மகள் திருமணத்திற்காகத் தேனீ நோக்கி காரில் சென்று கொண்டிருந்த கங்கா…. தன் அண்ணன் வீடு இருக்கும் சாலைக்குள் கார் நுழைந்ததும், சகலவித அலங்காரத்துடன் பார்த்ததுமே கல்யாண வீடு என்னும் சொல்லும்படி இருந்த வீட்டின் முன்பு காரை நிறுத்த சொல்லி இறங்கினார். 

காரை அனுப்பிவிட்டு அவர் தனது பையுடன் உள்ளே செல்ல… இவரைப் பார்த்ததும் அண்ணன் ராகவ், அண்ணி லலிதா மற்றும் கங்காவின் அம்மா காஞ்சனா வந்து வரவேற்க…. எல்லாவற்றையும் புன்னகை முகமாக ஏற்றவர், “எங்க மகி?” என்று கேட்க….

அவ ரூம்ல இருக்கா கங்கா. நீ முதல்ல காபி குடி.” என அண்ணி லலிதா காபி கொண்டு வந்து கொடுக்க… அதை வாங்கிப் பருகியவர், குடித்து முடித்ததும் தனது மருமகள் இருந்த அறைக்குள் சென்றார்.

அங்கே மகிழினி கட்டிலில் புடவைகளைப் பரப்பி வைத்து பார்த்துக் கொண்டு இருக்க…

போதுமா இவ்வளவு புடவை?” என்ற குரலில் மகிழ்ச்சியாகத் திரும்பியவள், “ஹாய் அத்தை வந்துடீங்களா?” என்றவள், “எந்தப் புடவையை மண்டபத்துக்குக் கட்டிட்டு போறதுன்னு பார்த்திட்டு இருக்கேன்.” என்றதும், கங்கா இள நீல நிறத்தில் இருந்த புடவையை எடுத்துக் கொடுக்க….இதையே கட்டிக்கிறேன் என்றாள் மகிழினி மகிழ்ச்சியாக.

உங்க அண்ணன் எப்போ வரான்?”

அண்ணன் நாளைக்கு வருது.” என்றாள். மகிழினியின் அண்ணன் தருண் வெளிநாட்டில் வேலை பார்க்கிறான்.

பேருக்கு ஏற்றார் போல எப்போதும் முகத்தில் மகிழ்ச்சியும், இன்பமும் ததும்ப நிற்கும் மருமகளைப் பார்த்த கங்கா, எப்போதும் இவள் இப்படியே இருக்க வேண்டும் என மனதார வேண்டிக் கொண்டார்.

கங்காவின் அம்மா போன் பேசும் போது, “கல்யாணம் நிச்சயம் ஆனவங்க பொழுதுக்கும் போன் பேசிட்டு தான இருப்பாங்க. இங்க அப்படி ஒண்ணுத்தையும் காணோமே…” எனப் புலம்பி இருந்தார்.

அதை மனதில் வைத்து, “யுவன் எப்போ வர்றாராம். இல்ல வந்துட்டரா?” என கங்கா கேட்க…

அப்பாவுக்குத்தான் தெரியும் அத்தை.” என்றாள்.

ஏன் யுவன் உன்கிட்ட சொல்லலையா?” என்றதும்,

மகிழினி எதோ யோசனைக்குச் சென்று விட்டாள். இவள் அப்பா ராகவனின் நெருங்கிய நண்பன் தான் சபரி, மகன் திருமணம் செய்ய யோசிக்கிறான். நம் பக்கம் ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்தால் சரி ஆகி விடும்.” எனச் சொல்லித்தான் மகிழினியை பெண் கேட்டார்.

இவர்களும் அப்போது பெரிதாக எதுவும் நினைக்கவில்லை. ஆனால் திருமணம் நிச்சயம் ஆனப் பிறகும் யுவன் மகிழினியை அழைத்துப் பேசவில்லை.

அவனுக்கு இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்றதுல விருப்பம் இல்லை. கல்யாணம் பண்ணிட்டா எல்லாம் சரி ஆகிடும்.” என்றார் சபரி. இவர்களும் அதை நம்பிக் கொண்டு இருந்தனர்.

யுவனாக அழைக்கவில்லை என்றதும், மகிழினியே ஒருமுறை அவனுக்கு அழைக்க…. எடுத்துப் பேசினான்.

ஹாய் எப்படி இருக்கீங்க?” என இவள் நலம் விசாரிக்க…

நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?” என்றவன், ரொம்பவும் யோசித்து பேசுவது போல இருக்க…. 

என்னைப் பிடிக்கலையா?” என மகிழினி கேட்டே இருந்தாள்.

“அப்படி எல்லாம் இல்லை. என்னால இப்போ யார் கூடவும் கமிட் ஆக முடியாது. கல்யாணம் ஒரு கமிட்மென்ட். கல்யாணம் பண்ணிகிட்டா உனக்காக நேரம் ஒதுக்கணும். எனக்கு அதுக்கெல்லாம் இப்போ நேரம் இல்லை. எங்க அப்பா சொன்னா புரிஞ்சிக்க மாட்டேங்கிறார்.” என்றான்.

ஏற்கனவே சபரி சொல்லியது தான். காதல் எதுவும் இருக்குமோ என்ற சந்தேகம் மகிழினிக்கு இருந்தது. அப்படி இல்லையென்றதும் நிம்மதியானவள், இவன் திருமணம் என்றால் எதோ என்று நினைத்துக் கொண்டிருக்கிறான், கல்யாணம் ஆகினால் எல்லாம் சரியாகி விடும் எனப் பெரியவர்கள் போலவே மகிழினியும் நினைத்துக் கொண்டாள்.

உண்மையில் யுவனை அவளுக்குப் பிடித்திருந்ததே காரணம். அவனை இழக்க மனம் இல்லாமல்… அவன் பேச்சை அலட்சியம் செய்தாள். ஆனால் தன் நிலையை நினைத்து சில நேரம் கலங்கவும் செய்வாள்.

இரவு உணவு உண்டு படுத்த கங்காவுக்கு உறக்கமே வரவில்லை. அவருடைய திருமணத்தை நினைத்துப் பார்த்தார்.

திருமணத்தைப் பற்றி அதிகக் கனவு இல்லை கங்காவுக்கு. வீட்டில் பெரியவர்கள் பார்த்து நிச்சயம் செய்த திருமணம். ஆனால் திருமணம் உறுதியானதில் இருந்து எப்படி அப்படி ஒரு காதல் இருவருக்கும் வந்தது என்று தெரியவில்லை.

அப்போது இப்படி எல்லாம் கைபேசி இல்லையே…. ஆனால் அவரின் கணவர் எதோ ஒரு சாக்கு வைத்து வீட்டு தொலைபேசிக்கு அழைத்து விடுவார். இவருக்குத் தான் மற்றவர்கள் முன்பு பேச கூச்சமாக இருக்கும். ஆனால் அப்படிக் காதல் கொண்டு மணந்தவர், தன்னை விட்டுச் சீக்கிரம் செல்வார் என்றும் கங்கா எதிர்பார்த்திருக்கவில்லை. மறைந்த கணவரின் நினைவில் கண்ணீர் மல்க கிடந்தவர், பிறகு திருமண வீட்டில் இப்படி அழுவது கூடாது எனத் தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டார்.

அதிகாலையில் தருணின் குரல் கேட்டு மகிழினியும் கங்காவும் ஹாலுக்கு வந்தனர். 

“இதுதான் நீ என் கல்யாணத்துக்கு வர்ற நேரமா?” என்ற தங்கையிடம், 

“என்னடா பண்றது நீங்க திடிர்ன்னு கல்யாணம் நிச்சயம் பண்ணா… எனக்கு லீவ் கிடைக்க வேண்டாமா… என் தங்கச்சி கல்யாணம் எனக்கு கண்டிப்பா போகணும்னு சொல்லி லீவ் வாங்கிறதுகுள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு.” என்றவன்,  

அத்தையை நலம் விசாரித்தவன், அவர் பிள்ளைகளைப் பற்றியும் கேட்க…. “எல்லாம் இன்னைக்குச் சாயங்கலாம் வருவாங்க.” என்றார்.

கங்காவுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் திலிபனுக்குத் திருமணம் ஆகி இருக்க… இளையவன் கிரிதரன் இப்போது தான் வேலையில் சேர்ந்து சில ஆண்டுகள் ஆகிறது.

அண்ணா, யுவன் மகிழினிகிட்ட போன்ல கூடப் பேசுறது இல்லையாமே… அப்படி என்னென்னா இவனுக்கு நம் பெண்ணைக் கொடுக்கணும்னு? வேற இடம் நமக்குக் கிடைக்காமலா போயிருக்கும்.” என கங்கா சொல்ல…

நானும் அதையே தான் அத்தை கேட்கிறேன். நானும் அவன்கிட்ட போன் செஞ்சு பேசிப் பார்த்தேன். பிடியே கொடுக்க மாட்டேங்கிறான். எதுக்கு அவனுக்குப் பெண்ணைக் கொடுக்கணும்னு தான் நானும் கேட்கிறேன். நமக்கு என்ன வேற மாப்பிள்ளையா கிடைக்காது.” என தருணும் சொல்ல… மகிழினி கவலையாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

இந்தக் காலத்தில தெரியாத இடத்தில பெண்ணைக் கொடுக்கவும் யோசனையா இருக்கு. நம்ம சபரி பையனாச்சேன்னு தான் சரின்னு சொன்னேன். இவனும் வெளிநாட்டில் இருக்கான். நமக்குத் தெரிஞ்ச இடம்னா… பெண்ணாவது வந்து போய் இருப்பான்னு நினைச்சேன். யுவன் நம்ம பையன் தான… கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் சரி ஆகிடும் டா…” என்றார் ராகவ்.

தருணுக்கு எதுவும் பிடிக்கவில்லை. ஆனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாத நிலை… அதனால் அவனும் திருமண வேலையைக் கவனிக்கச் சென்றான்.

அதன் பிறகு யாருக்கும் நிற்க நேரம் இல்லை. உறவுகள் எல்லாம் வீட்டிற்கு வந்திருக்க… மதியம் வீட்டில் திருமணதிற்கு வாங்கிய பொருட்களை வைத்து, பலகாரம் சுட்டு சாமி கும்பிட்டனர். மாலை மகிழினி பட்டுப்புடவையில் தேவதையாகக் கிளம்பி நின்றாள்.

மாப்பிள்ளை வீட்டினரை வரவேற்க ராகவும் லலிதாவும் முன்பே கிளம்பி சென்றிருக்க… தான் வந்து தங்கையை அழைத்துச் செல்வதாகச் சொல்லி தருணும் மண்டபம் கிளம்பி சென்றான்.

உறவினர்கள் எல்லாம் மண்டபம் சென்றிருக்க… வீட்டில் மகிழினியும் அவள் தோழிகளும் இருக்க… உடன் அவள் பாட்டியும் இருந்தார்.

மாப்பிள்ளையின் பெற்றோரும் உறவினர்கள் மட்டுமே மண்டபத்திற்கு வர… மாப்பிள்ளை எங்கே என்று கேட்டதற்கு, அவன் வந்து விடுவான் என்று சபரி சமாளித்தார். ஆனால் அவர் முகம் சரியாகவே இல்லை. தருணுக்குச் சந்தேகமாக இருக்க…. அப்போது பெண்ணை அழைத்து வர சொல்லி யாரோ சொல்ல… முதல்ல மாப்பிள்ளை வரட்டும் என்றுவிட்டான் தருண்.

ஏழு மணி ஆகியும் தன்னை ஏன் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லவில்லை என்று புரியாத குழப்பத்தில் வீட்டில் தவிப்புடன் மகிழினியும் இருந்தாள்.

சபரி தனது கைப்பேசியுடன் தனியாகச் சென்று யாருடனே பேசிக் கொண்டே இருந்தார்.

டேய் நாம அப்புறம் பேசிக்கலாம், நீ முதல்ல இங்க கிளம்பி வா…”

அப்பா நான் தான் சொல்றேன் இல்ல… நான் பெங்களூர்ல தான் இருக்கேன். என்னால இப்போ வர முடியாது.”

நீ ஒரு பிளைட் பிடிச்சாவது நைட்டுகுள்ள வந்து சேறு… நான் இங்க சமாளிக்கிறேன். எனக்காக இல்லைனாலும் மகிழினிக்காகப் பாரு.” என சபரி கிட்டதட்ட மகனிடம் கெஞ்ச…. “நான்தான் எனக்குக் கல்யாணம் வேண்டாம்னு தானே சொன்னேன். என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுப்பா… அதனால் நான் இங்க இருந்து கிளம்பவே இல்லை.” என்றான் யுவன் இரக்கமே இல்லாமல்.

உனக்கு இஷ்ட்டம் இல்லாம நான் கல்யாணம் பேசினது தப்புதான். ஆனா இப்போ பொண்ணு வீட்டுக்கு என்ன பதில் டா சொல்றது.”

நான் இப்போ உங்களுக்காகக் கல்யாணம் பண்ணாலும், என்னால அந்தப் பெண்ணோட சேர்ந்து வாழ முடியாதுப்பா…. அதனால இன்னைக்கு எல்லோருக்கும் கஷ்ட்டமா இருந்தாலும் பரவாயில்லை… நான் வர மாட்டேன்.” என்றான் யுவன் தெளிவாக.

ஐயோ என்றானது சபரிக்கு. மகனுக்கு எப்படியாவது திருமணம் செய்துவிட்டால்… அவன் தங்கள் வழிக்கு வந்துவிடுவான் என்று நினைத்தார். இப்போது பெண் வீட்டினரிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் அவர் கலங்கிப் போய் நிற்க… அவரிடம் இருந்து கைபேசியை வாங்கிய தருண், “ஹலோ நான் மகிழினியோட அண்ணன் தருண் பேசுறேன். நீங்க இங்க எப்போ வரீங்க?” எனக் கேட்க… யுவன் அவனிடமும் வர முடியாது என்று சொல்ல….

இதை நீங்க இப்போ சொல்றவர், எங்ககிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம். என் தங்கைக்கு உன்னை விட நல்ல மாப்பிள்ளை பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைப்பேன்.” என்றவன், கோபத்தில் கையில் இருந்த கைபேசியைத் தூக்கி போட்டுவிட்டுச் சென்றான்.

தருண் நேராக அவன் பெற்றோரிடம் சென்றவன், “நான் படிச்சு படிச்சு சொன்னேன். எதோ சரியாபடலைன்னு… இப்போ யுவன் வர முடியாதுன்னு சொல்லிட்டான். இப்போ என்ன பண்ண போறீங்க?” என்றதும் ராகவ் நம்ப முடியாமல் சபரியை பார்க்க…. “நானும் எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன் டா… நான் இந்தக் காலத்து பசங்க கல்யாணம் வேண்டாம்னு சொல்ற மாதிர சொல்றான்னு நினைச்சேன். ஆனா அவன் இப்படி உறுதியா இருப்பான்னு எனக்கும் தெரியலை….” என்றார்.

உன்னை நம்பினதுக்கு என்னையும் என் குடும்பத்தையும் இந்த நிலையில நிறுத்திட்டியே…” என ராகவும்,

உங்களுக்குத் தானே உங்க பையனை பத்தி தெரியும். எங்களை இப்படிக் கடைசிவரை நம்ப வச்சு ஏமாத்திடீங்களே…” என லலிதாவும் கண்ணீருடன் கேட்க…. யுவனின் பெற்றோருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

நான் இப்போ என்ன செய்வேன்.” என தவித்த ராகவ் கண்ணில் கிரிதரன் பட… அவர் தங்கையிடம் சென்று நின்றார்.

இந்த நேரத்துல நீதான் என்னைக் காப்பாத்தணும். கிரிதரனுக்கும் மகிழினிக்கும் கல்யாணம் பண்ணிடலாமா?” என்று அவர் கேட்க… கேட்ட கிரிதரனின் முகம் மாறிவிட்டது.

அண்ணா அவன் வேற பெண்ணை விரும்புறான். என் மூத்த பையன் கல்யாணமும் அவன் இஷ்ட்டத்துக்குத் தான் நடந்தது. பெத்தவங்க சொல்லி கல்யாணம் பண்றது எல்லாம் போன தலைமுறையோட போயிடுச்சு. மாப்பிள்ளை சம்மதம் தெரியாம நீங்க கல்யாணம் பேசினது தப்பு. உங்களுக்கு என்னால உதவ முடியலை…. என்னை மன்னிச்சிடுங்க.” என்றார் கங்கா.

மகிழினியை மருமகளாக ஏற்க அவருக்கு மட்டும் ஆசை இருந்தால் போதுமா… மகனுக்கு அல்லவா பிடிக்க வேண்டும். மகன் தான் வேறு பெண்ணை விரும்புகிறானே…. தன்னால் அண்ணனுக்கு இந்த நிலையில் கை கொடுக்க முடியாததை நினைத்து கங்கா நொந்து போனார்.

Advertisement