Advertisement

நீ என் காதல் புன்னகை -7(3)

அத்தியாயம் -7(3)

உதய் கோவப்படுவது நன்றாக தெரிந்தது. ஆனால் அடக்கிக் கொண்டான்.

“என்னங்க ஹாஸ்டல்ல தங்கிக்கவா?” என மீண்டும் கேட்டாள்.

“இங்க சீக்கிரம் எல்லாம் சரியாகும் சொன்னேன்தானே பூவை? வேற ஊரா இருந்தா பரவாயில்லை. ஒரே ஊர்ல வீடு வச்சிட்டு ஹாஸ்டல்ல தங்கினா நல்லாவா இருக்கும்? உன் அம்மா வீட்ல வேணா தங்கிக்க. நான் வந்ததும் கூப்பிட்டுக்கிறேன்” என்றான்.

“நான் எப்படி அம்மா வீட்லேர்ந்து தினம் பேங்க் போவேன்?”

“லீவ் போடு”

“ஏற்கனவே அண்ணாக்கு ஆக்சிட்டென்ட் ஆனப்பவே நிறைய எடுத்தாச்சு, இப்பவும் லீவ் எடுத்ததுல இனிமே எடுக்க முடியாது” என்றாள்.

“ஒண்ணு நீ இங்க இருக்கணும், இல்லன்னா உன் அம்மா வீடு. ஹாஸ்டல் போக நான் அலோவ் பண்ண மாட்டேன்” என்றான்.

“அதெப்படி ஆளாளுக்கு என்னை கண்டாலே மூஞ்சு திருப்புவாங்க, இங்க நீங்களும் இல்லாம நான் தனியா இருக்கணுமா?” கோவமாக கேட்டாள் பூவை.

“உன் ஹாஸ்டல் போல நினைச்சுக்க பூவை. உன் கஷ்டம் புரியுது, ஆனா இப்ப நீ இங்கேர்ந்து ஹாஸ்டல் போனா இன்னும் பிரச்சனை பெருசாகாதா? டூ மன்த்ஸ்ல நான் வந்திடுவேன்” என சமாதானமாக சொன்னான்.

பூவைக்கு புரியாமல் இல்லை, ஆனால் இங்கு இருப்பதும் எளிதாக தோன்றவில்லை. எதுவும் வாதிடாமல் அமைதியாக இருக்க, உதய் அவன் தந்தையை பார்த்து வருவதாக கூறி அறையை விட்டு வெளியேற தனியாக இருந்த பூவையை நேரம் கொன்றது.

எப்படியோ இரவு வந்து விட, சாப்பிட அழைத்தான் உதய். யார் முகங்களும் பார்க்க பிரியமில்லாமலேயே பூவை வர அங்கே யாருமே இல்லை. சாப்பிட்டு முடித்து அறைக்கு திரும்ப அப்போதுதான் அந்த இரவு பற்றிய எண்ணம் எழுந்து யோசனையாக உதய்யை பார்த்தாள்.

அவன் ஒன்றும் சொல்லாமல் படுக்க தயாராகி அவளது கை பிடிக்க, என்ன என்பது போல அவன் முகம் பார்த்தாள்.

“இப்படி பார்த்தா என்ன அர்த்தம்? ம்ம்…” கேட்டுக் கொண்டே மனைவியை அணைக்க,

“கொஞ்ச நாள் போகட்டுமே” என்றாள்.

“ஏன் இன்னைக்கு என்ன?” அவளை விடாமல் கேள்வி கேட்டான்.

“எனக்கு கூச்சமா இருக்கு” அவன் கைகளுக்குள் இருந்தவாறே நெளிந்தாள்.

“கொஞ்ச நாள் கழிச்சு மட்டும் கூச்சம் போய்டுமா? என்னைக்கா இருந்தாலும் இது இப்படித்தான் இருக்கும். ஏன் என்னை பிடிக்கலையா?” என சமாதானம் போல ஆரம்பித்தவன் கடைசி கேள்வியை கோவமாக கேட்டிருந்தான்.

“பிடிக்காமதான் உங்க வீட்ல யாருக்கும் விருப்பமில்லைன்னு தெரிஞ்சும் இப்ப கல்யாணம் பண்ற ஐடியாவே இல்லைன்னாலும் உங்களுக்காக கல்யாணம் செய்துகிட்டேனா?” எனக் கேட்டாள்.

“கல்யாணம் செய்துகிட்ட சரி, எதுக்காக கல்யாணம் செய்றதுன்னு தெரியாம பண்ணிக்கிட்டியா என்ன?” கேட்டுக் கொண்டே அவளிடம் அத்து மீறிக் கொண்டிருந்தான்.

“மனசு என்னவோ போல இருக்குங்க” சோர்ந்து போன குரலில் சொன்னாள்.

“இது கூட மனசை சரி பண்ண ஒரு வழிதான் பூவை. எல்லாம் முறைப்படி சரியா நடக்கணும். அப்போ முதலிரவுல நடக்க வேண்டியது அன்னைக்குதானே நடக்கணும்? அப்புறம் நமக்கு முதலிரவே நடக்கலைன்னு குறையா ஆகிடாதா? ம்ம்…” எனக் கேட்க, வரைமுறை இல்லாமல் நீளும் அவன் கைகளை பிடித்துக்கொண்ட பூவை வேண்டாம் என தலையாட்டினாள்.

அவள் கைகளில் மாற்றி மாற்றி உதய் முத்தமிட அவன் சொல்லாமலே அவனது கைகளை விட்டவள் பின்னால் செல்ல மீண்டும் அவனது அணைப்பில் அவளை கொண்டு வந்திருந்தான் உதய். பூவை அடுத்து எதுவும் பேசவோ அல்லது எதையும் உணர்வதற்குள்ளாகவோ அவள் அணிந்திருந்த புடவையிலிருந்து அவளுக்கு விடுதலையும் கொடுத்திருந்தான்.

இப்படி அவன் முன் நிற்பது பிடிக்காமல் பூவைக்கு அழுகை வரும் போலிருக்க அவளது முக மாற்றம் கண்டவன் முகத்தை நிமிர்த்தி அவனை பார்க்க செய்தான். பூவையின் கண்களிலிருந்து நீர் சொட்டி விட, “என்ன செய்யணும் பூவை நான்? தள்ளி படுக்கணுமா?” எனக் கேட்டான்.

“ஏதோ தெரியாத தீவுக்கு வந்து மாட்டிகிட்டது போல இருக்கு. அம்மா நினைப்பு வருது. இனி நடக்க போறது நினைச்சா…” சொல்லாமல் நின்றாள்.

“சொல்லி முடி”

“ரொம்ப ஷையா இருக்கு” என்றாள்.

“நல்ல வேளை அசிங்கமா இருக்குன்னு சொல்லாம போனியே…” என்றவன் மென்மையாக அவளை அணைத்து அவள் காதில், “உன்னை மாதிரிதான் நானும் அரையும் குறையுமா உன் முன்னாடி இருக்கேன். எனக்கும் ஷையாதான் இருக்கு. ஆனாலும் உன் வெட்கத்தை பார்க்கணும், அந்த வெட்கத்தை தூர விரட்டணும் போல எல்லாம் இருக்கே… என்ன செய்றது?” எனக் கேட்டான்.

அப்போதும் அவனுடன் ஒன்றாமலேயே பூவை நின்றிருக்க, “ஒன் டுவெண்ட்டி செகண்ட்ஸ் நீ எதுவும் பேசக்கூடாது, அதுக்கப்புறம் நீ வேணாம் முடியாதுன்னு சொன்னா நான் தள்ளி போயிடுறேன், ஓகேவா?” எனக் கேட்டான்.

“நிஜமா?” எனக் கேட்டாள்.

“வேணும்னா எழுதி கைநாட்டு போட்டு தரவா?” என உதய் கேட்க பூவை சிரித்தாள்.

“உன் ஸ்மைல் அஹ் நான் எடுத்துக்கவா?” என ஆழமான குரலில் உதய் கேட்க,

“உங்க மீசை குத்தாதே?” என கேள்வி கேட்டாள்.

“ஆமாம் டி, என் மீசை குத்தி கிழிச்சு இரத்தம் வரப் போகுது, ஆள பாரு. அப்படியே இருந்தாலும் குத்துமா குத்தாதான்னு எனக்கு தெரியாது, உன்னை தவிர இதுக்கு பதில் வேற யாராலேயும் சொல்லவும் முடியாது. இப்படியெல்லாம் படுத்த எத்தனை நாள் பிளான் போட்ட” என சலிப்பாக உதய் கேட்க மீண்டும் சிரித்தாள் பூவை.

இன்னொரு முறை அவளிடம் அனுமதி கேட்டு நேர விரயம் செய்யாமல் அதி வேகமாக அவள் சிரிப்பை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தான் உதய். அவனிடம் சிரிப்பை தந்து விட்ட பூவையின் இறுக்கமெல்லாம் வடிந்து போயிருக்க மனைவியை அள்ளி படுக்கையில் விட்டவன் கணவனாக அதீத நெருக்கம் உண்டாக்கி அவளோடு இழைந்தான்.

பூவை பயந்தது போல எதுவும் இல்லை, அவளுக்கும் அவனை அவன் செயல்களை பிடிக்க செய்தது. சில நொடிகளில் தான் கொண்ட மயக்கத்தை பூவையிடமும் இடமாற்றம் செய்திருந்தான்.

உதய்யின் பேச்சுதான் கடுமையே ஒழிய பூவையிடம் மென்மையாகவே நடந்து கொண்டான். மெல்ல மெல்ல அவளை தன் வசமாக்கியவன் திடீரென விலகி “பத்து நிமிஷம் மேல ஆகியிருக்குமே, நீ எதுவும் சொல்லலை” என கூறி கண் சிமிட்டி சிரிக்க செல்லமாக அவன் கன்னத்தில் அடித்தவள் வேகமாக தன்னோடு அவனை அணைத்துக் கொண்டாள்.

“நீ சொல்லாம அடுத்து எதுவும் இல்லை” என அவள் காதில் ரகசியம் பேச,

“சொல்லாமலே புரிஞ்சுப்பீங்கன்னு நினைச்சேன். அப்போ தத்தியா நீங்க?” என அவளும் ரகசியமாக கேட்டாள்.

“கொஞ்ச நேரம் முன்னாடி கண்ணை கசக்கின பேங்க் ஆஃபிஸரை பார்த்த நீ?” எனக் கேட்டான்.

“இல்லையே… என்கிட்ட கெஞ்சிகிட்டு நின்ன படிச்ச மேஸ்திரியைதான் பார்த்தேன் நான்” என்றாள்.

“அடி நக்கல் பிடிச்சவளே… நான் கெஞ்சினேனா?”

“இல்லையா? அப்போ போறேன் நான்” என பூவை எழ அவனும் விலகி படுத்து விளக்கை போட்டு விஷமமாக சிரித்தான்.

தன்னை மறைக்க அவனிடமே ஒளிந்து கொண்ட பூவை, “இப்படியெல்லாம் செஞ்சா நிஜமா போய்டுவேன்” என மிரட்டினாள்.

விளக்கை அணைத்தவன், “இன்னைக்கு சொல்றதுதான் பூவை, விளையாட்டுக்கு கூட போய்டுவேன்கிற வார்த்தை உன் வாயிலேர்ந்து வரக்கூடாது” என தீவிரமான குரலில் கூறினான்.

“சொல்லத்தானே கூடாது, அப்போ செய்யலாமா?” அவனது தீவிரம் புரியாமல் விளையாடினாள் பூவை.

“கொன்னுடுவேன் உன்னை” கோவமாக உதய் சொல்ல பூவை பழைய படி முறுக்கிக் கொண்டாள்.

“எவடி இவ? நேரங்கெட்ட நேரத்துல படுத்தி வைக்கிறா… இன்னைக்கு இதுக்கு மேல ரெண்டு பேருமே வேற பேசவே கூடாது” என்ற உதய் அதை தீவிரமாக கடை பிடிக்க பூவையால் பேசவே முடியவில்லை, அவன் விட்டால்தானே பேச? ஆனால் அங்கு பேச்சுக்களுக்கு தேவையும் இருக்கவில்லை.

அவசரமாக ஆரம்பித்து மறுப்பு, வெட்கம், தயக்கம், கோவம், சண்டை என எங்கெங்கோ சென்றாலும் ஒரு வழியாக காதல் வழியில் கை கோர்த்து மோகம் வழிந்தோட இளமையின் ஈர்ப்பில் இருவர் ஒருவராய் பின்னி பிணைந்து இல்லற வாழ்வில் இனிதே இணைந்தார்கள்.

Advertisement