Advertisement

நீ என் காதல் புன்னகை -3

அத்தியாயம் -3

கும்பகோணம் வந்தடைந்த பூவை அவளது ஊருக்கு செல்லும் பேருந்து நிற்குமிடம் வந்தாள். தான் இன்னும் சற்று நேரத்தில் வீடு வந்து விடுவேன் என அன்னையிடம் சொல்ல கைபேசி எடுக்க அவளது மாமா மகன் லக்ஷ்மனிடமிருந்து இருபதுக்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகள். 

இப்படி தொடர்ந்து அழைப்பவன் கிடையாது, ‘எப்படி சைலண்ட் மோட் எடுக்காம விட்டேன்? என்ன அவசரமோ…’ என கொஞ்சம் பதற்றத்தோடே அவனுக்கு அழைத்தாள். 

லக்ஷ்மன் சொன்ன செய்தியில் பேரதிர்ச்சி அடைந்தவள் ஆட்டோ பிடித்துக்கொண்டு அவன் சொன்ன மருத்துவமனை சென்றடைந்தாள். 

பூவையை கண்டதும் ஓட்டமும் நடையுமாக வந்தவன், “குடிச்சிட்டு வண்டி ஓட்டியிருக்கான் பூவை. கைல நல்ல அடி, பிராக்சர் ஆகிட்டாம். ஆபரேஷன் செய்யணும்னு சொல்றாங்க. எத்தனை முறை கால் பண்றது உனக்கு? அத்தைகிட்ட சொல்றதா வேணாமான்னு கூட தெரியல” என்றான்.

பூவைக்கு அழுகையும் ஆத்திரமுமாக வந்தது. அவளது ஒரே அண்ணன் ஜெயந்தன், அவளை விட இரண்டு வயது பெரியவன். பள்ளி இறுதி ஆண்டில் தோல்வி அடைந்ததற்காக சேரக் கூடாத நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தவன், பின் ஏதோ பெண்ணை விரும்பி காதல் தோல்வி என கூறி முழு நேர குடிகாரனாகவே மாறி விட்டான்.

“அம்மாகிட்ட சொல்லிடலையே?” எனக் கேட்டாள்  பூவை.

“இன்னும் கொஞ்ச நேரம் பார்த்திட்டு நீ எடுக்கலைன்னா அத்தைகிட்ட சொல்லலாம்னு நினைச்சேன். நான்தான் இவனை டீஅடிக்ஷன் சென்டர்ல சேர்க்கலாம்னு சொன்னேன்ல, இப்ப பாரு கையை உடைச்சுக்கிட்டு படுத்து கிடக்கான்” என்றான் லக்ஷ்மன்.

“நான் சரின்னு சொன்னா போதுமா, அவன் கேட்க வேணாமா?” ஆயாசமாக கேட்டாள் பூவை. 

“மல்லுகட்டி நான் சேர்த்து விடுறேன், இப்ப ஆபரேஷனுக்கு பணம் கட்ட சொல்றாங்க, கைல இருந்ததை நான் கட்டிட்டேன். நீ வேற பணம் வச்சிருக்கியா?” எனக் கேட்டான்  லக்ஷ்மன்.

அவன் பணம் செலுத்தினான் என்பதே பூவைக்கு ஆச்சர்யம்தான். ஏதாவது என்றால் அழைத்த உடனே வருவான்தான், ஆனால் பணம் விஷயத்தில் உதவி என்ன கடனாக கூட தர யோசிப்பான். எதிலும் தனக்கு என்ன லாபம் என கணக்கு போடுபவன். அவன் குணமறிந்த பூவையும் பண உதவிகள் கேட்க மாட்டாள், ஏன் ஏதாவது அவனிடம் வேலை வாங்கினால் கூட அதற்கு ஈடாக ஏதாவது செய்தோ கொடுத்தோ நேர் செய்து விடுவாள். 

 அப்பாவின் காலத்திற்கு பிறகு இவர்கள் குடும்பத்திடம் குத்தகைக்கு விட்ட விவசாய நிலத்தை வாங்காமல், தற்காலம் குத்தகை தொகை கூடியிருந்த போதிலும் மேற்கொண்டு பணம் எதுவும் பெறாமல் இப்போது வரை அவர்களே விவசாயம் பார்க்க விட்டிருக்கிறாள்.

தனது வங்கி சேமிப்பு அட்டையை எடுத்துக் கொண்டவள் “எவ்ளோ கட்டணும்?” என லக்ஷ்மனிடம் கேட்டு பணம் கட்டி வந்து ஜெயந்தனை பார்த்தாள்.

 படுக்கையில் இருந்த ஜெயந்தன் தன் தங்கையை பார்க்க முடியாமல் கண்களை மூடிக் கொள்ள இந்த நிலையில் அவனிடம் எதுவும் கோவமாக பேச விரும்பாதவள், “ஆபரேஷன் பண்ண போறாங்க, சரியாகிடும்” என மட்டும்  ஆறுதலாக சொல்லி வெளியில் வந்து அமர்ந்து கொண்டாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அறுவை சிகிச்சை ஆரம்பிக்கப் பட்டது.

 ஜெயந்தனை விட இரண்டு வயது பெரியவன்  லக்ஷ்மன். சொந்தமாக உரக்கடை வைத்திருக்கிறான். 

“அம்மாக்கு இப்ப எதுவும் தெரியவேணாம். நான் எதாவது சொல்லிக்கிறேன். நானும் கூட இல்லாம ரொம்ப பயந்துக்கும், அண்ணன் வீட்டுக்கு வந்ததும் பார்த்துக்கட்டும்” என பூவை சொல்ல லக்ஷ்மன் சரி என்றான்.

அறுவை சிகிச்சை முடிந்து ஜெயந்தன் வந்து விட மயக்கத்தில் இருந்தவனை பார்த்து வந்தாள் பூவை. இன்னும் இரண்டு நாட்கள் இங்கு இருக்க வேண்டும் என மருத்துவமனையில் சொல்லப் பட, “நாளைக்கு  ஊருக்கு போகணும் மாமா,  இங்க நீ இருந்து பார்த்துக்குறியா?” எனக் கேட்டாள் பூவை.

“நீ சொல்லணுமா பூவை? வா உன்னை வீட்ல விட்டுட்டு வர்றேன்” என்றான் லக்ஷ்மன்.

“இந்த நேரம் பஸ் இருக்கும், நான் போய்க்கிறேன். நீ இவன் கூட இரு, நான் உன் அக்கவுண்ட்க்கு பணம் அனுப்புறேன்” என்றாள்.

“வேணாம் பூவை, நான் பார்த்துக்கிறேன்” என சொன்னவனை யோசனையாக பார்த்தவள், “என்ன பார்ப்ப? ரொம்ப எல்லாம் இல்ல, கொஞ்சமாதான் அனுப்புறேன்” என்றாள். 

கையோடு கைபேசி மூலம் அவனது கணக்குக்கு தேவைக்கு அதிகமாகவே  சில ஆயிரங்கள் அனுப்பி விட்டு அவனிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள். 

 மருத்துவமனை அருகிலேயே பேருந்து கிடைத்து விட இருக்கையில் அமர்ந்தவளுக்கு சக்தி முழுதும் வடிந்து விட்டது போல இருந்தது. வயிறும் கூச்சல் போட  சலிப்பாக வந்தது. அடுத்து அம்மாவிடம் வேறு பொய் சொல்லி சமாளிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டே பயணத்தை கடந்தாள். 

அவளது அம்மா புவனா அதிக கேள்விகள் கேட்டு குடையவில்லை. அப்பாவியான அவர், ஜெயந்தன் நண்பர்களுடன் வெளியூர் சென்றிருக்கிறான் என மகள் சொன்னதை அப்படியே நம்பிவிட்டார். மகளுக்கு சாப்பாடு கொடுத்து  அவள் சாப்பிடும் வரை அவளுடனே அமர்ந்திருந்து  பின்னர் எல்லாம் எடுத்து வைத்து விட்டு மகளுடனே படுத்து விட்டார். 

காலையில் லக்ஷ்மனுக்கு அழைத்து அண்ணன் நலன் விசாரித்த பூவை, அப்பொழுதே ஊருக்கு செல்வதாக கூறி விரைவாகவே காலை உணவை முடித்துக் கொண்டு மருத்துவமனை சென்றாள். குளித்து தயாராகி வருமாறு லக்ஷ்மனை அனுப்பி வைத்தவள் அண்ணனுக்கு வேறு ஆடை மாற்ற உதவி செய்து அங்கேயே வழங்கப்படும் உணவை கொடுத்து மருந்துகளையும் கொடுத்தாள்.

ஜெயந்தன் மீது அத்தனை கோவமிருக்க கையில் கட்டும் முக வீக்கத்தோடும் இருப்பவனிடம் கோவமாக எதையும் பேச முடியாமல் அமைதியாகவே எல்லாம் செய்ய அவனுக்குத்தான் குற்ற உணர்வாகிப் போனது. 

“நீ ஏன் எனக்கு செய்ற பூவை, என்னை சாக விட்டுட்டு உன் வேலைய பாரு. நீயாவது நல்லா இரு” என ஜெயந்தன் கூற பல்லைக் கடித்து கோவத்தை கட்டுப்படுத்திக் கொண்டாள். 

“எனக்கெல்லாம் வாழ தகுதியில்லை பூவை, படிப்பு வரலை, எனக்கு பிடிச்ச பொண்ணுக்கு என்னை பிடிக்கல, பாரு உனக்கும் அம்மாக்கும் பாரமா இருக்கேன்…”

“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின…” என விரல் நீட்டி எச்சரித்தாள் பூவை. 

“எனக்கு ஏதாவது தொழில் வைக்க பணம் தா பூவை, நான் நல்லா ஆகிடுவேன்” என்றான் ஜெயந்தன்.

“சாக விடுங்கிற, தொழில் வைக்க போறேங்கிற… எப்படி இப்படி மாத்தி மாத்தி பேசுற? முதல்ல குடியை நிறுத்து, அப்புறம் மத்தது பார்க்கலாம். இப்ப எதுவும் பேசாம இரு, இல்லன்னா என்கிட்ட வாங்கி கட்டிக்குவ” என பல்லை கடித்துக் கொண்டு பூவை சொல்ல அமைதியாகி விட்டான் ஜெயந்தன். 

லக்ஷ்மன் வந்ததும் அங்கிருந்து புறப்பட அவனும் அவளுடனே வாயில் வரை வந்தான். 

“திடீர்னு உன் பணமெல்லாம் போட்டு ஹெல்ப் பண்ற? ஏன் லக்ஷ்மன் மாமா?” என பூவை கேட்க இப்படி கேட்பாள் என எதிர்பார்க்காத லக்ஷ்மன் விழித்தான்.

“உன்னை எனக்கு நல்லாவே தெரியும், இதுல எதுவும் உள் நோக்கம் இருக்கா?” விடாமல் கேட்டாள் பூவை.

“ஏன் பூவை நான் செய்யக் கூடாதா? நாம கல்யாணம் பண்ணிக்க போறவங்கதானே?” என லக்ஷ்மன் கேட்க இப்படி எதையோ ஒன்றை எதிர்நோக்கியிருந்த பூவை அதிரவில்லை.

வசதியில்லாத காலத்தில் இவனது அம்மா இவளிடம் நேரடியாகவே “லக்ஷ்மன் உனக்கு அண்ணன் மாதிரி” என சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொன்னது நினைவுக்கு வர இப்போது சிரிப்பு வந்தது. 

“உன் அம்மாக்கு தெரியுமா மாமா?” எனக் கேட்டாள்.

“ஏன் தெரியாம? நீ ம் னு சொன்னா போதும், கையோட கல்யாணம் வைக்கவே அம்மா ரெடியா இருக்கு” என்றான்.

“ம்ம்… உன்னை அண்ணன் மாதிரி நினைக்க சொன்னவங்க எப்படி திடீர்னு மாறினாங்கன்னு அவங்ககிட்ட நான் கேட்டதா கேட்டு சொல்லு” என்றாள். 

“பூவை, பழசெல்லாம் இன்னும் மறக்கலையா நீ? அவங்க சொன்னா… நம்ம விருப்பம் முக்கியம் இல்லையா?”

“அதுவும் சரிதான், அப்படி பார்த்தா கூட எனக்கு இப்படி விருப்பமில்லை. அதனால தேவையில்லாம ஆசை படாத மாமா. நீ செய்த உதவிக்கு கைமாறா நானும் எந்த உதவியும் செய்ய தயாரா இருக்கேன். ஆனா கல்யாணம் எல்லாம் செய்துக்க முடியாது, பெரியவங்க பேசினாலும் நீதான் எடுத்து சொல்லணும்” என தெளிவாக கூறி விட்டு கிளம்பினாள்.

லக்ஷ்மன் முகம் கறுத்து சிறுத்து போயிருந்தது. 

பேருந்து நிலையம் வந்த பூவை சென்னை செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டாள். ஆமாம், பூவை சென்னையில் இருக்கும் அரசுப் பொது வங்கி ஒன்றில்தான் துணை மேலாளராக பணியில் இருக்கிறாள். இரவு உணவுக்கு அவள் தங்கியிருக்கும் விடுதி வந்தடைந்ததும் சாப்பிட்டு அவள் அம்மாவுக்கு அழைத்து தான் வந்தடைந்து விட்டதாக சொல்லியவள் வேறு உடை மாற்றிக் கொண்டு படுத்தாள். 

அத்தனை உடல் அயர்விலும் கண்கள் மூடியதுமே முதல் நாள் உதய் தள்ளி விட்டது மனதில் காட்சியாக விரிய அவன் மீது ஆத்திரமாக வந்தது. பாவேந்தன் சாருக்காக அவனை ஒன்றும் செய்யாமல் விட்டேனே என்ற எண்ணம் அவள் மீதே கோவத்தை வரவழைக்க தலையணையில் ஓங்கி குத்தினாள். 

அதீத கோவம் கண்ணீரை வரவழைக்க, “அடுத்த முறை அவனை பார்த்தா நாலு அடியா திருப்பி கொடுத்திடலாம்” என வாய்விட்டு சமாதானமாக கூறிக் கொண்டவள் அப்படி கற்பனையிலும் நினைக்க ஏதோ ஓரளவு மனம் அமைதியடைய அதன் பின்னர்தான் உறங்கினாள். 

சென்னை  மையப் பகுதியில் இருக்கும் அந்த தனி வீடு அந்த வீட்டினரின் செழுமையை பறைசாற்றுவதாக இருந்தது. சுவாமிநாதன் பணி ஓய்வு பெற்ற தலைமை செயலக அலுவலர். 

பரம்பரை வசதி கொண்டவர் என்பதால் அவரது இளமை காலத்திலேயே சென்னை புறநகர் பகுதிகளில் நிறைய நிலங்கள் வாங்கிப் போட்டிருந்தார். இரண்டு அப்பார்ட்மென்ட் வீடுகள் சொந்தமாக இருக்க அவற்றை வாடகைக்கு விட்டிருந்தார். இப்போதும் அரசு பணிகளுக்கான தனியார் பயிற்சி மையத்தில் பயிற்றுவிப்பவராக சென்று கொண்டிருக்கிறார். 

  நாதனின்  மனைவி கமலா அந்த காலை வேளையில் அவரது அதீதமான உடல் எடையுடன் போராடிக் கொண்டே பர பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். வீட்டு வேலைக்கு ஈஸ்வரி எனும் நடுத்தர வயது பெண்மணி இருந்தாலும் அன்று சுவாமிநாதனின் தந்தைக்கு திதி என்பதால் கமலாவுக்கு கூடுதல் வேலைப் பளு. 

உதய்யின் தங்கை ஷியாமளா கல்லூரி கிளம்பிக் கொண்டிருக்க, “லீவ் போடுன்னு நேத்தே சொன்னேன்லடி?” எரிச்சலாக கேட்டார் கமலா.

“முக்கியமான கிளாஸ் லீவ் போட முடியாதுன்னு நானும் நேத்தே சொன்னேனே” அலட்சியமாக பதில் கொடுத்தாள் ஷியாமளா. கமலாவின் பேச்சை மீறி நடந்தும் அவரால் ஒன்றும் செய்ய முடியாத நபர் என்றால் அது அவரது மகள்தான். 

அப்படி ஒன்றும் படிப்பை பெரிதாக நினைப்பவள் கிடையாது ஷியாமளா. திதி கொடுக்கும் வேளையில் வீட்டிலிருக்க அவளுக்கு பிடிக்கவில்லை, அதனை முன்னிட்டே இந்த சாக்கு. மகளின் எண்ணம் அறிந்த கமலாவும் விடாமல், “ஒழுங்கா வீட்ல இரு, அண்ணன் வேற இருக்கான். தப்பா நினைப்பான்” என்றார்.

“நினைச்சா நினைக்கட்டும்” என அலட்சியமாக சொல்லி காலை உணவையும் உண்ணாமல் சென்று விட்டாள். 

குளித்து வந்த உதய் தங்கை எங்கே என கேட்கவும் ஷியாமளா சொன்னதையே கமலா சொல்ல உதய் சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டான். ஆனால் கமலாதான் தன் சொல் பேச்சை மகள் கேட்பதே இல்லை என புலம்பி கவலையாக காணப் பட்டார். 

Advertisement