Advertisement

நீ என் காதல் புன்னகை -16(1)

அத்தியாயம் -16(1)

சிவா அவனது வீட்டுக்கு சென்று விட பாவேந்தனும் நாதன் அறைக்கு செல்ல ஹாலில் தனித்து நின்றிருந்தாள் பூவை. உதய்யின் அறை திறந்தே இருக்க இவளுக்கு அங்கு செல்லவே விருப்பமில்லை.

மாடிக்கு சென்று அங்கிருந்த அறை ஒன்றில் படுத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் பாவேந்தன் குடும்பத்தினர் இருக்கவே பூவைக்கு வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை. உதய்யிடம் பெரிதாக பேச தேவையிருக்காமல் பாவேந்தனே எல்லாம் பார்த்துக் கொண்டார். அன்று மாலையே அவர்களும் கிளம்பி விட பூவைக்குத்தான் என்னவோ போலானது.

இரவு சாப்பாடு ஈஸ்வரியின் உதவியுடன் செய்திருந்தவள் ஷியாமியையும் நாதனையும் வற்புறுத்தி சாப்பிட வைத்து விட்டாள். உதய் இன்னும் வந்திருக்கவில்லை. பூவை, ஷியாமியை விட்டு அவனை அழைக்க அனுப்பிய போதும் பின்னர் வருவதாக சொல்லி விட்டான்.

தான் பார்த்துக் கொள்வதாக கூறி மற்ற இருவரையும் உறங்க அனுப்பி வைத்த பூவைக்கு பசியெடுக்க அவள் சாப்பிட்டு விட்டு உதய்க்காக காத்திருந்தாள். நேரம் பத்தை கடந்த பிறகும் அவன் வருவதாக தெரியவில்லை. இவளே அழைக்க சென்றாள்.

இழப்பின் வலி முகத்தில் பிரதிபலிக்க நாற்காலியில் கண்கள் மூடி அமர்ந்திருந்தான்.

“உதய் சாப்பிட வாங்க” என்றாள்.

“ஹ்ம்ம்… நான் சாப்பிட்டுக்கிறேன், நீ போய் தூங்கு” என கண்களை மூடியவாறே சொன்னான்.

“சாப்பிடாம வருத்திக்கிறதால அவங்க திரும்ப வரப் போறதில்ல. உங்க தைரியம்தான் மாமாவை ஷியாமியை தைரியமா வச்சுக்கும். சாப்பிட்டு வந்து படுங்க”

எழுந்து கொண்டவன் அமைதியாக உணவு மேசைக்கு வந்து அமர்ந்து கொண்டான். பூவை பரிமாற நான்கு இட்லிகள் சாப்பிட்டவன் போதும் என சொல்லி எழுந்து கொள்ள, “பால் கொண்டு வரவா?” எனக் கேட்டாள்.

அவளை பார்த்தவன், “ம்ம்…” என சொல்லி அறைக்கு சென்று விட்டான்.

பூவை பால் கலந்து வந்து கொடுக்க வாங்கி பருக ஆரம்பித்தான். அவன் அருந்தி முடிக்கும் வரை நின்றிருந்தவள் காலி கோப்பையை வாங்கிக் கொண்டு செல்ல, “நேத்து நைட் எங்க தூங்கின?” எனக் கேட்டான்.

நின்றவள், “மாடி ரூம்ல, இன்னைக்கு கீழ இருக்க ரூம்லேயே தங்கிக்கிறேன். இனிமே அங்கதான் ஸ்டே பண்ணப் போறேன்” என்றாள்.

“அப்போ உன் பாவேந்தன் சார் சொன்னதுக்காக இங்க தங்குற இல்ல…” என உதய் கேட்க அமைதியாக இருந்தாள்.

“அவர் கூட எனக்காக சொல்லியிருக்க மாட்டார், என் அப்பா தங்கச்சிக்காக சொல்லியிருப்பார். அப்படித்தானே?”

“உங்களுக்குத்தான் எல்லாம் தெரிஞ்சிருக்கே அப்புறம் என்ன?” எனக் கேட்டாள் பூவை.

“அப்புறம் என்ன… நீ யாருக்காக தங்கியிருக்கியோ அவங்கள கவனிச்சுக்கிட்டா போதும், உன் கரிசனம் எனக்கு தேவையில்லை. என்னைக்கு நானும் முக்கியம்… இல்லையில்லை எல்லாரை விட நான்தான் நான் மட்டும்தான் முக்கியம்னு நீ நினைக்கிறியோ அன்னைக்கு என்னை பார்த்துக்க ஆரம்பிச்சா போதும். போ” என்றான்.

“நீங்க எனக்கு முக்கியமில்லைன்னு நீங்களா நினைக்காதீங்க உதய். ஆமாம், சார் சொன்னதாலதான் தங்கியிருக்கேன். அதுக்காக உங்க மேல அக்கறை இல்லன்னு ஆகிடாது. எல்லாம் மறந்திட்டு இங்க இருக்க சங்கடமா இருந்தது, தங்க யோசிச்சேன். நான் என்ன செய்யணும்னு எனக்கு சொல்லி தராதீங்க” என்றவள், இரண்டடி அவனை நோக்கி வந்து, “நீங்க மட்டும்தான் முக்கியமா இருக்கணும்னா நான் அனாதையா இருந்து உங்களை கல்யாணம் செய்திருக்கணும். எல்லோருமே எனக்கு முக்கியம்” என சொன்னாள்.

உதய் அமைதி காக்க, வெளியேறப் போனவள் என்ன நினைத்தாளோ செல்லாமல் மீண்டும் அங்கேயே நின்றாள்.

உதய் அசையாமல் அவளை பார்த்திருக்க, “எப்பவும் நீங்க எனக்கு எல்லோரையும் விட ஸ்பெஷல்தான் உதய், அதனாலதான் நீங்க செஞ்சதை என்னால ஏத்துக்க முடியலை. என் உதய் எப்படி தப்பு செய்யலாம்ங்கிற கோவம்தான் உங்க மேல, ஆனா இன்னும் நீங்க புரிஞ்சுக்கவே இல்ல” என சொல்லி சென்று விட்டாள்.

உதய் படுக்காமல் மீண்டும் நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

அடுத்த நாளில் இருந்து ஷியாமளாவுக்கு ஸ்டடி லீவ் ஆரம்பிக்க கல்லூரி செல்லவில்லை. நாதனையும் ஒரு வாரம் கழித்து பயிற்சி மையம் செல்லலாம் என சொல்லி பூவை வங்கி புறப்பட்டு விட்டாள். காலை மாலை என இருவேளை வந்து வந்து செல்லும் ஈஸ்வரியிடம் இந்த ஒரு மாதம் மட்டும் பகல் முழுவதுமே வீட்டிலிருக்க சொல்லி விட்டாள் பூவை.

காலையிலேயே சமையல் வேலை முடித்து விட்டு நேரத்துக்கு காபி டீ கொடுத்து, வீட்டு மேல் வேலைகள் சிலவற்றையும் ஈஸ்வரியை முடித்து வைக்க சொல்லியே செல்வாள். இடையில் ஷியாமளாவிடம் அலைபேசியில் பேசி சாப்பிட்டார்களா என விசாரித்தறிந்து கொள்வாள்.

உதய்யின் கட்டுமான பணிகள் தேங்கி நிற்க அவனும் அதை கவனிக்க சென்று விட்டான். மாலை வீடு வரும் பூவை, ஷியாமளா உடன்தான் இருப்பாள். தாயின் இழப்பை தன்னால் ஈடு செய்ய முடியா விட்டாலும் நல்ல தோழியாக அவளின் இழப்பிலிருந்து மீள உதவினாள்.

நாதனுடன் அதிகம் பேசி பழக்கமில்லை என்றாலும் முன்பை விட நன்றாகவே பேச முயன்றாள். அவரை பேச விட்டு பொறுமையாக கேட்டுக் கொண்டாள். ஆனால் உதய்யை கவனிக்க தவறி விட்டாள். ஒரு வேளை நெஞ்சுரம் மிக்கவன் எளிதில் மீண்டு விடுவான், தன் ஆறுதல் அவனுக்கு தேவை படாது என கருதி விட்டாளோ!

இரவு உணவு அனைவரும் சேர்ந்து உண்ணும் புதிய பழக்கத்தை அமலுக்கு கொண்டு வந்தாள். உதய் பிறகு சாப்பிடுகிறேன் என சொன்னால் விடாமல் அவனையும் வற்புறுத்தி அழைத்து வந்து விடுவாள். ஆனால் தங்கிக் கொள்ளும் அறை வேறுதான்.

ஷியாமளாவுக்கும் நாதனுக்கும் இப்படி பூவை உதய்யுடன் தங்காமல் தனியறையில் தங்குவது வருத்தமே என்றாலும் அவளிடம் கேட்டுக் கொள்ளவில்லை. உதய்க்கு கூட ஒரே அறையில் தனியாக இருக்கலாமே ஏன் இப்படி மற்றவர்களுக்கும் இதை அறிவிக்கிறாள் என கோவமிருந்தாலும் வாய் விட்டு மட்டும் கேட்கவில்லை.

சாப்பிடும் நேரம் தவிர மீத நேரங்களில் கணவனோடு பேசுவதே இல்லை பூவை. அவனை பார்க்க நேர்ந்தாலும் யாரோ போல ஒதுங்கி செல்ல மனதிற்குள் வலித்தாலும் முகத்தில் காட்டாமல் நன்றாக சமாளிப்பான் உதய்.

கமலாவுக்கு காரியமும் நல்ல படியாக நடக்க, அதற்காக வந்திருந்த பாவேந்தனிடம் நாதன் இதையெல்லாம் சொல்லி குறைபட்டார்.

“ரெண்டு பேரும் குழந்தைகளா இருந்தா நாம கண்டிச்சு பேசலாம். பூவை இங்க தங்க சம்மதிச்சதே பெரிய விஷயம் மாமா, அப்படி என்னதான் நடந்துச்சோ இவங்களுக்குள்ள. சீக்கிரம் சரியாகும்னு நம்புவோம் மாமா. நீங்க மனசை போட்டு அலட்டிக்காம உங்க உடம்பை பாருங்க. ஷியாமி படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்துக்கு பார்க்கலாமா?” என பேச்சை மாற்றினார்.

நாதனுக்கு மகள் திருமணத்தை உடனடியாக நடத்த முன்னர் எண்ணமில்லைதான். ஆனால் கமலா இறந்திருக்க இப்போது இவருக்கும் லேசாக பயம் எட்டிப் பார்க்க தான் நன்றாக இருக்கும் போதே மகளின் திருமணத்தை நடத்தலாம் என கருதினார். இதை அப்படியே பாவேந்தனிடம் கூறவும் செய்தார்.

“மூணு மாசம் போனதும் கல்யாணம் வைக்கலாம், உதய்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு ஷியாமிக்கு நல்ல பையனா நான் பார்க்கிறேன் மாமா” என உறுதியளித்தார் பாவேந்தன்.

பூவையின் பிரிவில் முசுட்டு குணம் நிறைந்து போயிருந்த உதய் இப்போது எதிர்பாராத அன்னையின் பிரிவில் ஏதோ வெறுமையாக உணர தொடங்கி வேலை நடக்கும் இடத்தில் எதற்கெடுத்தாலும் அதீத கோவம் காட்டினான்.

மற்றவர்கள் அவனை அணுகவே பயம் கொள்ள சிவாதான் இடையில் நின்று சமாளித்தான். ஆனால் அவனுக்குமே அவனது காதல் விஷயத்தை உதய்யிடம் இப்போது கூற தயக்கமாக இருக்க இன்னும் சொல்லாமல்தான் இருந்தான்.

அன்று பாதி உறக்கத்தில் பூவைக்கு விழிப்பு வர புரண்டு படுத்தாள். தாகமாக இருப்பது போல் உணர அன்று அறையில் தண்ணீர் எடுத்து வைக்கவும் மறந்திருக்க ஹால் வந்தாள். உதய்யின் அறைக் கதவு பாதி திறந்திருக்க வெளிச்சம் தெரிந்தது. தண்ணீர் பருகியவளுக்கு அப்படியே செல்ல மனம் வராமல் கதவை நன்றாக திறந்து பார்க்க உதய் மது நிறைந்த கண்ணாடி குவளை கையில் வைத்துக் கொண்டிருந்தான்.

பூவைக்கு நன்றாக தெரியும் உதய்க்கு இது போன்ற கெட்ட பழக்கங்கள் எப்போதுமே இருந்ததில்லை. மற்ற நண்பர்கள் மது அருந்தினாலும் இவன் தொடக் கூட மட்டான் என இவன் வாயாலேயே கேட்டிருக்கிறாள்.

உள்ளே சென்று அவன் முன் நிற்க அவளை அலட்சியமாக பார்த்தவன் மது பருக போக அவனது கையிலிருந்து பிடுங்கினாள்.

“தூங்காம என்ன பண்ணிட்டிருக்க பூவை, அதை வச்சிட்டு போ” என நிதானமாக சொல்ல, பாட்டிலிலும் திரவம் அதிகம் குறையாமலிருக்க இன்னும் உதய் மது அருந்தியிருக்கவில்லை என்பதை புரிந்து கொண்டவள் சற்றே ஆசுவாசம் அடைந்தாள்.

“புதுசா நல்லது பழகலாம் உதய், இதால என் அண்ணனுக்கு நடந்தது மறந்துட்டீங்களா நீங்க?”

“உன் அட்வைஸ் தேவையில்லை, போ இங்கேர்ந்து” என பல்லை கடித்துக் கொண்டு கூறினான்.

“போகாம இங்கேயே இருக்க போறதில்லை” என்றவள் மது பாட்டிலையும் கையில் எடுத்துக் கொண்டு குளியலறை சென்று கதவடைத்தாள்.

உள்ளே நீர் கொட்டும் சத்தம் கேட்க என்ன செய்கிறாள் என புரிந்தவனுக்கு ஆத்திரம் கண் மண் தெரியாமல் வர அவள் வெளியே வரவும் கோவத்தோடு அவளின் கழுத்தை நெறிக்க சென்றான்.

பூவை பதறாமல் நிற்க, நிதானித்து அறைக்குள்ளேயே இங்குமங்கும் நடந்தவன், கட்டிலில் கிடந்த தலையணைகளை தரையில் வீசி எறிந்தான்.

எதற்கும் அசராமல் பூவை நின்றிருக்க, “என்ன செய்யணுமோ செஞ்சிட்டீல… போடி இங்கேர்ந்து. இந்த நேரம் கூட எங்க போனா இது கிடைக்கும்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுட்டியா? இல்ல நாளைக்கு இதே நேரம் இப்படி பண்ண மாட்டேன்னு எண்ணமா உனக்கு?” எனக் கேட்டான் உதய்.

“ஏன் இப்படி செய்றீங்க உதய்? ஷியாமி எழுந்து வந்து பார்த்தா உங்களை பத்தி என்ன நினைப்பா? மாமா இதை தாங்குவாரா? வேணாம் உதய்”

“எனக்கு வேணும் பூவை. உனக்கு தெரியாது என் அம்மா என்னாலதான் இவ்ளோ சீக்கிரம் இந்த வீட்டை விட்டு போய்ட்டாங்க. மண்டை வெடிக்குற மாதிரி இருக்கு. நெஞ்சை போட்டு ஏதோ அழுத்துதே… இதிலேர்ந்து தப்பிக்க என்ன செய்வேன் நான்?” என்றவன் தொப் என நாற்காலியில் அமர்ந்து கண்களை இறுக மூடிக் கொண்டான்.

“ஷியாமியும் மாமாவும் மீண்டு வரலையா இதிலேர்ந்து. உங்களுக்கு மட்டும்தான் துக்கமா? மாமாவை விட அதிகம் உங்கம்மாவை நீங்க மிஸ் பண்றீங்களா? அன்னைக்கு நீங்க இங்க இருந்திருந்தாலும் இதுதான் நடக்கணும்னு இருந்தா யாராலேயும் தடுக்க முடியாது உதய். நடக்கிற எல்லாத்துக்குமே நாம கருவிதான், மத்தபடி எல்லாத்தையும் இப்படித்தான் நடக்கணும்னு தீர்மானிக்கிறது நமக்கு மேல உள்ள சக்தி” என்றாள்.

அன்றைய தினம் வீட்டில் அவன் இல்லாமல் போனதால்தான் அம்மாவை மருத்துவமனை அழைத்து செல்ல முடியாமல், அதைக் கொண்டு அவனால்தான் அம்மா இறந்து விட்டதாக நினைக்கிறானோ என எண்ணி அப்படி கூறினாள்.

ஏளனமாக அவளை பார்த்து சிரித்து மீண்டும் கண் மூடிக் கொண்டான் உதய்.

“அதுக்காக குறுக்கு வழில போய் என்ன வேணா செஞ்சிட்டு, நான் செய்யல… என்னை மேல இருந்த சக்தி இயக்குச்சுன்னு சொன்னா யாரும் ஏத்துக்க மாட்டாங்க” அவனது எண்ணம் புரிந்தவளாக சொன்னாள்.

“நீ இதையே சொல்லி இரிடேட் ஆக்காத பூவை. எனக்கு எந்த வழியிலாவது போய் உன்னை கல்யாணம் செய்துக்கணும். நீ ரொம்ப பண்ணின, என்னால செய்ய முடிஞ்சதை நான் செஞ்சேன். என் கோல் உன்னை கல்யாணம் செய்றது மட்டும்தான்”

“நானென்ன விளையாட்டு பொருளா உங்களுக்கு? மத்தவங்க அடையற பாதிப்பு பத்தின கவலையே இல்லையா உங்களுக்கு? நீங்க செஞ்ச தவறு எனக்கு தெரிஞ்ச பிறகு கூட குறைந்தபட்சம் மன்னிப்பு கேட்க கூட உங்களுக்கு மனசு வர மாட்டேங்குது பாருங்க, அதுதாங்க என்னால தாங்க முடியலை”

“மத்தவங்க மாதிரி நீயும் நான் வாய்விட்டு மன்னிப்பு கேட்கனும்னு நினைக்காத பூவை. நீயும் மத்தவங்களும் ஒண்ணு கிடையாது, நான் மனம் வருந்துறதை உன்னால உணர முடியலையா?”

“இல்ல உதய், சும்மா ஏதாவது பேசாதீங்க. அன்னைக்கு என் அண்ணனை வாய்க்கு வந்தபடி எப்படியெல்லாம் பேசுனீங்க? மனம் வருந்துறவர் பேசுறதா அது?”

தாடை இறுகிப் போய் அவளை பார்த்தவன், “போடி இங்கேர்ந்து” என்றான்.

“இங்கேர்ந்துன்னா ரூம்லேர்ந்து மட்டுமா இல்லை உங்க வீட்லேர்ந்துமா?” கோவமாக கேட்டாள் பூவை.

Advertisement