Advertisement

நீ என் காதல் புன்னகை -16(2)

அத்தியாயம் -16(2)

முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டு நிமிர்ந்தவன், எழுந்து நின்று “எப்பவும் என்னை விட்டு உன்னை போக சொல்லவே மாட்டேன் பூவை. எப்பவோ என் நிம்மதிய நீ பறிச்சுகிட்ட, தற்காலிக நிம்மதிய ஊத்தி கவுத்திட்ட. நீ பேசினதுல மண்டை இன்னும் சூடாகிக் கிடக்கு. ப்ளீஸ் நீ தங்கியிருக்க ரூம்க்கு போ” என்றான்.

“நீங்க திரும்ப போய் வாங்கிட்டு வருவீங்களா?”

உதய் அமைதியாக இருக்க, “இது நீங்க செய்யக் கூடாது உதய்!” கண்டிப்போடு கூறினாள் பூவை.

“என்னடி சத்தம் போடுற? அவங்களுக்கு உன்னை பிடிக்கலைன்னு தெரிஞ்சும் நீ சொன்ன மாதிரி அவங்க மனசை மாத்த ட்ரை பண்ணாம அவசரமா உன்னை கல்யாணம் செஞ்சு அவங்க பி பியை ஏத்தி விட்டேன். அம்மா உன்னோட சண்டை போட்டாங்கன்னு அவங்க கூட பேசாம அவாய்ட் பண்ணினேன்”

“இங்க வந்தப்புறம் பேசினாலும் அவங்களாலதான் நாம பிரிஞ்சுட்டோம்னு கவலை பட ஆரம்பிச்சிட்டாங்க. உன்னால அவ வெளில போனாலும் இப்ப என்னாலதான் அவ இங்க வர மாட்டேங்குறான்னு நடந்ததை அவங்ககிட்ட நான் சொல்லியிருக்கணும், நான் செய்த தவறை சொல்ல ஈகோ இடம் கொடுக்காம சொல்லாம விட்டுட்டேன்”

“இன்னும் கேர் எடுத்து பார்த்திருக்கணும் அவங்களை, செய்ய தவறிட்டேன். அட்லீஸ்ட் சரியா டைம் ஸ்பெண்ட் பண்ணியிருக்கணும், ப்ச்… காலம் கடந்து இப்போ யோசிக்கிறேன். இதோ இப்படி தூங்காம நடுராத்திரில ரூம்குள்ளே நடந்திட்டிருக்கும் போது என்னை வந்து பார்த்திட்டு அவங்கதான் என் கவலைக்கு காரணம்னு அழுதிட்டே போனாங்க. அடுத்த நாள்தான் நான் டெல்லி போனேன், அவங்க…” முடிக்க முடியாமல் வேகமாக பேசியதில் மூச்சு வாங்க கலங்கிய கண்களுடன் பூவையை பார்த்திருந்தான்.

என்ன சொல்வதென தெரியாமல் பூவை நிற்க, “என்னாலதான் அம்மா இறந்திட்டாங்க பூவை. அவங்க நிம்மதிய மொத்தமா நான் பறிச்சிட்டேன். அப்புறம் உயிரையும் வாங்கிட்டேன்” என சொல்லி அவளுக்கு முதுகு காண்பித்து திரும்பி நின்று கொண்டான்.

உதய்யின் தவிப்பை பார்த்த பூவையின் மனதை யாரோ வாள் கொண்டு அறுப்பது போலிருந்தது.

“எந்த கஷ்டத்துக்கும் போதைவஸ்து தீர்வாகாது உதய். உங்க குற்ற உணர்ச்சியிலேர்ந்து வெளில வாங்க” என்றாள்.

ஆக்ரோஷமாக திரும்பியவன், “எப்படி பூவை? என் அம்மா பத்தி யாருக்கு என்ன குறை இருந்தாலும் எனக்கு அவங்க நல்ல அம்மாதான், ரொம்ப அன்பான அம்மா. என் மேல உயிரையே வச்சிருந்தாங்க, என்னாலதான் அவங்க உயிர் போய்டுச்சு. நான்தான் அதுக்கு ரெஸ்பான்ஸிபில்”

“யாரோ என் தொண்டையை நெறிச்சுக்கிட்டே இருக்கிறது மாதிரி… என் நெஞ்சுல யாரோ சம்மட்டியால அடிக்கிற மாதிரி… என்னால அந்த வலிய தாங்க முடியலை. தூங்க முடியலை. இந்த கருமத்தை குடிக்கவும் பிடிக்காம ரெண்டு மணி நேரமா கண்ணு முன்னாடி வச்சுக்கிட்டேதான் உட்கார்ந்திருந்தேன். ஆனா என்னால டாலரேட் செய்ய முடியாமதான் அதை குடிக்க போனேன்” என்றான்.

பூவை அவனை நெருங்கி வந்து ஆறுதலாக அணைத்துக் கொண்டாள். இந்த அணைப்புக்காக எத்தனை நாட்கள் காத்திருந்தானோ… அவளை இறுக கட்டிக் கொண்டு அவள் தோள் வளைவில் முகம் புதைத்துக் கொண்டவன் எந்த நொடி தன் கட்டை உடைத்துக் கொண்டான் என அவனே அறியான்.

மனம் விட்டு தன் மனைவியிடம் அழுதான். தொண்டைக்குள் அழுத்திக் கொண்டிருந்த துக்கத்தை வெட்கம் விட்டு அவள் ஆதரவில் இறக்க வைக்க முயன்றான். அவனை தோள் தாங்கி நின்ற பூவையின் அனுமதி கேட்காமலேயே அவள் கண்களும் குளமாகி போக, அவனை தடுக்காமல் அழ விட்டாள்.

அவனாகவே அழுகையை முடித்து பாரம் குறைந்த மனதோடு பூவையை கட்டிக் கொண்டே நின்றான். நிமிடங்கள் கரைந்தும் அவன் விலகாமல் போக, அவளாக விலகி அவனை படுக்க வைத்தாள்.

“நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன், ஏன் பேசக்கூட மாட்டேன். இங்கேயே இந்த ரூம்லேயே என் கூடவே இரு பூவை. எனக்கு தூங்கணும்” என்ற உதய்யின் வார்த்தைகள் பூவையை அசைத்தது.

“தூங்குங்க உதய்” என்றாள்.

“தூங்கினப்புறம் போய்ட மாட்டியே?”

“நானும் இங்கேயே படுத்துக்கிறேன், தூங்குங்க” என்றவள் அவனை விட்டு தள்ளி படுத்துக் கொண்டாள்.

உதய் அவளை பார்த்து மெலிதாக சிரித்தான்.

பூவை சிரிக்க முயற்சி செய்து பொய்யாக புன்னகைத்தாள்.

மறுப்பாக தலையசைத்தான் உதய்.

“ஒரே நாள்ல என்னை தலைகீழா குதிக்க சொல்லாதீங்க உதய். உங்க மேல கோவம் வருத்தம் எல்லாம் அப்படியேதான் இருக்கு, சேர்ந்து வாழ இன்னும் மனம் வரலை. ஆனா எந்த காலத்திலேயும் உங்களை என்னால வெறுக்கவே முடியாது. உங்க மேல நான் வச்ச அன்பும் மாறாது. ப்ளீஸ் கண்ணு மூடி தூங்குங்க” என பூவை சொல்ல கண்கள் மூடிக் கொண்டான்.

உதய்யின் செய்கைகள் பூவைக்குத்தான் பயத்தை கொடுத்தன. அம்மாவுக்காக இப்படி குற்ற உணர்வு கொள்கிறவன் என் அண்ணனுக்கு செய்த பாதகத்தை மட்டும் எளிதாக நினைக்கிறானே என்ற எண்ணமும் வராமல் இல்லை. ஆனால் தற்போதைய அவன் நிலை கருதி ஜெயந்தன் பற்றி எதுவுமே பேசக்கூடாது என உறுதியாக முடிவு செய்து கொண்டாள்.

அடுத்த நாள் மாலையில் வங்கியில் ஒரு மணி நேரம் அனுமதி பெற்றவள் சிவாவை அவனது வீட்டுக்கு வர சொல்லி அவனை சந்திக்க சென்றாள்.

உதய் பற்றி மேலோட்டமாக கூறினாள். ஆனால் அவள் சொல்ல வருவதை சரியாக புரிந்து கொண்டவன், “சைட்ல கூட எப்ப அடிதடி ஆகுமோன்னு எனக்கு பயமா இருக்கு பூவை. முன்னாடியும் கோவ படுவான்தான், ஆனா ஓரளவு கண்ட்ரோல் இருக்கும். இப்ப அவன் அம்மா இறந்த பிறகு ரொம்ப அக்ரெஸிவ் ஆகிட்டான். எதுக்காகவும் அவனை அப்ரோச் பண்ணவே எல்லோரும் தயங்குறாங்க” என்றான்.

“இப்படி இருந்தா அவர் ப்ரொஃபஷனுக்கே டேஞ்சர் இல்லையா அண்ணா?”

“ஏன் பெர்சனல் லைஃப் மட்டும் ரொம்ப சூப்பரா போகுதா அவனுக்கு? அவன் வைஃப் நீயே அவனை புரிஞ்சுக்காம கஷ்ட படுத்தற”

“எங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியாது ண்ணா. இப்ப நீங்க சொல்றது கேட்கும் போது நான் அரைகுறையா யோசிச்ச முடிவை முழு மனசா செய்யலாம்னு நினைக்கிறேன்” என்றாள்.

“என்னம்மா? என்ன செய்ய போற? டிவோர்ஸ் னு ஏதாவது சொல்லி எனக்கு அட்டாக் வர வச்சுடாத ம்மா” பயந்து போனவனாக சொன்னான்.

“அது செய்றதா இருந்தா எப்பவோ செய்திருப்பேன். நான் சொல்ல வந்தது… அவரை ஏன் கவுன்சிலிங் கூட்டிட்டு போக கூடாது?”

“யார்கிட்ட?”

“சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட”

“மத்தவங்க மாதிரி நீயும் அவனை மெண்டல்னு நினைக்க ஆரம்பிச்சிட்டியா?”

“அண்ணா!” பூவையின் அதட்டலில் சிவா பயந்து போய் பார்த்தான்.

“யாரு யாரு சொன்னாங்க அவரை அப்படி?” சொல்லியே தீர வேண்டும் என்ற தோரணையில் கேட்டாள்.

“அவன் அத்தை அவன் அம்மா காரியத்துக்கு வந்தப்போ யாரோ ரிலேட்டிவ் கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க. சைட்ல கூட அவனை சரியான சைக்கோனு எல்லாம் அவங்களுக்குள்ள பேசிக்கிறாங்கமா. இவனும் அப்படித்தான் சின்ன விஷயத்துக்கெல்லாம் ஓவரா ரியாக்ட் பண்றான்” என்றான்.

“அது அவரோட பிறவிக் குணம். அதுக்காக இப்படியெல்லாம் சொல்வாங்களா? இவர் கோவத்தை எப்படி கண்ட்ரோல் செய்றதுன்னு நாம்தான் பார்க்கணும் அதுக்குத்தான் சைக்கியாட்ரிஸ்ட் பார்க்க போறோம். சைக்கியாட்ரிஸ்ட் பார்த்தாலே அவங்க மனநிலை பாதிக்க பட்டவங்கனு அர்த்தம் கிடையாது” என்றாள்.

“இதுக்கு அவன் ஒத்துக்கணுமே”

“நீங்க யாரை பார்க்கலாம்னு மட்டும் விசாரிங்க, அவரை நான் அழைச்சிட்டு வர்றேன்” என்றாள்.

“பார்த்தும்மா உன்கிட்டேயும் கைகலப்பு செய்திட போறான்”

“அது நான் பார்த்துக்கிறேன்” என சொல்லி கிளம்பியவள் அம்மாவையும் அண்ணனையும் பார்த்து விட்டே அவளது வீட்டிற்கு சென்றாள்.

சிவா எந்த மருத்துவரை பார்க்கலாம் என விசாரித்து சொல்ல அப்பாயிண்ட்மெண்ட் வாங்க சொல்லி விட்டாள். அன்று மாலையில் சந்திக்க இருக்க காலையில் உதய்யிடம் கூறினாள்.

“ஹ்ம்ம்… போலாமே” இலகுவாக சொன்னான் உதய்.

“ஹப்பா, கோவப்பட்டு கத்துவீங்களோன்னு நினைச்சேன்” என்றாள்.

“கொஞ்ச நாளா நான் சரியில்லைனு எனக்கே தெரியும் பூவை. உனக்கும் அப்படி தோண போய்தானே கூப்பிடுற. ஆனா எனக்கு தெரியும் யார் நினைக்கிற மாதிரியும் நான் பைத்தியம் சைக்கோ மெண்டல் எதுவும் இல்லைனு. ரெண்டு நாளா என்னோட அதிகப் படியான கோவம் கூட குறைய ஆரம்பிச்சிருக்கு. மிச்சத்தை டாக்டர் சொல்லட்டும்” என சாதாரணமாக சொல்லி சாப்பிட்டு வேலைக்கு கிளம்பி சென்று விட்டான்.

மாலையில் வேலை நடைபெறும் இடத்துக்கு பூவை வந்துவிட அவளோடு மருத்துவமனை சென்றான்.

ஒரு மணி நேரம் உதய்யோடு கலந்துரையாடினார் மருத்துவர்.

“கட்டுக்கடங்காத கோவத்தால ஏற்படுற நோயை இன்டர்மிட்டென்ட் எக்ஸ்ப்ளோஸிவ் டிஸார்டர்(intermittent explosive disorder) அப்படின்னு சொல்வோம்” என மருத்துவர் கூற பூவை கலவரமாக பார்த்தாள்.

“பயப்படாதீங்கமா, இவருக்கு அதெல்லாம் இல்லை. இயற்கையாவே கோவத்தை கையாலும் திறன் இவர்கிட்ட குறைவா இருக்கு. சொந்தக்காரங்க எல்லோரும் சொல்ற மாதிரியே தன் வீட்டுக்கு வந்த பொண்ணு வாழ முடியாம வெளியேறினது ரொம்ப பாதிச்சிருக்கு இவரை”

“இப்போ இவர் அம்மா இறந்து போனது, அதுக்கு தான்தான் காரணம்ங்கிற குற்ற உணர்ச்சி எல்லாம் சேர்ந்து மன அழுத்தத்துல இருக்கார். இது பொதுவா எல்லா மனிதர்களுக்கும் ஏற்படக் கூடியதுதான், காலப்போக்குல தானா சரியாகிடும்”

“இப்போதைக்கு ஒரு டென் டேஸ் மட்டும் தூங்க மெடிசின் எழுதி தர்றேன். அப்புறம் ஸ்டாப் பண்ணிடுங்க” என்றார்.

“தூக்க மாத்திரை எல்லாம் வேணாம் டாக்டர், ரெண்டு நாளா நல்லாவே தூங்குறேன். என்னோட மருந்து என் பக்கத்துலேயே இருக்காங்க” என பூவையை காட்டி உதய் சொல்ல மருத்துவர் சன்னமாக சிரித்தார்.

“உதய்!” கண்டிக்கும் விதமாக அழைத்த பூவை, “வேற என்ன செய்யணும் சார்?? “ எனக் கேட்டாள்.

“இன்னொரு முறை கவுன்சிலிங் கூட்டிட்டு வாங்க, தியானம் நல்ல யுக்தி, செய்றேன்னு சொல்லியிருக்கார். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்க, மனசு விட்டு பேசுங்க, காது கொடுத்து கேளுங்க, மன்னிக்க கத்துக்கோங்க, இவருக்கு பயப்படும் படி எதுவும் இல்லை” என சொல்ல அப்போதுதான் பூவைக்கு நிம்மதியானது.

மருத்துவமனையிலிருந்து வெளியில் வரும் போது இயல்பாக பூவையின் கையை உதய் பிடித்துக்கொள்ள அவளால் அவனை போல ஏற்க முடியாவிட்டாலும் சட்டென உதறவும் முடியாமல் தடுமாற, “மன்னிக்க கத்துக்க பூவை” என்றான் இன்னும் நேரடியாக வாய் விட்டு மன்னிப்பு கேட்டிராத உதய்.

Advertisement