Advertisement

நீ என் காதல் புன்னகை -5(2)

அத்தியாயம் -5(2)

“ஹலோ, லைன்ல இருக்கீங்களா? ஹலோ… ஹலோ…” மீண்டும் அந்த குரல் பேச,

“சார் நான் அவரோட தங்கை, என்னாச்சி? பெரிய அடியா?” எனக் கேட்டாள்.

“அப்படித்தாங்க தெரியுது. தலையில அடி பட்டிருக்கு. ஆனா உயிர் இருக்கு. உடனே கிளம்பி வாங்க” என்றது அந்த குரல்.

ஜெயந்தனை மருத்துவமனையில் சேர்க்குமாறும் தான் உடனே கிளம்புவதாகவும் கூறியவளுக்கு அடுத்து என்ன செய்வதென தெரியவில்லை. விடுதியில் தோழிகள் என பெரிதாக யாருமில்லை. வங்கியிலும் அவளோடு நட்புடன் இருக்கும் இருவரில் ஒருவர் கைபேசி எடுக்கவில்லை மற்றொருவர் கைபேசியோ தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாக சொன்னது. வேறு யாரை அழைப்பது என அவளுக்கு புரியவில்லை.

அந்த நொடி அவளின் நினைவுக்கு வந்தது உதய்தான். இந்நேரம் அவன் விமான நிலையம் சென்றிருப்பான் என நினைத்தவள் பேருந்து இரயில் எதிலாவது டிக்கெட் கிடைக்கிறதா என பார்த்து, கிடைக்காமல் போக வேறு வழியின்றி உதய்க்கு அழைத்து விட்டாள்.

அப்போதுதான் விமான நிலையம் வந்திறங்கினான் உதய். வீட்டிலிருந்து யாரையும் வர வேண்டாம் என சொல்லியிருந்தவனை டிராப் செய்ய அவனது நண்பன் சிவகுமார்தான் வந்திருந்தான்.

பூவையின் எண் பார்த்தவன், தனக்கு விடை கொடுக்க அழைக்கிறாள் போலும், நல்ல முன்னேற்றம்தான் என எண்ணிக் கொண்டே அழைப்பை ஏற்றான்.

“ம்ம்… சொல்லு பூவை” என உதய் சொல்ல,

“அண்ணனுக்கு ஆக்சிட்டெண்ட், பெரிய அடியாம்” என சொல்லும் போதே அழுது விட்டாள்.

“என்ன! எப்போ எங்க நடந்திச்சு, யார் சொன்னது உனக்கு? அழாம பேசு பூவை” உதய் பேசிக் கொண்டிருக்க சிவாவும் என்னவோ என காரை எடுக்காமல் இறங்கி வந்தான்.

விவரங்கள் சொன்ன பூவை, “எனக்கு இங்க ரொம்ப யாரையும் தெரியாது. ஏதாவது உங்களுக்கு தெரிஞ்ச கார் அரேஞ் பண்ணி தாங்க, சாரி… நீங்க கிளம்பும் போது டிஸ்டர்ப் பண்றேன்” என்றாள்.

“ப்ச், முதல்ல கிளம்பி ரெடியா இரு. நான் கார் அனுப்புறேன்” என சொல்லி வைத்து விட்டான்.

“என்னடா?” எனக் கேட்டான் சிவா.

“திருச்சி வரை போகணும்டா, பூவை அண்ணனுக்கு ஆக்சிட்டெண்ட்” என்றான்.

எப்படி என அவனும் விவரங்கள் கேட்டவன், “சரி, நீ கிளம்பு. நான் அழைச்சிட்டு போறேன்” என்றான் சிவா.

“இல்ல, நானே போறேன். நீ கார் கீ கொடு, போற வழில இறக்கி விடுறேன். நீ டாக்சி பிடிச்சுக்கோ” என்ற உதய் அவனது பதிலை எதிர்பார்க்காமல் அவனுடைய லக்கேஜ் எடுத்து மீண்டும் கார் டிக்கியில் வைத்தான்.

“டேய்! முக்கியமான ப்ராஜக்ட், உடனே போகணும்னு சொன்ன?”

“ம்… அது பார்த்துக்கலாம். இது அதை விட முக்கியமான ப்ராஜ… ப்ச்… இது இன்னும் முக்கியம்” என சொன்னவன் முகத்தில் தெரிந்த தீவிரத்தில் சிவா அடுத்து எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

“நமக்கு தெரிஞ்சவங்க யாரும் திருச்சில இருக்காங்களா?” என விசாரித்தான்.

“நம்ம சங்கர் திருச்சி பக்கம்தான், மணப்பாறைலதான் இருக்கான். நான் பேசுறேன்” என சொல்லி உடனே கைபேசி எடுத்துக் கொண்டான் சிவா.

பூவை தயாராகி விடுதியில் சொல்லி விட்டு காத்திருக்க, உதய் அழைத்து வெளியில் வர சொன்னான்.

வெளியில் வந்தவள் உதய்யே வந்திருப்பான் என நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவில்லை.

திகைத்து நின்றவளை பார்த்து, “நேரமாகுது, வா” என அவசரப் படுத்த, “இல்ல, நான் வாடகை கார்தான் அரேஞ் பண்ணி தர சொன்னேன்” என்றாள்.

முதலில் கோவமாக பார்த்தவன் ஏற்கனவே அழுது சிவந்திருந்த அவளது விழிகளை பார்த்து விட்டு, “சரி காருக்கு என்கிட்ட பணம் கொடுத்திடு” என்றான்.

எந்த விதத்தில் சொல்கிறான்… கோவமா, நக்கலா என பூவை பார்க்க, “லேட் ஆகலையா உனக்கு? ம் வா” என சொல்லி உதய் காரில் ஏறிக் கொள்ள முன்னிருக்கையிலேயே அவனுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டாள் பூவை. கார் வேகமெடுத்தது.

“நீங்க… உங்க ஃப்ளைட் நேரம் என்ன?” எனக் கேட்டாள்.

“நான் போகல பூவை. எப்படி இந்த நேரம் உன்னை யாரையோ நம்பி விட்டுட்டு போறது?” என அவள் முகத்தை பார்த்து கேட்டவன் பின் சாலைப் பக்கம் திரும்பிக் கொண்டான்.

பூவை பேசாமலே இருக்க, “பயப்படாத, இதை வச்சு வேற எதுவும் கேட்க மாட்டேன்” என அவனே சொன்னான்.

“ப்ச்…” என்ன பேச்சு இது என்பது போல சலித்தாள் பூவை.

“அட்மிட் பண்ணிட்டாங்களா, திரும்ப எதுவும் போன் வந்ததா?” எனக் கேட்டான்.

“ம்ம்… போலீஸ்லேர்ந்து கூப்பிட்டு பேசினாங்க. ஜி ஹெச்ல அட்மிட் பண்ணிட்டாங்க” என்றாள்.

“ம்ம்…” என கேட்டுக் கொண்டான்.

“கான்சியஸ் இல்லையாம், ரொம்ப கிரிட்டிகல்னு…” கீழுதட்டை கடித்து அழுகையை அடக்கினாள்.

காரோட்டியவாறே அவள் பக்கம் திரும்பியவன், “ஒண்ணும் ஆகாது, பயப்படாத. உன் அம்மாக்கு சொல்லிட்டியா?” எனக் கேட்டான்.

“இல்ல, அம்மா எப்படி தனியா வருவாங்க? அங்க என்னன்னாலும் லக்ஷ்மன்தான் எங்களுக்கு ஹெல்ப் செய்வான். எனக்கு அவன்கிட்ட சொல்ல விருப்பமில்லை. நான் முதல்ல போய்டலாம் நினைச்சேன்” என்றாள்.

“சரி, நாம போயிட்டு அது பார்த்துக்கலாம். நீ சாப்பிட்டியா?” எனக் கேட்டான்.

“இல்ல, பசியில்ல” என பூவை சொல்ல ஒன்றும் சொல்லாமல் காரோட்டிக் கொண்டிருந்தான் உதய்.

ஒரு அரை மணி நேரம் சென்ற பிறகு ஏதோ ஒரு உணவகம் அருகே வண்டியை நிறுத்த, “ப்ளீஸ், லேட் ஆகுது, எனக்கு எதுவும் வேணாம்” என்றாள்.

“எனக்கு தூக்கம் வர்றது போல இருக்கு பூவை, காபி டீ எதுவும் சாப்பிட்டாதான் என்னால ஒழுங்கா கார் ஓட்ட முடியும்” என்றான்.

“சரி, போயிட்டு வாங்க” என்றாள்.

இறங்கிக் கொண்டவன் அவள் பக்கம் வந்து கதவை திறந்து, “வா பூவை, நேரமாகுது” என்றான்.

அவனிடம் மல்லுக்கட்டும் சக்தி இல்லாததால் இறங்கினாள். உதய்க்கு அழைப்பு வர ஏற்று பேசினான். பூவைக்கு ஒரு தோசை வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்து பின் இருவருக்கும் காபி வாங்கினான்.

“அங்க என் அண்ணன் சீரியஸா இருக்கான், நீங்க டிலே பண்ணிட்டே இருக்கீங்க” என்றாள்.

“ஹாஸ்பிடல் சேர்த்தாச்சு. என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான் கூட. அங்க போய் பார்க்க உனக்கு தெம்பு வேணாமா?” எனக் கேட்டான்.

“உங்க ஃப்ரெண்ட் இருக்காங்களா? அண்ணாக்கு இப்ப எப்படி இருக்கு?” என்றவளுக்கு மீண்டும் அழுகை வந்தது.

“சீரியஸாதான் இருக்கார். நீ காபி குடி, நாம கிளம்பலாம்” என உதய் சொல்ல பூவைக்கு புரிய மௌனமான அழுகையுடன் காபியை பருகினாள்.

வழியில் அண்ணனை நினைத்து நினைத்து மௌனமாக அழுது கொண்டே இருந்தாள் பூவை. அவனுக்கு ஏதாவது ஒன்றென்றால் அம்மா தாங்கவே மாட்டார் என உதய்யிடம் சொல்ல அவன் ஆறுதலாக ஏதோ சொன்னான். இடையிடையில் சங்கரிடம் பேசி விவரம் அறிந்து பூவைக்கும் தெரிவித்தான். இப்படியாக விடியற்காலை மூன்று மணி போல திருச்சி வந்தடைந்தனர்.

அந்த நேரம் சங்கர் அங்குதான் இருந்தான். உதய் அவனது கைபேசியில் அழைக்கவும் அவனே பூவையை அழைத்து சென்றான். ஜெயந்தனை பார்த்து வந்தவள் வெளியில் வந்து முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.

“பிரைவெட் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்டா” என்றான் சங்கர். உதய்க்கும் அதுவே சரியென பட்டது. பூவையிடம் கேட்க, “காப்பாத்திடலாமா?” எனக் கேட்டாள்.

“ட்ரை பண்ணலாம் பூவை, சீக்கிரம் முடிவெடு” என்றான்.

அவள் சரியென சொல்ல, அதற்குண்டானதை எல்லாம் சங்கரின் உதவியுடன் உதய்யே பார்த்தான். காலை விடியும் வேளையில் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப் பட்டான் ஜெயந்தன்.

ஜெயந்தனுக்கு தலையிலும் காலிலும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர் மருத்துவர்கள்.

பூவையிடம் இருந்த பணம் முழுவதையும் கட்டியும் பற்றாக்குறை ஏற்பட்டது. உதய் கொடுக்க முன்வர, “வேண்டாம், நான் லோன் போட்டுக்குவேன்” என்றாள் பூவை.

“சரி போ, போய் லோன் போட்டு எடுத்திட்டு வந்து கட்டு. இங்க வெயிட் பண்ணுவாங்க” என முறைத்துக் கொண்டே சொன்னான்.

“உங்ககிட்ட பணம் வாங்கிக்க சங்கடமா இருக்கு உதய்” என்றாள்.

“ஏன், கல்யாணம் பண்ணிக்க மாட்டோம்னு சொல்லிட்டு வாக்கிக்றோம்னு நினைக்கிறியா?” என உதய் கேட்க பதில் சொல்லாமல் நின்றாள்.

“இப்ப உடனே பணம் கிடைக்க வேற ஆப்சன் இருக்கா உன்கிட்ட?” என கேட்க அதற்கும் பதில் சொல்லாமல் நின்றாள்.

“உனக்கு லோன் கிடைச்சதும் திரும்ப கொடுத்திடு பூவை. நானும் கடனாதான் தர்றேன்” என சொல்லி அவளது பதிலை எதிர்பார்க்காமல் மீதி பணம் முழுதையும் செலுத்தினான்.

ஜெயந்தனுக்கு இரத்தம் ஏற்றப் பட வேறு யாராவது இருவர் இரத்த தானம் செய்ய வேண்டும் என்றனர். பூவை முன்வர அவளது ஹீமோகுளோபின் இரத்தம் கொடுப்பவர்களுக்கு இருக்க வேண்டியதை விட குறைவாக இருக்க கொடுக்க கூடாது என்று சொல்லி விட்டனர். பின் உதய்யும் சங்கரும் இரத்த தானம் வழங்கினர்.

உதய் அவனுக்கு தெரிந்தவர் மூலமாக புவனாவை அழைத்து வர ஏற்பாடு செய்தான். மதியத்திற்கு மேலாகி விட உதய் அவன் அப்பாவுக்கு அழைத்து சிங்கப்பூர் செல்லாமல் திருச்சி வந்ததை தெரிவிக்க அவர் கோவமடைந்து கத்தினார். உதய் அழைப்பை துண்டிக்க அவனது அம்மா அழைத்து திட்டுவதை தொடர்ந்தார். அவரது அழைப்பையும் துண்டித்து வைத்து விட்டான்.

பாவேந்தனுக்கு அழைத்து உதய் விவரம் சொல்ல தான் வெளியூரிலிருப்பதாகவும் ஊருக்கு திரும்பியவுடன் வந்து பார்ப்பதாகவும் சொன்னவர் பூவையிடமும் எந்த உதவி என்றாலும் கேட்க சொல்லி ஆறுதலாகவும் பேசி வைத்தார்.

மாலை போல வந்தடைந்த புவனா கதறியழ பூவைக்கும் அழுகை வந்தாலும் அடக்கிக் கொண்டு அம்மாவை சமாதானம் செய்தாள். விஷயம் எப்படியோ தெரிந்து லக்ஷ்மன் வீட்டிலிருந்தும் அனைவரும் வந்தனர். தனக்கு ஏன் சொல்லவில்லை என பூவையிடம் கோவமாக கேட்டான் லக்ஷ்மன்.

பதில் சொல்லாமல் பூவை முறைக்க, “ஹ்ம்ம்… புதுசா ஆளு வரவும் நான் ஞாபகம் இல்லாம போயிட்டேன்ல?” என குதர்க்கமாக கேட்டான்.

பூவைக்கு கோவம் வர ஏதோ சொல்லப் போக உதய் வந்து அருகில் நின்று கொண்டான். அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம், “இப்ப எதுவும் பேசாம இரு” என்றான்.

பூவைக்கும் அண்ணன் நிலை நினைவு வர ஓரமாக சென்று அமர்ந்து கொண்டாள். லக்ஷ்மனை முறைத்துக் கொண்டே உதய்யும் பூவையின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான். லக்ஷ்மன் குடும்பத்தினர் அவர்களை முறைத்துக் கொண்டே இன்னொரு பக்கம் சென்று அமர்ந்து கொண்டனர்.

அறுவை சிகிச்சை முடியவே இரவாகி விட்டது. உயிர் பிழைக்க ஐம்பது சதவீதம் மட்டுமே வாய்ப்பிருப்பதாக கூறப்பட பிழைக்கவே மாட்டான் என்பதற்கு இது கொஞ்சம் ஆறுதலாகவே இருந்தது. ஆனால் பார்வை சம்பந்தப்பட்ட நரம்பு சிதைந்திருப்பதாக கூறினார்கள். ஜெயந்தனுக்கு நினைவு வந்த பிறகுதான் பார்வை பாதிக்கப் பட்டிருக்கிறதா என கண்டறிய முடியும் எனவும் கூறினார்கள்.

அந்த நேரம் அவன் உயிர் பிழைத்தால் போதும் என்றுதான் அனைவருக்கும் இருந்தது.

“கண்டிப்பா உன் அண்ணன் திரும்ப வருவார். நம்பிக்கையா இரு” என் உதய் சொல்ல பூவை தலையாட்டிக் கொண்டாள்.

உதய்யின் செயல்கள் அனைத்தும் பூவைக்கு பேருதவியாக இருந்தது. அவனில்லா விட்டாலும் எப்படியும் சமாளித்திருப்பாள்தான் என்றாலும் மிகுந்த சிரமம் அடைந்திருப்பாள்.

பூவையின் மனமோ உதய்யை நோக்கி இன்னும் இன்னும் அதிவேகமாக சாய ஆரம்பிக்க பாவம் அவளால் தடுக்கவே முடியவில்லை!

Advertisement