Advertisement

நீ என் காதல் புன்னகை -20(2)

அத்தியாயம் -20(2)

அமைதியாக சாப்பிட்டு முடித்தவன் கை கழுவிக் கொண்டு வர, கீழுதட்டை கடித்து உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டிருந்தாள் பூவை.

அவளது பற்களிடமிருந்து உதட்டை பிரித்து விட்டவன், “உன்னை தவிர வேற யார் செய்ற தப்புக்கும் நீ பொறுப்பில்ல. அம்மாகிட்ட சண்டை போட்ருந்தாலும் தப்பில்லை. சண்டையை தவிர்க்க இங்கேர்ந்து போனதும் தப்பில்லை” என்றான்.

“அப்புறம் எதுக்கு கோவ படுறீங்களாம்?”

“அது வருதே நான் என்ன செய்வேன்? அம்மாவை விட்டுக் கொடுக்க முடியலைதான், அதுக்காக உன்னை விட்டுட்டேன்னு அர்த்தம் இல்லை. அம்மா இருந்திருந்தால் அவங்ககிட்டேயும் எப்பவும் உன்னை விட்டுக் கொடுத்திருக்க மாட்டேன்”

“அவங்க தப்பு செய்யும் போது…”

“அவங்ககிட்ட கேட்டேன் பூவை, ஜெயந்தன் விஷயம் தெரியவும் அவங்க பி பியும் ஹை ஆஹ் இருக்க ரொம்ப பேச முடியலை. நாம அன்பு வச்சிட்டா அவங்க குறைகளோட ஏத்துக்கணும் னு பாவேந்தன் மாமாகிட்ட சொன்னதானே? என் அம்மா மேல நிறைய அன்பு வச்சிருந்தேன் நான், யார் வேணும்னா என்னை தப்பா நினைக்கட்டும், அம்மாவை விட்டுக் கொடுத்தது இல்லை, இனிமேலும் மாட்டேன். உன் மேலேயும் அன்பு வச்சிருக்கேன் பூவை” உதய் சொல்லி முடிக்க,

“லேட் ஆகுது. நான் கிளம்பட்டா?” எனக் கேட்டாள் பூவை.

“வீட்லேயே இருந்தா எனக்கும் பைத்தியம் பிடிச்சிடும், நானும் கிளம்பறேன்” என உதய்யும் சொல்ல, “அங்க போய் சிவா அண்ணன்கிட்ட கோவ படாம இந்த வாரமே அம்மாவை அழைச்சிட்டு வீட்டுக்கு வர சொல்லுங்க, ஈவ்னிங் ஷியாமிகிட்டேயும் கோவப்படக் கூடாது நீங்க” என்றாள்.

“சின்ன பொண்ணுன்னு நினைச்சா… லைஃப் பார்ட்னர் சூஸ் செய்ற அளவுக்கு பெரிய மனுஷியா இருந்திருக்கா. வரட்டும் ஈவ்னிங்”

“இங்க பாருங்க முன்னாடி எப்படியோ, இப்போ அம்மா இல்லாத பொண்ணு. நீங்க ஏதாவது பேசப் போய் ஐயோ அம்மா இல்லையேன்னு அவளை நினைக்க வச்சிடாதீங்க. எப்படியும் அவங்களுக்கு கல்யாணம் செய்து வைக்க உங்களுக்கு சம்மதம்தாங்கிறப்போ எதுக்கு பிரச்சனை செய்ய நினைக்குறீங்க? நல்ல விதமா பண்ணி வைங்க” கண்டிப்போடு கூறினாள் பூவை.

“சரிடி சவுண்ட் ஜக்கம்மா! மீதி சவுண்டு ஈவ்னிங் வந்து விடு, இப்போ கிளம்பலாமா?” என உதய் நக்கல் செய்ய, “ரெண்டு பேரையும் ஏதாவது திட்டினீங்கனு தெரிஞ்சது… நைட் நமக்குள்ள கண்டிப்பா வார் நடக்கும், சொல்லிட்டேன்” எச்சரித்தாள் பூவை.

அவளை திடீரென இடை வளைத்து அவனோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், “மாசக் கணக்கா அதுக்குத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். இன்னைக்கு எது நடக்குதோ இல்லையோ கண்டிப்பா நமக்குள்ள வார் நடந்தே ஆகும்” சில்மிஷமாக உதய் சொல்ல, வெட்கமாக சிரித்தாள் பூவை.

“ஹையோ இப்படி சிரிச்சா வார் இப்பவே நடக்கும்” என உதய் சொல்ல பயந்து போன பூவை அவனிடமிருந்து விலகினாள்.

பூவை அவளது ஸ்கூட்டரில் வங்கி புறப்பட, உதய்யும் சைட் கிளம்பி விட்டான்.

ஏற்கனவே சிவா வந்திருக்க எப்படிடா பத்து மணிக்கு மேல பூவையை அனுப்பி வச்ச என உதய்யிடம் அவன் சண்டை பிடிக்க சிவாவின் சட்டையை பிடித்துக் கொண்டான் உதய்.

“டேய் விடுடா மண்டை குழம்பி போனவனே!” கத்தினான் சிவா.

“லவ் பண்ணினா சொல்ல மாட்டியாடா எரும மாடே!” உதய்யும் கோவமாக கேட்டான்.

சிவா வருந்துபவன் போல அவன் கண்களை சந்திக்க மறுக்க, “ச்சீ பரதேசி! அம்மாவை கூட்டிட்டு வீட்டுக்கு வா, அப்பாட்ட பேசிட்டேன், அவருக்கு ஓகேதான்” என்றான் உதய்.

“சாரி டா” உண்மையான வருத்தத்தோடு சிவா சொல்ல, “போடா நாதாரி, அந்த லக்ஷ்மன்…” உதய் ஏதோ திட்டப் போக அவன் வாயை மூடினான் சிவா.

“அவனை தரக் குறைவா பேசி உன் தரத்தை நீயே குறைச்சுக்காத. சொல்லு என்ன செய்ய நினைக்கிறியோ செஞ்சிடலாம்” என்றான் சிவா.

“ஜெயந்தன் ஆக்சிட்டென்ட்டும் அவன்தான் பிளான் பண்ணினானான்னு விசாரி, அப்படி மட்டும் இருந்தது லீகலாவே மூவ் பண்ணலாம்”

“அவன் ஒரு சில்லறை பய டா, அந்த அளவுக்கு போயிருக்க மாட்டான். ஆக்ஸிடென்ட் பண்ணின லாரி டிரைவர் நார்த்சைட், அவனுக்கும் இவனுக்கும் லிங்க் இருக்க வாய்ப்பியில்லை. அந்த டிரைவரே சரண்டர் ஆகி அவன் மேல தப்பில்லைன்னு வெளியிலேயும் வந்திட்டானே”

“ம்ம்… நாம செய்யாததையா சொன்னான்னு அந்த லக்ஷ்மனை எதுவும் செய்யாம விட்ருந்தேன், எவ்ளோ தைரியம் இருந்தா என் லைஃப்ல குழப்பம் செய்வான் அவன்? பெருசா ஏதாவது செய்யதான் நினைச்சிருந்தேன். திடீர்னு உனக்கொரு தங்கச்சி வந்து குதிச்சிருக்காளே அவளுக்கு மட்டும் தெரிய வந்தது என்னை ஒரு வழியாக்கிடுவா. அவன் உரக்கடை மட்டும் ஆறு மாசம் திறக்க முடியாத படி ஏதாவது செஞ்சு விட்ருவோம், போதும்” என்றான்.

“என் தங்கச்சிக்கு அவ்ளோ பயந்தவனாடா நீயி, நம்பிட்டேன் நம்பிட்டேன்!”

“என்னை பார்த்தா கிண்டலா தெரியுதுல… ஷியாமிகிட்ட நீ படப் போற பாட்டை நினைச்சி பார்த்தா இதெல்லாம் ஒண்ணுமே இல்லடா மச்சான்”

“என்னையென்ன உன்னை மாதிரி பொண்டாட்டிகிட்ட முறுக்கிக்கிறவன்னு நினைச்சியா?”

“அது சரிதான் என் கூடவே ஒரு பூம் பூம் மாடு இருந்தது இதுவரைக்கும் தெரியாம போய்டுச்சே!” என நக்கலடித்தான் உதய்.

“ரொம்ப பேசின என் கல்யாண வேலை நிறைய கிடக்கு, நீதான் பார்க்கணும்னு என் தங்கச்சிய என் வீட்டுக்கு அழைச்சிட்டு போய்டுவேன்” மிரட்டல் விடுத்தான் சிவா.

அழைப்பு வராத கைபேசி எடுத்து காதில் வைத்த உதய், “ஹலோ மாமாவா? நீங்க சொன்ன பையன் ரவி கிருஷ்ணாவை எனக்கு பிடிச்சிருக்கு மாமா, ஷியாமிகிட்ட நான் பேசுறேன்” என பேச சிவா கையெடுத்து கும்பிட்டு வாயை மூடிக் கொள்வதாகவும் செய்து காட்ட உதய் சிரிக்க சிவாவும் அந்த சிரிப்பில் இணைந்தான்.

இரவில் உதய் வீடு வரும் போதே தங்கை, மனைவி, அப்பா மூவரின் சிரிப்பு சத்தம் உதய்யின் காதையும் நெஞ்சையும் நிறைப்பதாக இருக்க அயர்வை தாண்டிய உற்சாகத்தோடு உள்ளே நுழைந்தான்.

சத்தம் சமையலறை உள்ளே கேட்க இவன் சத்தம் செய்யாமல் எட்டிப் பார்த்தான். தலையில் முண்டாசாக துண்டு ஒன்றை கட்டியிருந்த நாதன் கையில் சாரணிக் கரண்டி.

புதினா இலைகளை கிள்ளி எடுத்துக் கொண்டிருந்த ஷியாமளா, “அப்பாக்குள்ள இப்படி ஒரு நள பாகன் ஒளிஞ்சிருக்கிறது தெரியாம போச்சே அண்ணி!” பொய் வருத்தத்தோடு கூறினாள்.

“ஈஸ்வரி அக்கா லீவ் போட்டதால அதுவும் தெரிய வந்திருக்கு இன்னைக்கு” என்றாள் பூவை.

“அந்த முட்டைகோசை பூ மாதிரி நறுக்கி தாம்மா பூவை” வேலை ஏவினார் நாதன்.

“நீங்கதான் இந்த கோஸ் எப்பவும் வாங்கி வந்து வைக்கிறதா? உங்க புள்ளைக்கு பிடிக்காதே மாமா” சொல்லிக் கொண்டே கோஸ் நறுக்க ஆரம்பித்தாள் பூவை.

“அவனுக்கென்னம்மா தெரியும்? இது கோஸ் இல்லை, காலி பிளவர்னு நாம மூணு பேரும் சேர்ந்து சொல்லி அவனை நம்ப வச்சிடுவோம், அப்பவும் சாப்பிட மாட்டேன்னு சொன்னா தண்ணி ஊத்தி சோறு போடுவோம், படவா தானா சாப்பிடுவான் இந்த ஃப்ரைடு ரைசை” நாதன் சொல்ல பூவை மெலிதாக சிரித்தாள்.

“நான்தான் புதினா இலை எல்லாம் கிள்ளிட்டேன், அண்ணனுக்கு கொஞ்சமா புலாவ் செய்திடலாம்” என பொறுப்பாக ஷியாமி கூற,

“வெறும் புதினா இலை வச்சு புலாவ் செய்திடுவியாடாம்மா?” எனக் கேட்டார் நாதன்.

“அப்புறம் எப்படி நான் சமையல் கத்துக்கிறதாம்? புதினா புலாவ் ட்ரை பண்ணி பார்க்கிறேன் பா” என்றாள் ஷியாமி.

“நீ சமையல் கத்துக்க என் வீட்டுக்காரர்தான் உனக்கு கிடைச்சாரா மா?” கிண்டலாக கேட்டாள் பூவை.

“ஓய் என்ன என் தங்கச்சி சமையலை கிண்டல் செய்றியா?” எனக் கேட்டு தானும் அங்கிருப்பதை காட்டிக் கொண்டு உள்ளே வந்த உதய், “நீ செய் டாம்மா, சிவாவை நைட் டின்னருக்கு வர சொல்லிடலாம், அவன் சாப்பிட்டு நல்லா இருக்குனு சொன்னா உன் அண்ணி ஒத்துக்குவா” என தங்கையிடம் சொன்னான் உதய்.

அண்ணனை கெஞ்சல், கொஞ்சல், வருத்தம், வெட்கம் எல்லாம் மேலிட ஷியாமி பார்க்க அவள் தோளை ஆதரவாக பிடித்துக்கொண்ட பூவை, “அவர் மட்டும் அவர் இஷ்டப்படி கல்யாணம் செய்துகிட்டார், உன்கிட்ட கேட்டாரா என்ன? அவரே பார்த்திருந்தாலும் என் சிவா அண்ணன் மாதிரி நல்ல பையனை பார்க்க முடியுமா?” என நாத்தனாருக்கு ஆதரவாக பேசினாள் பூவை.

“நான் திட்டல டி, சும்மா விளையாட்டுக்குத்தான் பேசினேன், நீ புதுசா கிளப்பி விடாத” என்ற உதய் தங்கை கன்னம் பிடித்து, “பெரிய பொண்ணாகிட்டீங்க, அப்புறம் என்ன இந்த பார்வை? இந்த வாரம் அவன் அம்மாவை கூட்டிட்டு வர்றேன்னு சொல்லியிருக்கான், அந்த தடியன் உனக்கு சொல்லலையா?” எனக் கேட்டான்.

“இல்லண்ணா”

“நான் தட்டி வைக்கிறேன் அவனை”

“டேய் இனியும் மரியாதை இல்லாம இப்படி பேசாத” கரண்டியை காட்டி அதட்டினார் நாதன்.

“என்னப்பா இது?” சிரித்தான் உதய்.

“ஃப்ரைட் ரைஸ், வெஜ் நூடுல்ஸ், கோபி மஞ்ஜுரியன், அப்புறம் என் மருமகள் செய்ற ஆலூ கட்லட் அண்ட் பிரெட் ஹல்வா” உற்சாகத்தோடு மெனு சொல்லிக் கொண்டிருந்தார் நாதன்.

“என்னப்பா ஆச்சு உங்களுக்கு?”

“நேத்து நீ செஞ்ச காரியத்தால பயந்து போய்ட்டேன் டா. இதோ என் மருமக பொண்ணு வந்திடுச்சு, என் பொண்ணுக்கு கல்யாணம் கை கூடிட்டு இது கூட செஞ்சு கொண்டாடலைன்னா என்னடா அர்த்தம்?” என நாதன் கேட்க சிரிப்புடனே வேறு உடை மாற்ற அறைக்கு சென்று விட்டான் உதய்.

இரவு உணவை நால்வரும் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.

“கருப்பும் இல்லாம பிரவுனும் இல்லாம புது விதமா இருக்கே இந்த சோப்பு டப்பா!” கட்லட்டை கிண்டல் செய்தான் உதய்.

“இதுக்கே இப்படியாண்ணா… பிரெட் அல்வாங்கிற பேர்ல கம் செஞ்சு வச்சிருக்காங்க அண்ணி. ரைட்ஸ் ரிசர்வ் பண்ணி நாமளே தயாரிச்சு பூ’கம்’ னு பேர் வச்சு மார்க்கெட்ல விட்டா அடுத்த ஒரே வருஷத்துல நாமதான் மல்டி மில்லினியர்” சிரிக்காமல் கிண்டலடித்தாள் ஷியாமி.

“பூ‘கம்’ க்கு பதிலா பூகம்பம் அப்படினு வச்சா சரியா இருக்கும் ஷியாமி” உதய் விடாமல் ஓட்ட, “அண்ணா உங்க கிரைம் ரேட் கூடுது, இங்க இந்த இடத்துல நாம ஸ்டாப் பண்ணிடலாம். இல்லன்னா நைட் உங்க ரூம்ல தேர்ட் வேர்ல்ட் வார் நடக்கும்” ஷியாமி சொல்ல காலையில் அவர்களுக்குள் நடந்த உரையாடல் உதய் பூவை இருவருக்குமே நினைவு வர பூவைக்கு புரையேற உதய் கள்ளத்தனமாக மனைவியை பார்த்து சிரித்து விட்டு உடனே முகத்தை மாற்றிக் கொண்டான்.

“என்ன அண்ணி வார் கன்ஃபார்மா? அண்ணா பாவம், மன்னிச்சு விட்ருங்க” என ஷியாமி சொல்ல, “நீ சொன்னா பேச்சை மீறுவேனா ஷியாமி” பூடகமாக சொன்னாள் பூவை.

“அப்பா சாப்பிடும் போது பேசக்கூடாதுன்னு சொல்லுங்க ரெண்டு பேர்கிட்டேயும்” என்றான் உதய்.

“நீ முதல்ல பேச்சை குறைடா” என நாதன் சொல்ல அதன் பின் விரைவாக உணவை முடித்துக் கொண்டனர்.

பிரெட் அல்வா சாப்பிடாத உதய், “இப்போ வயிறு ஃபுல், நீ எடுத்திட்டு வந்து தா” என பூவையிடம் சொல்லி விட்டு அறைக்கு சென்று விட்டான்.

Advertisement