Advertisement

நீ என் காதல் புன்னகை -5(1)

அத்தியாயம் -5(1)

அடுத்த நாள் இரவில் உதய் சிங்கப்பூர் செல்ல இருக்க அன்று மதியம் போல பூவையை பார்க்க வங்கிக்கு வந்திருந்தான். அன்று அவன் செல்ல இருப்பதெல்லாம் தெரியாமல் இறுதியாக ஒருமுறை எச்சரிக்க நினைத்து அவனை உள்ளே அழைத்தாள் பூவை.

அவனுக்கு பேசவே சந்தர்ப்பம் கொடுக்காமல், “பிடிக்கலைன்னு சொன்னா அமைதியா போறதுதான் நல்லவங்களுக்கு அடையாளம். இதுதான் உங்களை நான் கடைசியா பார்க்கிறதா இருக்கணும். இல்லன்னா…” பூவை நிறுத்த, உதய்யின் கண்கள் சுருங்கியது.

“இல்லன்னா?” தாடை இறுக கேட்டான் உதய்.

“இல்லன்னா போலீஸ்ல கம்ப்ளைண்ட் செய்வேன்” என்றாள்.

உதய்யின் கண்கள் சிவக்க, “என்னன்னு?” எனக் கேட்டான்.

“இப்படி பின்னால வந்து டார்ச்சர் செய்றதா” என எரிச்சலாக சொன்னாள் பூவை.

“ஹ்ம்ம்… உன் மாமா பையன் அந்த லக்ஷ்மன் நல்லவன் இல்லை, வேணும்னா அவனை பத்தி கம்பளைண்ட் பண்ணு”

“லக்ஷ்மன் பத்தி பேச உங்களுக்கு உரிமையில்லை” என்றாள் பூவை.

“அஞ்சு நிமிஷம் வாயை மூடிகிட்டு நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும், இல்லன்னா பேங்க்னு எல்லாம் பார்க்க மாட்டேன்” பெருங்கோவத்தை அடக்கிக் கொண்டு உதய் சீறியதில் அப்படியே அமைதியாகி விட்டாள் பூவை.

“நீங்க குத்தகைக்குத்தானே நிலத்தை கொடுத்திருந்தீங்க? அந்த லேண்ட் பேப்பர்ஸ் அடமானம் வச்சு நிறைய கடன் வாங்கியிருக்கான் லக்ஷ்மன். இன்னொரு உரக்கடை பெருசா ஆரம்பிக்க எல்லா வேலையும் செஞ்சிட்டு இருக்கான். உன் அண்ணன் டீ அடிக்க்ஷன் சென்டர்ல இருக்கிறதா நினைச்சிட்டு இருக்கீல…” எனக் கேட்டவன் அவன் கைபேசி எடுத்துக் காட்ட ஏதோ ஒரு அறையில் மது அருந்திக் கொண்டு அமர்ந்திருந்தான் ஜெயந்தன்.

“உன் அண்ணனை இந்த பழக்கத்திலேர்ந்து மீள விட மாட்டான் அவன். அவனோட குறி நீதான், உன்னை கல்யாணம் செய்துகிட்டு உன் மூலமா வர்ற பணத்தை மூலதனமா வச்சு அவன் பணக்காரன் ஆக பார்க்கிறான்” என்றான்.

“இல்ல லக்ஷ்மன் அப்படி ஆள் கிடையாது” என்றாள்.

“அப்படியா? உன் அம்மாகிட்ட போன் போட்டு லேண்ட் பத்திரம் எங்கன்னு கேளு” என்றான்.

லட்சுமன் சுயநலமாக இருப்பான் என்று தெரியும், ஆனால் இப்படி ஏமாற்று வேலை செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையோடு அன்னைக்கு அழைத்து கேட்டாள். அவரும் பத்திரத்தை லக்ஷ்மன் வாங்கி சென்றதாக கூற தான் ஏமாந்து போனதில் பூவைக்கு கண்ணீர் துளிர்த்தது.

உதய் கவனித்து விடக்கூடாதென்று வெகு கவனமாக அழுகையை துடைத்துக் கொண்டவள், “எதுக்கு பத்திரமெல்லாம் கொடுத்த? என்கிட்ட ஏன் சொல்லலைமா?” எனக் கேட்டாள்.

“அவன் ஏதோ சிரமம்னு சொன்னான் பூவை. இபோதைக்கு உனக்கு தெரிய வேணாம், அவனே சொல்லிக்கிறேன்னும் சொன்னான். அவன் சொல்லலையா உன்கிட்ட?” என புவனா கேட்க அவளால் அம்மாவை ஒன்றும் சொல்ல முடியவில்லை.

படிப்பறிவில்லாமல் சிறு வயதில் திருமணம் முடிந்து வெளியுலகமே தெரியாத பெண் அவர். தான்தான் இதையெல்லாம் சரியாக பார்த்திருக்க வேண்டும் என நினைத்தவள் பின்னர் பேசுவதாக சொல்லி வைத்து விட்டாள்.

“உன்னை எச்சரிக்கை செய்யதான் வந்தேன், கவனமா இரு. நான் இன்னைக்கு சிங்கப்பூர் கிளம்பறேன்” என்றவன் ஒரு பெருமூச்சு விட்டு, “நீ கூப்பிடாம இங்க திரும்ப வர மாட்டேன்” என்றான்.

பூவை அவனை அதிர்ச்சியாக பார்க்க, “உன் வாழ்க்கையில் இடம் தர்றதா இருந்தா மட்டும்தான் நீ என்னை கூப்பிடணும்” என சொல்லி அதற்கு மேல் காத்திராமல் வெளியேறப் போனவன் ஒரு நொடி நின்று, “இப்ப கூட இருன்னு சொல்ல மாட்டியா?” எனக் கேட்டான்.

அதிர்ச்சியிலும் லக்ஷ்மன் செய்ததை நம்பியும் நம்பாமலும் இருந்த பூவை அதற்காக உதய்யை நம்புவதா என புரியாமல் தடுமாறினாள்.

என்ன சொல்லப் போகிறாய் என உதய் அவளை ஆவலாக பார்த்துக் கொண்டிருக்க, “போகாதீங்க” என முணகினாள்.

உதய்யின் முகத்தில் வெற்றிப் புன்னகை.

“சரி போகலை, வேலை முடிச்சிட்டு வா. நான் வெயிட் பண்றேன்” என சொல்லி வெளியேறி விட்டான்.

அதற்கு மேல் எந்த வேலையும் தன்னால் பார்க்க முடியுமென பூவைக்கு தோன்றவில்லை. ‘அவனை போக வேண்டாம் என நானா சொன்னேன்? ஏன் அப்படி சொன்னேன்?’ என தன்னை தானே கேள்வி கேட்டவளுக்கு அதன் பதில் மேலும் அதிர்ச்சி கொடுத்தது.

அனுமதி பெற்று வங்கியிலிருந்து பூவை வெளியில் வர எதிரிலிருந்த உணவகத்திலிருந்து அவளை பார்த்து விட்ட உதய்யும் வந்தான்.

பூவைக்கு பெரும் குழப்பம். இவனை ஏன் நான் எதிர்பார்க்கிறேன்? அப்படியென்றால் இவனை எனக்கு பிடித்திருக்கிறதா என கேட்டுக் கொண்டாள். ‘ஆம்’ என்ற விடை அதிர வைக்க அன்று அவன் பிடித்து தள்ளியதும் அலட்சிய பார்வையும் நெஞ்சை தீயென சுட்டது.

பெண் பார்க்க வந்த போது இவனது பெற்றோர் நடந்து கொண்ட விதம் காட்சியாக விரிந்து மிரட்டியது. உதய் மீதிருக்கும் ஈர்ப்பு கலந்த சிறு பிடித்தம் கொண்டு இவனை தன் வாழ்வோடு இணைந்தால் அத்தனை இலகுவாக அந்த வாழ்க்கை இருக்கும் என பூவைக்கு தோன்றவில்லை

ஐயோ! இவனை எதற்காக இப்போது போக வேண்டாம் என கூறினோம், தன்னால் சமாளிக்க முடியாதா என சிந்தித்து கொண்டிருக்க, “போகலாம் வா” என்றான் உதய்.

“இல்ல, நான் கன்ஃப்யூஸ்டா இருக்கேன். எனக்கு சரியா எதுவும் சொல்ல தெரியல. நீங்க இன்னைக்கு கிளம்பறதா இருந்தா கிளம்புங்க” என்றாள்.

“இப்படி மாத்தி மாத்தி எல்லாம் என்கிட்ட பேசினாலும் நான் கோவப்படல பூவை, கோவமே படல” என்றவன் முகத்தை பார்த்தாலே கோவத்தை அடக்குகிறான் என்பது தெளிவாக தெரிந்தது.

என்ன சொல்வதென தெரியாமல் பூவை நிற்க, “பயப்படாம என் கூட வரலாம்” என சொல்லி கார் நிற்குமிடம் உதய் நடக்க, அவன் பேச்சை மீற முடியாமல் குழப்பத்துடனே அவனை பின் தொடர்ந்தாள் பூவை.

தனியிடம் எங்கும் அழைத்து செல்லாமல் பூங்கா அருகில் காரை நிறுத்த பூவையும் ஒன்றும் சொல்லாமல் இறங்கினாள்.

மர பெஞ்ச் ஒன்றை காட்ட அமைதியாக அமர்ந்து கொண்டாள். அப்போதுதான் நேரம் நான்கை கடந்திருக்க எண்ணக் கூடிய அளவில் மட்டுமே நபர்கள் இருந்தார்கள்.

“லக்ஷ்மன் பத்தி ஓர்ரி பண்ணிக்காத, நான் பார்த்துக்கிறேன் அவனை. உன் அண்ணனை இங்க சென்னைல வேற சென்டர்ல சேர்க்கலாம். எதுக்காகவும் கவலைபடாத, நான் இருக்கேன்” என்றான்.

“இல்ல, எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன்” என்றாள் பூவை.

“உனக்கு என்ன குழப்பம். சுத்தமா என்னை பிடிக்கலைன்னா போகாதீங்க ங்கிற வார்த்தை உன்னை அறியாமல் கூட உன் வாயிலேர்ந்து வந்திருக்காதுதானே? என்னை பிடிச்சிருக்கும் போது இன்னும் என்ன உறுத்தல் உனக்கு?” என வெளிப் படையாக கேட்டான் உதய்.

“பிடிச்சிருக்குன்னு எல்லாம் இல்லை. ஆனா… ஷ்ஷூ…” என்ன எப்படி விளக்குவது என தெரியாமல் மூச்சை வெளியேற்றினாள்.

“என்னை பாரு” என்றான் உதய்.

நிமிர்ந்து அவனை பார்க்க, “ஏதோ கொஞ்சமா பிடிச்சிருக்கா என்னை?” எனக் கேட்டான்.

“இப்படி எனக்கு ஆனது இல்ல, ஏதோ உங்ககிட்டர்ந்து என்னை அட்ராக்ட் பண்றது உண்மைதான். ஆனா… கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு எல்லாம் தீர்க்கமா முடிவெடுக்க முடியலை. அதுவும் இப்ப உள்ள பிரச்சனைக்கு என் கல்யாணம் தீர்வா தெரியல” என்றாள்.

“எல்லாத்தையும் தனியா சமாளிக்கிறேன்னு சொல்ற… ஓகே, சமாளி. ஆனா தெளிவா எனக்கு இப்பவே ஒரு பதில் சொல்லு. பாவேந்தன் மாமா பத்தி யோசிக்காம, அன்னைக்கு நடந்ததை மறந்திட்டு சொல்லு. நான் வேணாமா உனக்கு?”

பூவை புத்திசாலிதான், நிதானம் நிறைந்தவள்தான், ஆழ்ந்து யோசிப்பவள்தான். ஆனால் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் சரியான முடிவெடுக்க தெரிவதில்லை. தடுமாறும் இடமென்று ஏதாவது ஒன்று இருக்கும்.

ஏற்கனவே பிரச்சனைகளை மட்டுமே சந்தித்து வந்தவளுக்கு நான் இருக்கிறேன் என்ற வார்த்தையே அத்தனை ஆறுதலாக இருக்க மனமும் அப்படி ஒரு துணையை நாட அறிவு நிதர்சனத்தை எடுத்துக் கூற மொத்தமாக குழம்பினாள்.

உதய்யை கொஞ்சமாக பிடித்திருக்க அதன் பின்விளைவுகள் மருட்ட அவனை வேண்டாம் என துணிந்து சொல்லவோ, வேண்டும் என முழு மனதோடு சொல்லவோ அவளால் முடியவில்லை.

எந்த பதிலையும் கூற உதடுகள் பிரிய மறுத்து அதீத யோசனை அவளது தலையில் வலியை உண்டாக்க முகத்தை சுருக்கினாள்.

“வாழ்க்கையில இதைவிட பெரிய தோல்வி எனக்கு இருக்க போறதில்லை பூவை” சிரிப்போடு கூறினாலும் உதய்யின் அந்த சிரிப்பில் ஏமாற்றத்தின் சாயல்.

“வா உன் ஹாஸ்டல்ல விட்டுட்டு கிளம்பறேன்” என்றான்.

“எனக்கு கொஞ்சம் டைம் தேவை படுது” என்றாள்.

“உனக்கு சொன்னா புரியாது, இப்படி நீ டைம் கேட்கிறதே எனக்கு பெரிய தோல்விதான். போறதாதான் இருந்தேன், என்னவோ நீ இருக்க சொல்லுவேன்னும் ஒரு தாட், அந்த தைரியத்துல இன்னும் எதுவும் பேக் பண்ணல. எனக்கு நேரமாகுது” என்றான்.

“நானே போய்க்கிறேன்” என்றாள்.

“போற வழிதான், வா” என சொல்லி உதய் நடக்க ஆரம்பிக்க பூவையும் தெளிவில்லாத மனதுடன் சென்றாள்.

விடுதியில் கார் நிற்க, “எத்தனை மணிக்கு ஃப்ளைட்?” எனக் கேட்டாள்.

“நைட் பத்து மணிக்கு” என்றான்.

“ஹ்ம்ம்… போய்ட்டு வாங்க” என்றாள்.

உதய் தலையசைக்க பூவையும் ஒரு தலையசைப்பு கொடுத்து விட்டு இறங்கிக் கொண்டாள். பார்வையிலிருந்து பூவை மறையும் வரை அங்கேயே இருந்தவன் கடினமான முகத்துடன் தீவிரமாக சிந்தித்த வண்ணம் காரை எடுத்தான்.

தனது அறைக்கு வந்த பிறகும் பூவைக்கு என்ன யோசித்தும் உதய் விஷயத்தில் தெளிவான முடிவெடுக்க முடியவில்லை. லக்ஷ்மன் நடவடிக்கை வேறு கோவத்தை கொடுத்தது, ஜெயந்தன் வந்து மன சோர்வை உண்டாக்கினான். சிறியதாக ஆரம்பித்த தலைவலி விண் விண் என தெறிக்க ஆரம்பிக்க மாத்திரை போட்டுக் கொண்டு படுத்து விட்டாள்.

இரண்டு மணி நேரங்கள் உறங்கி எழுந்த பிறகு தலைவலி விட்டிருந்தது. ஆனால் எதையும் யோசிக்கவே பயமாக இருந்தது. வாழ்க்கையின் சில கடின தருணங்களை சிறு வயதில் கடந்தவளுக்கு இப்போது சோர்வு மட்டுமே இருக்க காரணம் உதய்யோ என சிந்திக்க ஐயோ மீண்டுமா என பதறி எழுந்தவள் நேரத்தை பார்த்து விட்டு ஒரு குளியல் போட்டு வந்தாள்.

இரவு உணவுக்கு செல்லலாம் என நினைத்தவள் அண்ணனிடம் எங்கு இருக்கிறான் என கேட்க எண்ணி அவனுக்கு அழைக்க, “ஹலோ யாருங்க பேசுறது? இந்த போன் வச்சிருக்கிறவருக்கு ஆக்சிடெண்ட் ஆகிட்டு. திருச்சி ஜி ஹெச் கூட்டிட்டு போறோம், உடனே வாங்க” என்ற செய்தியை யாரோ ஒரு ஆண் குரல் பதட்டமாகவும் அவசரமாகவும் சொல்ல பூவை ஸ்தம்பித்தாள்.

Advertisement