Advertisement

நீ என் காதல் புன்னகை -20(3)

அத்தியாயம் -20(3)

வேலைகள் முடித்து உதய் கேட்டவாறே பிரெட் அல்வாவோடு சென்றாள் பூவை.

உதய்யிடம் அல்வா இருந்த கிண்ணத்தை கோவமாக பூவை நீட்டியவள், “நீங்க கேட்ட பூகம்பம்” நக்கலாக சொன்னாள்.

அவளை தன் கை வளைவில் நிறுத்திக் கொண்டவன், “நானே தானா சாப்பிட்டுக்கவா ரூம்க்கு எடுத்திட்டு வர சொன்னேன்? நீ செஞ்சது பூகம்பமா தெரியாது, ஆனா இந்த பூங்கொடியோட கம்பம் நான்தான், என்னை நல்லா சுத்திக்கோ” என சொல்லி அவளது கையை அவனை சுற்றி படர விட்டான்.

“அவ்ளோ கிண்டல் செஞ்சிட்டு இப்போ குழையுறீங்களா? மயங்க மாட்டேன் நான்” வீம்பு செய்தாள் பூவை.

“ரெண்டு நிமிஷம் டைம் தர்றியா, மயங்குறியா இல்லையான்னு பார்க்கலாம்?” கிறக்கமாக உதய் சொல்ல அவனை பற்றி நன்கறிந்த பூவை அதற்கு பின்னான நேரம் முழுவதையும் அவனிடமே தந்து விட்டாள்.

புரிதலோடு கூடிய காதலும் காமமுமாக அன்றைய இரவு நீண்டு கொண்டே சென்றது இருவருக்கும்.

மனதிற்கு பிடித்தவரின் முகம் பார்த்து விடியும் ஒவ்வொரு காலையும் அழகானது மட்டுமில்லை, அர்த்தம் நிறைந்ததும் கூட. பூவை உதய் இருவருக்கும் அந்த விடியல் அழகாய் அர்த்தம் நிறைந்ததாக இருந்தது.

கணவனின் செல்ல சிமிஷங்களில் இருந்து ஒருவாராக தப்பித்து குளித்த பூவை சமையலறை வர, நாதன் நின்றிருந்தார். ஈஸ்வரி உதவி செய்ய அவரே சமைக்க ஆரம்பித்திருக்க, “மாமா என்ன இது? நேத்து ஏதோ ஜாலி மூட்ல சமைச்சீங்க, இன்னைக்குமா? நான் பார்த்துக்கிறேன் நீங்க போங்க மாமா” என்றாள் பூவை.

“நீயும் இங்கேயும் செஞ்சிட்டு வேலைக்கும் போகணுமே, நானும் ஹெல்ப் செய்றேன்மா, சீக்கிரம் முடியும். சாப்பிடறது எல்லோரும்தானே, சமையலும் எல்லோரும் செய்யலாம்” என சொல்லி விட மாமனாருக்கு சமையல் செய்ய பிடித்திருக்கிறது என உணர்ந்து பூவையும் வேறு மறுத்து சொல்லாமல் விட்டு விட்டாள்.

சிவாவின் அண்ணன் அண்ணி இருவரும் வந்த பிறகு அந்த வார இறுதியில் நெருங்கிய சொந்தங்கள் வைத்து திருமணத்தை உறுதி செய்து கொள்ளலாம் என சிவாவின் அம்மா அழைத்து நாதனிடமும் பூவையிடமும் சொன்னார். உதய்க்கு சிவா அழைத்து சொல்லியிருந்தான். ஞாயிறு என்பதால் அனைவருக்குமே வசதியாக இருக்கும் என நாதனும் குடும்பத்தினருடன் கலந்து பேசி சம்மதம் சொல்லி விட்டார்.

காலை உணவு முடித்து ஷியாமி மட்டும் வீட்டிலிருக்க உதய்யும் பூவையும் கிளம்ப, “ஷியாமி கல்யாணம் முடியற வரை நான் ட்ரைனிங் சென்டர் போகலடா” என சொன்ன நாதனும் வீட்டிலேயே இருந்து கொண்டார்.

“அதுக்கு அப்புறமும் நீங்க போகணும்னு இல்லை, வீட்லேயே ரெஸ்ட் எடுங்க”

“பேரப் புள்ளை வந்திட்டா நான்தானே பார்த்துக்கணும்? அதுக்கு ஏற்பாடு பண்ணு, அப்புறம் ஃபுல் டைம் நான் வீட்லதான்” என நாதன் சொல்ல, பூவை சிரிப்புடன் அகன்று விட்டாள். உதய்யிடம் கூட சன்னமான வெட்க சிரிப்பு.

உதய் காரில் ஏறப் போனவன், “ஜெயந்தனை சிவாட்ட சொல்லி சைட்கு அழைச்சிட்டு வர சொல்லிட்டேன் பூவை. முன்னாடியே சொல்லலைனு சண்டை போடாத” என சொல்லி பின்னர் காரின் இருக்கையில் அமர்ந்தான்.

ஸ்கூட்டரை விட்டு விட்டு காரின் அருகில் வந்தவள், “வேணாம் உதய்” என்றாள்.

“உன்கிட்ட நான் அபிப்ராயமே கேட்கலை. அவன் இனிமே என் பொறுப்பு, இது உனக்காக இல்லை, எனக்காக” உதய் சொல்ல நெற்றி சுருக்கி பார்த்தாள் பூவை.

“எந்த காரணத்துக்காகவும் உன் முகத்துல மலர்ச்சி குறையவே கூடாது. உன் அண்ணன் செஞ்சதை அக்செப்ட் பண்ணிக்க முடியாட்டாலும் அவன் நல்லா இல்லைனா உன் மனசு கஷ்ட படும்னு எனக்கு நல்லா தெரியும், அண்ட் உன் முகம் பிரைட்னெஸ் குறைஞ்சா எதிலேயோ தோத்துட்ட ஃபீல் எனக்கு. என்னை ஜெயிக்க வச்சிட்டே இரு” கண்கள் சிமிட்டி கூறியவன் காரெடுத்துக் கொண்டு புறப்பட பூவையின் முகத்தில் மலர்ந்தது புன்னகை.

இரண்டரை வருடங்களுக்கு பிறகு…

காலை நடை பயிற்சி முடித்துக் கொண்டு வந்த நாதன் தொலைக்காட்சி ஆன் செய்தவர் செய்திகள் சேனலை வைத்தார். உதய் கன்ஸ்ட்ரக்ஷனுக்கான விளம்பரம் ஓடிக் கொண்டிருக்க அவரது முகத்தில் பெருமை.

முதல் பிராஜக்ட் வெற்றிகரமாக முடிய உதய்க்கும் நல்ல பெயர். ஆரம்பத்தில் தன்னிடம் வேலைக்கு வைத்திருந்த சிவாவை தங்கை கணவன் என்பதற்காக மட்டுமல்லாமல் தனது இன்னுயிர் தோழன் என்பதற்காகவே பார்ட்னர் ஆக்கி விட்டான்.

உதய்யின் திருமணம்தான் எளிமையாக நடந்தது. ஆனால் அதை ஈடு செய்யும் விதமாக அவனது தங்கையின் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்தினான் உதய். தம்பதிகளாக உதய்யும் பூவையும் கன்னிகாதானம் செய்து கொடுத்தனர்.

ஷியாமி இப்போது மூன்று மாதங்கள் கர்ப்பமாக இருக்கிறாள். அவளுக்கு செய்ய வேண்டிய எதிலும் குறை வைக்காமல் சிறப்பாக செய்து விடுவாள் பூவை. ஷியாமிக்கும் ஏதாவது ஒன்றென்றால் கணவனுக்கு பின் அவளது மனம் நாடுவது அண்ணியைத்தான்.

கமலா அருளரசி இருவருக்கும் இடையிலிருந்த உறவு சிக்கல் பூவை ஷியாமளா இருவரிடமும் இருக்கவே இல்லை. உறவுமுறை தாண்டி சிறந்த தோழிகளாக இருந்தனர் இருவரும்.

பூவையின் வாழ்க்கை இப்போது சிறப்பாக இருக்க பாவேந்தனுக்கும் மிக்க மகிழ்ச்சி. அருளரசி கூட இப்போது உதய்யை பற்றி பிறரிடம் குறை கூறுவதை நிறுத்தி விட்டார். ஆனால் அத்தைக்கும் மருமகனுக்கும் எப்போதுமே முட்டிக்கொள்ளும் உரையாடல்கள்தான்.

மற்றவர்களும், “இவங்க எப்பவும் இப்படித்தான், என்னமாவது செய்து தொலையட்டும்” என நகர்ந்து விடுவார்கள். போக போக மனம் புண்படும் படியான கிண்டல் கேலியை தவிர்த்து பிறர் ரசிக்கும் விதமான கிண்டல் பேச்சுக்கள் என்ற அளவில் வந்து நிற்கிறார்கள். நல்ல முன்னேற்றம்தானே!

பிறந்த வீட்டுக்கு வருவதை நிறுத்தியிருந்த அருளரசி இப்போது எந்த விஷேஷத்தையுயும் ஒதுக்காமலும் துணையை இழந்த அண்ணனுக்கு ஆறுதலாகவும் அடிக்கடி சென்னை வந்து செல்கிறார்.

பாவேந்தன் மகள் வெண்பாவுக்கு திருமணம் முடிந்து அவளும் சீரும் சிறப்புமாக வாழ்கிறாள்.

லக்ஷ்மன் உரக்கடையில் அரசு தடை செய்த ஏதோ உர வகை விற்றதாக சில மாதங்கள் அவனது கடை மூடி சீல் வைக்க பட்டிருந்தது. போராடி ஒரு வழியாக கடையை திறந்தாலும் முன் போல நல்ல வியாபாரம் இல்லை. திருமணமும் நடைபெறாமல் தட்டிக் கொண்டே செல்ல அடுத்து என்ன செய்யலாம் என தீவிரமான சிந்தனையில் இருக்கிறான்.

புவனாவும் ஜெயந்தனும் உதய் பெயரில் இருக்கும் அதே அபார்ட்மெண்ட் வீட்டில்தான் வசிக்கிறார்கள். ஆனால் வாடகை வேண்டாம் என உறுதி பட தெரிவித்து விட்டான்.

உதய் கன்ஸ்ட்ரக்ஷனில்தான் வேலை செய்கிறான் ஜெயந்தன். இந்த பணிதான் என்றில்லாமல் உதய் சொல்லும் எல்லா வேலைகளுமே செய்வான். அதற்காக எடுபிடி வேலை என்றில்லாமல் அவனை மதிப்பாகவே நடத்தினான் உதய்.

ஜெயந்தனுக்கு கணிசமான மாத வருமானம் கிடைக்க கும்பகோணத்து வீட்டையும் இடத்தையும் விற்று விட்டு அந்த பணத்தையும் தருகிறேன், ஜெயந்தன் பெயரில் சென்னையிலேயே வீடு வேண்டும் என புவனா சொல்லியிருக்க செய்து தருவதாக உறுதி கொடுத்திருக்கிறான் உதய்.

அடுத்த வருடம் போல ஜெயந்தனுக்கு திருமணம் செய்யவும் நினைத்துக் கொண்டிருக்கிறார் புவனா. பூவை ஆரம்பத்தில் அண்ணனிடம் பேசாமலே இருக்க காலப்போக்கில் அவளாலும் மனம் திருந்தியவனை மௌனத்தால் தண்டிக்க முடியவில்லை. பேச ஆரம்பித்து விட்டாள்.

உறங்கிக் கொண்டிருந்த பூவையை கலைத்தது அவளது அலைபேசி. ஷியாமிதான் அழைத்திருந்தாள்.

“ஒரே வாந்தி அண்ணி, இதை சாப்பிடு அதை சாப்பிடுன்னு உங்க அண்ணன் டார்ச்சர் செய்றார். என்னை கொஞ்ச நேரம் விட சொல்லுங்க அண்ணி, நீங்க சொன்னாதான் கேட்பார்” கணவனை பற்றி புகார் வாசித்தாள் ஷியாமி.

“வாந்தி வந்தாலும் ஏதாவது சாப்பிடனும் ஷியாமி. போன முறை டாக்டர் எழுதி கொடுத்த மாத்திரை போட்டுட்டு ஒழுங்கா ஏதாவது சாப்பிடு, நீயும் குழந்தை மாதிரி அண்ணனை படுத்துக் கூடாது. நான் மதியம் போல மாமாகிட்ட உனக்கு பிடிச்ச முருங்கை காய் காரக் குழம்பு செஞ்சு கொடுத்து விடுறேன்” அதட்டி பின் சமாதானம் போல பேசிக் கொண்டிருக்க, பூவையின் நான்கு மாத மகள் காருண்யா விழித்துக் கொண்டாள்.

மகளின் அழு குரல் கேட்டுக் கொண்டே குளியலறையிலிருந்து வெளிவந்த உதய், வேகமாக வந்து தன் செல்ல மகளை அள்ளிக் கொண்டு, “பட்டு ஏன் அழறீங்க? கண்ணம்மாக்கு பசி வந்திடுச்சா?” என மகளை ஆப்பாட்டிக் கொண்டே மனைவியை பார்த்து முறைத்தவன், “அந்த போனை வைக்குறியா? குழந்தையை அழ விட்டுட்டு என்னடி போன்ல பேச்சு உனக்கு?” கடுப்பாக கேட்டான்.

பதிலுக்கு கணவனை முறைந்தவள் எழுந்து தனியே சென்று இன்னும் இரு நிமிடங்கள் ஆறுதலாக ஷியாமியிடம் பேசி விட்டே வந்தாள்.

மகளை வாங்க பூவை கை நீட்ட, கோவத்தோட மகளை மனைவியிடம் கொடுத்தான்.

பசியாற்றிய பின் குழந்தையை மீண்டும் உதய்யிடம் கொடுத்து விட்டு பூவை குளித்து விட்டு வர, “இனிமே எம்பொண்ணை அழ விடாத டி” என்றான் உதய்.

“உங்க கோவத்தை குறைங்கன்னா கேட்குறீங்களா? நீங்க சொல்றதை மட்டும் நான் கேட்கணுமா?”

“அடிச்சி விடாத, இங்க நீ சொல்றதைத்தான் நான் கேட்கிறேன். ஆனா ஊரு உலகத்துல ஒரு பய நம்ப மாட்டான். நான் கோவப்பட்டு பேசினா அப்படியே நீங்க அழுது வடியுற மாதிரி, வச்சு செஞ்சிட மாட்ட என்னை…”

“கோவத்தை கண்ட்ரோல் பண்ணுங்க உதய்!” என மீண்டும் பூவை அறிவுரை வழங்க உறங்கியிருந்த மகளை படுக்கையில் விட்டு அவள் கையை பிடித்து சுண்டி இழுத்தான் உதய்.

பாதி புடவை கட்டிய நிலையில் பூவை அவன் மேல் விழ, அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“காலையிலேயே என்ன இது உதய்?”

“வேணும்னுதானே என் முன்னாடி ஆஃபீசர் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணுனீங்க?”

அவன் மேல் வாகாக படுத்துக் கொண்டவள், “மனசே சரியில்லை” என்றாள்.

“என்னவாம் இப்போ?”

“அடுத்த வாரத்திலேர்ந்து லீவ் முடிஞ்சு வேலைக்கு போகணும், பாப்பா பார்க்காம வேலையே ஓடாது எனக்கு. அதைவிட டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்தாலும் வரும் இப்போ. அதை நினைச்சு நினைச்சே ஸ்ட்ரெஸ் ஆகுதுங்க” கவலையாக சொன்னாள் பூவை.

“வேலைய விடுன்னா கேட்க மாட்ட”

பூவை கண்டனமாக பார்க்க, “சரி வேலைய விடாத. அப்படியே பாப்பாவை நீதான் இருபத்தி நாலு மணி நேரமும் பார்த்துக்கிற மாதிரி கவலையும் படாத. அப்பா இருக்கார், உன் அம்மாவையும் டே டைம் இங்க வர சொல்றதா இருக்கோம். இடையில என் தங்கத்தை நான் வந்து பார்த்திட்டு போவேன். முடிஞ்சா உனக்கும் கொண்டு வந்து காட்டுறேன். அப்புறம் என்ன?”

“டிரான்ஸ்ஃபர் ஆனாலும் தமிழ்நாட்டுக்குள்ளதானே போட போறாங்க. நீ எங்க போறியா அங்க நாம ஷிஃப்ட் ஆகிடலாம். அப்பா எப்பவும் உனக்கு துணைக்கு இருப்பார், நான் இங்க கொஞ்ச நாள் அங்க கொஞ்ச நாள்னு அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறேன். என்னால முடியலைனா திரும்பவும் உன்னை இங்கேயே வரவழைச்சிடுறேன்”

அவன் நெஞ்சில் பட்டென அடித்தவள், “என்ன செஞ்சு இங்க என்னை வரவழைப்பீங்க… குறுக்கு வழில போகாதீங்கன்னா கேட்க மாட்டீங்களா நீங்க?” பொங்கி எழுந்தாள் பூவை.

“சரி போகலை” என உடனே அவளிடம் சரணடைந்த உதய் சிரிக்க, “சும்மா சொல்றீங்க, எனக்கு தெரியும் நீங்க நினைச்சதை எப்படியும் நடத்திப்பீங்க…” சலிப்பாக சொன்னாள் பூவை.

“ஏய் சும்மா எல்லாத்துக்கும் ஏதாவது சொல்லிக்கிட்டு… காலை நேரத்துல கொஞ்சமாவது உன்னை ரசிக்க விடுறியாடி நீ?” அதட்டலாக கேட்டவன் விரல் கொண்டு அவள் முகத்தில் கோலமிட சில நொடிகளில் பூவையின் முகத்தில் புன்னகை. புன்னகை பூத்த அவளது பன்னீர் இதழ்களை அழகாய் நிதானமாய் ரசனையாய் வருடினான் உதய்.

இருவரது விழிகளும் சந்தித்திருக்க அவளது காதலுக்கு கொஞ்சமும் குறையாத காதல் உதய் கண்களிலும் பெருகி வழிய மனைவியின் காதல் புன்னகையை அவன் இதழ் கொண்டு வருட ஆரம்பித்தான் உதய்.

Advertisement