Advertisement

நீ என் காதல் புன்னகை -17(1)

அத்தியாயம் -17(1)

தன்னை மன்னிக்க கற்றுக் கொள்ள சொன்ன உதய்யை கூர்ந்து பார்த்தாள் பூவை. கண்களால் என்னவெனக் கேட்டான் உதய்.

“சில சமயங்கள்ல தப்பு செய்றவங்களுக்கு மன்னிப்புதான் பெரிய தண்டனை உதய். அப்படி தண்டனையா கூட உங்களை மன்னிக்க முடியலை. ப்ளீஸ் இது பத்தி கொஞ்ச நாளைக்கு நாம பேசாமலே இருக்கலாம்” என்றாள்.

சற்று முன் கொஞ்சமாக மலர்ந்திருந்த உதய் முகம் சுணக்கமடைய அவன் பிடித்திருந்த அவளது கையை விட்டு, “போ நான் பின்னால வர்றேன்” என்றான்.

பூவை நடந்து செல்ல அவளுக்கு இரண்டடி இடைவெளி விட்டு பின்னால் சென்றான் உதய். காரில் வீட்டுக்கு செல்ல வழியிலும் வாயை திறக்கவில்லை இருவரும். மனம் விட்டு பேசினால் சரியாகும் என மருத்துவர் சொல்லியிருந்தாலும் அப்படி உதய்யிடம் எதுவும் பேசவே பூவைக்கு பயமாக இருந்தது.

தாயின் இழப்பினால் மனதளவில் அதிகம் பாதிக்க பட்டிருக்கிறான் என இப்போது அவன் மீது பச்சாதாபம் இருக்க, இந்த சமயம் ஏதாவது பேசப் போய் அவனது ஆணவமான பேச்சில் கோவம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் நிலை கூட வரலாம். இம்முறை வெளியேறினால் யார் சொன்னாலும் தன்னால் திரும்ப வரவே இயலாது, மாமவையும் ஷியாமியையும் இனியும் துன்ப படுத்த கூடாது என்றெல்லாம் யோசித்தவள் அவனிடம் தற்போது அதிகமாக எதுவும் பேசி விடக்கூடாது என முடிவெடுத்துக் கொண்டாள்.

ஷியாமிக்கு தேர்வுகள் நடந்து கொண்டிருக்க முடிந்த அளவு எந்த சண்டையும் வீட்டில் நடக்காமல் இருக்க வேண்டும் என நினைத்து உதய்யிடம் எதற்காகவும் வாயாடாமல் தன்னை அமைதியாகவே வைத்துக்கொண்டாள். ஆனால் அவ்வப்போது சொந்த அண்ணனுக்கு அநியாயம் செய்தவனிடம் நியாயம் பெறாமல் தானும் அதனை சாதாரணம் போல ஏற்றுக்கொண்டேனோ என மனசாட்சி கேள்வி எழுப்பியது. என் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள சுயநலமாக இருக்கிறேனோ என்ற எண்ணம் தலை தூக்க மன உளைச்சலுக்கு ஆளானாள்.

பகல் பொழுதுகள் கணவன் மனைவி இருவருக்கும் வேலையில் கழிந்து விட இரவில் ஒரே அறைதான் என்ற போதும் பேச்சுகள் வெகுவாக குறைந்தே இருந்தது. தான் ஏதாவது பேசி மீண்டும் அறையை விட்டு சென்று விடுவாளோ என பயந்து போன உதய்யும் அவளிடம் சமாதானம் பேசக்கூட முயற்சிக்கவில்லை. தற்போதைக்கு தன்னவள் தன் கண் முன்னால் இருக்கிறாளே, அதுவே போதுமென கருதினான்.

ஜெயந்தன் நடை முன்பை விட தேறியிருந்தது. இன்னும் மூன்று மாத காலத்தில் தொண்ணூறு சதவீதம் நடை நன்றாகி விடுமென மருத்துவர் கூறியிருந்தார். இன்னும் அண்ணனை வீட்டில் வெறுமனே உட்கார வைக்க கூடாது என நினைத்த பூவை என்ன செய்யலாம் என சிவாவிடம் யோசனை கேட்டாள்.

“உடனே அவனுக்கு என்ன செய்ய வரும்னு எப்படி கண்டுபிடிக்க முடியும் மா? நான் யோசிக்கிறேன்” என்றவன் அடுத்த நாளே பூவையிடம் ஏதோ சொல்ல வந்து சொல்லாமல் தயங்கி நின்றான்.

“என்ன ண்ணா?”

“நீ ஏத்துப்பியோ மாட்டியோன்னு யோசனை மா”

“யோசிச்சிட்டே இருந்தா நான் என்ன சொல்வேன்னு எப்படி தெரியும் உங்களுக்கு? சொல்லுங்க ண்ணா”

“உன் அண்ணனுக்கு முதல்ல வெளி உலக அறிவு வேணும் இல்லையா பூவை? கொஞ்ச நாள் சும்மா சைட்க்கு வந்திட்டு போக சொல்லலாமான்னு யோசனை மா” என்றான்.

“இது உங்க ஐடியாவா? உங்க ஃப்ரெண்ட் ஐடியாவா?”

“சேச்ச, அவன்கிட்ட இன்னும் நான் சொல்லவே இல்லை. நேத்து நீ கேட்ட, நைட் யோசிச்சு இப்ப வந்து சொல்றேன்” என்றான்.

நம்பாத பார்வை பார்த்தவள், “உதய் சைட்க்கு அண்ணா வர மாட்டான். இந்த விஷயத்துல உதய் ஃப்ரெண்ட் ஆஹ் இல்லாம எங்களுக்கு அண்ணனா யோசிங்க” என்றாள்.

“இப்ப அந்த வீட்லதானே இருக்க? இன்னும் அவன் மேல என்ன கோவம்? அப்படியே கோவமிருந்தாலும் ஜெயந்தனுக்கு ஏன் உதய் மூலமா எந்த உதவியும் கிடைக்க கூடாதுன்னு நினைக்கிற?”

“அண்ணனுக்கு நான் இருக்கேன், என்னால செய்ய முடியும்கிறப்போ அவர்கிட்ட எதுக்கு போய் நிற்கனும்? நான் உங்ககிட்ட யோசனை மட்டும்தான் கேட்டேன், முடிஞ்சா சொல்லுங்க, இல்லன்னா அதுவும் நானே பார்த்துக்கிறேன்” என்றாள்.

“அவனோட சேர்ந்து சேர்ந்து உனக்கும் பொசுக் பொசுக் னு கோவம் வருது பூவை. எதுக்கும் ஷியாமியை உங்க ரெண்டு பேர்கிட்டேயிருந்தும் தள்ளி இருக்க சொல்லணும்”

“இதுவரைக்கும் உதய்கிட்ட சொல்லவே இல்லை நீங்க. ஒரே அடியா தள்ளி போய்ட போறா ஷியாமி. முதல்ல சொல்லுங்க அண்ணா”

“ஷியாமி எக்ஸாம்ஸ் முடிஞ்ச கையோட பொண்ணு கேட்டு வர்றேன் பூவை”

“இந்த முறை நீங்க வந்து சொல்லலை… நானே உங்களை பத்தி போட்டு கொடுத்திடுவேன், அவர் சாமியாடுறதை தாங்கிக்க ரெடி ஆகிகோங்க” என மிரட்டி விட்டு கிளம்பினாள் பூவை.

பாவேந்தன் மகள் வெண்பாவுக்கு திடீரென ஒரு நல்ல வரன் அமைந்து நிச்சயம் நடக்க இருந்தது. அதற்காக கைபேசியில் அழைத்தவர் நாதன், உதய், ஷியாமியிடம் பேசி விட்டு பூவையிடமும் பேசினார்.

“திடீர்னு முடிவாகிடுச்சு மா. நிச்சயம் உடனே வைக்கனும்னு சொல்றாங்க. கல்யாணம் ரெண்டு மாசம் கழிச்சுதான். வர்ற ஞாயித்து கிழமை விஷேஷம், அதனால லீவ் இல்லைன்னு எல்லாம் சொல்லாம உதய்யோட வந்திடு பூவை” என்றார்.

பூவையும் மறுக்க முடியாமல் சரி என்றாள். ஆனாலும் உதய்யுடன் ஒரு நெடுந்தூர பயணத்தை விரும்பவில்லை. ஷியாமிக்கு இன்னும் இரண்டு தேர்வுகள் இருக்க அவள் வர இயலாது என சொன்னாள்.

“நீங்க வெண்பாவுக்கு தாய்மாமா, கண்டிப்பா போயாகனும். நான் ஷியாமி கூட இருக்கிறேன்” என சொல்லி தட்டி கழிக்க பார்த்தாள் பூவை.

“நான் பாவேந்தன்கிட்ட சொல்லிக்கிறேன் மா, வர்றவங்க எல்லாம் என்னை பாவமா பார்ப்பாங்க, எனக்கு என்னவோ போல இருக்கும். ஷியாமி கூட நானே இருக்கேன். கல்யாணத்துக்கு எல்லோருமா போகலாம். இப்ப நிச்சயத்துக்கு நீயும் உதய்யும் போயிட்டு வாங்க” என பூவை மறுக்க முடியாதவாறு சொல்லி விட்டார் நாதன்.

அந்த வாரம் சனிக்கிழமை முன் மாலையிலேயே பூவையும் உதய்யும் அவனது காரில் திருச்சி புறப்பட்டார்கள். சில மாதங்களுக்கு பிறகு மனைவியுடன் சேர்ந்து செல்லும் நெடுந்தூர பயணத்தை வெகுவாக ரசித்தான் உதய். அவளாக பேசா விட்டாலும் அவளின் பார்வை வைத்தே தேவை கண்டறிந்து எல்லாம் செய்தான்.

இப்படிதானே திருமணமான புதிதில் அவளை தாங்கினான், பூவையின் மனம் வெகுவாக நெகிழ, முழுதாக ஏற்க முடியாமல் நெறிஞ்சி முள்ளாக ஜெயந்தனுக்கு நடந்தது நினைவில் வந்து துன்புறுத்தியது.

இரவில் பாவேந்தன் வீடு சென்றடைய இருவருக்குமே பழைய நினைவுகள். இங்குதானே இருவரது முதல் சந்திப்பு நிகழ்ந்தது.

வழியிலேயே உணவு முடித்திருக்க பாவேந்தன் வீட்டினரோடு சம்பிரதாயமாக பேசி விட்டு அவர்கள் தங்கவென ஒதுக்கப் பட்டிருக்கும் அறைக்கு சென்று விட்டார்கள்.

ஆடை மாற்றிக் கொண்டு மெத்தையில் விழுந்தவள் எதையோ நினைத்து சலிப்பாக சிரித்தாள். ஆடை மாற்றிக் கொண்டிருந்த உதய் அவளை கவனித்து விட்டு, “சறுக்கு சொல்லி சமாளிக்காம எந்த பொய்யும் சொல்லாம நிஜமா ஏன் சிரிச்சேன்னு சொல்லு” என்றான்.

“சிரிக்க கூட காரணம் சொல்லணுமா?”

“இந்த சிரிப்புக்கு காரணம் சொல்லித்தான் ஆகணும், சாதாரண சிரிப்பு இல்லை இது, இதுக்கு பின்னாடி என்ன இருக்கு? உண்மை காரணம் சொல்லு”

“எத்தனை முறை உங்ககிட்ட பொய் சொல்லியிருக்கேனாம்?”

“இப்பவும் உண்மையே சொல்லிடு”

“அது… அன்னைக்கு இந்த வீட்டுக்கு நான் வந்திருக்காட்டா இன்னைக்கு நம்ம ரெண்டு பேர் லைஃப்ம் வேற மாதிரி இருந்திருக்கும்ல? அதை நினைச்சு வந்த சிரிப்பு” என்றாள்.

“எப்படி இருந்திருக்கும் லைஃப்? எனக்கு ரொம்ப ரொம்ப சுமாராதான் இருந்திருக்கும். உனக்கு எப்படி இருந்திருக்கும் பூவை?”

“காலைல சீக்கிரம் ரெடி ஆகணும்ங்க, தூக்கம் வரலையா உங்களுக்கு?” பேச்சை தவிர்க்க நினைத்தாள் பூவை.

அவளருகில் அமர்ந்தவன், “ஹ்ம்ம்.. தூங்கலாம், அதுக்கு முன்னாடி பதில் சொல்லிடு” என்றான்.

“எனக்கு சொல்ல தெரியல” என்றாள்.

“மனசுல நினைச்சதை மழுப்பாம சொல்லு பூவை”

“நிம்மதியா இருந்திருக்கும், போதுமா?” எனக் கேட்டவள், வந்த இடத்தில் இந்த பேச்சு அவசியமா எனும் ரீதியில் தன்னை தானே கடியும் விதமாக கண்களை மூடிக் கொண்டாள்.

Advertisement