Advertisement

நீ ஏன் காதல் புன்னகை -7(1)

அத்தியாயம் -7(1)

உதய்யின் கோவத்தை கவனித்த பாவேந்தன், “சிங்கப்பூர்லேர்ந்து ஃப்ளைட் ஏறி என் வீட்ல வந்து எகிறி குதிச்சு எங்கிட்டேயும் தைய தக்கான்னு குதிச்சு காலை சாப்பாடு கூட என்னை சாப்பிட விடாம இங்க கூட்டிட்டு வர்றது பெரிய விஷயமில்லைடா. உன் கோவம் எல்லாத்தையும் நாசமாக்கிடும். பொறுமையா இரு” என அவனுக்கு மட்டும் கேட்கும் படி கிசு கிசுத்தார்.

பல்லை கடித்து கண்களை அழுந்த மூடி திறந்து கோவத்தை மட்டு படுத்தி பூவையை பார்த்தான். அதில் ‘என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது?’ என்ற செய்தி இருந்தது.

பாவேந்தன் முகத்தை தடுமாற்றமாக பூவை பார்க்க, அவளின் எண்ணம் புரிந்தவர் “உதய்யை நீ கல்யாணம் பண்ணிக்க எனக்கு முழு சம்மதம்மா. உனக்கு விருப்பமா? அதை மட்டும் சொல்லு” என்றார்.

பூவையின் தலை சம்மதமாக ஆடியது. புவனாவுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. எப்படி அவரது சொந்தங்களை பகைத்துக் கொள்ள அவருக்கு விருப்பமில்லையோ அப்படித்தான் பாவேந்தன் பேச்சையும் அவரால் மீற இயலாது.

“இங்க பாரு புவனா, இன்னைக்கு எங்க பேச்சை கேட்காம உன் பொண்ணு இஷ்டத்துக்கு போனீனா நாளைக்கு சொந்தம்னு நாங்க யாரும் கூட இருக்க மாட்டோம்” என மிரட்டல் போல சொன்னார் வாசன்.

புவனாவின் கண்கள் கலங்கி விட பூவைக்கும் ஏதோ போலானது.

“ரொம்ப சந்தோஷம்” என கைகளை குவித்து கும்பிடுவது போல வைத்து எகத்தாளமாக சொல்லி கிண்டலாக சிரித்தான் உதய்.

வாசன் கோவம் கொண்டவராக புவனாவையும் பூவையையும் முறைத்து விட்டு எழுந்து செல்ல அவர் பின்னே ஒவ்வொருவராக முணு முணுத்தவாறே சென்று விட்டனர்.

இறுதியாக லக்ஷ்மனும் அவன் பெற்றோரும் நிற்க, புவனா இயலாமையுடன் பார்க்க பூவை முகம் திருப்பிக் கொண்டாள்.

“இவனை நம்பி என்னை வேணாம்னு சொல்றீல… அந்த குடும்பத்துல எப்படி நீ நல்லா வாழ்வேன்னு நான் பார்க்கிறேன்” என்றான் லக்ஷ்மன்.

“ஓய் என்ன? ஓவரா போய்ட்டிருக்கு” எனக் கேட்ட உதய் அவனை பார்த்து நக்கலாக சிரிக்க, “உதய்!” என அழைத்து அவனை அடக்கினார் பாவேந்தன்.

சாந்தா மகனையும் கணவனையும் அழைத்துக் கொண்டு ஏதேதோ சாபமிட்டவாறே வெளியேறினார்.

உதய், பாவேந்தன் இருவரையும் அமரும் படி பூவை சொல்ல புவனா காபி எடுத்து வந்து கொடுத்தார்.

“இவன் திடீர்னு லீவ் எடுத்துகிட்டு சென்னை போகாம நேரா திருச்சி வந்திறங்கிட்டான். மூணு வாரத்துல கிளம்பறானாம்” என பாவேந்தன் சொல்லவும்,

“இதுக்கு மேல கல்யாணத்தை தள்ளி போட முடியாதுங்க. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி நிறைய லீவ் எடுத்திட்டு வர சொல்லுங்க தம்பியை” என்றார் புவனா.

“அதைத்தான் இவனும் சொல்றான். இவங்க வீட்ல முன்னாடியே இவன் சொல்லி நான் பேசி பார்த்திட்டேன். அவங்க சம்மதம் கிடைக்கல. அவங்ககிட்ட இவனே பேசிக்கிறானாம், வர்ற வெள்ளிக்கிழமை கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொல்றான்” என பாவேந்தன் சொல்ல அதற்கு இன்னும் நான்கு நாட்களே இருக்க பெண்கள் இருவரும் அதிர்ச்சியாக பார்த்தனர்.

உள்ளிருந்து ஜெயந்தன் குரல் கொடுக்க புவனா உள்ளே சென்றார். அப்போதுதான் அவனை பற்றி ஆண்கள் இருவரும் விசாரித்தனர். வீல் சேரில் மகனை வைத்து தள்ளிக் கொண்டு வந்தார் புவனா.

ஆளே மாறி பரிதாபமாக தெரிந்தான். வாங்க என இருவரையும் அழைக்க, அவர்களும் நலம் விசாரித்தனர்.

“அண்ணன் இப்படி இருக்கும் போது நான் எப்படி சார் கல்யாணம் செய்துக்க முடியும்? அண்ணன் நல்ல படியாகி அவனுக்கு ஏதாவது செட்டில் செய்யாமல் என்னால கல்யாணம் பத்தி யோசிக்க கூட முடியாது” என்றாள் பூவை.

“கல்யாணம் செய்துகிட்டும் உன் அண்ணனுக்கு என்ன செய்ய நினைக்கிறியோ செய்” என உதய் சொல்ல, பாவேந்தனும் அதுவே சரியென சொன்னார்.

பூவை மீண்டும் மறுக்க, “என்னால கல்யாணத்தை வேணாம் சொல்லாத பூவை. எனக்கு கஷ்டமா இருக்கு. இனி நான் ஒழுங்கா இருப்பேன்” என்றான் ஜெயந்தன்.

“உனக்காக மட்டுமில்லை அண்ணா. இன்னும் அவங்க வீட்ல யாருக்கும் விருப்பம் போல தெரியல. அவங்க மனசு மாறவும் டைம் ஆகும்தானே?” என்றாள்.

“அதெல்லாம் கல்யாணம் அப்புறம் மாறுவாங்க, மாறாம எங்க போக போறாங்க? நீ ஒழுங்கா சரின்னு சொல்லு” என பிடிவாதமாக நின்றான் உதய்.

புவனாவும் திருமணத்தை மறுக்காதே என சொல்ல ஆனாலும் இத்தனை சீக்கிரம் எப்படி செய்வது என தயங்கிய பூவை, “என் கல்யாணத்துக்குன்னு எதுவும் சேர்க்கல சார்” என்றாள்.

“என்னை என்ன நினைச்சிட்டு இப்படி சொல்ற பூவை?” கோவமாக கேட்டான் உதய்.

“டேய் உன்னை பொறுமையா இருக்க சொன்னேன்தானே. ஒண்ணும் செய்யாமல் போனா உன் வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்களா? பூவை சொல்றது சரி. ஆனா கல்யாணத்தையும் தள்ளி போட முடியாது…” பாவேந்தன் பேசிக் கொண்டிருக்க,

“என் வீட்டுக்கு தெரியாம நான் பணம் தர்றேன். இங்க செய்ற மாதிரியே எல்லாம் செய்துக்கட்டும்” என்றான்.

பூவை திகைப்பும் மறுப்புமாக பார்க்க, “பூவையும் என் பொண்ணு மாதிரிதான் டா. நான் செய்ய மாட்டேனா?” எனக் கேட்டார் பாவேந்தன்.

“என் மனைவிக்கு நீங்க எதுவும் செய்ய வேணாம். என்னை தவிர யாரும் செய்ய நான் விடமாட்டேன்” என்றான் உதய்.

“ஹ்ம்ம்… ரெகமென்டஷனுக்கு மட்டும் நான் வேணுமா உனக்கு?”

“என் கல்யாணம் இவ்ளோ சிக்கல் ஆனதுக்கு காரணமே உங்க மனைவிதான். அப்போ நீங்கதான் வரணும்” என்றான்.

“ப்ளீஸ் ரெண்டு பேரும் சண்டை போடுற மாதிரி பேசிக்காதீங்க. எனக்கு யார் பணமும் வேண்டாம். இப்ப கல்யாணமும் வேண்டாம். வெயிட் பண்றதா இருந்தா வெயிட் பண்ணுங்க, இல்லைன்னா வேற பொண்ணை…” என பூவை சொல்லிக் கொண்டிருக்க,

“ஷட் அப்!” என வீடு அதிர கத்தினான் உதய்.

புவனாவும் ஜெயந்தனும் பயமும் கலக்கமுமாக ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, “டேய் என்னடா செய்ற?” என பல்லைக் கடித்தார் பாவேந்தன்.

“இவளை கல்யாணம் பண்ணாம இங்கேர்ந்து போக மாட்டேன் நான். இவ ரிலேட்டிவ்ஸ் இவ மனசை மாத்த என்ன வேணா செய்வாங்க. எவ்ளோ கஷ்டப்பட்டு நான் லீவ் எடுத்திட்டு வந்திருக்கேன்னு தெரியுமா உங்களுக்கு? ரொம்ப அசால்ட்டா கல்யாணம் வேணாம்னு சொல்றா இவ, கோவப்படாம ஹின்னு பல்லை காட்ட சொல்றீங்களா?” என உதய் கேட்க பூவை முறைத்து பார்த்தாள்.

“உன் விருப்பம் இவர்தான்னா சரின்னு சொல்லேன்டி. என்ன இப்போ… நீ சம்பாதிச்சு அங்கதானே கொடுக்க போற. நமக்கு வேற வழியில்லை பூவை” என சொல்லி புவனா தன் சம்மதத்தை தெரிவித்தார்.

“அதெல்லாம் இல்லை, என் சம்பளத்துல உனக்கும் தருவேன்” என பூவை சொல்ல புவனா மறுக்க அவர்களுக்குள் ஒரு வாக்குவாதம்.

“பூவை உன் ஃபுல் சேலரி கூட இங்கேயே கொடு. ஐ டோண்ட் பாதர். ஆனா கல்யாணம் இந்த வாரமே நடந்தாகனும்” என மிக உறுதியாக உதய் சொல்ல, பூவை அமைதியாகவே இருக்க, “அதான் மறுத்து பேசாம நிற்கிறாளே மாமா. இதுதான் சம்மதம்னு எடுத்துக்கிட்டு அடுத்து ஆக வேண்டியதை பார்ப்போம்” என்றான் உதய்.

அதற்கும் மறுப்பாக பூவை ஒன்றும் சொல்லாததால் அதையே பாவேந்தன் சம்மதமாக எடுத்துக் கொண்டார்.

“தம்பியோட அப்பாம்மா வராமல் எப்படிங்க?” என புவனா கேட்க,

“என் அப்பாம்மா இல்லாம எப்படி என் கல்யாணம் நடக்கும்? அவங்க கண்டிப்பா வருவாங்க” என உதய் அழுத்தம் திருத்தமாக சொல்ல அதற்கு மேல் எங்கு எப்படி கல்யாணம் என பேசி அங்கேயே காலை உணவை முடித்துக் கொண்டு, உதய்யும் பாவேந்தனும் கிளம்பி சென்றார்கள்.

பூவை அவள் அம்மாவுடனும் அண்ணனுடனும் திருமணம் குறித்து வாதிட்டு கொண்டிருக்க அரை மணி நேரத்தில் உதய் மட்டும் தனியாக வந்தவன் ஐந்து லட்சங்கள் பணம் கொடுக்க பூவை வாங்க மறுத்து அறைக்குள் சென்று விட்டாள்.

“அவ கிடக்குறா. கல்யாணத்துக்கு அப்புறம் இதை தாண்டி இன்னும் செய்வேன், வேணாம்னு சொல்வாளா? தயங்காமல் நீங்க வாங்கிக்கோங்க அத்தை. எந்த காரணம் கொண்டும் இந்த கல்யாணம் நிற்கவோ தள்ளி போகவோ கூடாது” என்றான்.

மகள் அனுமதி இல்லாமல் எப்படி வாங்குவது என புவனா கையை பிசைய, “லக்ஷ்மன்கிட்ட இட பத்திரம் இருக்குல்ல… அது வந்த பிறகு… ப்ச்.. வர வைக்க வேண்டியது என் பொறுப்பு. வந்த பிறகு என்கிட்ட இருக்கட்டும், இந்த பணத்தை திரும்ப கொடுத்திட்டு உங்க பொண்ணை அந்த பத்திரத்தை வாங்கிக்க சொல்லுங்க. இப்ப இது கடன் மாதிரிதான், மறுக்காதீங்க” என்றான்.

காதில் வாங்கினாலும் அப்படியும் உடன்பாடு வராமல் பூவை உள்ளேயே இருக்க புவனா மகனின் முகத்தை பார்த்தார்.

“வாங்கிக்க ம்மா. அந்த இடம் எனக்குதானே, நான் அடமானம் வச்சு பூவை கல்யாணத்துக்கு நானே பணம் தர்றதா நினைச்சு வாங்கும்மா. ஆனா மாமாகிட்டேர்ந்து அந்த இடத்தை பூவை காசுல இல்ல, என் காசுல மீட்பேன். என் மேல நம்பிக்கை இருந்தா பூவையே வந்து வாங்கிக்க சொல்லுவா” என ஜெயந்தன் சொல்ல பூவையின் கண்கள் நீரால் நிறைந்து விட்டன.

உடனே வெளியில் வந்தவள், “கண்டிப்பா நீ அந்த இடத்தை மீட்ப அண்ணா” என அண்ணன் தோள் பற்றி சொல்லி அம்மாவிடம் கண்களாலேயே வாங்கிக் கொள்ள சொன்னாள்.

புவனாவிடம் பணத்தை கொடுத்தவன் பூவையின் பக்கம் வந்து நின்று, “ரொம்ப டென்ஷன் பண்ற என்னை. ஆனா இத்தோட நிறுத்திக்க, இதுக்கு மேல என்னால டாலரேட் செய்ய முடியும்னு தோணல. கல்யாணத்துக்கு வேணும்கிறது வாங்கிக்க. இன்னும் வேணும்னாலும் பணம் தர்றேன். குறையா எதுவும் இருக்க கூடாது. கல்யாண புடவை, தாலி எல்லாம் நீயே வாங்கிடு, அதுக்கு தனியா நான்தான் பணம் கொடுப்பேன்” என்றான்.

“உங்க அப்பாம்மா…” என இழுத்தாள்.

“ஏன் அவங்களுக்கு என்ன?”

“அவங்க வராமல் கல்யாணம் நடக்காது” என்றாள்.

“என்ன வேணும் என்ன செய்யணும் அதை மட்டும் நீ சொன்னா போதும், இன்னொரு முறை கல்யாணம் நடக்காதுன்னு நீ இல்ல யார் சொன்னாலும்…” நெறி பட்ட பற்களுக்கிடையிலிருந்து உஷ்ணமாக வார்த்தைகள் வர இறுதியாக வாக்கியத்தை நிறைவு செய்யாமலேயே கண்களால் பொசுக்கினான்.

அவனை பயந்து பார்த்திருந்த அம்மாவையும் அண்ணனையும் பார்த்த பூவை, “ஏன் இவ்ளோ கோவம் உதய்?” என கண்டிக்கும் விதமாக கேட்டாள்.

முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவன், “வேற எதுவும் வேணும்னா கால் பண்ணு. நான் கிளம்பறேன்” என சொல்லிக் கொண்டு புவனா, ஜெயந்தனிடமும் கூட முறையாக விடைபெற்று சென்று விட்டான்.

“என்ன பூவை இது? இந்த தம்பி பொசுக் பொசுக்னு கோவப்படுறார். அவங்க மாமாகிட்டேயே ஒரு மாதிரிதான் பேசுறார். இவர் அம்மாவை வேற நினைச்சாலே பயமா இருக்கு. நல்லா யோசிச்சுகிட்டியா நீ?” என கலக்கமாக கேட்டார் புவனா.

“ம்மா! இப்படி எனக்காக வெளிநாட்டிலேர்ந்து வருவார்னு நினைக்கவே இல்லை. அங்க என்ன சமாளிச்சிட்டு வந்தாரோ, அவர் பேரண்ட்ஸ் வேற கன்வின்ஸ் பண்ணனும். நம்மள விட டென்ஷன் ஜாஸ்தி அவருக்கு. கோவம் கொஞ்சம் அதிகம்தான், ஆனா நல்லவர்மா. நான் சொன்னா கேட்டுக்குவார். அவர் அம்மா… அவங்களையும் இவரே சமாளிச்சுக்குவார்” என கமலா மீது தனக்கும் இருக்கும் உறுத்தலை மறைத்து சமாதானமாக பூவை சொல்ல புவனா தெளிந்தார்.

Advertisement