Advertisement

நீ என் காதல் புன்னகை -17(3)

அத்தியாயம் -17(3)

அனைவரும் கிளம்பிய பின்னர் என்ன என மனைவியிடம் உதய் விசாரிக்க, “பையனை உங்களுக்கு பிடிச்சா போதுமா? ஷியாமி விருப்பம் என்னன்னு கேட்டுட்டுத்தான் இவங்கள வர சொல்லணும்? இப்படியா அவசர படுவீங்க?” என்றாள்.

“நல்ல இடமாதான் மாமா பார்த்திருப்பார். நான் ஓகே ஒண்ணும் சொல்லலையே, ஷியாமிக்கு பிடிச்சாதான் மேற்கொண்டு எல்லாம்” என்றான்.

“அவளுக்கு இப்படி பார்க்க வர்றதே பிடிக்கலைன்னா?”

“ஏன் பிடிக்காது. அப்பா சீக்கிரம் கல்யாணம் செய்ய நினைக்கிறார். இவங்க ரொம்ப பாரம்பரியமான குடும்பம், ரவி பார்க்க நல்லா இருக்காரே… ஷியாமிக்கு கண்டிப்பா பிடிக்கும்” என்றான்.

பூவை ஏதோ சொல்லப் போக பாவேந்தன் உதய்யை அழைக்க அவன் அங்கிருந்து சென்று விட்டான். அடுத்த நாள் பூவைக்கு வங்கி செல்ல வேண்டுமென்பதால் சிறிது நேரத்தில் திருச்சியிலிருந்து கிளம்பியும் விட்டார்கள்.

காரில் சென்று கொண்டிருக்கும் போது ஷியாமியின் காதலை எப்படி இவனிடம் சொல்வது என யோசித்துக் கொண்டிருந்தாள் பூவை. சிவாவாக சொல்லாமல் தான் சொன்னால் தவறாகி விடுமோ என்ற நினைவு வேறு உறுத்தியது.

உதய் அவளது சிந்தனையான முகத்தை பார்த்து விட்டு, “என்ன டீப் திங்கிங் பூவை? ஷியாமிக்கு ரவி பெஸ்ட் சாய்ஸ். நீதான் அவகிட்ட எடுத்து சொல்லணும் பூவை” என்றான்.

“ஷியாமி வேற யாரையாவது விரும்பினா என்ன செய்வீங்க உதய்?” எனக் கேட்டாள் பூவை.

“ஷியாமி லவ் பண்ணுவாளா? அவ சின்ன பொண்ணு பூவை, அப்படியெல்லாம் இருக்காது. வேணும்னா இப்ப கல்யாணம் வேணாம்னு சொல்லலாம், அது நீதான் பேசி அவளை சம்மதிக்க வைக்கணும்” என்றான்.

“சிவா அண்ணன் ஷியாமிக்கு பொருத்தம் இல்லையா?” எனக் கேட்டாள்.

“என்ன உளர்ற?”

“ஏன் சிவா அண்ணா பத்தி உங்களுக்கு தெரியாதா? நம்ம ஷியாமியை நல்லா பார்த்துப்பார்”

“எட்டு வயசு பெரியவன் அவன், அவன்கிட்ட கேட்டுடாத சிரிக்க போறான்”

“ரெண்டு பேரும் விரும்புறாங்க உதய்” என்றாள்.

“நீயா ஏதாவது தவறா நினைக்காத பூவை”

“முன்னாடியே எனக்கு தெரியும், ரெண்டு பேருமே என்கிட்ட ஒத்துக்கிட்டாங்க. ஷியாமி படிப்பு முடிஞ்சதும் உங்ககிட்ட சொல்லலாம்னு காத்திருக்காங்க உதய்” என்றாள்.

காரை நிறுத்தியவன் அவளை கோவமாக பார்த்து, “உனக்கு எப்ப தெரியும்?” எனக் கேட்டான்.

பூவை சொல்ல, “அப்பவே என்கிட்ட ஏன் சொல்லை நீ?” அழுத்தமான குரலில் கேட்டான்.

“அண்ணா அவரே சொல்லிக்கிறேன்னு சொன்னார்”

“நான் சிவா பத்தி அவன் என்ன சொன்னான்னு கேட்கல. நீ ஏன் சொல்லலை என்கிட்ட? என் தங்கச்சி பத்தின அக்கறை உனக்கு அவ்ளோதானா? சிவா நல்லவனா இருக்கிறதால ஓகே, இல்லன்னா…”

“நான் அவரை பத்தி விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டுதான் அமைதியா இருந்தேன்”

“யார்கிட்ட விசாரிச்ச?”

“ஷியாமிகிட்ட” சொன்ன பூவையின் குரல் உள்ளே சென்றது.

உதய் கோவமாக பார்த்திருக்க, “என்ன உதய் இப்போ? அண்ணா நல்லவர்னு இப்போ ஷியாமிகிட்ட கூட நான் கேட்க வேணாம், நானே சொல்வேன். அவரா சொல்ற முன்னாடி நான் சொல்லக்கூடாதுன்னு உங்ககிட்ட சொல்லலை” என்றாள்.

“ஆனா இந்த விஷயம் தெரிஞ்சப்போ சிவா பத்தி உனக்கு எதுவும் பெருசா தெரியாதுதானே, அப்ப என்கிட்ட சொல்லியிருக்கணுமா இல்லையா? அந்த நேரம் என் மேல பெருசா கோவம் கூட கிடையாது உனக்கு? ஏன் சொல்லலை?”

“இப்படியெல்லாம் குடைஞ்சு குடைஞ்சு குத்தம் கண்டுபிடிப்பீங்கன்னு எனக்கு தெரியாம போச்சு, இல்லனா அப்பவே சொல்லி தொலைச்சிருப்பேன்” என்றாள்.

உதய் முகம் இறுக அமர்ந்திருக்க, “உங்க தங்கச்சி விஷயம்னா இப்படி கோவம் வர்ற உங்களுக்கு என் அண்ணா விஷயத்துல எனக்கு மட்டும் கோவம் வரக்கூடாதுன்னு நினைக்கிறது எதுல சேர்த்திங்க?” எனக் கேட்டாள்.

“ம்ம்… என் தங்கச்சியும் உன் அண்ணனும் ஒண்ணு கிடையாது. ஆமாம், அவன் விஷயத்துல என்ன பண்ணிட்டேன் நான்…” உதய் பேசிக் கொண்டிருக்க,

“இந்த ஒண்ணு கிடையாதுங்கிறதுக்கு என்ன அர்த்தம் உதய்? நாங்க எளிமையான குடும்பம், நீங்க வசதியான ஆளுங்க அதானே?” கண்களில் நீர் மிளிர கேட்டாள் பூவை.

“நீயா எதையாவது யோசிச்சிக்காத” என்றான்.

“அப்ப உங்க வாயாலேயே சொல்லுங்க, நான் தெரிஞ்சுக்கிறேன்” விடமாட்டேன் என்பது போல கேட்டாள்.

“என் தங்கச்சி கள்ளம் கபடமில்லாதவ, உன் அண்ணன் சாக்கடை” கோவத்தில் கத்தியவன் என்ன சொன்னோம் என உணர்ந்து, “ஏய் விடு. சிவாகிட்ட பேசி ஷியாமி கல்யாணத்தை முடிக்கலாம்” என்றான்.

கோவத்தில் மூச்சு வாங்க அமர்ந்திருந்தவள் கார் கதவை திறந்து கொண்டு வெளியேறி நடந்தாள்.

உதய் தன்னையே நொந்து கொண்டு அவனும் இறங்கி அவள் பின்னால் ஓடினான். வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தவளின் கையை பிடித்து நிறுத்தியவன், “எங்க போற பூவை? கார்ல ஏறு” என்றான்.

அவன் கையை உதறியவள் “சாக்கடையோட தங்கச்சி மட்டும் என்னங்க பாலாறா? என் அப்பா இல்லன்னு வருத்தம் இருந்தாலும் அதிலேர்ந்து எப்பவோ மீண்டு வந்திட்டேன். இப்போ இத்தனை வருஷம் கழிச்சு அவரில்லாம போய்ட்டார்னு என்னை யோசிக்க வைக்குறீங்க? கொஞ்சமா இருக்கிற என் தன்மானத்தை காப்பாத்திக்க விடுங்க என்னை” என அழுகையை அடக்கிக் கொண்டு சொன்னாள்.

“பூவை நான் உன்னை போய் அப்படியெல்லாம் நினைப்பேனாடி? வீட்டுக்கு போய் பேசலாம். வா”

“எத்தனையோ நாள் யார் துணையும் இல்லாம தனியா பயணம் செஞ்சு எனக்கு அனுபவம்தான். நிறைய பஸ் இருக்கு, நீங்க போங்க”

“தனியா போன அப்பெல்லாம் நீ பூவை மட்டும்தான், இப்ப என்னோட மனைவி. நடு ரோட்ல டிராமா பண்ணாம கார்ல ஏறு” என்றான்.

“முடியாதுன்னா என்ன செய்வீங்க?”

“என்ன செய்யணும்? கால்ல விழுந்து கும்பிடணுமா?” சீறினான் உதய்.

“சாக்கடையோட காலை நீங்க தொட வேண்டாம் உதய்!”

“சொல்ல வந்ததை தப்பா புரிஞ்சுகிட்ட பூவை. ப்ளீஸ் சென்னை போய்டலாம், அப்புறம் உன் இஷ்டம். இப்ப கிளம்பு. நான்தானே உன்னை இங்க அழைச்சிட்டு வந்தேன்? அப்போ பத்திரமா சென்னைல சேர்க்க வேண்டியதும் என்னோட பொறுப்புதான். என்னை ஒரு டிரைவரா நினைச்சு கார்ல ஏறு” என கெஞ்சினான்.

அது ஒரு ஆள் அரவமற்ற சாலை என்பதால் சோர்ந்து போயிருந்த பூவையும் நடந்து சென்று காரின் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள். உதய் காரெடுக்க இருவருக்கும் இடையில் பலத்த மௌனம்.

Advertisement