Advertisement

நீ என் காதல் புன்னகை -7(2)

அத்தியாயம் -7(2)

திருமணம் முடித்து வீட்டுக்கு வந்த மணமக்களை முகத்தை தூக்கி வைத்துக்கொண்டே ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார் கமலா.

பூவை நெருடலும் வருத்தமுமாக உதய் முகம் பார்க்க, அவன் கண்களாலும் புன்னகையாலும் சமாதானம் சொன்னான். முகத்தில் சிரிப்பு இல்லாத போதும் சடங்கு சம்பிராதாயங்கள் அனைத்தையும் குறைவின்றி செய்ய வைத்தார் கமலா.

அவருக்கு தனது மகனின் திருமணம் இப்படியா எளிமையாக நடக்க வேண்டும் என்ற ஆதங்கம் ஒரு புறம் என்றால் இப்போது இந்த திருமணம் நடக்கவில்லை என்றால் இப்பொழுதே சிங்கப்பூர் செல்லும் நான் மீண்டும் இந்தியா வரப் போவதே இல்லை என மிரட்டி தன்னை சம்மதிக்க வைத்த மகன் மீதான கோவம் இன்னொரு புறம். அப்படி என்ன என் மகனை முதலில் வேண்டாம் என சொல்லி மீண்டும் ஒத்துக் கொண்டாள் இவள் என பூவை மீதான கோவமும் இருந்தது.

பூவையை பார்க்காமலே அன்னையின் மூலமாக ஷியாமளாவின் மனதில் தவறான பிம்பமாகவே பூவை பதிந்து போக, நேரிலேயும் நல்ல விதமாக அண்ணியை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நாதன் அவரது அறையில் முடங்கியவர் பின் வெளியில் வரவே இல்லை.

நெருங்கிய சொந்தங்கள் மற்றும் உதய்யின் நெருங்கிய நண்பர்கள் என மொத்தமாக முப்பது நபர்களுக்குள்தான் திருமணத்திற்கு வந்திருந்தனர். வட பழனி முருகன் கோயிலில் திருமணம் நடந்திருக்க, காலை உணவு அங்கேயே அருகிலுள்ள உயர்தர உணவகம் ஒன்றில் ஏற்பாடாகியிருக்க முடித்துக் கொண்டு அனைவரும் கிளம்பியும் இருந்தனர்.

பாவேந்தன் அருளரசி கூட திருமணம் முடிந்த கையோடு கிளம்பியிருந்தனர். வெண்பாவை அழைத்து வரவில்லை அவர்கள். ஜெயந்தன் இத்தனை தூரம் வர முடியாது என்பதால் உதய்யின் நண்பன் அங்கு துணைக்கு இருக்க, வந்திருந்த அம்மாவையும் உடனே கார் ஒன்றில் அனுப்பி வைத்தாகிற்று.

பூவையும் அவளது வங்கியிலிருந்து யாரையும் அழைத்திருக்கவில்லை. திடீர் திருமணத்தில் அவளே அரை மனதாக இருந்தாள். சொந்தங்கள் யாரும் உடன் நிற்காமல் போக சென்னை வந்து விடுப்புக்கு விண்ணப்பித்தவள் மீண்டும் ஊருக்கு செல்லவே இல்லை. ஜெயந்தனை விட்டு புவனாவாலும் இங்கு வர முடியவில்லை. நகை, துணி, சீர்வரிசை பொருட்கள் என அவளே தனியாக வாங்க ஒரு விதமான விரக்தி மனப்பான்மையே அவளிடம்.

திருமண புடவை வாங்க செல்வதற்காக கிளம்பியவள் உதய்யை துணைக்கு அழைத்தாள்.

“முன்னாடியே சொல்ல மாட்டியா, நான் ரிலேட்டிவ்ஸ் சில பேரை இன்வைட் பண்ண விழுப்புரம் வரை வந்திருக்கேன் பூவை” என உதய் சொல்ல எதையும் வாங்கும் ஆர்வமே இல்லாமல் போனது.

‘என் கல்யாணத்துக்கு நானே எல்லாம் செய்துக்கனுமா? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?’ என நொந்தவள் இந்த மனநிலையில் முகூர்த்த புடவை வாங்க வேண்டாம் என கருதி பாதி வழியிலேயே திரும்பி விடுதிக்கே சென்று விட்டாள். மதியமே உதய் வந்து நிற்க, எதிர்பார்க்காதவள் ஓடி வந்து அவன் கையை பிடித்துக்கொண்டு அழுது விட்டாள்.

அவனது காரிலேயே எங்கு செல்லலாம் என கேட்டு அழைத்து சென்றான். வழியில் மௌனம் மட்டுமே அவளிடம். உதய்க்கும் அவள் மனம் புரிய,

“சின்ன விஷயம்னு சொல்ல மாட்டேன் பூவை, ஆனா பெருசு பண்ணாம விடு. என்ன இப்போ… நீ உடுத்திக்க போறது நான் பார்த்து ரசிக்கத்தானே… அதுக்கு நான் இருக்கேனே உன் கூட. யார் தலையீடும் இல்லாம உனக்கு பிடிச்சதை ஃப்ரீயா வாங்க போற. இப்படி எத்தனை பேருக்கு அமையும்? கவுண்ட் தி பிளெஸ்ஸிங்ஸ் ஒன்லி பூவை” என உதய் சொல்ல அவளை அறியாமல் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

காரோட்டிக் கொண்டே அவள் தலை மீது தன் தலையால் மென்மையாக முட்டியவன், “நீ சிரிச்சிட்டே இருக்கணும்” என சொல்ல அவனுக்காக இதழ் விரித்தாள்.

ஏனோ பூவைக்கு இந்த திருமணம் மன நிறைவையும் மகிழ்வையும் தருவதற்கு பதிலாக பாரமான உணர்வையே கொடுக்க இப்போதும் ஆதரவாக சாய்ந்து கொள்ள கணவன் தோள் நாட கணவனோடு அறைக்கு வந்து விட்டாள்.

“அம்மா சீக்கிரம் சரியாகிடுவாங்க. நீ நார்மலா இரு” என்றான் உதய்.

“உங்க தங்கை கூட என்கிட்ட சரியா பேச மாட்டேங்குறா” என்றாள்.

“அவ சின்ன பொண்ணுதானே, உன்னை பத்தி தெரியும் போது தானா மாறிடுவா” என்றான்.

“உங்க அப்பாக்கும் என்னை பிடிக்கலையா?”

“எல்லாம் சரியாகும்” என்றான்.

“எல்லாத்தையும் எல்லாரையும் சரி பண்ணிட்டு நாம கல்யாணம் செய்திருக்கணும்” என்றாள்.

அவள் கையை இழுத்து அணைத்துக் கொண்டவன், “கல்யாணம் பண்ணிக்கிட்டும் எல்லாம் சரி செய்யலாம்” என சொல்லி கொஞ்சம் எல்லைகள் மீறளானான்.

உதய் தோளில் சாய விரும்பியவள் அவனோடு ஒன்ற முடியாமல் விலகுவதிலேயே இருக்க, “என்ன?” என்றான்.

“இங்க எதுவும் சரியில்லை, இப்ப போய்…” சலிப்பாக சொன்னாள்.

“முத முதல்ல உன்னை கட்டி பிடிக்கிறேன். வெட்கம் வேணாம் இப்படி எரிச்சல் பட வேணாம் நீ” என சொல்லி அவளை விட்டான்.

“மனசு சரியில்லாம வேற எதையும் என்னால… சாரி” என்றாள்.

“சரி நீ ரெஸ்ட் எடு” என்றவன் வெளியே செல்ல முனைய,

“எங்க போறீங்க? இங்கேயே இருங்க” என்றாள் அவசரமாக.

“இருந்தா நான் சும்மா இருக்க மாட்டேன், நீ இரு” என சொல்லி வெளியேறி விட்டான்.

பூவைக்கு அவன் விட்டு சென்றதும் ஏதோ போல் இருந்தது. உதய்யை மனதுக்கு பிடித்திருந்தாலும் அவனை நெருக்கமாக உணர மறுத்தாள். இத்தனை குழப்பவாதியா நான் என அவளை அவளே நொந்து கொண்டாள்.

அவளுக்கு புரியவில்லை, எல்லா பெண்களுக்குமே புகுந்த வீடு முதலில் மிரட்சியை தரும் என. அதிலும் இங்கே உதய் தவிர மற்றவர்கள் ஒரு சிரிப்புக்கே யோசிக்க இலகுத்தன்மை எங்கேயிருந்து வரும்?

மதிய உணவுக்கு உதய்தான் வந்து அழைத்து சென்றான். கமலா அமைதியாக பரிமாற, “நீங்களும் சாப்பிடுங்க அத்தை” என்றாள் பூவை.

“அதெல்லாம் ஆச்சு” என அவர் சொல்லிய விதத்தில் பூவைக்கு அடுத்து அவரிடம் பேசும் எண்ணமே விட்டு போயிற்று.

“அம்மா, நாங்க பார்த்துக்கிறோம், நீ போ” என உதய் சொல்ல மிகவும் நல்லது என கமலாவும் சென்று விட்டார்.

பூவைக்கு அழுகை வரும் போலிருந்தது. எப்படியும் இவர்கள் சம்மதத்துடன்தானே திருமணம் நடந்தது. நான்தான் இனி இவர் மகனின் மனைவி எனும் போது என்னுடன் சுமூகமாக உறவு இருக்க வேண்டும் என்ற எண்ணமில்லையா? நான் எப்படி இங்கு இருப்பேன்?

“ஏய் என்ன யோசனை? சாப்பிடு” என்றான் உதய்.

“என்னை இங்க யாருக்குமே பிடிக்கலை, போங்க” என்றாள்.

“எல்லார்கிட்டேயும் சண்டை போட்டு கட்டியிருக்கேன் உன்னை. என்னை வச்சுக்கிட்டே யாருக்கும் பிடிக்கலைன்னு சொல்ற நீ?” என சிரிப்போடு கேட்டான்.

பூவை முறைக்க, “எல்லோருக்கும் உன்னை விட என் மேலதான் கோவம். உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு ரொம்ப பேசிட்டேன். அந்த கோவத்தை இப்படி காட்டுறாங்க. எனக்காக கொஞ்சம் பொறுத்துக்க பூவை” என்றான்.

சரியென தலையாட்டி விட்டு சாப்பிட ஆரம்பித்தாள். அதன் பின் அறைக்கு சென்று அம்மாவுடன் கைபேசியில் பேசி விட்டு படுத்தவள் அப்படியே உறங்கி போனாள். அவள் எழும் போது அதே படுக்கையில் ஓரமாக படுத்திருந்தான் உதய்.

பூவைக்கு இப்போது தெளிவாக இருப்பது போலிருந்தது. முகம் கழுவி தலை வாரி ஆடை ஒழுங்கு படுத்திக் கொண்டு வெளியில் வந்தாள். இவளை கண்டவுடன் அம்மாவுடன் அமர்ந்திருந்த ஷியாமளா உள்ளே சென்று விட்டாள்.

“பூஜை ரூம்ல போய் விளக்கேத்து” என்றார் கமலா.

விளக்கேற்றி கடவுளை வணங்கி வந்தவள், “எல்லோருக்கும் டீ போடவா அத்தை?” எனக் கேட்டாள்.

“எங்களுக்கு நான் பார்த்துக்கிறேன். உங்களுக்கு மட்டும் போட்டுக்க. கிட்சன்ல எல்லாம் இருக்கு” என்றார்.

அவர் சொன்ன விதத்தில் பூவைக்கு கோவமாக வந்தது. ஒன்றும் சொல்லாமல் சமையலறை சென்று தனக்கும் கணவனுக்கும் மட்டும் தேநீர் கலந்து எடுத்துக் கொண்டு அறைக்கு செல்ல இன்னும் உறங்கிக் கொண்டிருந்தான் உதய். அவனை எழுப்பி தேநீர் பருக சொன்னாள்.

பூவையின் முகத்தை பார்த்தவுடனே ஏதோ சரியில்லை போல என உணர்ந்தவன், “என்னாச்சு பூவை?” என கேட்டுக் கொண்டே எழுந்தான்.

“வந்த முதல் நாளே ஏதோ விரோதி போல என்னை நடத்துறாங்க” என்றவள் அவன் தங்கை எழுந்து சென்றது, அவன் அம்மா விட்டேற்றியாக ஏதோ கடமைக்கு பேசுவது என எல்லாம் சொன்னாள்.

ஒன்றும் சொல்லாமல் ஓய்வறை சென்று வந்தவன் தேநீர் கோப்பையை கையில் எடுத்துக் கொண்டவன், “சீக்கிரம் சரியாகும்” என்றான்.

பூவை ஏதோ யோசனையில் இருக்க, “என்ன பூவை?” எனக் கேட்டான்.

“நீங்க திரும்ப வர்ற வரைக்கும் நான் ஹாஸ்டல்ல தங்கிக்கவா?” எனக் கேட்டாள்.

Advertisement