Advertisement

நீ என் காதல் புன்னகை -17(2)

அத்தியாயம் -17(2)

“எவ்ளோ பெரிய பழி என் மேல சுமத்துற! ஏன், எப்படி அந்த விவாதம் எல்லாம் வேணாம் பூவை. பாஸ்ட் பக்கம் போகவே வேணாம். சொல்லு, என்னால போன உன் நிம்மதியை எப்படி எந்த வகையில நான் திருப்பி தர முடியும்? என்ன செய்யவும் ரெடியா இருக்கேன்” என்றான்.

“உங்களை நேசிச்சு உங்க அநியாயம் தெரிஞ்ச பிறகும் அதிலேர்ந்து பின் வாங்க முடியாம சுயநலவாதியா நான் எப்பவோ மாறிட்டேன் உதய். என் நிம்மதி எனக்கு வேணும்னா உங்க கூட நான் சேர்ந்து வாழக் கூடாது. அதுதான் தீர்வு, உங்களால முடியுமா?” என பூவை கேட்க அவளை ஆழ்ந்து பார்த்தான் உதய்.

“ஈஸியா சொல்லிட்டேன், உங்களை நிரந்தரமா பிரிய என்னாலேயே முடியாது உதய். நம்ம கொள்கைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் சம்பந்தம் இல்லைனு நானே அனுபவிச்சு தெரிஞ்சுகிட்டேன். ரெண்டுக்கும் போட்டி வச்சா நம்ம ஃபீலிங்ஸ் எப்படியாவது முன்னாடி ஓடிப் போய் ஜெயிச்சிடுது. சிலதுக்கு காரணமே கிடையாது. அப்படித்தான் உங்க மேலான என்னோட விருப்பமும். இப்ப உங்க கூட ஜஸ்ட் இருக்கேன், இதுவே நெருடலா இருக்கு. உங்களோட நான் சந்தோஷமா வாழ ஆரம்பிச்சா அது இன்னும் என் நிம்மதியை குலைக்கும்” என்றாள்.

“உனக்கு புரிய வைக்க எனக்குதான் தெரியல பூவை. எனக்கு சின்னதா தெரியற தவறு உனக்கு இப்படி இவ்ளோ பெருசா தெரியும்னு நான் யோசிக்கவே இல்லை. தெரிஞ்சிருந்தா நான் வெயிட் பண்ணியிருப்பேன்” என்றான்.

“அப்படி என்ன காதல் உதய் என் மேல உங்களுக்கு? நீங்களும் பொய் சொல்லாம உண்மையே சொல்லலாம்”

“காதல்… அந்த வார்த்தையை பத்தி நான் யோசிச்சது கூட இல்லை. இந்த வீட்ல அன்னைக்கு உன்னை பார்த்தப்போ உன்னோட ப்ரசென்ஸ் ஆஃப் மைண்ட், நேர்மை, புத்திசாலித்தனம் எல்லாம் பிடிச்சுது. அதை விட உன்னோட ஸ்மைல்… ரொம்பவே ஈரத்திருக்கும்னு நினைக்கிறேன். திடீர்னு உன்னை கல்யாணம் பண்ணிக்க தோணிச்சு, அத்தையும் மாமாவும் முடியாதுன்னு பேசினதுல உன்னைத்தான் கட்டிக்கணும்னு பிடிவாதம். உன்னை பார்க்க வந்தா அலட்சியம் செஞ்ச, உன்னையே கல்யாணம் பண்ணி தீரணுங்கிற எண்ணம் இன்னும் இன்னும் ஸ்டராங் ஆச்சு”

“நான் முட்டாள்தான் பூவை. உன் மேல எனக்கிருக்கிற உணர்வை அப்ப என்னால புரிஞ்சுக்க தெரியல. உன்னை கல்யாணம் செய்றதை ஒரு ப்ராஜக்ட் மாதிரி எல்லாம் நினைச்சிருக்கேன்” தன்னையே கேலி செய்வது போல சிரித்துக் கொண்டான்.

“பொண்ணு கேட்டு வந்தப்போ ஜெயந்தனால அவமானப் பட்டு கண் கலங்க நீ நின்ன பாரு… உன்னை அப்படி பார்க்கவே முடியல. சொன்னா நம்ப மாட்ட, எனக்கும் அழுகை வந்திடுமோன்னு பயந்திட்டேன்” என சொல்லி அன்றைய நினைவில் இப்போது இதமாக சிரித்தான்.

“லவ் பண்ணுனீங்களா என்னை?” அவனை உற்று பார்த்து கேட்டாள் பூவை.

“லவ்னா என்னன்னு எனக்கு தெரியாது. அதனால பதில் தெரியல. ஒரு வேளை ஒருத்தி கலங்கறது பார்க்க முடியாம அவளை எல்லாமுமா தாங்கிக்கணும்னு நினைக்கிறதுதான் லவ்னா எனக்கு உன் மேல இருந்ததும் லவ் ஆஹ் இருந்திருக்கலாம், என்னாலதான் புரிஞ்சுக்க முடியாம போய்டுச்சு போல” என்றான்.

“ம்… அதனால காதலிலும் போரிலும் எல்லாமே நியாயம்தான் அப்படிங்கிற பழமொழி நினைவு வந்திடுச்சு இல்லை?” நக்கலாக கேட்டாள் பூவை.

“ம்ஹூம், பூவை கலங்காம எப்பவும் புன்னகையோட இருக்கணும். அவளை எதுவும் எப்பவும் பாதிக்க கூடாது, யாரும் அவளை கஷ்ட படுத்தக் கூடாது. அதுக்காக என்ன செஞ்சாலும் நியாயம்தான்…” உதய் சொல்லி முடிக்கும் முன் பூவை குறுக்கிட்டாள்.

“ஆமாம் யாரும் என்னை கஷ்டபடுத்தக் கூடாது, அந்த உரிமையெல்லாம் மொத்தமா உங்களுக்கு மட்டும்தான்” கோவமாக சொன்னவள்,

“இங்க இந்த நேரம் இந்த டாபிக் நாம பேசியிருக்கவே கூடாது உதய், போதும் நிறுத்திக்கலாம். இது எங்க போய் முடியும்னு உங்களுக்கு எதுவும் ஐடியா இருக்கா? ஆனா இந்த பேச்சை வளர விட்டா ரொம்ப தப்பா எதுவும் நடந்திடும்னு என் உள்ளுணர்வு சொல்லுது. இது நம்ம வீடு இல்லை, அதனால பேசாம படுத்து தூங்குங்க. ஊருக்கு போய் விட்ட இடத்திலேர்ந்து தொடங்கலாம்” என்றாள்.

“ம்ம்… ஒரு டவுட் பூவை, நான் உன்னை லவ் பண்ணியிருக்கேனா?”

“அது எனக்கு வர வேண்டிய டவுட், புத்திசாலித்தனமா என்னையவே கேட்காதீங்க” என்றாள்.

“முன்னாடி தெரியல பூவை. இப்ப உன் மேல உண்மையான அன்பு இருக்கு. நம்புறியா நீ?”

“நான் தூங்கிட்டேன் உதய்” என்றவள் அதற்கடுத்து எதுவும் பேசவில்லை.

உதய்க்கும் சோர்வாக இருக்க படுத்து விட்டான். ஆனால் உறக்கம் கொள்ளாமல் பூவையை பார்த்த தினத்திலிருந்து நடந்ததை எல்லாம் வெகு நேரம் அசை போட்டவன் அவர்களுக்கு இடையேயான இனிய நினைவுகளோடே உறங்கிப் போனான்.

அடுத்த நாள் அதி காலையிலேயே எழுந்து குளித்து தயாராகினர். தாழம்பூ நிற பட்டு புடவையில் பூவை அவளது கணவனின் கண்களையும் கருத்தையும் நிறைத்தாள்.

“பூவை ஒரு செல்ஃபி எடுக்கலாமா?” எனக் கேட்டான் உதய்.

அவனது கெஞ்சலான பார்வையை பார்த்தவள் ஒப்புக் கொண்டு அருகில் வந்து நின்றாள். அவளது தோளை சுற்றி கை போட்டுக் கொண்டவன் புகைப்படம் எடுத்தான். பூவை விலக நினைக்க ஒரு கையால் அவளை பற்றி நிறுத்தினான்.

“என்ன உதய்?”

“ரொம்ப ஆசையா இருக்கு, கணக்கில்லாம முத்தம் வச்ச இடத்துல ஒண்ணே ஒண்ணு மட்டும் கொடுக்க பெர்மிசன் கொடு பூவை” என்றான்.

“இப்படி பச்ச புள்ளை மாதிரி நடிச்சு உங்க காரியத்தை நிறைவேத்திக்க பார்க்குறீங்களா? நைட் ஒரு இடத்துல விட்டோமே நினைவிருக்கா… அது முழுசா முடியற வரைக்கும் எதுக்கும் நான் அனுமதி தர மாட்டேன்” என்றாள்.

“சரி அந்த பேச்சு வார்த்தை முடிஞ்சதும் பெர்மிட் பண்ணுவேதானே. அப்ப கொடுக்க போறதிலேர்ந்து இந்த ஒண்ணை கழிச்சுக்கோ. பேங்க் ஆஃபீஸருக்கு கணக்குதான் நல்லா வருமே” என்றவன் அவளது முகத்தை இரு கைகளாலும் தாங்கி நெற்றி வகிட்டில் முத்தமிட்டு தன் முகத்தை விலக்கி அவளை மிக நெருக்கமாக பார்த்திருந்தான்.

அத்தனை அருகாமையில் பூவையும் தன்னை மறந்து அவனை பார்த்திருக்க, “நைட் முழுக்க யோசிச்சேன், கல்யாணத்துக்கு முன்னாடியே உன் மேல லவ்தான். கல்யாணத்துக்கு அப்புறம் லவ் அப்படிங்கிறது தாண்டி நீதான் எல்லாம்னு பரிபூரணமா உணர்ந்தேன். என்னை பிடிச்சு வச்சிருந்த ஈகோவை உடைச்சு தள்ளிட்டு ஆமாம் லவ்தான்னு ஒத்துக்க இத்தனை காலம் ஆகிடுச்சு. லவ் யூ பூவை” என சொல்லி இன்னொரு முறை உச்சியில் இதழ் பதித்து பின் விட்டான்.

உதய்யின் பேச்சும் அவனது செயலும் தந்த தாக்கத்திலிருந்து உடனடியாக பூவையால் மீள முடியவில்லை. அவனிடம் சாய துடித்த மனதிற்கும் பின்னாலிருந்து இழுக்கும் அறிவுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு விழித்தாள்.

அவள் கன்னம் தட்டிய உதய், “போலாம் வா” என சொல்லி அழைத்து சென்றான்.

வீட்டிலேயே நெருங்கிய உறவுகள் மட்டும் வைத்து நிச்சயம் நடந்தது. அத்தையோடு சரிவர பேசாமல் தவிர்த்தான் உதய். அருளரசி அவனை அவனது தவிர்ப்பை எல்லாம் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் பூவையோடு நன்றாக பேசினார். தன் அண்ணன் மருமகள் என மாப்பிள்ளை வீட்டினரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

தாய்மாமாவாக நாதன் சபையில் இல்லா விட்டாலும் உதய் அவரது இடத்திலிருந்து சிறப்பாகவே எல்லாம் செய்தான்.

மதிய விருந்து நடக்க உதய் மேற்பார்வை செய்து மாப்பிள்ளை வீட்டினரை நன்றாக கவனித்துக் கொண்டான்.

மாப்பிள்ளை வீட்டினர் பக்கமிருந்து யாரோ கிளம்ப தயாராக பாவேந்தன் உதய்யை அழைத்தார். பூவையும் அருகில் நிற்க அவளையும் அழைத்துக் கொண்டு சென்றான் உதய்.

“இவர் நம்ம மாப்பிள்ளை பையனோட மாமா உதய். கே வி கல்வி குழுமம் தெரியும்தானே? அது இவங்களோடதுதான். இவர் பெரிய பையன் ரவிகிருஷ்ணாதான் அதையெல்லாம் பார்த்துக்கிறார். நம்ம ஷியாமி பத்தி சொன்னேன், இவங்களுக்கு பிடிச்சிருக்கு” என பாவேந்தன் சொல்ல உதய் அவரோடு சிரித்து பேச, பூவைக்கு உள்ளுக்குள் கலவரமானது.

அவர்களை பேச விட்டு தள்ளி சென்ற பாவேந்தன் அந்த கூட்டத்தில் நின்றிருந்த ரவிகிருஷ்ணாவையும் அழைத்து வந்து உதய்க்கு அறிமுகம் செய்தார்.

உதய் முகத்திலேயே அவனை பிடித்து விட்டதற்கான அறிகுறி வேறு தெரிய அவர்கள் முன்னிலையில் ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்தாள் பூவை. மனதிற்குள் மட்டும் எந்த உறுதியும் கொடுத்து விடக்கூடாதே இவர் என நினைத்தவள் இப்போது வரை அவர்கள் காதலை சொல்லாமல் விட்ட சிவாவை அர்ச்சிக்கவும் தவறவில்லை.

“நீங்க வீட்டுக்கு வாங்க, ஷியாமியை பாருங்க” என உதய் சொல்ல பூவை யாருமறியாமல் அவன் முழங்கையை சுரண்டினாள்.

இயல்பாக பார்ப்பது போல பூவையை பார்த்து என்ன என கண்களால் உதய் கேட்க, வேண்டாம் என கண்களாலேயே சொல்லி யாரும் தன் சைகையை பார்த்து விட்டார்களா என விழிகளை சுழற்றினாள் பூவை.

ரவியின் தந்தை பூவையிடமும் பேச அவளும் அவரது பேச்சோடு ஒன்றாமல் ஏதோ போல பேச கவனித்தே இருந்தான் உதய். இடையிடையில் உதய் முகத்தை முகத்தை வேறு அவள் பார்க்க, அவனுக்கு ஒன்றும் புரியாமல் அவளை பார்க்க, “மாமாகிட்ட கேட்க வேணாமாங்க, அவங்ககிட்ட கேட்டுட்டு சொல்லலாம்” என சிரித்துக் கொண்டே சொன்னாள்.

என்ன சொல்ல வருகிறாள் என புரியாமல் உதய் பூவையை கூர்ந்து பார்க்க, பாவேந்தனும் நெற்றி சுருக்கி பார்த்தார். நொடி நேரம் கணவனை முறைத்து விட்டு பின் இயல்பானாள் பூவை.

“ஆமாம், அப்பாகிட்ட கேட்டுட்டு சொல்றேன்” என முடித்துக் கொண்டான் உதய்.

“அதானல என்னங்க… பெரியவங்ககிட்ட கேட்கலைன்னா அவங்களுக்கும் கோவம் வருமே. என் பையன் கூட என்னை கலந்துக்காம எதுவும் முடிவெடுக்க மாட்டான். அப்பாகிட்ட கலந்துகிட்டு சொல்லுங்க, நாங்க ஆவலா காத்திட்டிருக்கோம்” என்றார் ரவியின் அப்பா.

‘ஹப்பா!’ என மனதிற்குள் நிம்மதி பெரு மூச்சு விட்டாள் பூவை.

Advertisement