Advertisement

நீ என் காதல் புன்னகை -20(1)

அத்தியாயம் -20(1)

ஷியாமளாவுக்கு தேர்வு இருக்க அவள் கிளம்பிக் கொண்டிருந்தாள். காலையிலேயே அவளிடமிருந்து பூவைக்கு அதே டிசைனில் செய்ய வேண்டும் எனக் கூறி அவளது வளையல் பிரேஸ்லெட்டை பெற்றுக் கொண்டான் உதய். பின்னர் எப்போதாவது அப்பா தன் தங்கையிடம் கேட்டாலும் சமாளிக்க வேண்டுமே அதனை கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

சுவாமிநாதனும் பயிற்சி மையம் புறப்பட்டார். “ஈவ்னிங் பூவைகிட்ட போய் பேசுறேன் டா, நீயும் சைட்கு கிளம்பி போ” என மகனிடம் சொல்லி விட்டே சென்றார்.

ஈஸ்வரி வேலை முடித்து கிளம்புவதாக சொல்ல அவரையும் அனுப்பி வைத்தவன் சாப்பிடவும் மனமில்லாமல் வெளியில் செல்லவும் பிடிக்காமல் வீட்டுக்குள்ளேயே உலாவினான். பின் தொலைக்காட்சியை போட்டுக் கொண்டு அமர்ந்தவனுக்கு அதிலும் மனம் ஒன்றவில்லை.

கதவு திறந்தே இருக்க உள்ளே வந்த பூவை, தொலைக்காட்சியில் ஜனகராஜ் சந்தோஷமாக கூவிக் கொண்டிருந்த, “என் பொண்டாட்டி ஊருக்கு போய்டிச்சே…” என்பதை கேட்டு கோவமாக சென்று வேகமாக டிவியை அணைத்து விட்டு உதய்யை முறைத்து பார்த்தாள்.

திகைப்பும் மகிழ்வுமாக அவளையே பார்த்திருந்த உதய், “பூவை!” உற்சாகம் நிரம்பி வழிய அழைத்தான்.

“என்ன என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா கேட்டு ரசிச்சிட்டு இருக்கீங்களா?” செல்லக் கோவத்தோடு கேட்டாள் பூவை.

டிவியில் என்ன ஓடிக் கொண்டிருந்தது என அப்போதுதான் நினைவுக்கு வந்தவன் எழுந்து பூவையின் கை பிடித்து, “என் பொண்டாட்டி என்கிட்ட வந்திட்டா” என உற்சாகமாக கூற, “ஆமாம் ஆமாம்! போன்னு சொன்னவ ரோஷம் கெட்டு போய் யாரும் கூப்பிடாமலே திரும்ப வந்திட்டா” சிலிர்த்துக் கொண்டாள் பூவை.

“போதும்டி ரோஷக்காரி! அந்த ரிங்… அம்மா ரிங் மாதிரியே செஞ்சு அவங்ககிட்ட கொடுக்க இருந்தேன் பூவை, அதுக்குள்ளே அம்மா இறந்திட்டாங்க. நைட் சொன்னா நம்புவியோ மாட்டியோன்னு அப்போ சொல்லலை. ஆனா நம்பு பூவை மோதிரம் விஷயத்துல அம்மா பொய் சொல்லியிருக்க மாட்டாங்க”

“அவங்க உனக்கு கெட்டவங்களாவே இருக்கட்டும், என்கிட்ட அவங்களை பத்தி தப்பா எதுவும் சொல்லாத பூவை. எங்க உன்னை திட்டி சண்டை அதிகமாகிடுமோன்னு பயந்து போய்தான் உன்னை ரெண்டு நாள் அங்க போய் இருக்க சொன்னேன். தப்பா எதுவும் இல்லை. புரிஞ்சுக்க பூவை” தான் சொல்வதை ஏற்றுக் கொண்டு சமாதானம் ஆக வேண்டுமே என்ற தவிப்புடன் உதய் பேசினான்.

கணவனையே விழி எடுக்காமல் பார்த்த பூவை மெல்லிய புன்னகையை இதழ்களில் தேக்கி, “என் மேல அப்படி என்ன அவ்ளோ லவ்? என்ன கண்டீங்களாம் என்கிட்ட?” எனக் கேட்டாள்.

“என்ன சொல்ற பூவை?” வெகு நாட்கள் கழித்து பார்க்க கிடைத்த உயிர்ப்பான அவளது புன்னகையை ரசித்துக் கொண்டே கேட்டான் உதய்.

“அண்ணன் எல்லாம் சொல்லிட்டான், சாரி உதய்” என்றாள்.

உதய் முகம் மாற, “இதை என்கிட்ட சொல்லியிருக்கணும் நீங்க” என்றாள்.

“அவன்கிட்ட எப்பவும் சொல்லக்கூடாதுனு சொன்னேன், சொல் பேச்சு கேட்க மாட்டானா அவன்?” பல்லைக் கடித்தான் உதய்.

“சொல்லாம போயிருந்தா கொஞ்ச நேரம் முன்னாடி நீங்க சொன்ன பொய்யை அப்படியே நம்பியிருப்பேன்னு நினைச்சீங்களா?”

“நான் எது சொன்னாலும் நம்பக்கூடாதுனு இருக்கியா நீ?”

“நம்புற மாதிரி சொல்லாததை நம்ப முடியாது உதய். அத்தை இருந்த போது மறைச்சீங்க சரி, அப்புறமாவாவது சொல்லியிருக்கலாம் ல?”

“ப்ச், இப்போ உனக்கு உண்மை தெரிஞ்சிட்டு. எப்படி இருக்கு உன் மனநிலை?”

பூவை பதில் சொல்லாமல் நிற்க, “எனக்கு தெரியும், நீ பேட் ஆஹ் ஃபீல் பண்றதானே? அதான் எப்பவும் தெரிய வேணாம் நினைச்சேன். அப்பா கைல நகை மாட்டும்னு நினைக்கல. அதை மறந்தே போயிருந்தேன் நான். ஹ்ம்ம்… நகை விஷயத்தை நீயும் மறந்திடு பூவை” என சமாதானமாக சொன்னான்.

“நாம நினைச்ச உடனே எல்லாம் மறந்து போய்டுமா? அதுக்காக கோவப்பட்டு வெளில போய்தானே பிரச்சனை ஆரம்பமானது?”

“அந்த விஷயத்தால ஒண்ணும் நீ என்கிட்ட வராம போகல. விட்ரு அதை”

“ஆனாலும் எனக்கு ஒரு டவுட்” என நிறுத்தினாள்.

“என்ன… ஒருவேளை நகை ஜெயந்தன் எடுத்திருக்கலைன்னா என்ன செய்திருப்பேன் அதானே?”

பூவை ஆம் என்பது போல பார்க்க, “அம்மா பொய் சொல்லியிருக்க மாட்டாங்கனு தெரியும் பூவை. அவங்க வேற எங்கேயாவது மிஸ் பண்ணியிருக்கலாம். அம்மாகிட்ட கண்டிப்பா எடுத்து சொல்லி மன்னிப்பு கேட்க வச்சிருப்பேன் பூவை” என்றான்.

“நிஜமா?”

“கண்டிப்பா, அன்னைக்கு கூட உன் அம்மா பார்த்து பேசத்தான் அங்க போனேன், உண்மை தெரிஞ்சதும் கடுப்பாகிட்டு” என்றான்.

“லக்ஷ்மனுக்கு பணம் கொடுத்து…”

“பூவை ப்ளீஸ் இவ்ளோ கோவம் ஏன் உனக்கு அந்த விஷயத்துல. முதல்ல எப்படியும் உன்னை கல்யாணம் செய்யணும்னு பிடிவாதம்தான். பொண்ணு கேட்டு வந்தும் மறுத்திட்ட நீ. ஆனாலும் உன்னை விடுறதா எண்ணமில்லை எனக்கு. எந்த சந்தர்ப்பம் கிடைச்சாலும் சரியா யூஸ் பண்ணிக்க நினைச்சேன். ஆள் வச்சு உன் பேக் ரவுண்ட் விசாரிச்சிப்பதான் லக்ஷ்மன் பத்தி எல்லாம் தெரிய வந்தது”

“உன்னை ஏதோ ஆபத்துல விட்டுட்டு சிங்கப்பூர் போறேனேனு ஒரு பக்கம் ஒரு மாதிரி நெருடல் இருந்திட்டே இருந்துச்சு. நான் வெயிட் பண்ணியிருந்தாலும் என்னை நீ கல்யாணம் செய்திருப்ப, ஆனா என்னால அப்படி வெயிட் பண்ண முடியலை. ஆரம்பத்துல எப்படியோ… போக போக உன்னைத்தான் கல்யாணம் செய்யணும்ங்கிற என்னோட பிடிவாதம் உன்னை நல்லா பார்த்துக்கணும்ங்கிறதுக்காக மட்டுமே தவிர வேற கெட்ட எண்ணம் அதுக்கு பின்னால இல்லை பூவை. மன்னிக்கவே மாட்டியா நீ?”

“எப்போங்க மன்னிப்பு கேட்டீங்க நீங்க?” கிண்டலாக கேட்டாள் பூவை.

“இதான் உன் பிரச்சனையா? அது என்னமோ வாய் விட்டு கேட்க வரலை, ஆனா உனக்கு வேணும்னா இப்போ எத்தனை முறை வேணும்னாலும் கேட்குறேன். மன்னிச்சுடு பூவை. கேட்டுட்டேன் போதுமா? சொல்லு வேற என்ன செய்யணும்?” எனக் கேட்டான்.

“இப்போ கூட விரைப்பா கேட்குறீங்க மன்னிப்பை, உணர்ந்து கேட்கலை”

“எங்கேர்ந்துடி இதெல்லாம் கண்டுபிடிக்கிறீங்க? எங்க நீங்க ஒரு முறை சொல்லிகாட்டுங்களேன் பேங்க் ஆஃபீசர்” கை கட்டி பணிவாக நின்று கடுப்பாக கேட்டான் உதய்.

உதய்யின் வலது கையை எடுத்து தனதிரு கைகளுக்குள் அடக்கியவள் அவன் கண்களை பார்த்தாள். அவளது பார்வையே மன்னிப்பை யாசிக்க, உதய் முகம் கனிய அவளை பார்த்திருந்தான்.

“உங்ககிட்ட சரியா கேட்டு தெரிஞ்சுக்காம அந்த லக்ஷ்மன் சொன்னதை கேட்டு அண்ணா சென்டர் விட்டு வெளில வரவும் அவன் குடிக்கவும் நீங்கதான் காரணம், அதனாலதான் அவனுக்கு ஆக்சிட்டென்ட் ஆகிட்டுனு தப்பா நினைச்சு கோவப்பட்டுட்டேன். மன்னிச்சுடுங்க உதய். மன்னிப்பீங்களா?” விழிகள் கலங்க பூவை கேட்க சரிவர உதய்யால் விளங்கிக் கொள்ள முடியாவிட்டாலும் அவளது மன்னிப்பு கேட்ட விதமும் பாவமும் உள்ளுக்குள் ஏதோ செய்ய மென்மையாக அவளை அணைத்துக் கொண்டான்.

அரை நிமிடம் கடந்த பிறகு, அதற்குள்ளாக பூவை சொன்னதை ஓரளவு விளங்கிக் கொண்டவன், “லக்ஷ்மன் என்ன சொன்னான் உன்கிட்ட?” எனக் கேட்டான்.

உதய்யிடமிருந்து விடுபட்டு சோர்வாக சோபாவில் அமர்ந்தாள் பூவை. அவளை இடித்துக் கொண்டு அமர்ந்தவன், “தெளிவா சொல்லு பூவை” என்றான்.

லக்ஷ்மன் சந்தித்தது, அவன் சொன்னது, என்ன நினைத்து உதய் வீட்டிற்கு அழைத்த போது வராமல் போனாள், நேற்று சிவா கூறியது அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

உதய்யின் முகமே அவனது கோவத்தின் அளவை காட்ட, பூவை சங்கடமாக அவனை பார்த்தாள்.

“என்னை பத்தி என்ன நினைச்சுகிட்டு அவன் சொன்னதை எல்லாம் நம்பின? என்கிட்ட விசாரிக்கணும்னு தோணவே இல்லையா உனக்கு?” எனக் காட்டமாக கேட்டான் உதய்.

அவனது கையை மீண்டும் தன் கைக்கு கொண்டு வந்தவள், “அவன் ஆதாரம் எல்லாம் காட்டினான். அன்னைக்கு நீங்களும் மறுத்து சொல்லலையே… அண்ணா பாதிக்க பட்டிருக்கானு சொன்னதுக்கு அவனை திட்டினீங்க. அதான் நான் உண்மைதான்னு உறுதி செஞ்சிட்டேன்” என்றாள்.

“நீ முன்னாடியே நான்தான் செய்திட்டேன்னு நினைச்சிட்ட, இல்லன்னா ரெண்டு மாசம் கழிச்சு வந்த என்னை பார்க்க வந்திருப்பதானே?”

“ப்ச்… சரி என்மேலதான் தப்பு. நீங்க ஏன் அப்படி பேசுனீங்க?”

“என்ன அப்படி பேசினேன்? ஜெயந்தனுக்காகத்தான் கல்யாணம் உடனே வேணாம்னு சொன்ன. நான் கல்யாணம் செய்துகிட்டேன், அவனை உன்னால சரியா கவனிச்சுக்க முடியலை, அம்மா திருட்டு பழி சுமத்திட்டாங்க, இன்னும் அவனை செட்டில் பண்ணாம இருக்க. இதெல்லாம் பாதிப்புதானே? அதைத்தான் சொல்றேன்னு நினைச்சுகிட்டேன். அவன்தான் நகை எடுத்தான்னு அவன் மேல கோவத்துல இருக்க என்கிட்ட அவன்தான் முக்கியம்னு பேசினா திட்டாம என்ன செய்ய சொல்ற என்னை? என்னை குத்தம் சொல்லாம கேட்கிறதுக்கு பதில் சொல்லு, எவன் என்னை பத்தி என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்புவியா நீ?” சமாதானம் ஆகாமல் சண்டை போடுவது போலவே கேட்டான்.

“தப்புதான் உதய், இது எனக்கு ஒரு பாடம்” என பூவை கூற இன்னும் முறைத்துக் கொண்டுதான் இருந்தான் உதய்.

“லக்ஷ்மன் இப்படி செஞ்சது கூட எனக்கு அதிர்ச்சி இல்லை, ஆனா என் அண்ணன்…” பூவை கலக்கமாக கூற, “விடேண்டி அதை” அலுப்பாக சொன்னான் உதய்.

“இனிமே நான் ஜெயந்தன்கிட்ட பேசவே போறதில்லை. அப்பா எவ்ளோ நேர்மையானவர்னு தெரியுமா? எங்களுக்கும் அப்படித்தான் இருக்கணும்னு சொல்லி சொல்லி வளர்த்தார். நல்ல வேளை இந்த அசிங்கம் எல்லாம் அவர் இருந்து பார்க்கல. என் மேல தப்பு வச்சுக்கிட்டு… உங்ககிட்ட… ப்ச்… போங்க” என சொல்லி ஆற்றாமையில் அவன் தோளிலேயே சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.

பூவை அழவுமே அவன் கோவமெல்லாம் பின்னுக்கு சென்று விட்டது. “ஜெயந்தன் நிலை யோசிச்சு பாரு பூவை. அவன் அந்த நேர வீக்னெஸ்ல அப்படி செஞ்சிட்டான். அவன் எடுத்ததால இவ்ளோ பிரச்சனை ஆச்சேன்னுதான் அவன் மேல கோவம் எனக்கு, திருந்தினவனை ஒதுக்கி வைக்கிறது திரும்ப அவனை தப்பு செய்ய தூண்டும். இனிமே ஜெயந்தன் தப்பு செய்ய மாட்டான்” என சமாதானம் செய்தான்.

அவளும் அழுகையை நிறுத்தி விட, “பேங்க் ஆஃபீசருக்கு இன்னைக்கு எப்படி லீவ் கிடைச்சுதாம்?” எனக் கிண்டலாக கேட்டான்.

“லீவ் இல்லை பெர்மிசன்தான் போட்ருக்கேன்” என்றாள்.

“நேரமாகலைங்களா மேடம் உங்களுக்கு?”

“வர முன்ன பின்ன ஆகும்னு சொல்லியிருக்கேன்” என்றாள்.

“சாப்பிட்டியா?”

“ம்ம்… சாப்பிடவே பிடிக்கலைதான், அம்மா விட்டாதானே?”

“அம்மா இருந்திருந்தா என்னையும் சாப்பிட வச்சிருப்பாங்க பூவை” முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு சொன்னான்.

உதய்யை முறைத்து பார்த்தவள், “இந்த மாதிரியெல்லாம் இன்னொரு முறை பேசுனீங்க… நீங்க சாப்பிடலைன்னு எனக்கு எப்படி தெரியும்? நான் இருந்திருந்தா நான் மட்டும் பசியோட உட்கார வச்சுருப்பேனா உங்களை?” என கண்களை உருட்டிக் கொண்டு கேட்டாள்.

“இதோ உட்கார வச்சிருக்கியே”

“யோவ்! என்ன நடந்தாலும் உனக்கு இருக்கிற ஊமை குசும்பு மட்டும் குறையவே குறையாது”

“கோவக்காரன் பேர் போய் குசும்புகாரன்னு புது பேரா? எவ்ளோ அடிச்சாலும் தாங்குறேன்னு ஓவரா அடிச்சி விட்டுட்டே இருக்க கூடாது. முத சாப்பாடு போடு பூவை, நைட்டும் சாப்பிடல” என்ற உதய் கை கழுவி உணவு மேசைக்கு வர, பூவையும் என்ன இருக்கிறது என பார்த்து எடுத்து வைத்தவள், சூடாக தோசையும் ஊற்றி பரிமாறினாள்.

“நீயும் சாப்பிடு பூவை”

“பசிக்கல, நீங்க சாப்பிடுங்க”

“வச்ச கண்ணை எடுக்காம என்னையவே பார்த்திட்டு இருந்தியா அதான் கேட்டேன். வயிறு வலிக்க போகுது எனக்கு”

அவன் விளையாட்டு பேச்சில் சிரித்துக்கொண்டே அவன் பக்கத்தில் அமர்ந்தவள், “எனக்கு எல்லா உதவியும் செஞ்சிட்டு ஏன் எல்லாத்தையும் மறைச்சீங்க?” எனக் கேட்டாள்.

“நான் செய்தா ஏத்துக்க மாட்டியே”

“வீட்டை விட்டு ஹாஸ்டல் போனப்போ இது மாதிரி நமக்கு ஒரு வீடு இருக்கு, அங்க போன்னு சொல்லியிருக்கலாம்ல?”

“அப்ப அந்த வீட்ல வாடகைக்கு ஆளுங்க இருந்தாங்க. அந்த யோசனையும் உடனே வரலை. நான் பொறுமையா இரு வந்து பேசிக்கலாம்னு சொல்றேன் நீ வீட்டை விட்டு போவியா?” கோவமாக கேட்டான் உதய்.

நாற்காலியை அவனிடமிருந்து தள்ளிப் போட்டு அமர்ந்து முறைத்து பார்த்தவள், “நகை விஷயத்தை விடுங்க, ஈஸ்வரி அக்காட்ட எல்லாம் என்னை குறை பேசினாங்க. என்னையும் எதிர்த்து பேசக்கூடாது சொன்னீங்க, பொறுமையா போயிருந்திருக்கணுமா நான்?” எனக் கேட்டாள்.

“வீட்டை விட்டு போகாம வேற என்ன செய்திருந்தாலும்…”

“தப்புதாங்க, உங்க அம்மாட்ட சண்டை போட்டிருக்கணும்” என சீறியவள், “ஆனா போட்ருந்தா தப்புதானே? ஜெயந்தன் மேல தப்பு வச்சுகிட்டு… நான்…” பூவை சொல்ல முடியாமல் நிறுத்தினாள்.

பின் இருவருக்குள்ளும் பேச்சுக்கள் இல்லை.

Advertisement