Advertisement

நீ என் காதல் புன்னகை -8(2)

அத்தியாயம் -8(2)

கமலா வருவதற்குள் கணவனிடம் நடந்ததை சொல்லியிருந்தாள் பூவை.

“என்னடா இதெல்லாம்?” எனக் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் கமலா.

“என்னம்மா?” சலிப்பாக கேட்டான் உதய்.

“இவ பாட்டுக்கும் இங்க வந்திட்டா யார் சமையல் செய்றது? இப்பவும் முடியாத உடம்போட நான்தான் செய்யணுமா?” எனக் கேட்டார்.

“நீ ஏன் ஈஸ்வரி அக்கா முன்னாடி எல்லாம் இவளை பேசுற? உன் கோவத்தை என்கிட்ட காட்டும்மா” என்றான்.

“இவ நாயன வாசிப்பு கேட்டுகிட்டு எனக்கே அட்வைஸ் பண்ணுவியா நீ? அப்ப முட்டைகோஸ் சாப்பிடுறியா நீ?” எனக் கேட்டார்.

“முட்டைகோஸ்தானே சாப்பிடுறேன். நீ கொஞ்சம் இவகிட்ட தன்மையா பேசும்மா” என்றான்.

“இவளுக்காக உனக்கு பிடிக்காத கோஸ் சாப்பிடுவியா இப்போ?”

“நீதானம்மா சாப்பிட சொன்ன?”

“என்னத்த நான் சொன்னேன்? நான் சொல்றதை கேட்கிறவன்தான் நீ… வருஷக்கணக்கா ஆளாக்கின பையனை ஒத்த நாள்ல சுருட்டி வைக்கிற சூசகமெல்லாம் எனக்கு தெரியாம போயிட்டே…” என புலம்பிக் கொண்டே கமலா செல்ல வாயை குவித்து மூச்சு விட்டுக் கொண்டே உதய் திரும்ப தலையை இரு கைகளாலும் தாங்கிய வண்ணம் பூவை அமர்ந்திருந்தாள்.

“என்ன பூவை ஹெட்ஏக் ஆஹ்?” எனக் கேட்க உதடுகள் துடிக்க கோவமாக அவனை பார்த்தவள், “என்ன மயக்கினேன் நான் உங்களை? அப்படியே யார்கிட்டேயும் மயங்கி போற அளவுக்கு நீங்க அப்பாவியா? இல்ல சுருட்டி வைக்க நீங்க என்ன சுருக்கு பையா? புசு புசுன்னு கோவம் வர்ற ஒரு முரட்டு முட்டைகோஸ் சாப்பிடாத பீசை ஆளாக்கினதா பெருமை வேற…” பட படவென பொரிந்தாள் பூவை.

“ஏய் இருபத்தி நாலு மணி நேரத்துக்குள்ள இத்தனை நீளமான ஆக்ஷன் படம் ஓட்டுறீங்க ரெண்டு பேரும். இதுல என்னை வேற ஏகத்துக்கும் டேமேஜ் செய்ற… நீயாவது கொஞ்சம் பொறுமையா பேசுடி” என்றான்.

“இந்த வீட்ல பொறுமையா இருக்கணும்னா எருமையாதான் இருக்கணும்” பூவை சலிப்பாக முணு முணுக்க உதய் சிரித்தான். அவனது சிரிப்பு இன்னும் அவளை எரிச்சலாக்க முகம் சுளித்து திரும்பிக் கொண்டாள்.

“ஏய் நான்தான் சொல்லிட்டேன்ல, இனிமே அம்மா இப்படி பேச மாட்டாங்க. பெருசு பண்ணாம போ, போய் அவங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணு” என்றான் உதய்.

பூவை அவனை உக்கிரமாக பார்க்க, எழுந்து சென்று அவள் தோளை இதமாக பிடித்து விட ஆரம்பித்தான். முதலில் அவனது கையை விலக்க முயன்றாலும் பின் அவனது கை கொடுத்த அழுத்தம் சுகமாக இருக்க கண்கள் மூடி கணவனது சேவையை அனுபவித்தாள்.

“என்ன நீ… காலையிலதான் சாஃப்ட்னு சொன்னேன், அதுக்குள்ளே பட் பட்னு பொரியிற? அந்த சாஃப்ட் பூவைத்தான் எனக்கு பிடிச்சிருக்கு. எல்லாத்துக்கும் பொங்காம கூல் ஆகு, இன்னைக்கு நைட் ஷிம்லா கிளம்பறோம். அஞ்சு நாள் தங்குறோம். ஜாலியா போறோம், அதை விட ஜாலியா ஜமாய்க்கிறோம், இப்ப போ” என்றான்.

கண்கள் திறந்து ஐயோ என தலையில் கை வைத்துக்கொண்டவள், “மண்டே பேங்க் போகணும்ங்க, யாரை கேட்டு பிளான் செய்றீங்க?” என சோர்வும் எரிச்சலுமாக கேட்டாள்.

“நாளைக்கு சண்டே லீவ்தானே… கூட நாலு நாள் சேர்த்து லீவ் எடுத்துக்க. நேத்து கல்யாணம் ஆன மாதிரியா இருக்கோம்? ஏதாவது சொல்லி லீவ் வாங்கு” என்றான்.

“என்கிட்ட முன்னாடியே சொல்றதுக்கென்ன?”

“அதான் இப்ப சொல்லிட்டேன்ல? லீவ் போடு, இப்ப அம்மாகிட்ட போ. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு, முடிச்சாதான் அஞ்சு நாள் ஃப்ரீயா உன்னோட இருக்க முடியும்” என்றவன் மீண்டும் லேப்டாப் முன் அமர்ந்து கொள்ள பூவைக்கு தலை சுற்றுவது போலவே இருந்தது.

இவளை கவனிக்காமல் உதய் வேலையில் மூழ்கியிருக்க இங்கே இருந்தால் கண்டிப்பாக சண்டை வரும் என நினைத்து சமையலறை சென்றாள். அங்கே கமலா இல்லாமல் போக ஈஸ்வரியிடம் என்ன சமைக்க என அவர் சொன்னாரோ அதை செய்ய ஆரம்பிக்க சற்று நேரத்தில் கமலாவும் வந்து இணைந்து கொண்டார்.

பேச்சே இல்லாமல் மாமியார் மருமகளின் மனக் கொதிப்பில் விரைவாகவே சமையல் முடிந்து விட்டது.

மதிய சாப்பாடு முடிந்த பின்னர் எப்படி விடுப்பு எடுப்பது என யோசித்த பூவைக்கு உதய் மீது கோவம் கோவமாக வந்தது. அவனோ விடுப்பு எடுப்பது உன் பாடு என்பது போல கண்டுகொள்ளாமல் இருந்தான். தன்னை தயார் செய்து கொண்டு மேனேஜருக்கு அழைத்து திருமணம் பற்றி கூறியவள், விடுப்பு பற்றி பேசினாள்.

வாழ்த்தியவர் “உன் லீவ் எல்லாம் முடிஞ்சு போச்சும்மா. வேணும்னா மெடிக்கல் லீவ் எடுத்துக்க, வரும்போது மெடிக்கல் செர்டிஃபிகேட் கொடுத்திடு” என யோசனை கொடுக்க அவளும் நன்றி சொல்லி வைத்தாள்.

பூவை பேச ஆரம்பித்த போதே வேலையை நிறுத்தி விட்டு அவளை பார்த்துக் கொண்டுதான் அமர்ந்திருந்தான் உதய்.

“பாருங்க எவ்ளோ டென்ஷன் எனக்கு? இனிமே என்கிட்ட கேட்காமல் எதுவும் பிளான் செய்யாதீங்க?” என்றாள்.

“உடனே லீவ் தரலைன்னா இப்பவே வேலைய விட்டு ரிலீவ் பண்ணுங்கன்னு சண்டை போட்டு மூணு வாரம் லீவ் வாங்கி இந்தியா வந்தேன் நான் உன்னை கட்டிக்க. ஆஃபிஸர் அதையெல்லாம் யோசிக்காம நிறைய டென்சன் கொடுத்தீங்க. நான் உனக்கு அவ்ளோ பெரிய டென்ஷன் ரிஸ்க் எல்லாம் கொடுக்கல. இந்த ஹனிமூன் கூட உனக்காகத்தான், போய் பேக் பண்ணி ரெடி ஆகு” என சொல்லி மீண்டும் லேப்டாப்பை பார்க்க ஆரம்பித்து விட்டான்.

பூவை முறைத்துக் கொண்டிருக்க அவளை நிமிர்ந்து பார்க்காமலே, “இந்த முறைப்பு விரைப்பு எல்லாத்தையும் இங்கேயே விட்டுட்டு கிளம்பனும். அஞ்சு நாளும் சிரிச்ச முகமாதான் இருக்கணும், புரிஞ்சுதா?” என்றான்.

“அப்படியா? எனக்காகத்தானே இந்த பிளான், வாங்க இந்த ஹனிமூன் பிளானை எப்படி சிறப்பா செய்றேன்னு மட்டும் பாருங்க” என குதர்க்கமாக சொல்லி பூவை எழுந்து செல்ல, “நீங்க வந்தா மட்டும் போதும், அதெல்லாம் நாங்க சிறப்ப்…..பிச்சிக்…கிறோம்” என உதய் சொன்ன விதத்தில் பூவைக்கு சிரிப்பு வர வலிந்து அடக்கிக் கொண்டாள்.

“ஸ்மைல் ப்ளீஸ்” உதய் இதமாக கேட்க பூவையால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அவளை ரசித்து பார்த்தவன், “இப்படியே இருக்க கூடாதா நீ?” எனக் கேட்டான்.

“எனக்கு மட்டும் உர்ருன்னு இருக்க ஆசை பாருங்க, சீக்கிரம் வேலைய முடிங்க” என சொல்லி எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

உதய் சென்று அவன் அம்மாவிடம் என்ன சொல்லி சம்மதம் பெற்றான் என்றெல்லாம் பூவைக்கு தெரியவில்லை. அதை கேட்டுக் கொள்ளவும் இல்லை. அவளுக்கும் இங்கிருந்து எங்கேயாவது சில நாட்கள் சென்றால் நன்றாக இருக்கும் என தோன்றியிருக்க அமைதியாக அவனோடு கிளம்பி விட்டாள்.

நான்கு நாட்கள் எப்படி முடிந்தது என்றே தெரியாமல் அத்தனை இனிமையாக முடிந்திருந்தது. உதய்யின் வேறொரு பரிணாமத்தை பூவை உணர்ந்தாள். அவளுக்கு மட்டுமே தெரிந்த காதலன் உதய் அவனது காதல் மனைவியை மொத்த அன்பினாலும் குளிர்வித்திருந்தான்.

எனக்கு சொல்லாமல் எப்படி தேனிலவு திட்டமிட்டாய் என சண்டை போட்டவள் அதையெல்லாம் மறந்து, “நாளைக்கே போகணுமா? இன்னும் ரெண்டு நாள் இருந்திட்டு போகலாமா?” என கேட்க சத்தமாக சிரித்தான் உதய்.

“எனக்கு ரெண்டு நாள் என்ன… நான் திரும்ப சிங்கப்பூர் போற வரைக்குமே இங்க இருக்கலாம்னாலும் ஓகேதான்” என்றான்.

ஆனால் அப்படி இருக்க இயலாதே. பூவைக்கு அதற்கு மேல் விடுப்பு எடுக்க முடியாத காரணத்தால் அவள் முகம் சுருக்க, “இதே எஃபக்ட் நம்ம ரூம்லேயும் கிரியேட் பண்ணி தர்றேன் பூவை. நீ மூஞ்சு தொங்க போடாத” என்றான்.

“ஏன் பார்க்க அவ்ளோ அசிங்கமா இருக்கேனா?” எனக் கேட்டாள்.

“ம்ஹூம்… அது என்னமோ உன் முகம் எப்பவும் சிரிச்ச மாதிரி மலர்ச்சியாவே வச்சுக்கணும்னு எனக்கு ஒரு பிடிவாதம். அது மாறினா நான் எங்கேயோ தோத்த மாதிரி இருக்கு”

“அதுக்காக எது நடந்தாலும் சிரிச்சுகிட்டே இருக்க முடியுமா? பைத்தியம்னு சொல்வாங்க” என்றாள்.

“எங்க அவ்ளோ தைரியம் உள்ளவனை வந்து என் முன்னாடி உன்னை பேச சொல்லு, பார்ப்போம்” என கை முஷ்டியை மடக்கிக் கொண்டே சொன்னான்.

“நம்ம வீட்லேயே ஒரு தைரியசாலி இருக்காங்களே… உங்க அம்மாவை சொன்னேன்!” என பூவை நக்கலாக சொல்ல,

“என்னை மடக்கிட்டதா நினைப்பா?” எனக் கேட்டான்.

“உங்களை ஒண்ணும் நான் மடக்கல, நீங்கதான் என்னை…”

“உன்னை…”

“மடக்கி சுருட்டி உங்களுக்குள்ள வச்சுகிட்டீங்க” என வெட்கத்தோடு கூறினாள் பூவை.

“அப்படியா நீ எப்ப என் சுருக்கு பையா மாறின?”

“ஹ்ம்ம்.. கட்டிட பொறியாளர் பொறி வச்சு வானத்துல பறந்தெல்லாம் வந்து அடம் பண்ணி என்னை பிடிச்சிருக்காரே… அப்ப அவருக்கு சுருக்கு பை, ஜோல்னா பை எல்லாமுமா மாற வேண்டியதுதான்” எனக் கூறி சிரித்தாள்.

“பிடிச்சிருக்கா என்னை?” என அவள் முகத்தையே உற்று பார்த்து உள்ளார்ந்த குரலில் கேட்டான்.

“ஏன் தெரியலையா உங்களுக்கு?”

“தெரியும், ஆனா உன் வாயால சொல்லி கேட்கணும்” என்றான்.

அவனை அணைத்து அவன் காதோடு ரகசியமாக, “உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு உதய்” என பூவை சொல்ல அடுத்து நிகழ்ந்த உதய்யின் அன்பின் தாக்குதலில் முற்றிலும் அவன் மீது பித்தாகிப் போனாள் பூவை.

Advertisement