Advertisement

நீ என் காதல் புன்னகை -19(1)

அத்தியாயம் -19(1)

சிங்கப்பூரிலிருந்து உதய் வந்த அன்று மதியம் ஷியாமியுடன் பேசிக் கொண்டே மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தான். மருந்து எடுத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தார் கமலா. அருகில் வேறு யாரும் இல்லாமல் போக, “அண்ணா அம்மாவோட மோதிரம் காணாம போச்சுல்ல…” என ஆரம்பித்தாள் ஷியாமளா.

“அம்மா பொய் சொல்லிட்டாங்கனு சொல்றியா? இருக்காது ஷியாமி” என்றான் உதய்.

“அது இல்லண்ணா, அம்மா பொய் சொல்வாங்களோன்னு நான் கூட நினைச்சேன். ஆனா என்னோட பிரேஸ்லெட் வளையல் கூட காணோம் அண்ணா” என ஷியாமி சொல்ல உதய் என்ன இது என்பது போல பார்த்தான்.

“அன்னைக்கு நைட்தான் எனக்கு தெரிய வந்துச்சு. அம்மாட்ட சொன்னா அதுக்கும் அண்ணியோட அம்மாவை சொல்லிடுவாங்களோன்னு நான் இன்னும் சொல்லலை அண்ணா. இப்போ சும்மா ஃபேன்சி நகை போட்டு சமாளிக்கிறேன், அம்மாக்கு தெரிஞ்சா அவ்ளோதான். நீ அதே போல வேற எனக்கு வாங்கி கொடுக்கிறியா அண்ணா?” எனக் கேட்டாள்.

“வாங்கி தர்றேன், ஆனா நம்ம வீட்லேர்ந்து எப்படி நகையெல்லாம் காணாம போகும். ஈஸ்வரி அக்கா எப்படி ஷியாமி?”

“சேச்சே… நான் சின்ன பொண்ணா இருக்கிறப்போ வேலைக்கு சேர்ந்தவங்க அண்ணா”

“சில சமயம் தேவைகள் மனுஷனை மாத்திட வாய்ப்பு இருக்கு ஷியாமி”

“அம்மாகிட்ட என்ன உதவி கேட்டாலும் ஈஸ்வரி அக்காக்குன்னா செஞ்சிடுவாங்க, எனக்கு தெரிஞ்சு அவங்களுக்கு எந்த தேவையும் இல்லை, அத்தோட எனக்கு நல்லா தெரியும் அவங்க கேரெக்டர். அவங்களா இருக்க வாய்ப்பே இல்லண்ணா” என தங்கை சொல்ல அவனுக்குமே ஈஸ்வரியை சந்தேகிக்க முடியவில்லை. ஆனால் தன் வீட்டில் திருட்டு நடந்திருக்கிறது, யாராக இருக்க கூடும் என பலமாக சிந்தித்தான்.

சாப்பிட்டு முடித்து ஷியாமி அறைக்கு சென்று விட அவனே நகைகள் வேறு எங்கேயும் இருக்கிறதா என தேடி பார்த்து இல்லை என்பதை உறுதி செய்து கொண்டான்.

பூவையின் அம்மாவுக்கு இந்நேரம் தன் அம்மா சுமத்திய பழி தெரிந்திருக்கும், அவர் வருத்தப்பட்டு கொண்டிருப்பார், பூவை மீது கோவமிருக்க அவள் வீடு வருவதற்குள் மாமியாரை சந்தித்து அம்மாவுக்காக தானே மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்து விடலாம் என கருதி பூவையின் வீட்டிற்கு புறப்பட்டான்.

பூவையின் வங்கியை கடக்கும் போது அவளை பார்க்க சொல்லி உந்திய மனதை கட்டுப் படுத்தி காரை செலுத்தினான்.

அவனுடைய வீடு என்பதால் எந்த வீடு என்றெல்லாம் குழம்பாமல் நேராக செல்ல, அந்த நேரம் புவனா வீட்டில் இருக்கவில்லை. வீட்டிற்கு தேவையான மளிகை காய்கறிகள் வாங்க அபார்ட்மென்ட் அருகிலேயே நடக்கும் தூரத்தில் இருந்த சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்றிருந்தார்.

ஜெயந்தன் மட்டுமே இருக்க திடீரென உதய்யை பார்த்தவன் மிரண்டு போக அதை பார்த்து உதய் குழப்பம் கொண்டான். உதய் சாதாரணமாக அவனது நலன் விசாரிக்க, ஜெயந்தனிடமிருந்து தடுமாற்றமாகவே எல்லா பதில்களும் வர அப்போதுதான் உதய்க்கு சந்தேகம் உதயமானது.

ஜெயந்தனின் முகமும் அவன் உடல் மொழியும் ஏதோ தவறு இருப்பதாக காட்ட, தாடையை தடவி யோசித்த உதய், “நகை விஷயம் தெரிஞ்சுதான் இங்க வந்திருக்கேன் ஜெயந்தா” என அவனை கூர்ந்து பார்த்துக் கொண்டே கூறினான்.

ஜெயந்தனிடம் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிய உதய்யின் சந்தேகம் வலுவடைந்தது.

“உண்மையை நானா சொல்றதை விட நீயே சொல்லிட்டீனா நல்லா இருக்கும் ஜெயந்தன்” என கடினமான குரலில் சொன்னான் உதய்.

“மாமா நான் ஏதோ தெரியாம…” என்றவனுக்கு அடுத்து வார்த்தைகள் வராமல் போனது.

“என்னடா தெரியாம? உன்னால இன்னும் எவ்ளோ கஷ்டம் அவமானம்தான் அனுபவிக்கனும்டா பூவை? இப்ப உயிரோட நீ நிற்குறதே அவளாலதான். உனக்காக போய் கல்யாணம் கூட தள்ளி போட்டாளே… அவ வாழ்க்கை பத்தின யோசனையே இல்லையாடா ராஸ்கல் உனக்கு?” எழுந்து நின்று ரௌத்திரம் நிறைந்து போய் உதய் கேட்க ஜெயந்தனின் சர்வமும் ஒடுங்கி விட்டது.

எங்கே தன்னை அடித்து விடுவானோ என பயந்து போன ஜெயந்தன் பின்னால் தள்ளி செல்ல, “எதுக்காக அப்படி செஞ்சேன்னு கேட்டேன் உன்னை, பதில் சொல்லுடா” என மீண்டும் அதட்டிக் கேட்டான்.

“மாமா” அழும் குரலில் தயங்கி அழைத்தான் ஜெயந்தன்.

“சொல்லப் போறியா இல்லையாடா நீ?” உதய்யின் அதட்டலில் “என்னத்த சொல்ல சொல்றீங்க மாமா? எதை சொல்லணும்? என்னை ஏன் காப்பாத்தினாங்க? யாருக்கு என்னால பிரயோஜனம்? நான் செத்திருக்கணும் மாமா” உடைந்து போய் ஜெயந்தன் அழ, கொஞ்சம் தன் கோவத்தை குறைத்துக் கொண்ட உதய் அவன் தோள் தொட்டு, “அழாம ஏன் எடுத்தேன்னு முத காரணத்தை சொல்லு” என விஷயத்தை வாங்கி விடும் முனைப்பில் அவனை பேச ஊக்கினான்.

“படுக்கையில கிடந்து எல்லா தேவைகளுக்கும் அடுத்தவங்களை சார்ந்து வாழ்றது எல்லாம் ரொம்ப கொடுமை மாமா. ஏற்கனவே என்னால பூவைக்கு ஏகப்பட்ட செலவு. லக்ஷ்மன் குத்தகை பணம் சரியா தர்றது இல்லை. என்னோட சின்ன தேவைக்கு கூட ஒத்த ரூபா காசு என் கைல இல்லை. குடிச்சிட்டு பொறுப்பில்லாம சுத்தி திரிஞ்சப்போ காசு கொடுன்னு சண்டை போட்டு வாங்க முடிஞ்ச என்னால இப்போ அப்படி கேட்கவும் முடியலை”

“அதுக்காக என்ன வேணா செய்வியா நீ?”

“அப்படி என்ன வேணா செய்ற நிலையிலா மாமா நான் இருக்கேன்? ஒரு கண்ல பார்வை போனதை விட நடக்கவே சிரம படுறேன் மாமா நான். என்னால என்ன செய்ய முடியும்? அந்த நேரம் எனக்கு எதுவும் தப்பா தெரியல, யாருக்கு தெரியப் போகுதுன்னு நினைச்சி எடுத்திட்டேன்” என்றவனை பார்க்க உதய்க்குமே பாவமாகத்தான் இருந்தது.

“என்ன செஞ்ச அந்த நகையெல்லாம்?” என சற்றே தணிந்து போனவனாக கேட்டான்.

“எடுத்திட்டேனே ஒழிய அதை விற்க எல்லாம் எனக்கு தைரியம் வரலை மாமா, அதை விட என் மனசாட்சியே என்னை குத்த ஆரம்பிச்சுட்டு. ஐயோ நானா இப்படி செய்திட்டேன்னு ஒவ்வொரு நாளும் என்னையவே கேட்டு கேட்டு நொந்து போறேன். ஏதோ அந்த நேரம்… என்னோட இயலாமை… எனக்குள்ள ஏதோ சாத்தான் புகுந்து அப்படி செய்ய வச்சிட்டு மாமா”

“அதுக்காக இப்ப வரை ரொம்ப ஃபீல் பண்றேன் மாமா.சமயம் பார்த்து இதையெல்லாம் பூவைகிட்ட சொல்லி அவகிட்டேயே திரும்ப கொடுத்திடலாம்னு நினைச்சேன்… ஆனா அதுக்கும் பயமா இருந்துச்சு. நான்தான் மாமா தப்பு பண்ணிட்டேன், பூவைக்கும் என் அம்மாக்கும் இதுல எந்த சம்பந்தமும் இல்லை மாமா” என கெஞ்சுதலாக கூறினான் ஜெயந்தன்.

“என் பொண்டாட்டி நேர்மை பத்தி எனக்கே சொல்லி தர்றியா? போ அந்த நகையை போய் எடுத்திட்டு வா” என்றான் உதய்.

அவனிடமே பத்திரமாக வைத்திருந்த நகைகளை உதய் கையில் கொடுத்து கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டான் ஜெயந்தன்.

“இந்த நகை பெரிய விஷயம் இல்லடா, இதால என் குடும்பத்துல எவ்ளோ பிரச்சனைனு தெரியுமா? இதுக்காக சண்டை போட்டுத்தான் அவ வீட்டை விட்டு வந்திட்டா, தெரியுமா உனக்கு? எப்பவுமே அறிவை யூஸ் பண்ண மாட்டியா நீ?” எரிந்து விழுந்தான் உதய்.

“பூவைகிட்ட நானே எல்லாத்தையும் சொல்லிடுறேன் மாமா”

“சொன்ன… கொன்னுடுவேன் உன்னை” என உதய் கோவமாக சொல்ல அவனது அந்த கோவத்தில் ஜெயந்தனின் உடலில் மீண்டும் நடுக்கம் படர ஓரடி பின்னெடுத்து வைத்தான் ஜெயந்தன்.

“பூவையையும் உன்னை போல எதையும் செய்ய துணிஞ்சவன்னு நினைச்சிட்டியா? நீதி நேர்மைனு வாழறவடா அவ. நீதான் செய்தேன்னு தெரிஞ்சா நேரா என் அம்மாட்ட போய் உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்பா. உடனே என் அம்மா மன்னிச்சு மருமகளேன்னு அவளை கட்டிப்பாங்களா? ஏற்கனவே பூவையை அவங்களுக்கு பிடிக்கலை, இது தெரிஞ்சா அவ்ளோதான். பூவையோட மரியாதையும் அவளோட நிம்மதியும் எனக்கு ரொம்ப முக்கியம்”

“நான் என்ன பண்ணட்டும் மாமா?” பரிதாபமாக கேட்டான் ஜெயந்தன்.

“நீ செஞ்ச வரைக்கும் போதும். எந்த காலத்துக்கும் இந்த உண்மை வெளில வரக்கூடாது. தெரிய வந்துச்சு தொலைச்சிடுவேன் உன்னை. எப்படிடா நீ போய் அவளுக்கு அண்ணனா பிறந்த?” உதய்யின் கேள்வியில் அவமானம் தாளாமல் ஜெயந்தன் தலை குனிந்து கொண்டான்.

“ஒழுங்கு மரியாதையா இந்த விஷயத்துல வாயை மூடிகிட்டு இரு. இந்த நகை நீ எடுக்கவும் இல்லை, என்கிட்ட கொடுக்கவும் இல்லை. இந்த மாதிரி ஒரு விஷயம் நடக்கவே இல்லை, புரிஞ்சுதா?” என கடுமையான குரலில் உதய் கேட்க ஜெயந்தன் தலையசைத்தான்.

“அப்புறம் என்ன செய்ய முடியும் என்னாலனு காம்ப்ளக்ஸ் வளர்த்துக்காம உருப்படியா ஏதாவது செய்ய முடியுமான்னு யோசி. உனக்காக இல்லாட்டியும் நான் கட்டியிருக்க அந்த ராங்கிக்காகவாவது உன்னை இப்படியே விட மாட்டேன். நீ என்ன கோமாலயா இருக்க? இன்னும் சுயபுத்தி இருக்குதானே, ரெண்டு கண்ணும் பாதிக்க படாம ஒரு கண் ல பார்வை இருக்கு. படுத்து கிடக்கிற நிலைல இல்லாம சிரமப்பட்டாலும் நடக்க முடியுது, எல்லாத்துக்கும் மேல நீ என்ன தப்பு பண்ணி தொலைச்சாலும் சகிச்சுக்கிட்டு உன் வாழ்க்கைய சீர் படுத்த என் பொண்டாட்டி இருக்கா. கவுண்ட் த பிளெஸ்ஸிங்ஸ் இடியட்! புரிஞ்சுதா?” என உதய் கேட்க கூம்பிப் போன முகத்தோடு ம் என்றான் ஜெயந்தன்.

உதய் வீடு தேடி வந்ததையும் தன்னிடமிருந்து நகையை பெற்றுக் கொண்டு தன்னிடம் இது பற்றி சொல்லக்கூடாது என சொன்னதையும் சொல்லி முடித்த ஜெயந்தன், “மாமா வந்த அன்னைக்குத்தான் இதாலதான் பூவை கோச்சுட்டு வந்ததே எனக்கு தெரியும், இல்லன்னா முன்னாடியே சொல்லியிருப்பேன். அப்புறம் மாமா சொல்லக்கூடாதுனு கண்டிப்பா சொன்னதால நான் பூவைகிட்ட சொல்லவே இல்லை. ஒரு சமயம் மாமா என்னை திட்டினாலும் பரவாயில்லை சொல்லிடலாம்னு நினைச்சப்ப மோதிரம் விஷயம் இல்லை, வேற ஏதோ பிரச்சனைனு பூவை சொல்லவும் மாமாவுக்கு பயந்திட்டு நான் இதை சொல்லாமலே போய்ட்டேன்” என்றான்.

அதிர்ச்சி, குற்ற உணர்ச்சி இரண்டும் தாளாமல் சோபாவில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள் பூவை.

“உன்னால என் பொண்ணு வாழ்க்கைல எவ்ளோ பிரச்சனைடா, அந்த ஆக்சிட்டென்ட்ல பொழைச்சி வந்தது என் பொண்ணு வாழ்க்கைய சீரழிக்கதானா? எவ்ளோதான்டா அவ தாங்குவா?” மகனை திட்டிக் கொண்டே இதுநாள் வரை மக்களை அடிக்க கை நீட்டியிராத புவனா ஜெயந்தனை பலம் கொண்ட மட்டும் அடிக்க, சிவா தலையிட்டு அவரை விலக்கி நிறுத்தினான்.

“விடுங்க தம்பி, இவன் அப்பா எப்படிப்பட்டவர் தெரியுமா? இப்படி ஒரு புள்ளையை பெத்ததுக்கு பெறாமலேயே இருந்திருக்கலாம் நான்” ஆதங்கமாக சொன்னார் புவனா.

“அம்மா!” அதிர்ந்தான் ஜெயந்தன்.

“இவ்ளோ எல்லாம் பேச வேணாம்மா நீங்க , உதய்யே மன்னிச்சு விட்டுட்டான், நீங்களும் விடுங்க இதை. இப்போ அவன் அம்மாவும் இல்லை. ஜெயந்தன் செய்தது தப்பா இருந்தாலும் தப்பு செய்து உணர்ந்து திருந்துறவன் எப்பவும் திரும்ப தப்பு செய்ய மாட்டான்னு நினைச்சி நிம்மதி ஆகுங்க. இப்போ போய் பூவைக்கு குடிக்க ஏதாவது எடுத்திட்டு வாங்க” என சொல்லி புவனாவை சமையலறை அனுப்பி வைத்தான் சிவா.

Advertisement