Advertisement

வீட்டுக்கு வந்தவர்களை என்ன சொல்வது? வரவேற்று ஹாலில் அமரவைக்க புவனா யார் என்பது போல பார்த்தார்.

பாவேந்தன் தன் தாய்மாமா என கூறி தன்னை அறிமுகம் செய்து கொண்ட உதய் தனது அப்பாவின் முகம் பார்க்க, அவர் “என் மூத்த மகன்  உதய். சிவில் இன்ஜினியரா சிங்கப்பூர்ல வேலை பார்க்கிறான். பூவைய அவன் மாமா வீட்ல வச்சு பார்த்திருப்பான் போல. பொண்ணு கேட்டு வந்திருக்கோம்” என்றார்.

அந்த பழைய வீட்டின் நிலையே அவர்களது எளிய வாழ்க்கை தரத்தை கூற கமலாவுக்கு இந்த குடும்பத்தில் சம்பந்தம் வைக்க என்ன அந்த வீட்டிற்குள் நுழையக் கூட பிடிக்கவே இல்லை. கண்ணுக்கு நிறைவாக தெரிந்த பூவையையும் ஏனோ மனதிற்கு பிடிக்கவில்லை. அவருக்கு இன்னும் அழகான வசதியான பெண்ணை பார்க்கலாம் என்ற எண்ணம். ஆனாலும் உதய் பிடிவாதமாக இருக்க அந்த நேரம் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருந்தார்.

பூவை கண்டனமாக உதய்யை பார்க்க அவன் யாருக்கும் தெரியாமல் கண்கள் சிமிட்டி சிரித்தான்.

பாவேந்தனின் உறவினர்கள் என்பதிலேயே  புவனாவுக்கு மிகுந்த சந்தோஷம். பூவையை ஒன்றும் பேச விடாமல் உள்ளே அழைத்து சென்று புடவை கட்டிக் கொள்ளும் படி கூற, “நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லம்மா. பாவேந்தன் சாருக்கு இதுல விருப்பம் இல்ல” என்றாள்.

“அப்ப உனக்கு பிடிச்சிருக்கா?” என புவனா கேட்க, அதே கேள்வி பூவைக்கும் எழ, “எப்படி எப்படி இவனை போய் எனக்கு பிடிக்கும்?” என தன்னை தானே கேட்டவள், “அதெல்லாம் இல்ல. அவங்களுக்கு குடிக்க ஏதாவது கொடுத்திட்டு, நீயே என் பொண்ணுக்கு இப்ப கல்யாணம் செய்யலைன்னு சொல்லி அனுப்பி வச்சிடு” என்றாள்.

புவனா ஏமாற்றமாக பார்க்க, “டைம் ஆகுதும்மா, ஜெயந்த் எங்க போனான்? கொஞ்ச நேரத்துல லக்ஷ்மன் வந்திடுவான்” என்றாள்.

வந்தவர்களை வெகு நேரம் காக்க வைக்க முடியாது என உணர்ந்து நல்ல இடத்தை வேண்டாம் என்கிறாளே என்ற மன வருத்தத்தோடே தேநீர் தயாரிக்க ஆரம்பித்தார் புவனா.

அணிந்திருந்த சுடிதாருடனே பூவை வெளியில் வந்து நிற்க, கண்டனமாக மகனை முறைத்தார் கமலா. அவனோ கண்களால் அம்மாவை கெஞ்ச, “வாம்மா, வந்து உட்காரு” என மகனுக்காக சம்பிரதாயமாக அழைத்தார்.

பூவையோ செல்லாமல் அங்கேயே நிற்க இப்போது மகனை வெளிப்படையாகவே ஏகத்திற்கும் முறைத்தார் கமலா. புவனா எல்லோருக்கும் தேநீர் கொடுத்து விட்டு என்ன சொல்வதென குழப்பமாக நின்றிருந்தார்.

அம்மா மறுத்து சொல்லாமல் சொதப்ப போவதை உணர்ந்த பூவை அவளே அவசரமாக, “இப்படி திடீர்னு வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கல. ரெண்டு வருஷத்துக்கு அப்புறம்தான் கல்யாணம் செய்றதா இருக்கேன். சாரி” என்றாள்.

பெரியவர் இருக்கும் போது இதென்ன இவளே பேசுகிறாள் என்பது போல முகம் சுளித்தார் கமலா.

“ஏன் ரெண்டு வருஷம் என்ன பிளான் வச்சுருக்க?” என உதய்யே கேட்க இப்போது நாதன் அதிருப்தியாக மகனை பார்த்தார். அதையெல்லாம் அவன் கண்டு கொள்வதாக தெரியவில்லை.

நாதன் கேட்டிருந்தால் ஏதாவது காரணம் மரியாதையாக சொல்லியிருப்பாளோ என்னவோ. தான் மறுத்தும் வீடு வரை பெண் கேட்டு வந்திருக்கிறானே என்ற கோவத்தில், “அதையெல்லாம் மூணாம் மனுஷருக்கு சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்லை” என்றாள் பூவை.

கமலா கோவமாக பார்க்க நாதன் எழுந்து கொண்டார். புவனா மகளின் கையை பிடித்து, “பேசாம இரு பூவை” என கண்டிப்பாக கூற பூவைக்குமே எல்லோர் முன்னிலையில் இப்படி பேசியிருக்க வேண்டாம் என தோன்ற அடுத்து என்ன செய்வது என்ன பேசுவது என தெரியாமல் தடுமாறி நின்றாள்.

உதய்க்கும் கோவம் வந்தாலும் எழாமல் எதையோ யோசித்த வண்ணம் அமர்ந்திருக்க, “இதுக்கு மேல என்னடா? கிளம்பு” என கோவமாக கூறினார் சுவாமிநாதன்.

“என்ன பூவை உன் பிரச்சனை? என் மாமா என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொன்னா உனக்கு சம்மதமா?” எனக் கேட்டான் உதய்.

அதற்கு பூவை பதில் சொல்லும் முன்னர், “உனக்கு என்னடா குறைச்சல்? உன் தகுதிக்கு கொஞ்சமும் பொருந்தாத இடத்துல வந்து கெஞ்சிகிட்டு இருக்க” என்றார் கமலா.

தகுந்த பதில் கொடுக்க பூவையின் நாக்கு துடிக்க, மகளை அறிந்தவராக புவனா அவளின் கையை அழுந்த பிடித்து அவளை அடக்கினார்.

அதற்குள்ளாக ஜெயந்தன் தள்ளாடிக் கொண்டே வாசல் வரை வந்தவன், “எங்கேயும் நான் வரலை, என் சொத்தை பிரிச்சு எனக்கு கொடு” என உளறலாக சொன்னான்.

கமலாவும் நாதனும் அவனை அருவருப்பாக பார்க்க யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்காத ஜெயந்தன், “அந்த லக்ஷ்மன் பய மொத்தமா சுருட்டிக்கலாம்னு நினைச்சி பிளான் போட்டு என்னை எங்கேயோ அனுப்பி கொல்ல பார்க்கிறான். எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சீங்களா? உன்னை கல்யாணம் செய்ற முன்னாடியே இவ்ளோ அதிகாரம் பண்றான், கல்யாணம் பண்ணிட்டான்னா கேட்கவே வேணாம். என் சொத்தை கொடுடி” என சத்தம் போட்டான்.

“டேய் அமைதியா இருடா, உன் தங்கச்சிய பொண்ணு பார்க்க வந்தவங்க டா இவங்க. மானத்தை வாங்காத” என மகனை அடக்க எண்ணி சொன்னார் புவனா.

“நல்ல குடும்பம்! இனிமே உங்க பொண்ண பார்க்க வந்தோம்னு எல்லாம் சொல்லாதீங்க. உதய்! இப்போ கிளம்ப போறியா இல்லையா?” என அதட்டினார் கமலா.

பூவைக்கு தனது அண்ணன் செயல் அவமானமாக இருக்க உதட்டை கடித்து உணர்ச்சியை அடக்கினாள்.

 இறுகிப் போன முகத்துடன் எதுவும் சொல்லாமல் எழுந்து கொண்ட உதய் பூவையை பார்த்தான். அவள் கண்களில் கண்ணீர் பள பளக்க முகம் அவமானத்தில் கன்றி சிவந்திருந்தது.

கமலாவும் நாதனும் வெளியேறி விட, எதையும் உணர்ந்து கொள்ளும் நிலையில் இல்லாத ஜெயந்தனை முறைத்துக் கொண்டே உதய்யும் வெளியேறினான். கார் புறப்படும் சத்தம் கேட்ட பிறகுதான் பூவை நிமிர்ந்தாள்.

ஜெயந்தன் வெறும் தரையில் படுத்து புரண்டு கொண்டிருக்க லக்ஷ்மனுக்கு அழைத்து ஜெயந்தன் நிலையை கூறி கார் ஒன்று பிடித்து வருமாறு சொன்னாள்.

“இவனை பார்க்காத பூவை, உன் வாழ்க்கையை பாருடி” என புவனா அழுது கொண்டே சொல்ல, “நீ வேற ஏம்மா சும்மா இரு” என அம்மாவிடம் எரிந்து விழுந்து அறைக்குள் சென்று விட்டாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் காரோடு லக்ஷ்மன் வர போதையிலேயே ஜெயந்தனை காரில் ஏற்றி திருச்சி புறப்பட்டார்கள்.

சென்னையை நெருங்கிக் கொண்டிருந்த காரில் உதய்யை அவனது அம்மா குற்றமாக கூற அவனோ வாயே திறக்காமல் இருந்தான். இத்தனை நேரத்தில் பொறுமையாக இருந்த நாதன் மகனின் அமைதியில் புருவம் சுருக்கி, “என்னடா, இப்படி எதுவும் பேசாம வந்தா என்ன அர்த்தம்?” எனக் கேட்டார்.

தனதருகில் அமர்ந்திருந்த அப்பாவின் முகத்தை சலனமின்றி பார்த்தவன் உதடுகள் சிறிய புன்னகையை சிந்த அவனை குழப்பமாக பார்த்தார் நாதன்.

சென்னை வந்த பிறகும் உதய் என்ன நினைக்கிறான் என யாராலும் கணிக்க முடியவில்லை. வேறு பெண் பார்க்கலாம் என்றதற்கு பெரிதான மறுப்பு மட்டும் தெரிவித்து விட்டான். அவனை மீறி கமலாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பூவையை இந்த வீட்டின் மருமகளாக்குவதில் கமலா மட்டுமல்ல நாதனுமே எதிர்ப்பு தெரிவிக்க உதய் மறுப்பாக ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் வேறு பெண் பார்க்க கூடாது என கண்டிப்பாக கூறி விட்டான். வீட்டிலும் அதிக நேரம் தங்குவதில்லை.

கமலா வருத்தமாக இருக்க நாதன்தான், “இந்த முறை அவன் சிங்கப்பூர் போயிட்டு வரட்டும் கமலா. அந்த பொண்ணை மறக்க முடியலையோ என்னவோ. கொஞ்ச நாள் போனா சரியாகிடுவான்” என்றார்.

“என் மேலேயும் கோவமா இருக்கான்னு தோணுதுங்க” என்றார் கமலா.

“அதுல சந்தேகமே வேணாம். நம்ம ரெண்டு பேர் மேலேயுமே கோவமாதான் இருக்கான். அதனால பரவாயில்லை. அந்த பொண்ணை கட்டி கொடுத்து அது அண்ணன் காரன் நாலு பேர் மத்தியில் குடிச்சிட்டு வந்து ரகளை செஞ்சா நம்ம குடும்ப மானம்தான் போகும்” என்றார்.

“அது மட்டுமாங்க? அந்த பொண்ணு கூட எப்படி பேசுதுன்னு பார்த்தீங்கல்ல? நம்ம உதய்க்கு எப்படி சரியா வருவா?” கமலா கேட்க சரி என்பது போல நாதன் தலையசைத்தார்.

இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு பின்னால் நின்றிருந்த உதய் எதையும் காட்டிக் கொள்ளாமல் அப்போதுதான் வந்தது போல வந்தமர்ந்தான்.

“காபி எடுத்திட்டு வரவாப்பா?” என கமலா கேட்க,

“வேணாம்மா, நான் நாளைக்கு நைட் கிளம்பறேன். அர்ஜண்ட் ஒர்க்” என்றான். அப்படி எதுவும் இல்லை, இங்கு இருக்க பிடிக்காமல் மிச்சமிருந்த பத்து நாட்கள் விடுப்பை ரத்து செய்து விட்டு அவனே கிளம்புகிறான்.

“என்னடா திடீர்னு சொல்ற? திரும்ப எப்ப வருவ?” எனக் கேட்டார் நாதன்.

“இப்ப சொல்ல முடியாதுப்பா. புது  ப்ராஜக்ட், எப்ப முடியுமோ அதை பொறுத்துதான் சொல்ல முடியும்” என்றான்.

“அடுத்த முறை நீ வரும் போது அம்மா நல்ல பொண்ணா பார்த்து வச்சிருப்பேன். நீ கல்யாணம் பண்ணிக்கணும்” என கமலா சொல்ல மறுப்பாக தலையசைத்தான் உதய்.

“நாங்க உன் நல்லதுக்குதான் செய்றோம்னு தெரியலையா உனக்கு?” கோவமாக கேட்டார் நாதன்.

“கோவ படாதீங்க” என்றார் கமலா.

உதய் அமைதியாக இருக்க, “என்னடா என்ன உன் மனசுல இருக்கு?” என பொறுமையாக கேட்டார் கமலா.

“சீக்கிரம் சொல்றேன்” என மட்டும் சொல்லி எழுந்து சென்று விட்டான் உதய்.

Advertisement