Advertisement

நீ என் காதல் புன்னகை -9(1)

அத்தியாயம் -9(1)

தேனிலவு முடித்து வந்தவர்கள் வீட்டுக்குள் நுழைகையில் இத்தனை நாட்கள் இல்லாத அளவுக்கு மனதளவில் உதய்யை மிகவும் நெருக்கமாக உணர ஆரம்பித்திருந்தாள் பூவை.

அவளது மன அழுத்தமும் பெருமளவு விலகியிருக்க தனது மாமியாரின் பார்வையில் அவரது ஒரே மகனின் திருமணக் கனவுகள் பொய்த்துப் போனதால் எழுந்த ஏமாற்றம் தெரிய ஓரளவு அவரை புரிந்து கொண்டவள் உதய்க்காக மிகவும் பொறுமையாக அவரிடம் நடந்து கொள்ள வேண்டும், முடியாத போது அமைதியாக விலகி போய் விட வேண்டும் என்றெல்லாம் முடிவு செய்து கொண்டாள்.

உதய் இங்கு கன்ஸ்ட்ரக்க்ஷன்ஸ் ஆரம்பிக்க இருக்க அதற்கான வேலைகளை அவனது தோழன் சிவாவுடன் இணைந்து ஆரம்பித்திருந்தான். மீண்டும் சிங்கப்பூர் சென்றால் வர இரண்டு மாதங்கள் ஆகி விடும் என்பதால் வந்த உடனே முழு வீச்சில் அவனது தொழிலை தொடங்க ஏதுவாக என்னென்ன செய்ய வேண்டும் என சிவாவிடம் சொல்லி அவன் இருக்கும் வரை அவனும் சில வேலைகளை முனைப்போடு பார்த்தான்.

சுவாமிநாதனும் ஷியாமளாவும் பூவை என்ற ஒருத்தி அங்கு இருப்பதாகவே நடந்து கொள்வதில்லை. கமலாவோ மருமகளிடம் அதிகாரம் செலுத்தினார். காலையில் அவள் கிளம்பும் வரை உதய் ஹாலில் அமர்ந்து கொள்ள சமையலறையில் அத்து மீறி எதுவும் கமலா பேசமுடிவதில்லை என்றாலும் அவனில்லாத நேரங்களில் குத்தல் பேச்சுக்கள் தாராளமாக வந்து கொண்டிருந்தன.

சமையல் அவள்தான் செய்ய வேண்டும் என்றாலும் அவளுக்கு பெரிதாக தெரியவில்லை. முன்னேரமாகவே எழுந்து காலை, மதிய சமையல் முடித்து அவளுக்கான மதிய உணவை எடுத்துக் கொண்டு சரியான நேரத்துக்கு கிளம்பி விடுவாள். மேல் வேலைக்கு ஈஸ்வரி இருக்க அவளுக்கு அத்தனை சிரமமாகவும் இல்லை.

விடுதியிலிருந்து அவளது ஸ்கூட்டரை இங்கு எடுத்து வந்திருக்க அதிலேயே வங்கிக்கு சென்று விடுவாள். அவள் சென்ற பிறகுதான் உதய் கிளம்புவான். கூடுமான வரை அவள் வருவதற்குள் மிச்ச வேலைகளை சிவாவை பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு வீடு வந்து விடுவான்.

மாலை பூவை வந்த பிறகு அவளே கணவனுக்கும் தனக்கும் தேநீர் போட்டுக் கொண்டு அறைக்கு சென்றால் ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொள்வாள். அது கணவன் மனைவி இருவருக்குமான நேரமாக இருந்தது. மனதில் உள்ளதை எல்லாம் அவன் பகிர்ந்தானோ என்னவோ இவள் பகிர்ந்தாள்.

முதுகு பிடித்து விடுகிறேன் இடுப்பு அழுத்தி விடுகிறேன் என சின்ன சின்ன செல்ல சில்மிஷங்களுக்கும் குறைவில்லாமல் பார்த்துக் கொண்டான் உதய்.

அன்று உதய்யின் அருமையான மசாஜ்ஜில் அத்தனை இதமாக உணர்ந்தவள் “உண்மையை சொல்லுங்க, நீங்க பார்ட் டைமா மசாஜ் கிளாஸ் எங்கேயும் போனீங்களா?” எனக் கேட்டாள்.

“ஹ்ம்ம்… இப்போதான் போய்கிட்டிருக்கேன். மேடம் பார்த்து செர்டிஃபிகேட் கொடுத்திட்டீங்கன்னா தனியா சென்டர் ஆரம்பிச்சிடலாம்”

“நான் கூட காராத்தே, ஜூடோ எல்லாம் உங்களை வச்சு ட்ரைன் ஆகிக்கலாம்னு நினைக்கிறேன். மசாஜ் மாஸ்டர் என்ன சொல்றீங்க?”

“மசாஜ் மாஸ்டருக்கு காராத்தே மாஸ்டர்லாம் வேணாம். வேணும்னா மதன சாஸ்திரம் என்னை வச்சு படிச்சுக்க”

“ஹான்!?” புரியாமல் விழித்தாள் பூவை.

“மிஸ்டர் மதன்… அதான் டி மன்மதன் அவரோட சாஸ்திரம். ஆய கலைகள் அறுபத்தி நாலுல அதுவும் ஒண்ணாம். என்ன என்னை வச்சு படிக்கிறியா? அதுல பாஸ் ஆகிடு, அப்புறம் இந்த மாஸ்டர் உன்கிட்ட எப்படி சரண்டர் ஆகி கிடக்கிறேன்னு மட்டும் பாரு” எனக் கூறி குறும்பாக சிரித்தான்.

“உதயசரண் எப்பவோ பூவைசரண் ஆஹ் மாறிட்டார். நீங்க சொல்ற சில்மிஷமான சாஸ்திரம் எல்லாம் நீங்களே படிங்க, நான் வேணும்னா சரண்டர் ஆகுறேன்”

“ஆஹாங்…” என்ற உதய் அதுதான் சாக்கென அவளோடு இழைய ஆரம்பிக்க, “என்ன செய்றீங்க?” என கேட்டு பதறி எழுந்தாள் பூவை.

“மதன சாஸ்திரம் படிக்கிறேன், கோ ஆப்ரேட் பண்ணுங்க பொண்டாட்டி”

“உங்களை பத்தி தெரிஞ்சும் வாய் விடுறேனே என்னை சொல்லணும். டயர்டா இருக்குப்பா” என பூவை சொல்ல நல்ல பிள்ளையாகி அவளுக்கு சேவைகள் மட்டும் செய்தான்.

இப்படி புது மண தம்பதிக்குரிய அத்தனை அம்சங்களுடன் அழகாகத்தான் அவர்கள் நாட்கள் நகர்ந்தன.

இரவு ஏழு மணி போல சமையலறை சென்று விரைவாக சமையல் முடித்து மீண்டும் அறைக்கு வந்து விடும் பூவை பின்னர் உணவு நேரத்துக்கு உதய்யோடு சென்று சாப்பிட்டு முடித்து அவனோடே வந்து விடுவாள்.

நாதன் எப்போதும் தாமதமாகத்தான் சாப்பிடுவார், அந்த நேரம் தான் அங்கிருக்க வேண்டாம் என கருதியே அறைக்கு வந்து விடுவாள் பூவை. அதன் பின் அறையை விட்டு அவளை செல்ல விடாமல் உதய் அவளை ஆக்ரமித்துக் கொள்வான்.

கமலா பெரிய மனது வைத்து இரவில் அவரே பாத்திரங்களை ஒழித்து போட்டு விடுவார். மாமியார் என்ன சொன்னாலும் உதய்யிடம் கொண்டு செல்லாமல் முடிந்த வரை பொறுமையாக, அளவுக்கதிகமாக அவர் பேசுகையில் அவளே திருப்பிக் கொடுக்க என சமாளிக்க இப்போது கமலாதான் மகனிடம் குறை படிக்க ஆரம்பித்தார்.

“ரொம்ப வாய் பேசுறாடா உன் பொண்டாட்டி, வயசுக்குன்னு மரியாதை கொடுக்க தெரியாதா அவளுக்கு?” என மகனிடம் கோவமாக கேட்டார்.

“ம்மா, இதைதான் அத்தை சொன்னாங்க” என்றான்.

“யாரு அந்த அடங்காதவளுக்கு இந்த அடங்காதவ பத்தி தெரிஞ்சிருக்கா? சொன்னாளா உன்கிட்ட?”

“ம்மா…” என பல்லை கடித்தவன், “உங்க கூட எந்த பொண்ணாலேயும் பொறுமையா இருக்க முடியாதுன்னு சொன்னாங்க. இந்த வீட்டுக்கு வர்ற பொண்ணால நிம்மதியா வாழ முடியாதுன்னும் சொன்னாங்க” என்றான்.

“இப்ப உன் பொண்டாட்டிய நிம்மதியா நான் வாழ விடலையா? இது உன் அத்தை சொன்னாளா, இல்ல நீ கட்டிகிட்டு வந்த வாயாடி சொன்னாளா?”

“என்ன பேச்சும்மா இது? நீ ஒண்ணும் சொல்லாம அவ வாயாடினாளா? அவ பேசுற அளவுக்கு நீ என்ன பேசின?”

“ஏன் உன் பொண்டாட்டி எதுவுமே உனக்கு சொல்லலையா? நடிக்காதடா”

“அவ எதுவும் சொல்றதில்ல. உன்கிட்ட நடிச்சு எனக்கு யாரும் அவார்டும் தரப் போறதில்ல. நான் அவகிட்ட பொறுமையா இருக்க சொல்லியிருக்கேன். உன்கிட்டேயும் அதைத்தான் சொல்றேன். நீ நினைக்கிற அளவுக்கு அவ அவ்ளோ ஈஸி கிடையாது. என் பொண்டாட்டி ஒரு தன்மான சிங்கம். ஏதாவது செஞ்சு பெருசா பிரச்சனை உண்டாக்கிடாத. பிடிக்கலைன்னா ரெண்டு பேரும் பேசிக்காம கூட இருங்க, ஆனா சண்டைன்னு மட்டும் என் காதுக்கு வரக்கூடாது” என்றான்.

இத்தனை வருடங்கள் இப்படியெல்லாம் எச்சரிக்கை செய்வது போலவோ அறிவுரை வழங்குவது போலவோ பேசாத மகன் இன்று இப்படி பேசவும் கமலாவால் பொறுக்க முடியவில்லை.

“நீ மாறிட்ட, இல்லையில்ல உன்னை அவ மாத்திட்டா, என் மேலேயே தப்பு சொல்ற அளவுக்கு உனக்கு ஏத்தி விட்ருக்காளே… கில்லாடிதான் அவ” என வித விதமாக புலம்பிக் கொண்டே சென்றார்.

அம்மாவிடம் இப்படி சொன்னவன் மனைவியிடம், “அம்மா வயசுல பெரியவங்க. பேசுறது கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும். கொஞ்சம் அனுசரிச்சு போ பூவை, எதுவும் மரியாதையில்லாம பேசாத” என்றான்.

“நான் அப்படி எதுவும் பேசல, ரெண்டு பேர் இடையிலேயும் நீங்க வந்தா உங்க நிம்மதி போய்டும். என்ன சொன்னாலும் ம்ம் னு சொல்லிட்டு விடுங்க, நான் அவங்களை பார்த்துக்கிறேன்” என்றாள்.

“அதுதானே பிரச்சனை. நீ ரொம்ப பேசாத பூவை அவங்ககிட்ட. அம்மாக்கு பி பி இருக்கு, அவங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா என்னால தாங்க முடியாது”

“அவங்க பேசுறது பிடிக்கலையே ஒழிய எனக்கும் அவங்க ஹெல்த் மேல அக்கறை இருக்கு. உங்களுக்கு தெரியாதுங்க நான் அவங்ககிட்ட ரொம்ப பொறுமையாதான் போறேன். அதுக்காக அவங்க என்ன பேசினாலும் என்னால கேட்டுகிட்டே இருக்க முடியாது” என்றாள்.

“அப்படி கேட்டுகிட்டு இருக்க சொல்லலை பூவை, ஆனா அவங்க என் அம்மா, உடம்பு முடியாதவங்க வேற, அது எப்பவும் உனக்கு நினைவிருக்கட்டும்” என்றான்.

பூவை முறைத்து விட்டு அமைதியாக படுத்துக் கொண்டாள்.

“நீ பொறுமையான பொண்ணுன்னு நினைச்சேன் பூவை, ஏன் உனக்கு இவ்ளோ கோவம் வருது?”

“பொறுமை, கோவம் பத்தியெல்லாம் நீங்க சொல்றீங்க பாருங்க…” ஏளனமாக சொன்னாள் பூவை.

“நான் பொறுமைன்னு என்னைக்குமே சொல்லிகிட்டதில்லை. உன்னை பத்தி நான் நினைச்சதை சொல்றேன்”

“பொறுமைக்கும் அடிமை மாதிரி இருக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குங்க. எது வேணா செய்ங்க எனக்கு ஒண்ணுமில்லைன்னு போகணும்னா சூடு சொரணை எல்லாம் மழுங்கி போகணும். இன்னும் எனக்கு அப்படி ஆகல, அப்படி ஆகவும் விட மாட்டேன்” என படுத்துக் கொண்டே சொன்னாள்.

“ஏதாவது சொன்னா சரின்னு சொல்ற பழக்கமே இல்லையா உனக்கு? உன்னை இங்க யாரும் அடிமையா நடத்தல. என்னை மீறி யாரும் அப்படி உன்னை நடத்தவும் முடியாது. ரெண்டு நாள்ல நான் கிளம்பறேன், தயவுசெஞ்சு நான் வர்ற வரைக்கும் கொஞ்சம் சமாளின்னுதான் சொல்றேன்” என்றான்.

“அப்போ நீங்க வந்த பிறகு பேசலாமா?” நக்கலாக கேட்டாள் பூவை.

“எப்பவும் நீ பேசலாம், ஆனா நான் வந்த பிறகு கூட எப்பவும் வரம்பு மீறி மட்டும் பேசக் கூடாது”

“நீங்க வந்தப்புறம் பொறுமையா போவேனா தெரியாது, ஆனா நீங்க வர்ற வரை எதுவும் பேசல போதுமா?” எனக் கேட்டாள்.

படுக்கையின் ஓரமாக படுத்திருந்தவளின் அருகில் அவளை நெருக்கியவாறு அமர்ந்தவன் “உங்கிட்ட எதுவுமே போதும்னு சொல்ல வர மாட்டேங்குது பூவை, வேணும் வேணும்னுதான் உள்ள கிடந்து துடிக்குது, என்ன செய்வேன்?” கிறக்கமாக சொல்லிக் கொண்டே அவள் மீதே கவிழ்ந்தான்.

“ம்ம்… நல்லா அம்மாக்கு சப்போர்ட் பண்ணிட்டு இப்ப வழியாதீங்க. எனக்கு மூட் சரியில்லை, ஒழுங்கா தள்ளி படுங்க”

“மனசாட்சி இல்லாதவளே ரெண்டு நாள்ல கிளம்ப போறேன்டி”

“அதுக்கு… ப்ச்… மூச்சு விட முடியலைன்னு சொல்றேன்ல, தள்ளி படுங்கன்னு சொன்னா கேட்க மாட்டீங்க?” எரிச்சலாக கேட்டாள்.

உண்மையில் அவளுக்கு அப்படி எதுவும் சிரமமில்லை, அந்த நேரம் உதய் மீது கோவமிருக்க அவனை தவிர்க்க அப்படி சொன்னாள். அது அவனுக்குமே புரிந்திருக்க அவனும் விடுவதாக இல்லை.

“உனக்கும் சேர்த்து நானே மூச்சு விட்டுக்கிறேன், நீ இப்போ கப்சிப் ஆகுடி காரபனியாரம்!”

“யாரு நான் கார பனியாரமா? நீங்கதான் கார கொழுக்கட்டை, எரியுற அடுப்புல கிடக்குற நெருப்பு துண்டு, அம்மாகிட்ட மட்டும் அடங்கி போற அந்நியன், எப்ப வேணா வெடிக்க காத்திருக்கிற எரிமலை…” மூச்சு விடாமல் பேசியவளின் பேச்சை விழுங்கினான்.

மூச்சு வாங்க அவனை விலக்கி விட்டவள், “இப்படி பேசிட்டிருக்கும் போது முத்தம் கொடுத்து ஏமாத்த பார்க்கிற…” அவளை சொல்ல விடாமல் இந்த முறை பலமாக அவனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருந்தான்.

பூவையும் பலம் திரட்டி அவனை தள்ள படுக்கை ஓரம் என்பதால் கீழே விழுந்து விட்டான். இதை எதிர்பார்க்காத பூவை திகைக்க, விழுந்த ஆத்திரத்தில் கோவத்தோடு எழுந்தவன் அவள் தலை முடியை இறுகப் பற்றி, “அறிவில்லடி… இவ்ளோ திமிர் காட்டுற அளவுக்கு என்ன செஞ்சேன் இப்போ?” எனக் கத்தி கேட்க அதிர்ச்சியில் உறைந்தாள் பூவை.

Advertisement