Advertisement

நீ என் காதல் புன்னகை -8(1)

அத்தியாயம் -8(1)

விடியும் வேளை கண் விழித்த பூவை எழ முற்பட அவளது அசைவில் தானும் எழுந்து கொண்ட உதய் மீண்டும் மனைவியை தன்னோடு அணைக்க, “டைம் ஆகிடும்” என மெல்லிய குரலில் சொன்னாள் பூவை.

“ஆனா ஆகட்டுமே, உன் பேர் உனக்கு எவ்ளோ பொருத்தம் தெரியுமா?” எனக் கிறங்கிய குரலில் கேட்ட உதய் எத்தனை பொருத்தம் என்பதை செயல்களால் விளக்க நேரம் கடப்பதை இருவருமே அறியும் நிலையிலில்லை.

பத்து மணி போல குளித்து வந்த மருமகளை கடு கடுவென்ற முகத்தோடு பார்த்த கமலா, “அவன் இன்னும் எழும்பலையா? சீக்கிரம் சாப்பிட்டு வேலைய முடிச்சாதான் மதியதுக்கு என்னன்னு பார்க்க முடியும்? போ, அவனையும் அழைச்சிட்டு வா” என்றார்.

“ஏன் இதையே கொஞ்சம் தன்மையாதான் சொன்னா என்னவாம்?” என மனதில் எண்ணியவாறே அறைக்குள் சென்றாள். அப்போதுதான் குளித்து வந்த உதய் களைப்பாக தெரிந்தாலும் எழில் கூடியே காணப் பட்ட பூவையை ஆசையாக பார்த்தான்.

கணவனிடம் மாமியார் சொன்னதை அப்படியே சொல்லி, “எப்படி கடுப்பா பேசுறாங்க தெரியுமா உங்க அம்மா?” என குறை படித்தாள் பூவை.

“கொஞ்ச நாள் அப்படித்தான் இருப்பாங்க பூவை. அவங்களுக்கு என் மேரேஜ் பத்தி நிறைய கனவுகள் இருந்திருக்கும். அவங்க விருப்பம் இல்லாம நான் உன்னை கட்டிக்கிட்ட கோவம். அவங்களுக்கு பிபி வேற இருக்கு பூவை. நான் நேத்து சொன்னதுதான், எனக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. நான் வந்ததும் சரி பண்றேன். இப்ப ஏதாவது நான் பேசினா நான் இல்லாதப்ப அந்த கோவத்தையும் உன்கிட்டதான் காட்டுவாங்க” என்றான்.

கணவன் சொன்னதில் சமாதானம் கொள்ளாமல் பூவை முகத்தை திருப்ப, “சரி வா, இப்பவே சண்டை போடுறேன்” என கோவமாக கிளம்பினான் உதய்.

எரிச்சலோடு அவன் கை பிடித்து தடுத்தவள், “சரி, விடுங்க” என்றாள்.

“அப்படியெல்லாம் விடவா கல்யாணம் செய்துகிட்டேன்? ம்ம்ம்…” எனக் கேட்டுக் கொண்டே மனைவியை ஆசையாக அணைத்துக் கொள்ள அவளுக்கும் கணவனது அரவணைப்பு தேவையாக இருக்க ஒன்றிக் கொண்டாள்.

“என் அத்தையிலேர்ந்து நிறைய சொந்த காரங்க இந்த வீட்டுக்கு வர்ற பொண்ணு நல்லா வாழ மாட்டான்னு எவ்ளோ பேசினாங்க தெரியுமா? எல்லாருக்கும் முன்னாடி பாருங்கடா என் மனைவி எப்படி என் குடும்பத்துல வாழறான்னு காட்டணும் பூவை. பெரியவங்களை நீ அனுசரிச்சு நடப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு, ஆனாலும் இன்னொரு முறை சொல்றேன். உன்கிட்டதான் என் மரியாதை இருக்கு. அதை எப்பவும் காப்பாத்தணும் நீ” என்றான்.

“என்ன நீங்க… சீரியல்ல வர்ற டயலாக் எல்லாம் சொல்றீங்க?” கிண்டல் செய்தாள் பூவை.

“ஓய் நான் எந்த சீரியலும் பார்க்கிறது இல்லை, நீ பார்ப்பியோ…”

“ம்ஹூம், ஆனா அம்மா பார்க்கும் போது எதேச்சையா பார்த்திருக்கேன்” என்றாள்.

“இனிமே அப்படி கூட பார்க்காத, வேணாம். எனக்கு பிடிக்காது” என்றான்.

தள்ளி நின்றவள், புருவம் சுளித்து, “உங்களுக்கு பிடிக்கலைன்னா எதுவும் நான் செய்யக் கூடாதா?” எனக் கேட்டாள்.

“சீரியல் பார்க்காதன்னு சொன்னது தப்பா?”

“அதை சொல்லலை, ஆனா உங்களுக்கு பிடிக்காததால செய்யக் கூடாதுன்னு ஏன் சொல்றீங்க?”

உதய் முகம் இறுக்கமாக மாறியது.

“சொல்லுங்க உதய், இது சாதாரண விஷயமா தெரியலாம், ஆனா உங்களை பத்தி எனக்கு சரியா தெரியலையோன்னு எல்லாம் யோசனை வருது” என்றாள்.

“இப்படி ரொம்ப ஆர்க்யூ செய்யாத பூவை. நல்லது சொன்னா கேட்டுக்க” என்றான்.

“அதே மாதிரி எனக்கும் ஏதாவது பிடிக்கலைன்னா நீங்க செய்யாமல் இருப்பீங்களா?” விடாமல் கேள்வி கேட்டாள் பூவை.

“என்ன செய்யணும் இப்போ?” கோவமாக கேட்டான் உதய்.

“இப்படி சட்டு சட்டுன்னு கோவ படாதீங்க” என்றாள்.

“இப்ப கோவமா என்ன பேசிட்டேன் நான்?” கோவமாகவே கேட்டான்.

“உதய் ப்ளீஸ், நான் பொதுவா ஒரு விஷயம் சொன்னேன். சொல்ல வர்றதை புரிஞ்சுக்கோங்க. இது நல்லதில்ல செய்யாதன்னு சொல்றதுக்கும் எனக்கு பிடிக்கல அதனால செய்யக்கூடாதுன்னு கண்டிஷன் மாதிரி சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. கணவன் மனைவி ரெண்டு பேருமே சமம் இல்லையா? ஒருத்தவங்க விருப்பத்துக்கு இன்னொருத்தவங்ககிட்ட மரியாதை இருக்க வேணாமா?” மிகவும் பொறுமையாக கேட்டாள்.

“என்ன மரியாதை குறைவா உன்கிட்ட நடந்திட்டேன் இப்போ? என் மனைவி இப்படி இருக்கணும்னு எனக்கு ஆசைகள் இருக்கு. அது படி நீ இருன்னு சொன்னா ஏன் இவ்வளவு பேசுற?” எரிச்சலாக கேட்டான்.

பூவை ஏதோ சொல்ல வர அறைக் கதவு தட்டப் பட்டது. உதய் யாரென பார்க்க அவன் அன்னை நின்றிருந்தார்.

“மணியை பார்த்தியா இல்லையாடா? உன் பொண்டாட்டியை உன்னை அழைச்சிட்டு வர சொல்லி சொன்னேன்… என்ன செய்றா அவ? வயசான காலத்துல ஏன்டா என்னை இப்படி போட்டு படுத்துறீங்க?” என பொரிந்தார்.

“ம்மா! போ வர்றேன்” என அவரிடமும் கோவமாக சொன்னான் உதய்.

“நீ ரொம்ப மாறிட்ட டா” என மருமகளை முறைத்துக் கொண்டே சொன்ன கமலா சென்றுவிட, சோர்ந்து போனவளாக படுக்கையில் அமர்ந்து விட்டாள் பூவை.

பூவையை அப்படி பார்க்க உதய்க்கும் என்னவோ போலாக, “உனக்கு பிடிச்சா பாரு” என்றான்.

என்ன என்பது போல அவன் முகம் பார்த்தாள் பூவை.

“அதான் சீரியல், ஆனா நான் இருக்கும் போது பார்க்காத” என்றான்.

“அப்ப இவ்ளோ நேரம் சீரியல் பார்க்க விடுங்கன்னு கேட்டுத்தான் உங்ககிட்ட பேசினேனா?” என அயர்வாக கேட்டாள்.

அவளருகில் அமர்ந்த உதய், “உன் விருப்பத்துக்கு எப்பவும் என்கிட்ட மரியாதை இருக்கும் பூவை. ஆனா சில விஷயம் எனக்கு பிடிக்கலைன்னா செய்யாத” என்றான்.

பூவை அசையாமல் அப்படியே இருக்க, “சரிடி உனக்கு பிடிக்காததை நானும் செய்யல, என் கோவத்தை குறைக்க ட்ரை பண்றேன், போதுமா?” எனக் கேட்டான்.

“சரி வாங்க, சாப்பிட போலாம். இல்லன்னா உங்கம்மா திரும்ப வருவாங்க” என்றாள்.

“ஏய் நான் இப்ப செய்திருக்கிறது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா? சாதாரணமா சாப்பிட போலாம் சொல்ற?” எனக் கேட்டான்.

“என்ன?”

“யார்கிட்டேயும் நான் இறங்கி போனதே இல்லை. வேற யாரா இருந்தாலும் ஆமாம் நான் அப்படித்தான்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பேன்”

“ஆனா நான் யாரோ இல்லை, உங்க சரி பாதி” என்றாள்.

“சரி டி என் சப்பாத்தி…. ஹான்… சாரி சாரி… சரி பாதி! இப்ப தொண்டையெல்லாம் ரொம்ப வறண்டு போயிட்டு…” என சொல்லி பூவையின் தொண்டையில் உதடுகள் கொண்டு வலம் வர பூவை கூசி சிலிர்த்தாள். அது இன்னும் உதய்யின் உணர்வுகளை உஷ்ணம் கொள்ள செய்ய, பூவையை சுற்றி வளைத்தான். சுதாரித்தவள் அவனை விலக்கி எழுந்து நின்றாள்.

உதய் ஏமாற்றமாக பார்க்க பூவைக்கு வெட்கமும் சிரிப்பும் ஒருங்கே எழ, “பாருடி திரும்ப என்னை என்னவோ பண்ற” என சொல்லி அவள் கையை பிடித்திழுத்தான்.

“ஹையோ போதும் உதய், சாப்பிட்டு வரலாம் வாங்க” என வற்புறுத்தி அவனை அழைத்து சென்றாள்.

முதல் நாளிரவு போலவே உணவு மேசையில் யாருமில்லை. ஷியாமளா கல்லூரிக்கும் நாதன் பயிற்சி மையத்திற்கும் சென்றிருந்தனர். இருவருக்கும் பூவையே பரிமாறிக் கொண்டு அவனுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு எல்லாவற்றையும் ஒழித்து போட, மதிய சமையலுக்கு என்ன காய் நறுக்க வேண்டும் எனக் கேட்டாள் வேலை செய்யும் பெண் ஈஸ்வரி.

கமலாவின் அறைக்கு சென்று பார்க்க அவர் படுத்துறங்குவது தெரிய பூவையே என்ன இருக்கிறது என பார்த்து எடுத்து வைத்தாள். ஈஸ்வரி நறுக்கிக் கொண்டிருக்க, கமலா வந்து விட்டார்.

ஈஸ்வரியோடு பேசிக் கொண்டே பூவை சமையல் செய்ய ஆரம்பித்திருக்க, “என்ன செய்ற ஈஸ்வரி நீ? எதுக்கு முட்டைகோஸ் அறிஞ்சிட்டு இருக்க? அது உதய்க்கு பிடிக்காது” என கடு கடுவென பேசினார்.

ஈஸ்வரி விழிக்க, “அதனால என்ன அத்தை? நாம சாப்பிடுவோம், அவருக்கு வேற செய்திடலாம்” என சமாதானமாக சொன்னாள் பூவை.

“ம்ம்… என்ன என் மகனை மயக்கி கல்யாணம் செய்யவும் குடும்பமே நீ சொல்றதை கேட்கணும்னு முடிவு பண்ணிட்டியா?” என வெடுக் என கமலா கேட்க ஈஸ்வரி இருவரையும் மாறி மாறி வேடிக்கை பார்த்தாள்.

“சின்ன விஷயத்துக்கு மயக்கிட்டேன்னு எல்லாம் பேச வேண்டாமே அத்தை. என்ன இப்போ நீங்களே என்ன செய்யணுமோ சொல்லுங்க” என கோவத்தை அடக்கிக் கொண்டு சொன்னாள் பூவை.

“அப்போ இந்த முட்டை கோசை என்ன செய்றது?” என அதற்கும் விடாமல் பேசியவர் ஈஸ்வரியை பார்த்து, “நீ எத்தனை வருஷம் இங்க வேலை பார்க்கிற? உனக்கு தெரியாதா என்ன யார்கிட்ட கேட்டு செய்யணும்னு? யார் என்ன சொன்னாலும் செய்வியா? உனக்கு சம்பளம் நான்தான் தர்றேன்?” என அதிகாரமாக கேட்டார்.

பூவைக்கு அங்கு இருக்க பிடிக்காமல் சென்று விட, “என்ன சொல்லிட்டேன்னு பேசிட்டிருக்கும் போது இப்படி பாதியில போறா. கொஞ்சமும் மரியாதை தெரியாத பொண்ணு. நீ இந்த கோஸ் செஞ்சு வை, வேஸ்ட் பண்ணாத. உதய் அப்பா அவருக்கு பிடிக்கும்னு வாங்கிட்டு வந்திருப்பார், அவரே சாப்பிடுவார், மீதமிருந்தா நீ எடுத்துக்கலாம்” என்றவர் இன்னும் என்ன செய்ய வேண்டும், அதற்கு என்ன நறுக்க வேண்டும் என கட்டளையிட்டு ஹாலுக்கு வந்தார்.

லேப்டாப்பில் வேலையாக இருந்த உதய் பூவையின் கோவ ரூபம் கண்டு கண்களால் என்ன என கேட்க அவள் அவனையே முறைத்தாள். அதற்குள் உதய் என கமலா சத்தமிட, “இங்க வாம்மா” என இவனும் சத்தமிட்டான்.

Advertisement