Advertisement

நீ என் காதல் புன்னகை -19(2)

அத்தியாயம் -19(2)

சில நிமிடங்கள் அந்த வீட்டில் எந்த பேச்சுக்களும் இல்லை. பூவை மனதளவில் போராடிக் கொண்டிருந்தாள். லக்ஷ்மன் விஷயத்திலும் ஏதாவது தவறு நடந்திருக்குமோ என்ற யோசனை வந்தது. ஆனால் உதய் அவர் வாயாலேயே ஒத்துக் கொண்டாரே என்ற நினைவும் வர புவனா எல்லோருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தார்.

பூவை அவளது அண்ணன் பக்கம் திரும்பவே இல்லை, தன் உடன்பிறப்பின் இத்தகைய செயலை எந்த நியாயம் கற்பித்தும் அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“இப்ப உதய் மேல உனக்கிருக்கிற கோவம் போய்டுச்சா பூவை?” எனக் கேட்டான் சிவா.

“என்னை கல்யாணம் செய்துக்க வேற எதுவும் தவறு செய்திருக்கிறாரா உதய்?” எனக் கேட்டாள் பூவை.

“இல்லையே… என்னம்மா நீ திரும்ப வேற ரூட்க்கு போற?”

“லக்ஷ்மனுக்கு பணம் கொடுத்து என்ன செய்ய சொன்னார் உதய்? உங்களுக்கு தெரிஞ்சிருந்துக்கணும், உண்மை சொல்லுங்க ண்ணா”

“யார்மா உனக்கு சொன்னது?”

“அப்ப உங்களுக்கும் தெரியும் அப்படித்தானே? நீங்களும் உடந்தையா அதுக்கு?” என பூவை கேட்க புரியாமல் பார்த்திருந்தனர் மற்ற இருவரும்.

“நான் வேணாம்னு சொன்னேன் மா, அவன்தான் கேட்கலை. ‘பூவைக்கு என்னை பிடிக்கலைன்னா பரவாயில்லை, ஆனா பிடிச்சிருக்கு. என் மாமாகிட்ட அப்படித்தான் பேசினா. ஆனா குழப்பத்துல இருக்கா. குழப்பம் தெளிஞ்சா கூட கல்யாணத்துக்கு உடனே ஒத்துப்பான்னு தோணலை. என்னை விருப்ப படற பொண்ணை கல்யாணம் செய்துக்கதானே ஹெல்ப் கேட்கிறேன், ப்ளீஸ் டா’ ன்னு கெஞ்சி என்னை சம்மதிக்க வச்சான். நான்தான் லக்ஷ்மன்கிட்ட போய் பணம் கொடுத்து ஆசை காட்டி சம்மதிக்க வச்சேன்” என்றான் சிவா.

சிவா சொன்னதை கவனமாக கேட்டவள், “தெளிவா சொல்லுங்க ண்ணா. அவனை என்ன செய்ய சொன்னீங்க?” எனக் கேட்டாள்.

“ஒரு லட்சம் பணம் கொடுத்து உன்கிட்ட வந்து கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்க சொன்னேன். அதுக்கப்புறம் இன்னொரு தடவை லக்ஷ்மனை பார்த்து பணம் கொடுத்து வீட்டுக்கு போய் பொண்ணு கேட்க சொல்லி அவன்கிட்ட சொல்ல சொன்னான் உதய். நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். உதய் அவனே போன்ல பேசி செய்ய வச்சிருந்திருப்பான்னு நினைக்கிறேன் மா. ஆனா அது உன்னை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைக்க மட்டும்தான்” என்றான் சிவா.

இந்த விஷயங்கள் எல்லாம் புவனா, ஜெயந்தன் இருவருக்கும் புதிது, குழப்பமாக பார்த்திருந்தனர்.

“வேற எதுவும் லக்ஷ்மன் மூலமா அவர் செய்யலையா?” எனக் கேட்டாள்.

“எனக்கு தெரிஞ்சு இவ்ளோதான். உனக்கு என்ன சந்தேகமோ தெளிவா கேளு பூவை” என்றான் சிவா.

பூவை தயக்கமாக பார்க்க, “உங்களுக்குள்ள நிறைய குழப்பங்கள் நடந்திருக்கு. வாய் விட்டு சொல்லாம எப்படி சரி செய்ய முடியும்?” எனக் கேட்டான் சிவா.

“அது… ஜெயந்தனை டீ அடிக்ஷன் சென்டர்லேர்ந்து வெளில வரவச்சு அவனை குடிக்க தூண்டி விட்டது லக்ஷ்மன். அதனாலதான் ஆக்சிட்டென்ட் ஆகிடுச்சு, அதையும் அவர்தான் பணம் கொடுத்து செய்ய வச்சாரா?” என பூவை கேட்க, சிவா திகைத்து பார்த்தான்.

“போடி படிச்ச மேதாவி!” வசவு கொடுத்தார் புவனா.

“மாமா நல்லவர் பூவை, அதெல்லாம் செஞ்சிருக்க மாட்டார்” என்றான் ஜெயந்தன்.

“என்னம்மா நீ அந்த அளவுக்கெல்லாம் நம்ம உதய் செய்வானா? அன்னைக்கு சிங்கப்பூர் போக ஃப்ளைட் ஏத்தி விட நான்தான் அவனை ஏர்போர்ட் அழைச்சிட்டு போனேன்” என்றான் சிவா.

“இல்லை அண்ணா, ஆக்சிட்டென்ட் செய்ய பிளான் பண்ணினதா சொல்லலை. சென்டர்லேர்ந்து வெளிவர வச்சு… ஜெயந்தன் குடிக்க காரணம் அவர்தானா? லக்ஷ்மன் மூலமா செய்ய வச்சது அவரான்னு கேட்கிறேன்” என்றாள்.

“இருக்காது பூவை, ஜெயந்தன் ஆஸ்பத்திரில அடிபட்டு கிடக்கும் போது அந்த லக்ஷ்மனும் வந்திருந்தான்தானே. அப்ப என்கிட்ட வந்து மாப்ள தம்பிய காட்டி யாரு அதுன்னு என்கிட்ட வந்து கேட்டான். நான்தான் பூவையை பொண்ணு பார்க்க வந்தவங்க, பாவேந்தன் சாருக்கு தெரிஞ்சவர்னு விவரம் எல்லாம் சொன்னேன். அப்படின்னா அப்போ வரைக்கும் லக்ஷ்மனுக்கு நம்ம தம்பிய தெரியாதுன்னுதானே அர்த்தம்?” எனக் கேட்டார் புவனா.

“கார்ல ஏர்போர்ட் ட்ராப் பண்ண போனப்ப ‘ஜெயந்தன் இனிமே சென்டர் விட்டு வெளில போகக் கூடாது, திருச்சில இருந்தா சரி வராது, சென்னைக்கு மாத்தணும் அவனை. பூவைகிட்ட இது சம்பந்தமா நான் பேசுறேன், மத்ததை நீ பார்த்துக்கணும்’ னு என்கிட்ட சொன்னான். அப்படி பட்டவன் எதுக்காக ஜெயந்தனை குடிக்க வைக்கணும்? இந்த கீழ்த்தரமான வேலையை உதய் செய்யவே இல்லை. அந்த பொறம்போக்கு என்ன சொன்னாலும் அப்படியே நம்புவியா?” கோவமாக கேட்டான் சிவா.

“அவரும் கூட ஆமாம்னு ஒத்துக்கிட்டாரே அண்ணா”

“என்ன ஒத்துகிட்டான், ஜெயந்தனை குடிக்க வச்சேன்னு சொன்னானா?”

அவர்களுக்குள் நடந்த உரையாடலை கூறினாள் பூவை.

“இதுல எங்க ஜெயந்தனை குடிக்க வச்சேன்னு சொல்லியிருக்கான்? லக்ஷ்மனுக்கு பணம் கொடுத்து உன்கிட்ட பேச சொன்னது, உன் பெரியப்பாவை விட்டு லக்ஷ்மனுக்கு பொண்ணு கேட்க சொன்னது இது ரெண்டை மட்டும்தான் மீன் பண்ணியிருக்கான்” என விளக்கினான் சிவா.

“அப்போ என் அண்ணன் பாதிக்க பட்டிருக்கான்னு நான் கேட்டதுக்கு எதுவும் மறுத்து சொல்லலியே அவர்”

“நீ என்ன நினைச்சு சொன்னேன்னு அவனுக்கு என்ன தெரியும்? அவனை பிடிச்சிருந்தும் கல்யாணம் பத்தி முடிவெடுக்காம இருந்த நீ, அவன் லக்ஷ்மன் வச்சு சின்னதா ஒரு ட்ராமா பண்ணி உன்னை கல்யாணம் செய்துகிட்டான். செம மிஸ் அண்டர்ஸ்டாண்ட்டிங் உங்க உரையாடல்ல…” நக்கலாக சொன்ன சிவா “ஒழுங்கா பேசி தொலைக்காம ரெண்டு பேரும் சுத்தி உள்ளவங்க உயிரை வாங்கிட்டு இருக்கீங்க” என கடுப்பாக முடித்தான்.

“அப்படியே இருந்தாலும் லக்ஷ்மன் வச்சு நெருக்கடி கொடுத்து என்னை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சதும் கூட தவறுதானே?” எனக் கேட்டாள் பூவை.

“நீ அவனை அப்போ விரும்பினதானே… அவனை கல்யாணம் செய்ய உனக்கு சம்மதம்தான், ஆனா உடனே செய்ய இஷ்டம் இல்லை. ஒரு வேளை கல்யாணம் உடனே நடக்கலைன்னு வச்சுக்க.. எந்த உரிமைல உன் கஷ்டத்துல உன் கூட அவன் நிற்பான் பூவை? எனக் கேட்டான் சிவா.

“என்னை எப்படியாவது கல்யாணம் செய்துக்கணும்ங்கிற அவரோட பிடிவாதத்துக்காக அப்படி செய்திருக்கார், உங்க ஃப்ரெண்ட் செய்றதுல இருக்க எந்த தப்பும் உங்களுக்கு தெரியாதா ண்ணா?”

“இப்போ என்ன செய்யலாம்னு நீயே சொல்லு பூவை” கிண்டலாக சிவா கேட்க பூவை அவனை பாவமாக பார்க்க அவனோ முறைத்தான்.

“பூவை, அவரை பிடிச்சு போய்தானே கட்டிக்கிட்ட? யாருக்கும் பாதகம் இல்லாம நல்லது நடக்க செய்ற செயல் தவறு கிடையாது. உன் பார்வையில தப்பா இருந்தா மன்னிக்க முடியாத அளவுக்கு அது பெரிய தப்பும் இல்லை” என புவனா சொல்ல பூவை எதுவும் சொல்லாமல் யோசனையாக அமர்ந்திருந்தாள்.

“அந்த லக்ஷ்மன் விஷயம் மட்டும் உதய்க்கு தெரியட்டும், அப்புறம் இருக்கு அவனுக்கு. செய்ற எதையும் சொல்லி தொலைக்காம இத்துனூண்டு பிரச்சனைய இம்மாம் பெரிய களேபரமா மாத்தி விட்டுட்டான் என் கோவக்கார நண்பன். இதுல நாளைக்கு என் கழுத்தெலும்பை வேற உடைக்க போறானாம்” தன் பின் கழுத்தை தடவிக் கொண்டே அலுப்பாக சொன்னான் சிவா.

“தம்பி, மாப்ள இவ மேல கோவத்துல இருக்க போறார். நீங்க போய் சமாதானம் செய்ய கூடாதா?” என பரிதவிப்போடு கேட்டார் புவனா.

“முதல்ல என்னை நான் சமாதானம் செஞ்சுக்கிறேன் மா. கொஞ்ச நஞ்ச பாடா படுத்தினான் என்னை?” என்றான் சிவா.

“அண்ணா…” தயக்கமாக அழைத்தாள் பூவை.

“என்னா?” கோவமாக கேட்டான் சிவா.

“அங்க கொண்டு போய் விடுறீங்களா என்னை?”

“பத்து மணிக்கு மேல உன்னை தனியா இங்க விட்ருக்கான், இப்போ மணி ஒண்ணாக போகுது. அங்க போகணும்னு சொல்ற நீ, கூத்து கட்டுறீங்களா ரெண்டு பேரும்? அட கூத்து கூட கட்டுங்க, என்னை மேடையாக்கி என் மேல ஜங்கு ஜங்குன்னு குதிக்காதீங்கமா, நான் தாங்க மாட்டேன். இப்போ ஒழுங்கா போய் தூங்குமா. காலையில பார்த்துக்கலாம்” கிண்டலும் கண்டிப்புமாக சிவா கூற, “அண்ணா…” கெஞ்சலாக அழைத்தாள் பூவை.

“என் கார்ல பெட்ரோல் இல்லை” என சிவா சொல்ல பூவை கண்களால் கெஞ்சினாள்.

“கார்ல பிரேக் பிடிக்க மாட்டேங்குது” என அவன் சொல்ல இன்னும் கெஞ்சலாக பார்க்க, “எனக்கு டிரைவிங்கே மறந்து போச்சு, போம்மா. ரெண்டு பேரும் அவசரத்தை குறைங்க, நிதானமா பேசினா உங்களுக்கு நல்லதோ இல்லையோ எனக்கு ரொம்ப நல்லது… அவனை ஃப்ரெண்ட்டா வச்சுக்கிட்டு நான் பட்ட பாடும் படுற பாடும்!” அலுத்துக் கொண்டான் சிவா.

“அண்ணா…”

“சும்மா சும்மா சொல்ல வைக்காத பூவை, போ போய் தூங்கு” என சொல்லி பூவையை அறைக்கு அனுப்பி வைத்தான்.

புவனா மகனை கண்டு கொள்ளாமல் நிற்க, ஜெயந்தனை பார்த்த சிவாவுக்கு பாவமாக இருந்தது. அவன் தோள் மீது கை போட்டு “நீ செய்ததுக்கு இந்த கோவம் கூட இல்லைனா எப்படி? எல்லாம் உன் கோவக்கார மாமா வந்து சரி செய்வான். குழம்பாம, முக்கியமா கவலை படாம போய் தூங்குடா” என ஜெயந்தனையும் உறங்க அனுப்பி வைத்து புவனாவிடம் சொல்லிக் கொண்டு பின்னரே அவனது வீட்டிற்கு சென்றான் சிவா.

அழுது அழுது கண்கள் எரிய, கேள்வி பட்ட விஷயங்கள் அதிர்ச்சியையும் அயற்சியையும் கொடுத்திருக்க, தன்னிடம் பொய் சொன்ன லக்ஷ்மன் மேல கோவம் கோவமாக வர அது எல்லா உணர்வுகளையும் தாண்டி ஜெயந்தன் விபத்துக்கு உதய் காரணமில்லை என்பது இத்தனை நாளாக அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை அகற்றி ஒருவிதமான ஆசுவாசத்தை பூவைக்கு கொடுத்தது.

ஆடை மாற்றிக் கொண்ட பூவை படுக்க, உடனே உறக்கம் வராமல் ஜெயந்தனின் செயல் நெருட புரண்டுக் கொண்டே இருந்தவள் எப்படியோ உறங்கிப் போனாள்.

அங்கே ஒருவன் உறக்கத்தோடு போராடிக் கொண்டிருந்தான்.

Advertisement