Advertisement

நீ என் காதல் புன்னகை -9(2)

அத்தியாயம் -9(2)

மனைவியின் கண்களில் தெரிந்த மிரட்சியில் தன்னிலை அடைந்தவன் சட்டென அவள் முடியை விட்டு அவன் நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டான்.

உதய்யின் இத்தகைய செயல் சிறிதும் பிடிக்காமல் உடல் மொழியால் அவனுக்கு கண்டனம் தெரிவித்து கண்களில் கோவத்தை முன்னிறுத்தி முதுகு காட்டி படுக்கையின் மறு ஓரமாக படுத்துக்கொண்டாள் பூவை.

அவளுக்குகோவம் என்பது புரிந்தும் மன்னிப்பு கேட்க முடியாமல் அரை மணி நேரமாக அவனோடு அவனது அகந்தையோடு போராடியவன் அவளது முக திருப்பலையும் சகிக்க முடியாமல் ஒரு வழியாக “கோவத்துல செய்திட்டேன் பூவை, சாரி” என்றான்.

பூவை எந்த எதிர்வினையும் கொடுக்காமல் இருக்க, “சாரி கேட்டும் என்பக்கம் திரும்ப மாட்டியா?” என மீண்டும் கோவமாக கேட்டான்.

பூவைக்கு கோவம் என்பதை விட மிகுந்த மன வருத்தம். பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் கொஞ்சமும் அவளுக்கு பிடித்தமில்லை. இன்று இவளது ஆருயிர் கணவனே அப்படி ஒரு செயலை செய்கிறான் என்றால் இந்த ஒரு முறைதானா, இனியும் தொடருமா, இவனது குணமே இப்படித்தானா, இத்தனை நாட்கள் நான் கண்ட உதய் வேறு யாரோவா, இப்படி எதையும் செய்ய துணிவானா என பல்வேறு சிந்தனைகளால் சூழப் பட்டிருந்தாள்.

தான் இறங்கி வந்து மன்னிப்பு கேட்டும் அவள் பாராமுகம் காட்டுவதை உதய்யால் பொறுக்க முடியவில்லை. அதற்கு மேல் இறங்கி வரவும் முடியவில்லை. கோவமாக வெளியேற நினைத்தாலும் முடியாமல் எதுவோ ஒன்று தடுத்தது. எதுவும் செய்ய முடியாத இயலாமையோடு அவனும் அவள் முதுகுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.

இடையில் உறக்கத்திலிருந்து விழித்த பூவை விடி விளக்கின் வெளிச்சத்தில் தன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு படுக்கையின் தலைமாட்டில் சாய்ந்து அமர்ந்திருந்த உதய்யை கண்டு அதிர்ந்து எழுந்து மின் விளக்கை போட்டாள்.

இவள் எழுந்ததும் உதய் வேறு பக்கம் பார்க்க, “என்னை பாருங்க” என கடினமான குரலில் சொன்னாள் பூவை.

அவளை பார்த்தவன் அவளது கண்களை சந்திக்கும் திராணி இழந்து மீண்டும் வேறு பக்கம் பார்க்க, “என்னை பார்க்க சொன்னேன்” என கட்டளையாக சொன்னாள்.

தயக்கமாக அவளை பார்த்தவன் கண்கள் அவளது கண்களை நிலையாக பார்க்க முடியாமல் இங்கும் அங்கும் அலை பாய, “நீங்க செஞ்சது தப்புன்னு புரியுதா?” எனக் கேட்டாள்.

அவன் பதில் சொல்லாமல் இருக்க, “இதுக்குத்தான் நீங்க முன்ன சாரி கேட்டப்ப நான் ரியாக்ட் செய்யல. உணர்ந்து கேட்காத சாரிக்கு அர்த்தமே இல்லை” என்றாள்.

உதய் எழுந்து செல்ல பார்க்க அதை புரிந்து கொண்ட பூவை வேகமாக அமர்ந்த வாக்கிலேயே அவனை நெருங்கி அவன் கையை பிடித்துக்கொண்டாள்.

“விடு” என்றான்.

“கோவத்தை குறைக்கிறேன்னு சொல்லியிருக்கீங்க. அதுக்கு முன்ன செய்ற தப்பை தப்புதான்னு அக்செப்ட் பண்ண பழகுங்க உதய். என்கிட்ட என்ன ஈகோ. நானும் நீங்களுமா வேற வேறயா?”

“ஏய் நான்தான் சாரி கேட்டேனே, நீதான் ரொம்ப முறுக்கிகிட்டு திரும்பி கூட பார்க்கல” என்றான்.

“எங்க என்னை பார்த்து சொல்லுங்க. நான் மூஞ்சு திருப்பினதும் அதுக்காக என்னை சமாதானம் செய்ய சும்மா சொன்ன சாரி அது. செஞ்சது தப்புன்னோ இனி செய்யக் கூடாதுங்கிற எண்ணமோ உங்களுக்கு இன்னும் வரலை. ஸாரியை விட இனிமே செய்ய மாட்டேன்னு உங்களுக்கு நீங்களே எடுத்துக்கிற உறுதிதான் முக்கியம் உதய்”

“என்னடி செய்ய சொல்ற என்னை?” எரிந்து விழுந்தான்.

“என் கண்ணை பார்த்து இனிமே செய்ய கூடாதுன்னு திடமா நினைச்சுகிட்டு சாரி கேளுங்க”

பூவையின் பிடியிலிருந்த அவனது கையை உருவிக் கொண்டு இரண்டடி கதவு நோக்கி எடுத்து வைக்க, “உதய்” என்ற பூவையின் அழைப்பு அவனை போக விடாமல் செய்தது.

அவனது செய்கை தவறென அறிவுக்கு புலப்படுகிறது. தலையில் எதுவோ வந்தமர்ந்து மனமார மன்னிப்பு கேட்க விட மாட்டேன் எனவும் அவனை அழுத்துகிறது. அவனுக்குள் தடுமாற்றமும் போராட்டமும். ஆனால் வெளியில் செல்ல முடியாதவாறு பூவையின் ஒற்றை அழைப்பு அவனை கட்டிப் போட்டிருக்க, மெல்ல திரும்பி தயக்கமாகவே நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தான்.

சிரிப்பு தொலைந்த முகம், கலைந்து போன கேசம், கலங்கிய பாவம் என அவளை காணவே அவனுக்கு சகிக்கவில்லை. அதிலும் இதற்கு தானே காரணம் என்பது வேறு சுரீர் என உரைக்க அவளது ஒளி பொருந்திய கண்களை நேராக பார்த்து, “சாரி” என்றான் உதய்.

வேகமாக எழுந்து சென்று கணவனை மார்போடு அணைத்துக் கொண்டவள், “நான் வேணும்னு உங்களை தள்ளி விடலைன்னு தெரியலையா உங்களுக்கு?” எனக் கேட்டாள்.

“சாரி டி” என்றான்.

“யார் எப்படி இருந்தாலும் நீங்க தப்பு செய்றதை என்னால பொறுத்துக்க முடியாது. இனிமே இப்படி செய்ய மாட்டீங்கதானே?”

“சாரி சாரி சாரி! சின்ன விஷயத்துக்கு பெரிய கொடுமைக்காரன் ரேஞ்சுக்கு என்னை பேசக் கூடாது” என்றான்.

“கொடுமையில சின்ன கொடுமை பெரிய கொடுமை அப்படியெல்லாம் எதுவும் இல்லை. இன்னைக்கு நீங்க நடந்துகிட்ட மாதிரி உங்க அப்பா உங்க அம்மாகிட்டேயோ உங்க தங்கைக்கு கல்யாணம் ஆன பிறகு அவள் ஹஸ்பண்ட் அவகிட்டயோ இல்ல நமக்கே பொண்ணு பொறந்து அவளுக்கோ இப்படி நடந்தா ஈஸியா எடுத்துக்க முடியுமா உங்களால?”

உதய் அமைதி காக்க, “சொல்லுங்க” என்றாள்.

அதுவரை மனைவியை அணைக்காமல் நின்றிருந்தவன், மெல்ல அணைத்து “கண்ட்ரோல் இல்லாம செஞ்சிருந்தாலும் தப்புன்னு ரியலைஸ் செய்யல அப்ப. நிஜமா சாரி” என்றான்.

“ம்ம்… தூங்கலாம் வாங்க” என சொல்லி அவன் கை பிடித்து படுக்கைக்கு அழைத்து சென்றாள்.

அமைதியாக உதய் படுத்துக் கொள்ள அவனை நெருங்கி படுத்து அவன் நெஞ்சில் கை போட்டுக் கொண்டவள், “நீங்க சிங்கப்பூர் போனதுக்கு அப்புறம் நல்லா தூங்கிக்கிறேன். இப்ப முழிச்சிருந்தாலும் எனக்கு ஓகேதான், நீங்க ஏதோ சாஸ்திரம் படிக்கிறேன்னு அப்போ சொன்னீங்களே… சேர்ந்து படிக்கலாமா” எனக் கேட்டாள்.

அவளை பார்த்து சிரித்தவன், “தேங்க்ஸ்” என சொல்லி அவளது நெற்றியில் இதழ் பதித்து இறுக்கமாக கட்டியணைத்துக் கொண்டான்.

உதய் கிளம்பும் போது அழக் கூடாது என வைராக்கியமாக இருந்தாலும் கடைசி நொடி அழத்தான் செய்தாள் பூவை. தன்னை விட்டு பிரிய முடியாமல் அவள் அழுவது கூட அவனுக்கு பிடித்திருந்தது. அவளுக்கு சமாதானம் சொல்லி அவனுமே மனமில்லாமல்தான் விடை பெற்று சென்றான்.

உடன் உதய் இல்லாமல் முதல் இரு நாட்கள் மிகுந்த சிரமப்பட்டாள். வீட்டில் உள்ளவர்கள் நன்றாக பழகினால் பெரிதாக தெரியாது, ஆனால் இந்த வீட்டில் சிறையில் இருப்பது போலத்தான் இருந்தது. உதய்யிடம் சொல்லாமல் அவளே அந்த தனிமையை கடந்தாள்.

ஜெயந்தனை இங்கு சென்னையில் இருக்கும் பிரபலமான கண் மருத்துவமனையில் காட்டலாம் என முன்னரே நினைத்து வைத்திருந்தாள். இப்போது ஜெயந்தன் வெளியூர் பயணம் செய்யலாம் என்றும் மருத்துவர்கள் கூற கண் மருத்துவமனையில் அப்பாயிண்ட்மெண்ட் பெற்றாள்.

உதய்யிடம் அதுபற்றி தெரிவித்தவள் அவர்களை ஓட்டலில் தங்க வைக்க போவதாக கூற அவன் கோவப்பட்டான்.

“நம்ம வீடு இருக்கும் போது என்ன அது ஓட்டல்? ஒழுங்கா வீட்லேயே தங்க வை” என்றான் உதய்.

“உங்க அப்பாம்மாக்கு பிடிக்குமோ பிடிக்காதோ” என தயங்கினாள் பூவை.

“நான் சொல்லிக்கிறேன்” என்றவன் கையோடு நாதனிடமும் பேசினான்.

அவரும் பூவையை கவனிக்கிறார்தானே. முன்னர் போல அவள் மீது கோவமில்லை. சிறு வயதில் பெரிய பின்புலன் இல்லாது அரசு தேர்வில் வெற்றி பெற்று வங்கியில் வேலை செய்பவள் மீது அவருக்கே ஒரு பிரமிப்பு இருக்கத்தான் செய்தது.

அந்த கர்வம் சிறிதும் இல்லாமல் பொறுப்பாக அவள் நடந்து கொள்வதும் ஆளுமையான கமலாவையே புத்திசாலித்தனமாக பதில் கொடுத்து கையாள்வதுமாக இருப்பதை கண்டவர் மகனுக்கேற்ற பெண் இவள்தான் எனவும் நினைத்துக்கொண்டார். இப்போது பூவையை பிடிக்கவும் செய்தது. ஆனால் தானாக சென்று பேச ஒரு தயக்கம்.

மகன் சொல்லவுமே உடனே “வர சொல் டா, இவ்ளோ பெரிய வீடு இருக்கு, இங்கேயே தங்கட்டும்?” என சொல்லி விட்டார்.

கமலாவுக்கு இதில் விருப்பமில்லை. “கண்ட குடிகாரன் எல்லாம் தங்க இதென்ன மடமா? வயசு பொண்ணு இருக்க வீட்ல அவன் வரக்கூடாது” என நாதனிடம் சண்டை போட்டார்.

“நான் உதய்கிட்ட சரின்னு சொல்லிட்டேன் கமலா, அந்த பையன் சரியா நடக்க முடியாம ஒரு கண்ல பார்வை வேற இல்லாம இருக்கான். இப்படியெல்லாம் பேசாத. உதய்க்கு தெரிஞ்சா கோச்சுப்பான்” என சொல்ல இப்போதெல்லாம் மகன் தன்னை விட்டு தள்ளி செல்வதாக நினைத்த கமலாவும் ஜெயந்தன் இங்கு தங்க அரை மனதோடே அனுமதி கொடுத்தார்.

ரயிலில் புவனாவும் ஜெயந்தனும் வர பூவையுடன் நாதனும் சென்று காரில் அழைத்து வந்தார். பூவைக்கு அன்று விடுப்பு எடுக்க முடியாததால் ஒரு மணி நேரம் அனுமதிதான் பெற்றிருந்தாள். அதனையறிந்து நாதனே துணைக்கு செல்வதாக கூறினார்.

பூவை தன் மாமனாருக்கு நன்றி சொல்ல, “என் மருமகளோட அண்ணனுக்கு செய்றதுக்கு எனக்கெதுக்கும்மா நன்றி?” எனக் கேட்டு பூவையின் விழிகளை விரிய விட்டார். கமலா வந்தவர்களை வாங்க என கேட்டதோடு சரி, பின்னர் கண்டு கொள்ளவே இல்லை.

மருத்துவமனைக்கு நாதனே அவரது காரில் அழைத்து செல்ல உடன் பூவையும் சென்றவள் ஒரு மணி நேரத்தில் புறப்பட்டு விட்டாள். அங்கேயே காத்திருந்து பரிசோதனைகள் செய்து மருத்துவரிடமும் காண்பிக்க நாதனே துணையாக இருந்தார்.

கண்ணில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் பார்வைக்கு உண்டான நரம்பில்தான் பிரச்சனை எனவும் கூறி கண் பார்வை கிடைக்க வாய்ப்பே இல்லை என மருத்துவர் கூற புவனா அழுது விட்டார். ஜெயந்தனுக்கும் அழுகை வருவது போலிருக்க அடக்கிக் கொண்டான்.

நாதன் ஆறுதல் சொல்லி இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தார். அடுத்த நாளே இவர்கள் கிளம்ப ரயிலில் டிக்கெட் போட்டு கொடுத்தாள் பூவை.

ஜெயந்தன் சோகமாக இருக்க, “ஒரு கண்ல பார்வை இருக்கே ண்ணா. நீ தைரியமா இருக்கணும், இதை குறையா நினைக்காம இரு. உடம்பு முழுசும் தேறட்டும். அவர் வந்ததும் என்ன செய்யலாம்னு பார்த்து உனக்கு ஏதவாது தொழில் வச்சு கொடுக்கிறேன்” என அண்ணனுக்கு ஆறுதல் சொன்னாள் பூவை.

தான் செய்த தவறை மறந்து தனக்காக யோசிக்கும் தங்கையை நினைத்து அவளுக்காகவாவது தான் முன்னேற வேண்டும் என நினைத்துக் கொண்டான் ஜெயந்தன்.

அடுத்த நாள் நாதனே அவர்களை ரயில் ஏற்றி விட்டு வந்தார். பின் பூவை வங்கி சென்று விட்டாள். மாலையில் அவள் வீடு திரும்பியதும் அவள் வந்ததும் வராததுமாக, “என்னோட வைர மோதிரத்தை காணோம். உன் அம்மாகிட்ட எங்கன்னு கேளு” என்றார் கமலா.

அதிர்ந்தாலும் என்ன சொல்கிறார் இவர் என கண்கள் சுருக்கி பார்த்தாள் பூவை.

Advertisement