Advertisement

நீ என் காதல் புன்னகை -6(2)

அத்தியாயம் -6(2)

ஒருநாள் பூவையை நேரில் சந்திக்க சென்னைக்கே வந்து விட்டான் லக்ஷ்மன். சந்திப்பை மறுக்க முடியாமல் அவனை கோயில் ஒன்றுக்கு வர சொல்லி அவளும் சென்றாள். எடுத்த உடனே தன்னை மதிப்பதில்லை, தான் வேண்டாதவனாகி விட்டேன் என சண்டை போட்டான்.

“இடத்தோட பத்திரம் இப்ப எங்க லக்ஷ்மன்?” என பூவை கேட்க அவன் அலட்டிக் கொள்ளாமல் அவளை நேராக பார்த்தான்.

“எனக்கு இன்னொரு மெயின் இடத்துல கடை வைக்கிறதுக்கு சான்ஸ் கிடைச்சது. பணம் போதல, அத்தைகிட்ட கேட்டு அதை அடமானம் வச்சு பணம் புரட்டியிருக்கேன். சீக்கிரம் மீட்டுடுவேன்” என்றான்.

“இது உனக்கு தப்பா தோணலையா? என்கிட்ட கேட்காம எப்படி நீ இப்படி செய்யலாம்?” எனக் கேட்டாள்.

“நான் என்ன ஏமாத்தவா செஞ்சேன். அத்தைகிட்ட கேட்டுட்டுதான் செய்தேன்”

“அப்புறம் ஏன் என்கிட்ட சொல்ல வேணாம்னு அம்மாகிட்ட சொல்லியிருக்க?”

“நீயே நிறைய டென்சன்ல இருப்ப? இதுக்கு ஒத்துக்காம எங்கேயாவது கடன் வாங்கலாம் சொல்வ. அங்கெல்லாம் வட்டி அதிகம், உனக்கு புரிய வைக்கவும் முடியாது, அதான்” என காரணம் சொன்னான்.

“இங்க பார், அந்த இடம் ஜெயந்தனுக்கு, வீடு அம்மாக்குன்னு நான் யோசிச்சு வச்சிருந்தேன். இப்படி எனக்கு தெரியாம நீ செஞ்சது ரொம்ப தப்பு. அத்தோட ஜெயந்தனை டீஅடிக்க்ஷன் சென்டர்ல சேர்க்கிறேன்னு சொல்லிட்டு அவனை திரும்ப குடிக்க வச்சிருக்க… ஏன் இப்படி செஞ்ச?” என கோவமாக கேட்டாள்.

லக்ஷ்மன் கண்களில் சிறு அதிர்வு தெரிந்தாலும் அலட்டிக் கொள்ளவில்லை.

“உன் அண்ணன் ஒண்ணும் சின்ன புள்ள கிடையாது. அவனாதான் அப்படி குடிச்சிருப்பான். நீயா கற்பனையா பேசாத” என்றான்.

“உன் அக்கவுண்ட்லேர்ந்துதான் அவன் அக்கவுண்ட்க்கு பணம் போயிருக்கு, ப்ரூஃப் காட்டவா?” சீறினாள் பாவை.

“நான் இல்லன்னு சொல்லலையே. கைல பணம் இல்லைன்னு அழுதான், அனுப்பி விட்டேன். ஏன் உன்கிட்ட அவன் அழுதுகிட்டே கேட்ருந்தா கொடுத்திருக்க மாட்டியா? விட்டா ஜெயந்தனை குடிக்க வச்சு அவனுக்கு ஆக்சிடென்ட் பண்ணி விட்டதும் நான்தான்னு சொல்லுவ போல… எவனோ என்னவோ சொல்றான்னு என்னையவே தப்பா நினைச்சு கேள்வி கேட்பியா?” என லக்ஷ்மனும் சீறினான்.

“யாரோ சொல்றதை அப்படியே நம்ப நான் ஒண்ணும் முட்டாள் இல்லை. ஜெயந்தனுக்கு இப்படி ஆக ஒரு வகையில நீயும்தான் காரணம்” என்றாள்.

“வசதியா ஒருத்தனை பார்த்ததும் நான் செஞ்சதெல்லாம் மறந்து போச்சு, அதுகூட பரவாயில்லை. இப்ப நானே தப்பா தெரியுறேன்ல”

“எவ்வளவோ எங்களுக்கு நீ உதவியிருக்க, அதை மனசுல வச்சுத்தான் உன்கிட்ட இதுநாள் வரை குத்தகை பணம் அதிகம் கேட்காம விட்டேன். ஒழுங்கா அந்த பத்திரத்தை மீட்டு கொடுத்திடு, அது ஜெயந்தனுக்கு சேர வேண்டியது” என்றாள்.

“நான் தர மாட்டேன்னு சொன்னேனா? இன்னைக்கு நான் வந்ததுக்கு முக்கியமான காரணம் நம்ம கல்யாணம் எப்ப வச்சுக்கலாம்னு கேட்கத்தான்” என்றான்.

பூவை அதிர்ந்து பார்த்தாள்.

“இப்படி முழிச்சா என்ன அர்த்தம்? என்னை ஏமாத்த நினைக்கிறியா பூவை?”

“வாயை மூடு. நான் எப்ப உன்னை கல்யாணம் செய்றதா சொன்னேன்? இதுபத்தி ஏற்கனவே நான் உனக்கு தெளிவா சொல்லிட்டேன்” என்றாள்.

“அத்தை வார்த்தைக்கு வார்த்தை எனக்குதான் நீன்னு சொன்னாங்க. ஏன் மாமா இருந்திருந்தாலும் இப்படித்தான் சொல்லியிருப்பார்” என்றான்.

“அப்படி ஒண்ணும் அம்மா உன்கிட்ட நேரடியா சொன்னதா எனக்கு நினைவில்லை. அப்படியே இருந்தாலும் என் விருப்பம் முக்கியம். நீ கிளம்பு” என சொல்லி அவனை பதில் பேச விடாமல் வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள்.

ஆனால் லக்ஷ்மன் வந்து பேசியதை எல்லாம் உதய்யிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. எப்பொழுதும் போல இரு நிமிடங்கள் சாதாரணமாக அவன் பேச இவளும் பேசி வைத்து விட்டாள்.

இப்படியே மூன்று மாதங்கள் சென்றன. உதய் விஷயத்தில் பூவைக்கு என்ன முடிவெடுக்கலாம் என தெளிவு வந்தாலும் அவனது பெற்றோர் நினைத்து உறுத்தலாக இருக்க எதையும் அவனிடம் நேரடியாக சொல்லவில்லை. முதலில் தனது அண்ணனுக்கு ஒரு வழி செய்து விட்டு, அந்த சமயம் உதய்யும் தனக்காக காத்திருந்தால் அப்போது பார்க்கலாம் என விட்டு விட்டாள்.

வாசனை அழைத்து மீண்டும் லக்ஷ்மன் வீட்டினர் பேசினார்கள். பூவை எப்படியும் நல்ல நிலைக்கு வருவாள் என வாசனுக்கு தெரியும், அத்தோடு லக்ஷ்மனும் இன்னொரு கடை ஆரம்பித்தால் வசதி பெருகும்.

இவர்களுக்கு மணமுடித்து வைத்தால் எதிர்காலத்தில் இவர்களிடம் தானும் ஆதாயம் தேடிக் கொள்ளலாம், அதே உதய் என்றால் தன்னால் அங்கு செல்லக் கூட முடியாது என கணக்கு போட்டவர், ஜெயந்தன் வீடு வந்ததும் தானே பேசி லக்ஷ்மனுக்கே பூவையை மணமுடித்து வைப்பதாக உறுதி கூற சில உறவுகள் தாங்களும் வந்து பேசுவதாக சொன்னார்கள்.

அந்த வாரம் ஜெயந்தன் டிஸ்சார்ஜ் செய்யப் பட திருச்சி சென்ற பூவை அண்ணன் அம்மாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்தாள். உறவினர்கள் ஜெயந்தனை பார்க்க என வர ஆரம்பித்தனர். வாசனும் அவர் மனைவியோடு பார்க்க வந்தார். அவர்கள் வந்த சில நிமிடங்களில் லக்ஷ்மன் குடும்பத்தோடு வந்து சேர்ந்தான்.

புவனா பொதுவாகவே பயந்த சுபாவம் கொண்டவர். அவரிடம் லக்ஷ்மனை ஏமாற்றி விட்டதாக பேசினார் வாசன். அவனை தவிர இந்த குடும்பத்தை யாரும் நன்றாக பார்த்துக் கொள்ள முடியாது, அவனுக்கே பூவையை மணம் செய்து கொடுக்க வேண்டும் என வற்புறுத்தி பேசினார்.

லட்சுமன் அன்னை சாந்தா ஒரு படி மேலே போய் பூவையை தனது மகனுக்கு திருமணம் செய்து கொடுக்கா விட்டால் நன்றி மறந்தவர்கள் ஆவார்கள் என்றெல்லாம் பேசினார்.

பூவையும் பொறுமையாக இட பத்திரத்தை தனக்கு தெரியாமல் வாங்கி அடமானம் வைத்ததை பெரியப்பாவிடம் கூற லக்ஷ்மனுக்கு உரிமை இருக்கிறது என்றார். ஜெயந்தனை குடிக்க வைக்கிறான் என்பதை வாசன் நம்பவே தயாராக இல்லை.

இப்படியாக பேச்சுக்கள் செல்ல பூவையின் வாதம் அங்கு எடுபடவே இல்லை.

இறுதியாக நாளை அனைவரும் வருவதாகவும் பூவைக்கும் லக்ஷ்மனுக்கும் நிச்சயம் செய்யலாம் என முடிவு போல வாசன் கூற புவனாவும் சரி என சொல்ல பூவைக்கு எரிச்சல் வந்தது.

ஜெயந்தன் மருந்துகள் எடுத்துக் கொண்டு உறங்கியிருக்க அவனுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.

பூவை அம்மாவிடம் சத்தம் போட, “லக்ஷ்மன் தவிர யாரும் நம்ம குடும்பத்தை பார்க்க முடியாது. உன் பெரியப்பாவை சொந்தகாரவங்களை எல்லாம் பகைச்சுக்கிட்டு கண்ணு போன உன் அண்ணனோட நாம எப்படி நிம்மதியா வாழ முடியும் பூவை? அவனையே கல்யாணம் செய்துக்க” என சொல்லி முடித்துக் கொண்டார்.

உதய்க்கு அழைத்து எல்லாம் சொல்லி விட்டாள் பூவை.

“என்ன செய்யலாம்னு இருக்க?” எனக் கேட்டான் உதய்.

“அம்மாவே அவனை கல்யாணம் செய்துக்க சொல்றாங்க. சொந்தகாரங்க எல்லாரையும் எப்படி பகைக்க முடியும்?” எனக் கேட்டாள்.

“ம்ம்ம்… அப்புறம் ஏன் எனக்கு கால் பண்ணி எல்லாம் சொல்லிட்டு இருக்க?” என கோவமாக கேட்டான்.

என்ன பதில் சொல்வாள்?

“தெரியல” என்றாள்.

“தெரிஞ்சுக்க முயற்சி பண்ணு” என சொல்லி வைத்து விட்டான்.

பூவைக்கு அழுகைதான் வந்தது. படித்து வேலைக்கு சென்று விட்டால் கஷ்டம் அகலும் என பூவை நினைத்திருக்க அதற்கு பின்னும் நிம்மதி இல்லாமல் தான் தவிப்பதை கண்டு அவள் மீதே கோவமாக வந்தது.

நாளைக்கு எல்லோரும் வரட்டும், என்னை மீறி என்ன நடக்கிறது என பார்க்கிறேன். கஷ்டத்துல வராத சொந்தகாரங்க பேச்சை கேட்கணும்னு அவசியம் இல்லை என முடிவு செய்தவளாக அம்மா மீதான கோவத்தில் உணவையும் மறுத்து உறங்கி விட்டாள்.

காலையில் புவனாவுக்கு கைபேசி மூலம் நிச்சயம் செய்ய வருவதாக சாந்தா தெரியப்படுத்த புடவை கட்டி தயாராகுமாறு பூவையிடம் சொன்னார் புவனா. அம்மாவை முறைத்து விட்டு அண்ணனை கவனித்து அவனுக்கு மருந்துகள் கொடுத்தவள் குளித்து வந்து வெறுமனே ஒரு சுடிதார் அணிந்து வேறு ஒப்பனைகள் இல்லாமல் இருந்தாள்.

சொன்ன நேரத்திற்கு லக்ஷ்மன், அவனது குடும்பத்தினர், நேற்று பேச வந்த உறவினர்கள் எல்லோரும் வீடு வர புவனா சென்று வரவேற்றார். வந்தவர்களை அவமதிக்க முடியாமல் பூவையும் வாங்க என மட்டும் பொதுவாக கூறி விட்டு ஹாலிலேயே நின்றாள்.

தட்டு மாற்றி உறுதி செய்து கொள்ளலாம் என பூவையின் பெரியப்பா கூற, வீட்டு வாசலில் கார் நிற்க எல்லோர் கவனமும் அங்கே சென்றது.

பூவையும் பார்க்க காரிலிருந்து பாவேந்தன் இறங்க அவரையடுத்து உதய் இறங்க, அவளால் நம்பவே முடியவில்லை. அவளையறியாமல் முகம் மலர்ந்தது.

வாசன் காதில் ஏதோ சொன்னான் லக்ஷ்மன். ஆவலாக உதய்யையே பூவை பார்த்திருக்க அவனோ கோவமாக முறைத்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.

புவனா சென்று பாவேந்தனை வரவேற்றவர், “பூவைக்கு நிச்சயம் செய்ய வந்திருக்காங்க, நீங்க முன்ன நின்னு நல்லபடியா நடத்தி தரணும்” என வேண்டுகோள் வைக்க அவர் உதய் முகத்தை பார்த்தார்.

“நிச்சயம் என்ன மாமா கல்யாணத்தையே நீங்கதான் முன்ன நின்னு நடத்த போறீங்க, ஆனா பூவைக்கு மாப்பிள்ளை நான்தான்னு சொல்லுங்க மாமா” என தன் மாமாவிடம் உரத்த குரலில் கூறினான் உதய்.

அனைவரது காதிலும் உதய் சொன்னது தெளிவாகவே விழ ஒரு சலசலப்பு. பூவைக்கு அதுவரை இருந்த மன அழுத்தம் வடிந்து ஒரு ஆசுவாசம் படர்ந்தது.

உதய் வீட்டினர் வந்திருந்தால் பூவையின் பெரியப்பா ஏதும் எதிராக பேசியிருப்பார், பூவை படிக்க உதவி செய்தது பாவேந்தன்தான் என அவருக்கும் நன்றாக தெரியும். அவரை எதிர்த்து என்ன பேசுவதென கருதி யோசனையாக இருந்தார்.

அனைவருக்கும் மையமாக வந்து நின்ற பாவேந்தன் நேரடியாகவே, “பூவைக்கு உதய்யை பிடிச்சிருக்கும் போது அவ விருப்பத்துக்கு எதிரா இப்படி பெரியவங்க நடக்கிறது சரியில்லை” என்றார்.

“சின்ன பொண்ணுக்கு ஏதும் விவரமில்லை, அந்த பையன் வீட்லேர்ந்து யாரும் வரலையே… அவங்களுக்கு விருப்பம் இல்லைதானே? அந்த குடும்பம் எங்க பொண்ணுக்கு சரி வராது. நல்லது கெட்டது எங்களுக்கும் தெரியும். பூவை எங்க பேச்சை மீறாது” என்றார் வாசன்.

“என்ன பூவை உனக்கு என்ன விருப்பம்?” எனக் கேட்டார் பாவேந்தன்.

“நீங்க வரலைன்னாலும் இந்த நிச்சயம் நடந்திருக்காது சார். எனக்கு லக்ஷ்மனை கல்யாணம் செய்ய விருப்பமில்லைன்னு எல்லோர் முன்னாடியும் சொல்லத்தான் காத்திருந்தேன்” என்றாள்.

“உதய்யை கல்யாணம் செய்துக்க உனக்கு விருப்பமா?” எனக் கேட்டார் பாவேந்தன்.

பூவை பதில் சொல்லாமல் பாவேந்தன் முகத்தை தயக்கமாக பார்த்து நின்றாள். பூவையின் அமைதியில் உதய்யின் முகம் இறுகிப் போக அவன் கண்களில் சினத்தின் தணல் சிவப்பாக ஏறிக் கொண்டிருந்தது.

Advertisement