Advertisement

நீ என் காதல் புன்னகை -2(1)

அத்தியாயம் -2(1)

சாப்பிட்டு முடிக்கும் வரை உதய்யிடம் எதுவும் பேச்சு கொடுக்கவில்லை பாவேந்தன். தான் சொல்வதை உதய் பொறுமையாக கேட்க பூவை சந்தர்ப்பம் வாங்கிக் கொடுத்திருக்க அதை உபயோகம் செய்யவும் நினைக்கவில்லை அவர். என்ன சொன்னாலும் அவனது அம்மா விஷயம் என்பதால் தன்னை அவன் நம்ப போவதில்லை எனும் போது அதற்காக முயல்வது முட்டாள்தனம்தானே.

ஆனால் மனதில் வேறு ஓடிக் கொண்டிருந்தது. பூவை பற்றி உதய் சொன்னது நிஜம்தானா அல்லது ஏதாவது விளையாடுகிறானா என்றுதான் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார். உதயோ அவனது குணத்துக்கு எதிராக தன்னை பிடிக்காத அத்தை பரிமாறிய சாப்பாட்டை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

சாப்பிட்டு முடித்தும் உடனே கிளம்பாமல் அத்தையின் முன்னிலையில் மாமாவிடம் எதுவும் பேச விரும்பாமல் அவரை தனியாக அழைத்து செல்ல எண்ணி காத்திருந்தான்.

மருமகன் எண்ணம் புரிந்தது போல பாவேந்தனே உதய்யை தனியாக அவரது அலுவலக அறைக்கு அழைத்து சென்று கதவை அடைத்து விட்டார்.

“யார் மாமா அந்த பொண்ணு?” எடுத்ததும் பூவை பற்றி கேட்டு அவள் மீது தனக்கிருக்கும் ஆர்வத்தை தெரியப்படுத்தினான்.

“சொல்றேன், அதுக்கு முதல்ல நீ நிஜமாதான் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறியா? அதை சொல்லு” என்றார்.

“ஆசையா?” அவனுக்கும் சேர்த்தே கேள்வி கேட்டுக் கொண்டான்.

“அப்பாடா! நீ நிஜமாவே அப்படி சொல்றியோன்னு நினைச்சு பயந்து போய்ட்டேன் உதய்” என்றார்.

“அது நிஜம்தான் மாமா, அந்த பொண்ணைதான் கட்டப் போறேன்” என்றான்.

“குழப்பாதடா”

“எனக்கு அவ மேல ஆசையெல்லாம் இல்லை, நீங்கதானே வயசு போகுது கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னீங்க…”

“அதுக்கு யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம், எதுக்கு இந்த பொண்ணு?”

“எனக்கு அவளை பிடிக்க ஏதாவது காரணம் இருக்குதான்னு யோசிக்கல மாமா, ஆனா என்னவோ அவளை பிடிச்சதால இப்ப உங்ககிட்ட சொல்ல காரணம் தேடிக்கிட்டு இருக்கேன்” என்ற உதய்யின் பேச்சு பாவேந்தனுக்கு புதிதாகவும் மிகவும் குழப்பமாகவும் தெரிந்தது.

பாவேந்தன் அழுத்தமாக உதய்யை பார்த்திருக்க, “இவளை மாதிரி ஒரு பொண்ணு என் கூட இருந்தா நல்லா இருக்கும்தானே?” எனக் கேட்டான்.

“எப்படி… கீழ பிடிச்சி தள்ளினாலும் ஒண்ணும் செய்யாம தட்டி விட்டு போற மாதிரியா?” சூடாகவும் கொஞ்சம் நக்கலாகவும் பாவேந்தன் கேட்க, உதய் வாய் விட்டு சிரித்தான்.

பாவேந்தன் முறைக்க, “அவளே சொன்னாளே உங்க ரிலேட்டிவ்ங்கிறதாலதான் சும்மா விட்டதா. நான் கோவக்காரன், அவசரக்காரன் அப்படின்னு நீங்களே சொல்றீங்களே… ஏன் அத்தை கூட இதையும் ஒரு காரணமா காட்டிதானே உங்க பொண்ணை எனக்கு தர முடியாதுன்னு சொன்னாங்க” எனக் கேட்டான்.

“அதுக்கு?”

“அந்த பொண்ணு புத்திசாலியா தெரியுறா, ரொம்ப நிதானம் போல. நீங்க என் அம்மா பத்தி சொல்றதை என்னால நம்ப முடியலை, ஆனா அவ கூட இருந்தா என்னை என் குடும்பத்தை எல்லாத்தையும் நல்லா பார்த்துக்குவான்னு தோணுது” என்றான்.

“இண்டர்வியூ வச்சு ஆள் எடுக்கிறவன் மாதிரி பேசாத உதய்”

“ப்ச்… நான் அப்படி நினைக்கல. ஆனா அப்படி இருந்தாலும் தப்பொன்னும் இல்ல”

“உன்னோட சுயநலத்துக்காக அந்த பொண்ணை கட்டிக்க நினைக்கிற?”

“என்ன சுயநலம்? எனக்கு என்ன குறைச்சல்? என்னை கல்யாணம் செய்தால் அந்த பொண்ணு கஷ்ட படுமா?” எகிறினான் உதய்.

“அதை நான் வாய் விட்டு சொல்லணுமா?”

“அப்புறம் ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்க? வேற பொண்ணு வந்தா மட்டும் கஷ்ட பட மாட்டாளா?”

“பூவை வளர்ந்த சூழ்நிலை எல்லாம் வேற. உன் குடும்பத்துல அவளை பிடிச்சி தள்ள எனக்கு விருப்பமில்லை” என்றார் பாவேந்தன்.

உதய் கோவமாக எழுந்து நிற்க, “முத உட்கார்” என்றார் பாவேந்தன்.

“பிடிச்சு தள்ளறதுன்னா என்ன மாமா அர்த்தம்? நான் என்ன அவ்ளோ பெரிய கொடுமைக்காரனா?” என நின்ற படியே ஆத்திரமாக கேட்டான்.

“இதோ இந்த கோவம் உனக்கு பெரிய சத்ரு உதய். நீ அனுசரிச்சு நடக்க மாட்ட அந்த பொண்ணை. அது ஏற்கனவே நிறைய பட்டிடுச்சு, இப்போதான் பேங்க்ல வேலை கிடைச்சு கொஞ்சம் முன்னேறுது. அந்த பொண்ணுக்கு அமைதியான வாழ்க்கை வேணும், அவளை விட்டிடு” என பாவேந்தன் கூற மேசையில் கிடந்த பொருட்களை எல்லாம் தரையில் வீசி எறிந்தான் உதய்.

“உன் அம்மாவே இந்த பொண்ணு உன் வாழ்க்கையில வர சம்மதிக்காது உதய். அக்காகிட்டேயும் இப்படி கோவ பட முடியுமா உன்னால?” அமர்ந்த இடத்திலிருந்தே கேள்வி கேட்டார்.

“உங்க மனைவி பேச்சை கேட்டுகிட்டு சொந்த ஊரை விட்டு ஓடி வந்த உங்களுக்கு என் அம்மா பத்தி பேச உரிமை இல்லை. அவ பேர் என்ன… ஹான் பூவை… அந்த பூவைதான் எனக்கு வைஃப். அவளுக்கு நீங்க ரொம்ப முக்கியம் இல்ல… அதனால கண்டிப்பா எங்க கல்யாணத்துக்கு வந்திடுங்க” என்றவன் அமைதியாக இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

இரு நிமிடங்கள் சத்தமில்லாமல் கடக்க, தலையை கோதி விட்டுக் கொண்டே, “என்னமோ பேசணும்னு முன்னாடி சொன்னீங்களே… பேசுங்க” என்றான்.

“இனிமே அவசியமில்லை உதய்” என்றவர், “பூவைக்கு அப்பா கிடையாது” என்றார்.

“கெஸ் இருந்தது. இப்ப ஏன் என்கிட்ட சொல்றீங்க?” எனக் கேட்டான்.

“பத்து வருஷத்துக்கு முன்ன என் பர்ஸ் போன் எல்லாம் காணாம போச்சு. கும்பகோணத்துல கோயிலுக்கு போயிருந்தப்பதான் மிஸ் பண்ணிட்டேன். அடுத்த நாளே ஒருத்தர் பத்திரமா என்கிட்டே சேர்ப்பிச்சார். அவர்தான் பூவையோட அப்பா நடேசன். அதுக்கு பதிலா பணம் கொடுத்தும் வாங்கிக்க மறுத்து கிளம்பிட்டார். இங்கேர்ந்து திரும்ப போறப்ப அவர் போன பஸ் ஆக்சிடெண்ட் ஆகி நல்ல அடி. பத்து நாள் கோமால இருந்து இறந்து போய்ட்டார்” என நிறுத்தினார் பாவேந்தன்.

“என்ன… உங்களை பார்க்க வந்ததாலதான் இறந்திட்டாரா?” உதய் அதிர்ச்சியாக கேட்டான்.

“ம்ம்… அவருக்கும் திருச்சியில ஏதோ வேலை இருந்துச்சாம், ஆனா என் பொருளை என்கிட்ட சேர்க்கதான் ரெண்டு நாள் கழிச்சு வர இருந்தவர் அன்னைக்கே வந்திருக்கார். ஹ்ம்ம்…” பெரு மூச்சு விட்டவர் மீண்டும் தொடர்ந்தார்.

“அப்படித்தான் பூவையை எனக்கு தெரியும். நடேசன் என்னை தேடி இங்க வராமல் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்காதேன்னு எனக்கு குற்ற உணர்ச்சியா போச்சு. பூவை படிக்க உதவி செஞ்சேன். அவளுக்கு ஒரு அண்ணன் பொறுப்பில்லாம ஊர் சுத்திகிட்டு இருக்கான். அம்மா அத்தனை விவரம் இல்லாதவங்க. மொத்தத்துல அந்த குடும்ப பொறுப்பு இவளுக்குத்தான்” என முடித்தார்.

“இனிமே அவளுக்கு கஷ்டம் இருக்காது விடுங்க, என்ன வேலை செய்றதா சொன்னீங்க? எதுவா இருந்தா என்ன… வேலைய விட சொல்லிடுறேன், எதுக்கு கஷ்டம் அவளுக்கு? குடும்பத்தை பார்த்துகிட்டு வீட்ல இருந்தா போதும்” என்றான் உதய்.

“உதய்!” கோவமாக உறுமினார் பாவேந்தன்.

“என்ன?” விடைத்துக் கொண்டு கேட்டான் உதய்.

“அந்த பொண்ணு வாழ்க்கையை நீ கையில் எடுக்காத. உனக்கு அந்த பொண்ணு வேணாம், நான் சொல்றதை கேளு” என்றார்.

“நீங்க சொல்ற படி கேட்கணும்னு நினைக்கிறேன்தான் மாமா. ஆனா அப்படி கேட்கிற மாதிரி எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்களே… நான் என்ன செய்யட்டும்?” நக்கலாக சிரித்தான் உதய்.

“பூவைகிட்ட உன்னை கல்யாணம் செய்துக்க கூடாதுன்னு ஒரு வார்த்தை நான் சொன்னா போதும், பூவை நான் சொல்றதைதான் கேட்பா” என்றார் பாவேந்தன்.

“ஆனா நீங்க ஏன் அப்படி சொல்லணும்? எனக்கு மனைவியா வரப் போற பொண்ணை நல்லா பார்த்துக்க மாட்டேனா? நீங்களே வேற இடம் பார்க்கிறதா எல்லாம் சொன்னீங்களே… என் மேல நம்பிக்கை இல்லாமலா?”

“உதய், நான் சொன்ன இடமெல்லாம் உனக்கு உன் குடும்பத்துக்கு ஏத்த மாதிரி. ஒரு பொண்ணுக்கு கல்யாணம்னா கணவன் கூட மட்டும் வாழப் போறதில்லை. உன் அம்மாவை நினைச்சு பாரு. செடி கொடி கூட அதுக்குன்னு ஏத்த சூழல் இல்லன்னா வளராது. நாலையும் யோசிச்சுதான் எதையும் செய்யணும். எல்லாம் தெரிஞ்சே பூவையை நான் கஷ்டத்துல தள்ள மாட்டேன். அவ நல்லா வாழணும்” என்றார் பாவேந்தன்.

தன்னை திருமணம் செய்தால் அந்த பெண்ணின் வாழ்வு கெடும் என அவனது அத்தை போலவே அவனது மாமனும் சொல்வதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. உதய்யின் அகங்காரத்தை அது தீவிரமாக தூண்டி விட்டது.

“எதிலேயும் தோத்தது இல்லை மாமா நான். பூவை விஷயத்திலேயும் அப்படித்தான்” என உறுமினான்.

“முட்டாள்! வாழ்க்கை என்ன விளையாட்டா உனக்கு? தோக்கிறது ஜெயிக்கிறது பத்தி பேசுற… நானே வேற பொண்ணு பார்க்கிறேன்னு சொல்றேன்தானே” என்றார் பாவேந்தன்.

“பூவை கூட நீங்க பார்த்த பொண்ணு மாதிரிதான். நான் கிளம்பறேன்” என அழுத்தமாக சொன்னவன் பார்வையிலும் அதே அழுத்தத்தை கொடுத்து வெளியேறினான்.

Advertisement