Advertisement

நீ என் காதல் புன்னகை -18(1)

அத்தியாயம் -18(1)

இரவு ஒன்பது மணி போல சென்னை வந்தடைந்தனர் உதய்யும் பூவையும். வீட்டுக்குள் கோவமாக வந்த பூவை நேராக அறைக்கு செல்ல, பார்த்திருந்த நாதன் உதய்யை முறைத்தார்.

அப்பாவை பார்த்து சிரித்தவன், “எனக்கு சுத்தமா நேரம் சரியில்லை பா. அவகிட்ட பேசி புரிய வைக்கணும். ஷியாமி இருந்தா போய் பார்க்க சொல்லுங்க. கொஞ்சமாச்சும் அவ சரியானாதான் நான் உள்ளேயே போக முடியும், இல்லன்னா எனக்கு அதிக சேதாரம் ஆகிடும்” தன் மனவருத்தத்தை மறைத்துக் கொண்டு அப்பாவிடம் விளையாட்டாக சொல்லி பெரிதாக ஒன்றுமில்லை எனும் தோற்றத்தை கொண்டு வர முயன்றான்.

“நேத்து கண் முழிச்சு படிச்சது, ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டு தூங்கிட்டா. இனி அவளா எப்ப எழுந்திருக்கிறாளோ அப்போதான்” என்றார் நாதன்.

“சரி நீங்களே போய் சாப்பிட கூப்பிடுங்க பூவையை, நாங்க இன்னும் சாப்பிடலை” என்றான்.

“அதுக்கு முன்னாடி முக்கியமான விஷயம் கேட்கணும் டா உன்கிட்ட” என முறைத்துக் கொண்டே சொன்னார் நாதன்.

“கேளுங்க” என சொல்லி அவர் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

“சிவா ஏதோ டாகுமெண்ட்ஸ் கொடுத்து விட சொல்லி ஆள் அனுப்பியிருந்தான்”

“கொடுத்தனுப்ப வேண்டியதுதானே? அதுக்கு ஏன் என்னை முறைக்கிறீங்க? நேத்தே கொடுத்திருக்கணும், மறந்திட்டேன். இது ஒரு விஷயமாப்பா?” எனக் கேட்டான்.

“டாகுமென்ட் எடுக்கும் போது ஷியாமி எப்பவும் அவ கைல போட்ருக்க மாதிரியே பிரேஸ்லெட், வளையல் அப்புறம்…” என நிறுத்தியவர் அதிர்ச்சியில் மாறிப் போயிருந்த உதய்யின் முகத்தை உற்று பார்த்துக் கொண்டே, “உங்கம்மாவோட காணா போன மோதிரம் எல்லாம் கிடைச்சது. இதுக்கு பின்னாடி என்ன நடந்ததுன்னு உண்மையை சொல்லு” என நாதன் கேட்க வாயை குவித்து மூச்சு விட்டவன் அயற்சியாக அப்பாவை பார்த்தான்.

“அம்மாவும் புள்ளையுமா என்னடா தில்லு முல்லு செய்து வச்சிருக்கீங்க?” கோவமாக கேட்டார் நாதன்.

“ஷ் அப்பா! பூவை இல்லாதப்போ பேசலாம், இப்ப அந்த நகையெல்லாம் எங்க? பூவை கண்ல படக்கூடாது அதெல்லாம். நாளைக்கு பூவை பேங்க் போனதும் நானே உங்களுக்கு சொல்றேன்” என உதய் சொல்ல,

“தாராளமா நான் இருக்கிறப்பவே சொல்லலாம் உதய்” என்ற கோவமும் நக்கலும் நிறைந்த பூவையின் குரலில் அதிர்ந்து போன இருவரும் பின்னால் பார்த்தனர்.

இன்னும் மாமனார் சாப்பிட்டிருக்க மாட்டார், தான் கோவமாக வந்தது பார்த்து வேறு கலங்கி கொண்டிருப்பார், அவரை ஏன் வேதனை படுத்த வேண்டும்? ஒன்றும் நடவாதது போல சாப்பிட்டு விட்டு பின்னர் தங்கள் சண்டையை வைத்துக்கொள்ளலாம் என்றெண்ணி வெளியில் வந்திருந்த பூவை எதேச்சையாக தந்தையும் மகனும் பேசிக் கொண்டதை கேட்டு விட்டு ருத்ர தேவதையாக நின்றிருந்தாள்.

“அப்பா சாப்பிடட்டும், நாம அப்புறம் பேசலாம் பூவை” என பேச்சை தள்ளி போட்டு சமாளிக்க முயன்றான் உதய்.

“என்கிட்ட என்ன பொய் சொல்லலாம்னு சிந்திக்க உங்களுக்கு அவகாசம் தேவை படுதா உதய்?” என நக்கலாக கேட்டாள் பூவை.

“என்ன நடந்துச்சுன்னு சொல்லி தொலையேன் டா. உன் அம்மாதான் இப்படி செய்தாளா? அவ தவறை மறைக்க முயற்சி செய்றியா நீ?” எழுந்து கொண்டு கோவமாக கேட்டார் நாதன்.

“அப்பா! என்னை கோவ படுத்தாதீங்க. நீங்களா இருந்தாலும் என் அம்மாவை தவறா சொல்றதை என்னால ஏத்துக்க முடியாது” என அவனும் எழுந்து நின்று கத்தினான்.

நாதன் அரண்டு போய் மகனை பார்த்திருக்க, நிதானித்துக் கொண்ட உதய், அவர் தோளை அணைவாக பிடித்து “சாப்பிடலாம் வாங்க” என சமாதானமாக சொல்லி, பூவையை பார்த்தும் வெகு சாதாரணமாக, “என்ன இருக்குன்னு பார்த்து எடுத்து வை பூவை, சாப்பிடலாம்” என்றான்.

நாதன் பாவமாக பூவையை பார்க்க, “இந்த பிரச்சனைக்கு முடிவு தெரியற வரை இந்த வீட்லேர்ந்து ஒரு பருக்கை கூட எடுத்து வாய்ல வைக்க மாட்டேன். உங்க அம்மா இல்லாத போது கூட அவங்கள யாரும் எதுவும் சொல்லிடக் கூடாது. அவங்க என் அம்மாக்கு என் குடும்பத்துக்கு திருட்டு பட்டம் கொடுத்தாங்க. உங்களுக்கும் இது தெரிஞ்சிருக்கு, அட்லீஸ்ட் நீங்க கூட என் அம்மாகிட்ட இது பத்தி பேசி சாரி கேட்டீங்களா?” சீற்றமாக வந்து விழுந்தன பூவையின் வார்த்தைகள்.

“இதெல்லாம் சரி பண்றதுக்குள்ள நமக்குள்ள சண்டை ஆகிட்டு பூவை. வேற பிரச்சனை தலைக்கு மேல போய்ட்டிருக்கும் போது இதை மறந்திட்டேன்” என்றான்.

“பொய் சொல்லாதீங்க உதய், உங்க அம்மாவை யாரும் தவறா நினைக்க கூடாது. ஆனா நான் என்ன அவமான பட்டாலும் உங்களுக்கு ஒண்ணுமில்லை. என் அம்மாவை பத்தி உங்கம்மா சொன்னதுக்காகதானே வீட்டை விட்டு போனேன், அதிலேர்ந்துதான் எல்லா பிரச்சனையும்” உடைந்து போன குரலில் சொன்னாள்.

“அம்மா இறந்திட்டாங்க பூவை. அவங்களை தவிர யாரும் மோதிரத்தை பத்தின பேச்சை எடுக்கலைதானே… இப்ப அவங்களே இல்லாத போது இந்த பேச்சே அனாவசியம். அவங்க இருந்திருந்தா அப்படி இல்லைனு நிரூப்பிக்கலாம், இப்ப யாருக்கு சொல்லணும் இதை? பெருசு பண்ணாம இப்ப இல்லாத அவங்கள பத்தி எதுவும் பேசாம விட்ரு” என்றான்.

“இறந்து போய்ட்டவங்க பத்தி கவலை படுற நீங்க உயிரோட இருக்கிறவங்க பத்தி யோசிக்க மாட்டீங்களா? என் அம்மாக்கு இது தெரிஞ்சதும் எப்படி கவலை பட்ருப்பாங்க? ச்சீ என்ன ஜென்மம் உங்கம்மா?”

ஆக்ரோஷமாக அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தவன் விரல் நீட்டி “இன்னொரு வார்த்தை என் அம்மா பத்தி பேசின நான் மனுஷனா இருக்க மாட்டேன்” என எச்சரிக்கை செய்தான்.

“பேசுவேன்… நல்லா பேசுவேன். உங்கம்மா மட்டும் இப்ப இருந்திருந்தாங்க என்னை வாழ விட்ருக்கவே மாட்டாங்க. நல்ல வேளை…”

“பூவை!” என்ற உதய்யின் உச்ச பட்ச கூச்சல் பூவையின் அடுத்த வார்த்தையை வெளி வர விடாமல் பயமுறுத்தி உள்ளேயே அமிழ்ந்து போக செய்து விட்டது.

“உதய் டேய் பொறுமைடாப்பா, இல்லாத உன் அம்மாக்காக பேசி உன் வாழ்க்கையை இன்னும் சிக்கல் ஆக்காதடா உதய். பூவை கேட்கிறதுல என்ன தப்பிருக்கு?” எனக் கேட்டார் நாதன்.

அப்பாவை பார்த்து முறைத்தவன், பின் பூவையை நோக்கி, “போ, உன் அம்மா வீட்டுக்கு போய் ரெண்டு நாள் இருந்திட்டு வா, அப்பா கொண்டு போய் விட்டுட்டு வருவார்” என்றான்.

பூவை இன்னும் அதிர்ச்சி அடைந்து பார்க்க, “என்ன சொல்றேன்னு நிதானத்துல இருக்கியா உதய். பூவையை இங்க வரவழைக்க எத்தனை பாடா இருந்தது? ஈஸியா திரும்பவும் போக சொல்ற?” என மகனிடம் கேட்டவர் மருமகளை பார்த்து,

“இவன் கிடக்கிறான், நீ போம்மா சாப்பிட்டு போய் தூங்கு. இவனை நான் பார்த்துக்கிறேன்” என்றார்.

பூவை அங்கேயே நின்றிருக்க, “அவ இங்க இருந்தா நான் கண்ட்ரோல் மீறி ஏதும் பேசிடுவேன் ப்பா. அவளுக்காகத்தான் ரெண்டு நாள் அங்க போய் இருக்கட்டும்னு சொல்றேன், அப்புறமா நானே போய் அழைசிக்கிறேன்” என்றான்.

ஓரளவு மீண்டிருந்த பூவை, “வா ன்னா வர்றதுக்கும் போ ன்னா போறதுக்கும் நான் நீங்க வளர்க்கிற செல்லப் பிராணி இல்லை உதய். இதுக்கு மேல என்னை நீங்க அவமான படுத்தவும் முடியாது” என சொல்லி கோவமாக வெளியில் செல்ல, “என்னையவே முறைக்காம போங்க… போய் அவளை பத்திரமா விட்டுட்டு வாங்கப்பா” என அப்பாவிடம் சொல்லி தளர்வாக சோபாவில் அமர்ந்து கொண்டான் உதய்.

இந்த நேரம் ஸ்கூட்டரில் செல்வது உசிமில்லை என நினைத்த பூவை காம்பவுண்ட் தாண்டி நடந்து செல்ல, அவளின் பின்னால் ஓடி வந்த நாதன் தான் காரில் கொண்டு வந்து விடுவதாக சொல்லியும் அவள் கேட்கவில்லை.

பூவையின் பிடிவாதத்தை பார்த்து விட்டு, அவ்ளோடே சேர்ந்து நடந்து வந்து அந்த தெரு முக்கத்தில் நிற்கும் அவருக்கு தெரிந்த ஆட்டோ பிடித்து ஏறச் சொன்னவர் அவரும் ஏற முனைய, “வேணாம் மாமா, நான் போய்க்குவேன்” அழுத்தமான குரலில் சொல்லி விட்டாள்.

அவளின் பேச்சை மீற இயலாமல் ஆட்டோக்காரனிடம் பணம் கொடுத்து மருமகள் கையிலும் பணத்தை திணித்தார் நாதன்.

“வேணாம் மாமா” அழும் குரலில் சொன்னாள் பூவை.

“ஷ் எதுவும் சொல்லக்கூடாது, அவனுக்கு அப்பான்னா உனக்கு அப்பா மாதிரி. எனக்கு அவனை என்ன சொல்றதுன்னு தெரியல மா. இத்தனை வருஷம் எதுவும் பேசாம என் பொண்டாட்டி செய்றதை வேடிக்கை பார்த்திட்டு இருந்திட்டேன், இனி என் மகனையும் வேடிக்கை பார்த்திட்டே இருக்க கூடாதுன்னு இப்ப புரிஞ்சுக்கிட்டேன். நாளைக்கு வீட்டுக்கு வந்து உன்கிட்ட பேசுறேன், இப்ப இந்த பயலை கவனிக்க வேண்டியது இருக்கு, நீ கவலை படாம போடாம்மா” என ஆறுதலாக சொல்லி பூவையை அனுப்பி வைத்தார்.

தலையை கையில் பிடித்துக்கொண்டு பார்க்க பரிதாபமாக அமர்ந்திருந்தான் உதய். கோவத்தோட வந்த நாதனுக்கு எப்போதும் நிமிர்ந்து நிற்கும் மகனை அப்படி பார்த்ததும் உருகிப் போயிற்று.

“நீயும் கஷ்டப்பட்டு அந்த பொண்ணையும் போட்டு பாடா படுத்துறடா. எனக்கு சொல்லு, அம்மா ஏதும் தப்பு செய்தாளா?” எனக் கேட்டார்.

தளர்வாக அவரை பார்த்தவன், “அம்மா மேல தப்பில்லை. அந்த ரிங் காணமா போனது உண்மைதான். நான்தான் அதே போல ஒரு ரிங் செஞ்சு வாங்கி வச்சிருந்தேன். அம்மாட்ட கொடுக்கிறதுக்குள்ள அவங்க போய்ட்டாங்க” என்றான்.

“இதை பூவைகிட்ட சொல்றதுக்கென்ன?”

“ப்பா சும்மா கேள்வி கேட்டுட்டே இருக்காதீங்க. நான் சொன்னாலும் நம்பவா போறா? அப்ப அம்மாவை அவ பேசினதுல நானும் கோவமா இருந்தேன். சண்டையாகியிடும்னுதான் அங்க போய் தங்க சொன்னேன். உடனே வீட்டை விட்டு வெளில அனுப்பிட்டேன்னு என் மேலேயே தப்பாகி போச்சு. நான் ஓட்டல்ல ஸ்டே பண்றதுக்கு அவ அங்க போய் இருக்கிறது பெட்டர்னுதான் அப்படி சொன்னேன்” என்றான்.

“போடா முட்டாள்! நீயே வெளில தங்கியிருக்கலாம். என்ன இருந்தாலும் பூவையை அங்க போக சொன்னது தப்புதான்” என நாதன் சொல்ல, உதய் கவலையாக அவரை பார்த்தான்.

“இப்ப இப்படி பார்த்து என்ன செய்ய? அப்புறம் அந்த பிரேஸ்லெட், வளையல் எல்லாம்…”

“அது… ஹான் பூவைக்கு பர்த்டே வரப் போகுது, அதுக்காக கிஃப்ட் செய்ய…”

“பொய் சொல்லாதடா, எல்லாம் ஏற்கனவே யூஸ் செய்த மாதிரி இருக்கு”

“என்னை சொல்ல விடுங்கப்பா, ஷியாமி போட்ருந்த டிசைன் போலவே ஆர்டர் கொடுக்க அவகிட்ட கேட்டு வாங்கியிருந்தேன். போதுமா?” என்றான்.

“நிஜமாவே உனக்கு நேரம்தான் சரியில்லை. பூவை தப்பா புரிஞ்சுக்கிட்டு டா உன்னை. நாளைக்கு நான் போய் பேசுறேன். இதெல்லாம் நானே விளக்கமா சொல்றேன். ஆனாலும் இந்த நேரம் போக சொல்லியிருக்க கூடாதுடா” என நாதன் மீண்டும் சொல்ல அப்போதுதான் நேரத்தை பார்த்தான், பத்தை தாண்டியிருந்தது.

இங்கே இருந்தால் பேச்சு வளரும், ஆத்திர மிகுதியில் தான் ஏதாவது சொல்லி அவளை இன்னும் துன்ப படுத்தி விடுவோமோ என்ற பயத்தில்தான் அவளை போக சொன்னான். குழப்பமான மன நிலையில் எல்லாவற்றையும் தெளிவாக சிந்திக்கும் திறனை மூளை இழந்து விடும், அப்படித்தான் அவனது எண்ணம் புரியாமல், தன்னை இந்த நேரம் போக சொன்னதையே பூவை தவறாக எடுத்துக் கொள்வாள் என்பதை அவன் உணர்ந்திருக்கவில்லை.

Advertisement