Advertisement

நீ என் காதல் புன்னகை -2(2)

அத்தியாயம் -2(2)

அவன் சென்ற சில நொடிகளில் அருளரசி உள்ளே வந்தார்.

யோசனையாகவும் கவலையாகவும் தென்பட்ட கணவரிடம், “என்ன என்ன நடந்தது உங்க ரகசிய பேச்சு வார்த்தையில?” நொடிப்பாக கேட்டார் அருள்.

“பூவையைதான் கட்ட போறானாம்” குரலில் சுரத்தே இல்லாமல் சொன்னார் பாவேந்தன்.

“யாரு… இந்த முரட்டு பயலுக்கு அவ்ளோ அருமையான பொண்ணு கேட்குதாமாம்! சொல்ல போனா எவளும் இவனை கட்டிக்க ஒத்துக்க மாட்டா. மனுஷனா இவன்? இவனை பத்தி இவன் குடும்பம் பத்தி எல்லாம் நானே சொல்றேன் பூவைகிட்ட, எப்படி கட்டிப்பான்னு பார்க்கிறேன்” அருள் பேசிக் கொண்டிருக்க சங்கடமாக எழுந்து நின்றார் பாவேந்தன்.

அருள் திரும்பி பார்க்க கோவம் அனல் வீச நின்றிருந்தான் உதய். அருள் அசரவில்லை, “முதல்ல அந்த பொண்ணுக்கு போன் போட்டு எந்த வில்லங்கத்திலேயும் மாட்டிக்காம இருக்க சொல்லி எச்சரிக்கை பண்ணுங்க” என்றார்.

அமைதியாக உள்ளே சென்று கார் சாவியை எடுத்துக் கொண்ட உதய் தனது அத்தையை முறைத்து பார்த்தான்.

‘நான் பார்க்க வளர்ந்தவன்டா நீ’ என்பது போல அலட்சியமாக பார்த்தார் அருளரசி.

“என்ன வேணா அவகிட்ட சொல்லுங்க. உங்க முன்னாடியே அவளை கல்யாணம் பண்ணி காட்டுறேன், முடிஞ்சா தடுத்து பாருங்க” என ஏளனமான சிரிப்பை உதடுகளில் ஏந்தி சவால் போல சொன்னவன் மாமாவையும் ஒரு முறை முறைத்து பார்த்து விட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.

“அறிவிருக்காடி உனக்கு? அவனை சீண்டி விட்டது போல ஆச்சு இப்போ” என ஏற்கனவே அவன் சீண்டப் பட்டது தெரியாமல் நொந்து போனவராக கேட்டார் பாவேந்தன்.

“ஆமாம் அவன் ஜல்லி கட்டு காளை… நாங்க சீண்டி விட்டதுல அப்படியே முட்டி தள்ள போறான்! உங்க அக்கா மகனுக்கு ஒண்ணும் அவ்ளோ பெரிய கொம்பு இல்ல. பூவை நம்பர் கொடுங்க என்கிட்ட, நான் அந்த பொண்ணுகிட்ட பேசுறேன்” என்றார் அருள்.

“இப்பதான் அந்த பொண்ணு ஊருக்கு போய்கிட்டிருக்கும், காலையில பேசு” என்றார்.

“இவனுக்கு நினைச்சது எல்லாம் அப்படியே நடந்திடும்னு திமிரு! வயசு வித்தியாசம் தெரியாம மட்டு மரியாதை இல்லாம பார்க்கிறதும் பேசுறதும்… சின்ன பொண்ணை தள்ளி விடுறதும்… பூவைக்கு இவனை கொஞ்சமும் பிடிக்காது, சொல்லப் போனா ஆம்பிள்ளை திமிர் இருக்கிற இவனை எந்த பொண்ணுக்கும் பிடிக்காது. இவனுக்கு இந்த ஜென்மத்துல பூவையோட மட்டுமில்லை, யார் கூடவும் கல்யாணமே ஆகாது” என புலம்பலுடன் உதய்க்கு சாபமும் இட்டுக் கொண்டு சென்றார் அருள்.

அருளரசியின் சொந்த அண்ணன் மகன்தான் உதயசரண். சென்னையை பூர்வீகமாக கொண்ட அருளின் அண்ணன் சுவாமிநாதனுக்கும் காஞ்சிபுரத்தை சேர்ந்த பாவேந்தனின் அக்கா கமலவேணிக்கும் பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம்தான். நாதனின் பெற்றோர் உடல் நலன் குன்றியிருக்க வீடு கமலா வசமானது.

வீட்டின் மருமகளாக அனைத்து கடமைகளையும் சரி வர செய்தாலும் அவருக்கு கீழேதான் எல்லாம் இருக்க வேண்டும் என்ற ஆதிக்க குணம் நிறைந்தவர் கமலா. அப்படியே நாத்தனாரிடமும் ஆதிக்கம் செலுத்த முயல, தன்னிச்சையாகவே செயல்பட விரும்பும் அருளுக்கு அண்ணியை ஆரம்பத்திலேயே பிடிக்காமல் போனது.

ஆனால் பாவேந்தன் குணம் வாய்ந்தவர். அவருக்கும் அருளுக்கும் காதல் மலர, முறையாக வீட்டிலும் தங்களது விருப்பத்தை தெரியப்படுத்தினார்கள்.

தனது அடங்காத நாத்தனார் தனது தம்பியின் மனைவியானால் பிறந்த வீட்டில் தன் செல்வாக்கு செல்லாது என கணக்கு போட்டு அருளை தன் தம்பிக்கு கட்டி கொடுக்க கூடாது என பிறந்த வீட்டில் அழுத்தமாக சொல்லி விட்டார் கமலா.

ஆனால் சொன்ன விதம் வேறாக இருந்தது. அதாவது தன் கணவனுக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை, மீறி செய்தால் தன் வாழ்க்கை பாதிக்கப்படும் என பெற்றோரை பயமுறுத்த அவர்களும் அருளை மருமகளாக்க தயங்கினர்.

மனைவியின் சொல் மீறும் தைரியம் நாதனுக்கு இல்லை, அருளின் பெற்றோரும் நாதன் பேச்சை மீறி எதுவும் செய்ய விரும்பாதவர்களாய் மகளின் விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்கவில்லை.

வீட்டினர் சம்மதம் கிடைக்கப் பெறாததால் அருளை அழைத்துக் கொண்டு தனியே சென்று நண்பர்கள் உதவியுடன் பதிவு திருமணம் செய்து கொண்டார் பாவேந்தன். அதன் பின் பாவேந்தன் வீட்டில் அவர்களை ஏற்றுக்கொண்டனர்.

ஏற்கனவே உடல்நலன் பாதிக்கப் பட்டிருந்த பாவேந்தனின் தந்தை இவர்களது திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் இறக்க இவர்களது திருமணம்தான் தந்தையின் இறப்புக்கு காரணம் என சொல்லி துக்க வீட்டில் அருளுக்கு அவப்பெயரை உண்டாக்கினார் கமலா. அருளுக்கு தனது அண்ணியின் மீது தீரவே தீராத வெறுப்பு உண்டாகி விட்டது.

அடுத்தடுத்து நாதனின் பெற்றோரும் இறைவனடி சேர, புகுந்த வீட்டில் கமலா வைத்ததுதான் சட்டம் என்றானது. அருளுக்கும் கமலாவுக்கும் மனக்கசப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்ல, பிறந்த வீட்டுக்கு சீராட வருவதையே இரு பெண்களும் குறைத்து விட்டனர்.

ஆனாலும் உறவுகள் அல்லவா. ஏதாவது விஷேஷங்கள் முன்னிட்டு வெளியிடங்களில் அடிக்கடி சந்திக்க நேரிடவும் ஒருவர் மற்றொருவர் வீட்டுக்கு செல்லவும் சந்தர்ப்பங்கள் இருந்து கொண்டே இருக்க துவேஷமும் அதிகரித்து கொண்டே சென்றது.

மனைவி வாக்கே மந்திரம் என வாழ்பவர் சுவாமிநாதன். பாவேந்தனுக்கு மனைவி முகம் சின்னதாக சுருங்கினாலும் தாங்காது. ஆனாலும் மச்சினர்கள் இருவருக்குள்ளும் சுமூகமான உறவுமுறை இருந்தது.

தங்கள் குடும்ப உறவு காலத்திற்கும் நீடிக்க வேண்டும் என நினைத்த பாவேந்தன், அவரது அன்னை இறந்த பிறகு அவரது ஜாகையை காஞ்சிபுரதிலிருந்து திருச்சிக்கு மாற்றிக் கொண்டார். அங்கிருந்த இரும்பு உருக்கும் ஆலையை விற்று, அதில் வந்த பணத்தை முதலீடாக கொண்டு அதே தொழிலை திருச்சியில் ஆரம்பிக்க, தொழிலும் அமோகமாக வளர்ந்தது.

ஊரை மாற்றும் முடிவு முழுக்க முழுக்க குடும்ப நலன் கருதி பாவேந்தன் எடுத்த சொந்த முடிவு. ஆனால் அதையும் தன்னிடமிருந்து தன் தம்பியை பிரிக்க அருள் செய்த சாகாசம் என நினைத்த கமலா ஒரேயடியாக நாத்தனாரை வெறுத்து விட்டார்.

தூரம் அதிகமாக பெண்கள் பார்த்துக் கொள்வது குறைய முன்னர் போல அத்தனை சண்டை சச்சரவுகள் இல்லை என்றாலும் மனத்தாங்கலும் மறையவில்லை. ஆண்கள் இருவரும் உறவுகளை தாங்கிப் பிடிக்க, எப்படியோ இத்தனை வருடங்களாக இவர்கள் உறவு நீடித்துக் கொண்டிருக்கிறது.

உதய்க்கு தனது தம்பி மகளை கட்ட ஆசை கொண்டார் கமலா. அதற்கு காரணம் வெண்பா நல்ல அழகி, அம்மா போல அல்லாமல் அவளது தந்தையை போல பொறுமை குணம் கொண்டவள் என்பது மட்டுமல்ல, ஒரே பெண் என்பதால் மொத்த சொத்தும் அவளுக்கே என்பதும்தான்.

அண்ணியின் குணமறிந்த அருள் இதற்கு சம்மதிக்கவில்லை. அத்தோடு சிறு வயதிலிருந்தே உதய்யையும் அறிந்தவர். என்ன இருந்தாலும் மகனுக்கு அன்பு அம்மாதான் கமலா. அத்தனை செல்லம் கொடுத்து வளர்த்திருக்க, அவனும் கோவத்திற்கும் அடுத்தவர்களை துச்சமாக நினைத்து நடக்கும் குணத்திற்கும் குறைவில்லாமல் இருந்தான்.

பெண் கொடுக்க மறுத்த கோவத்தில் மகனிடம் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி இன்னும் ஏற்றி விட்டிருந்தார் கமலா. அனைவரையும் அரவணைத்து செல்ல விரும்பும் பாவேந்தன் உதய்யிடம் எல்லாம் சொல்ல நினைத்து அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

பாவேந்தனை சந்திக்க செல்ல வேண்டாம் என கமலா சொல்ல சுவாமிநாதன்தான் சென்று பார்த்து வருமாறு கூறி அனுப்பி வைத்தார்.

வந்த இடத்தில் அண்ணி குணம் பற்றி அருள் கூற உதய் பதில் பேச இருவருக்குள்ளும் சண்டையாகி விட்டது. சமரசம் செய்ய முயன்ற பாவேந்தனும் மனைவி சொல்வது போலத்தான் கமலா என கூற உதய்யால் அன்னை பற்றி சொல்வதை பொறுக்க முடியவில்லை.

இந்த விஷயத்தில் அவனையும் குறை சொல்ல இயலாது. அவனது சிறு வயதில் பெரியவர்களுக்குள் நடந்தது பெரிதாக தெரியாது. விவரம் வருவதற்குள் பாவேந்தன் தனியாக வந்து விட்டார். உதய் சென்னையை சேர்ந்தவனாக இருந்தாலும் அவனது கல்லூரி படிப்பு பெங்களூருவில். அதன் பின் உடனடியாக வேலை கிடைத்து சிங்கப்பூர் சென்றவன் எப்போதாவதுதான் தாயகம் வருவான்.

தனது அன்னை கொஞ்சம் கறார் குணம் கொண்டவர், பட படவென பேசுவார் என்ற அளவில் மட்டுமே அவனுக்கு தெரியும். மற்ற படி அவனுக்கு அம்மா என்றால் மிகவும் பிடிக்கும். எந்த இடத்திலும் அம்மாவை விட்டுக் கொடுக்கவே மாட்டான்.

காரில் சென்று கொண்டிருந்த உதய்க்கு இத்தனை வாருடங்களில் எந்த பெண்ணிடமும் ஏற்படாத அதீத ஈர்ப்பு பூவையிடம் ஏற்பட்டது குறித்து விழிப்புணர்வு இல்லை, இது காதலாக இருக்க கூடும் என்ற எண்ணமும் இல்லை. அப்படியே அந்த எண்ணமேற்பட்டிருந்தாலும் வெளிப்படையாக சொல்லும் அளவுக்கு அவனது ஈகோ இடம் தருமா என்பதும் கேள்விக்குறியே!

ஆமாம் தன்னை ஒருத்தி காதலிக்கிறாள் என்பது அவனுக்கு பெருமை, தான் ஒருத்தியை காதலிக்கிறேன் என்பது அவனை பொறுத்தவரை அவனது நிலையிலிருந்து அவன் இறங்கி வருவது போலவேதான்.

இப்போது அவனது சிந்தனையெல்லாம் பூவையை மட்டும் மணந்து கொள்ளா விட்டால் தனக்கு பெருத்த அவமானம் என்பது மட்டுமே.

அதெப்படி தன் குடும்பத்தில் யாரும் நன்றாக வாழ முடியாது என சொல்லலாம், பூவையை மணந்து அவளோடு வாழ்ந்து காட்டுகிறேன் என அவனுள் ஒருவிதமான பிடிவாதம் ஏற்பட்டது.

ஆனால் பூவை சம்மதிப்பாளா என்றெல்லாம் துளி கூட அவன் சிந்திக்கவில்லை.

‘எனக்கு என்ன குறை? படிப்பு, வசதி என எதிலும் குறைவில்லை, பார்க்கவும் நன்றாக இருக்கிறேன். தான் மணக்க கேட்டால் மகிழ்வோடு மணந்து கொள்ளாமல் வேண்டாம் என்றா சொல்லப் போகிறாள்?’ என மிக எளிதாகவே அவளை நினைத்தான் ‘நான்’ எனும் அகந்தை அபரிமிதமாக கொண்ட அந்த அகம்பாவி.

Advertisement