Advertisement

நீ என் காதல் புன்னகை -15

அத்தியாயம் -15

அன்று நடு இரவில் கைபேசி அலற பதறிப் போய் கண் விழித்த பூவை யாரென பார்க்க ஷியாமளாதான். அவசரமாக அழைப்பை ஏற்று பேசினாள்.

“அண்ணி அம்மாக்கு நெஞ்செரிச்சல்னு எழுப்பி விட்டாங்க, ஒரே வாந்தி வேற. அரை மயக்கத்துல இருக்காங்க” என அழுது கொண்டே கூறினாள் ஷியாமளா.

“ஷியாமி அழாத, உன் அண்ணன் எங்க?”

“அண்ணா அப்பா கூட ஏதோ மினிஸ்டர் பார்க்க டெல்லி போயிருக்கார் அண்ணி. இந்த நேரம் அவங்களுக்கு கூப்பிட வேணாம்னு உங்களுக்கு கூப்பிட்டேன். எனக்கு பயமா இருக்கு அண்ணி, எனக்கு கார் ஓட்டவும் தெரியாது” இன்னும் அவள் அழுகையை நிறுத்தியிருக்கவில்லை.

“நான் கிளம்பி வர்றேன், நீ அவங்க கூடவே இரு. குடிக்க சுடு தண்ணி எதுவும் கொடுத்து பாரு. நீ அழுது அவங்களையும் பய படுத்தாத” என அறிவுறுத்தி உடனே ஆம்புலன்சுக்கு அழைத்து உதய் வீட்டு முகவரி சொல்லி அங்கே வர சொன்னாள்.

கால் டாக்சிக்கு புக் செய்து அதி வேகமாக உடை மாற்றி கிளம்பியவள் அம்மாவை எழுப்பி சொல்லிக் கொண்டு அப்பார்ட்மென்ட் வாசல் வர கால் டாக்சி வந்துவிட்டது. செக்யூரிட்டியிடம் சொல்லி டாக்சி எண் குறித்து கொள்ள சொல்லி பின்னர் அங்கிருந்து புறப்பட்டாள்.

சிவா அன்றுதான் அவனது அண்ணிக்கு குழந்தை பிறந்திருக்க பார்ப்பதற்காக செகந்திரபாத் சென்றிருந்தான்.

பூவை கால் மணி நேரத்தில் அங்கு சென்று விட்டாள். பூவை வந்து பார்த்த போது பேச்சு மூச்சில்லாமல் கமலா மயங்கியிருக்க பயமும் அழுகையுமாக ஷியாமளா அவரை எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தாள். அருகில் ஓடி சென்று கமலாவின் கையில் நாடித் துடிப்பை சோதித்த பூவை அப்படியே ஸ்தம்பித்தாள்.

ஆம்புலன்ஸ் வந்து விட மருத்துவர் வந்து பரிசோதித்து பார்த்து விட்டு உயிர் பிரிந்து விட்டதாக கூற அதிர்ச்சி தாளாமல் ஷியாமளா மயங்கி விழுந்தாள்.

பூவையின் கைகளும் கால்களும் தட தடக்க ஆரம்பித்து விட்டன. தனக்கு பிடிக்காதவர் என்றாலும் இறக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்ததே இல்லை. அந்த மருத்துவரே ஷியாமளாவை பரிசோதித்து முதல் உதவி கொடுத்தார். தன்னை கொஞ்சமாக சுதாரித்துக் கொண்டு ஷியாமியை கவனித்தாள் பூவை.

விழித்த ஷியாமளா தேம்பி தேம்பி அழ அவளை கட்டியணைத்துக் கொண்டவளுக்கு என்ன எப்படி ஆறுதல் உரைப்பது என்றே தெரியவில்லை, இன்னும் அவளே அதிர்ச்சியிலிருந்து முழுதாக மீண்டிருக்கவில்லையே.

“ஈவ்னிங்கே கை, தோள் பட்டை எல்லாம் வலிக்குதுன்னு சொன்னாங்க அண்ணி, நான் தைலம் எல்லாம் தடவி விட்டேன். அம்மாவை நல்லா எழுப்பி பாருங்க அண்ணி, கொஞ்ச நேரம் முன்னாடி அவங்களாதான் நடந்து வந்து கதவு தட்டினாங்க” என அழுது கொண்டே புலம்பினாள் ஷியாமளா.

“ஹார்ட் அட்டாக் வந்திருக்கும் போல. நீங்க உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்திருக்கணும்” என்ற மருத்துவர் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். ஆம்புலன்சை அனுப்பி விட்டு பூவை உள்ளே வர அழும் ஷியாமளாவும் கமலாவின் பூத உடலும் அவளை கலவரப் படுத்தியது. நேரம் இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.

முதலில் சிவாவுக்கு அழைத்து சொன்னவள் அங்கே அபார்ட்மெண்ட்டில் தெரிந்தவர்கள் இருந்தால் அம்மாவை இங்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொண்டாள். அதிர்ச்சி அடைந்த சிவாவும் உடனே கிளம்புவதாக கூறி, “உதய்க்கு சொல்லிட்டியா?” எனக் கேட்டான்.

“இன்னும் இல்ல, நீங்களே சொல்றீங்களா ண்ணா?”

“இல்ல பூவை, எனக்கு அந்த தைரியம் இல்லை. நீயே சொல்லு” என பொறுப்பை அவளிடமே கொடுத்து கைபேசியை வைத்து விட்டான்.

மனதை தயார் படுத்திக் கொண்டு உதய் எண்ணுக்கு அழைத்தாள்.

நாதனுக்கு தெரிந்த மத்திய மந்திரி ஒருவர் இங்கு உதய்யின் கட்டுமான பணிகளில் நகராட்சி அலுவலர்களின் தொந்தரவு இல்லாமல் அவரே தலையிட்டு உதவி செய்திருந்தார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை நிமித்தமாக நேரிலேயே சென்று பார்த்து வர வேண்டும் என நாதனும் உதய்யும் டெல்லி சென்றிருந்தனர்.

அன்றே பார்த்து விட்டு அன்றே புறப்படத்தான் நினைத்திருந்தார்கள், ஆனால் மந்திரியை சந்திக்க கால தமாதமாகி விட பதிவு செய்திருந்த விமானத்தை தவறு விட்டு விட்டார்கள். நாதனும் சோர்ந்து போய் தெரிய ஓட்டலில் அறை எடுத்த உதய் மறுநாள் காலைக்குத்தான் விமானத்தில் டிக்கெட் போட்டிருந்தான்.

இரண்டு படுக்கைகள் கொண்ட அறையில் நாதன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்க அலைபேசியின் சத்தத்தில் அந்த நேரம் யாராக இருக்கும் என பயந்து போய் பார்த்தவன் பூவையின் பெயர் கண்டு இன்னுமே பதற்றம் கொண்டவனாக, “பூவை… என்னடி ஆச்சு? எங்க இருக்க நீ?” எனக் கேட்டான்.

“நான் உங்க வீட்லதான் இருக்கேன், உங்க அம்மாக்கு முடியலை” என்றாள்.

அதற்கே “என்ன… என்னாச்சு அம்மாக்கு? ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகாம எனக்கு ஏன் கால் பண்ற? ஷியாமிக்கு எதுவும் தெரியாது, முத ஹாஸ்பிடல் சேரு அவங்கள” பதறிப் போனான் உதய்.

“உதய் ப்ளீஸ் பொறுமையா இருங்க. மாமா எங்க? அவங்க காதுல விழாம மெதுவா பேசுங்க” என்றாள்.

பூவை பேசிய தொனியில் ஏதோ சரியில்லை என உணர்ந்த உதய்க்கு அவனது இதயம் எம்பி தொண்டைக்கு வந்தது போலிருந்தது.

“அம்மாக்கு என்னாச்சு பூவை?” கலங்கிப் போனவனாக கேட்டான்.

“மாமா பக்கத்துல இருந்தா கொஞ்சம் தள்ளி வர்றீங்களா?”

உதய்யின் உடலும் உள்ளமும் ஒருசேர நடுங்க ஆரம்பிக்க உறக்கத்தில் இருந்த தந்தையை ஒரு முறை பார்த்து விட்டு சத்தம் செய்யாமல் அறையை விட்டு வெளியில் வந்து, “தள்ளி வந்திட்டேன், சொல்லு என் அம்மா எங்க?” எனக் கேட்டான்.

எப்படி சொல்வதென பூவை தடுமாற, “ஷியாமிகிட்ட கொடு” என்றான்.

“அவ அழுதிட்டு இருக்கா உதய்” என்ற பூவையும் உடைந்து போய் அழ, உதய்யின் விழிகளில் கண்ணீர் சுரந்து வழிந்தது.

“எப்ப எப்படி?” உடைந்து போன குரலில் கேட்டான்.

நடந்ததை சொன்னவள், “ஈவ்னிங்கே முடியலை போல உதய், நான் இங்க வந்தப்பவே…” என முடிக்காமல் நிறுத்தினாள்.

உதய் பக்கமிருந்து சத்தம் வராமல் போக, “உதய் உதய்…” என அழைத்தாள்.

“ம்ம்..”

“நீங்க எவ்ளோ சீக்கிரம் முடியுமோ வந்திடுங்க” என்றாள்.

குரலை செருமிக் கொண்டவன், “நான் வர்ற வரைக்கும் ஷியாமி கூட இருப்பீல? அவ சின்ன பொண்ணு எதுவும் தெரியாது, இருக்கியா?” என்றான்.

“ப்ச் வாங்க உதய், நான் இங்கதான் இருக்கேன்”

அன்னையின் மீது எத்தனை அன்பு வைத்திருக்கிறான் என தெரியாதவள் இல்லையே பூவை. தனக்கே இப்படியிருக்க அவனது மனநிலை நினைத்துப் பார்த்தவள், “தைரியமா இருங்க உதய்” என்றாள்.

“ம்ம்… நீ அங்கேயே இருந்து பார்த்துக்க” என்றான்.

“மாமாவை பய படுத்தாம வேற ஏதாவது சொல்லி அழைச்சிட்டு வாங்க, இங்க நான் பார்த்துக்கிறேன்” என தைரியம் கொடுத்து வைத்தாள்.

யாருமில்லா காரிடாரில் அப்படியே மடிந்து அமர்ந்த உதய் சுவரில் சாய்ந்து கொண்டான். சொல்லொனா துயரம் சுரீர் என்ற வலியை உண்டாக்க மௌனமாக அம்மா என உள்ளுக்குள் கத்தினான்.

அப்பாவிடம் சொல்லும் தைரியம் இல்லை என்பதை விட அவர் எப்படி தாங்குவார், அம்மா இல்லாத வீட்டில் எப்படி இருப்பது, தங்கைக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றெல்லாம் சிந்தித்து எதையும் எதிர்கொள்ள துணிவின்றி பயந்து போனான். இப்போது இருக்கிமிடம் உணர்ந்து தற்காலிகமாக தன்னை திடப் படுத்திக் கொண்டு எழுந்து நின்றான்.

நாதனிடம் அம்மாவுக்கு முடியவில்லை என மட்டும் சொல்லியிருந்தான். அவர் முன்னிலையில் அழாமல் தன்னை எப்படி கட்டுக்குள் வைத்திருந்தான் என்பது அவனுக்கே வெளிச்சம். சென்னை வந்தடையும் வரை கேள்விகளால் துளைத்தெடுத்தவரை சமாளித்து எப்படியோ சென்னை வந்து சேர அவனுக்கு முன்பே சென்னை வந்தடைந்த சிவா அவர்களை அழைக்க விமான நிலையம் வந்திருந்தான்.

காரில் அமர்ந்த பின்னர்தான் அப்பாவின் கை பிடித்து “அம்மாவை கடைசியா பார்க்க போய்கிட்டிருக்கோம் ப்பா” என்றான் உதய்.

நாதன் சிவாவின் முகத்தை பார்க்க அவன் பரிதாபமாக அவர்களை பார்க்க, “என்னடா ஆச்சு கமலாவுக்கு?” எனக் கேட்டவர் குரல் நடுங்கியது.

“அம்மா அம்மா…” உண்மையை சொல்ல இயலாமல் கண்களில் நீர் வழிய உதய் தன் அப்பாவை பார்த்திருக்க, அவனது கண்ணீரே அவருக்கு விஷயத்தை எடுத்துரைப்பதாக இருந்தது.

ஹோ என கதறி அழ ஆரம்பித்த நாதனை ஆதரவாக அணைத்துக் கொண்டான் உதய்.

என்ன சொல்வதென தெரியாமல் காரை எடுத்தான் சிவா. வீட்டின் முன் ஷாமியானா பந்தல் போட்டு உறவினர்கள் சூழ்ந்திருந்தனர். சிவாவின் கார் வந்ததுமே பாவேந்தன் ஓடி வந்து தடுமாற்றமாக இறங்கிய நாதனை தாங்கிக் கொண்டார். அவரே நாதனின் கை பிடித்து உள்ளே அழைத்து செல்ல, உதய்யோ உள்ளே செல்லாமல் வெளியில் கிடந்த நாற்காலியில் அப்படியே அமர்ந்து விட்டான்.

சிவா அவனை உள்ளே அழைக்க வர மறுத்து அங்கேயே இருந்தான். பாவேந்தனும் வந்து அழைத்து பார்த்தவர் பூவையிடம் சென்று சொன்னார். அழுது அழுது ஓய்ந்து போய் தன் மடியில் தலை வைத்து படுத்திருந்த ஷியாமளாவை அருளரசி வசம் ஒப்படைத்து எழுந்து வந்தாள் பூவை.

உதய் நிலத்தை வெறித்தவாறு அமர்ந்திருக்க, அவன் தோள் தொட்டு “உள்ள வந்து உங்க அம்மாவை பாருங்க உதய்” என்றாள் பூவை.

நீர் நிறைந்த விழிகளால் அவளை ஏறெடுத்து பார்த்தவன், “இது நிஜம்தானா பூவை?” எனக் கேட்டான்.

பூவையால் அப்படி அவனை பார்க்கவே முடியவில்லை. அவளுக்கும் அழுகை வர, “உள்ள வாங்க” என கை பிடித்து அழைத்தாள்.

“இப்படி போய் எப்படி பார்ப்பேன் என் அம்மாவை? எங்கேயும் போயிட்டு நான் வந்தா அவங்கதான் இங்க வாசலுக்கு வந்து என்னை வாடான்னு சொல்வாங்க. வர சொல்லு அவங்களை” என கத்தியவன், எழுந்து நின்று ஆத்திரத்தோடு நாற்காலிகளை தூக்கி போட்டு உடைத்தான்.

“உதய்! என்ன செய்றீங்க கண்ட்ரோல் ஆகுங்க உதய்!” என்ற பூவையின் குரல் அவன் செவிகளை சென்றடையவே இல்லை.

“அம்மா வா வெளில, வரப் போறியா இல்லையா இப்போ. வாம்மா… அம்மா…” என அலற இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதாக கூட சிலர் நினைத்தார்கள்.

சிவா வந்து அவனை பிடித்துக் கொள்ள இன்னும் இருவர் அவனை பிடிக்க எல்லாரையும் பிடித்து தள்ளினான் உதய். பூவை வேகமாக உள்ளே சென்று ஷியாமளாவை அழைத்து வர அவள் “அண்ணா!” என கூவி அழைத்து அவனிடம் ஓடி செல்ல தங்கையை அணைத்துக் கொண்டவன் அதன் பின்தான் சற்றே நிதானமடைந்தான்.

“உன் அண்ணனை உள்ள அழைச்சிட்டு வா” என பூவை கூற ஷியாமிதான் அவன் கை பிடித்து உள்ளே அழைத்து சென்றாள்.

வாழ்க்கை எத்தனை நிரந்தரமற்றது? கமலா மீள முடியாத நித்திரையில் இருக்க அவருக்காக அழுபவர்களை கூட அவரால் காண முடியவில்லையே. தான்தான் எல்லாவற்றிலும் முன்னிலையில் இருக்க வேண்டும் என அதிகார பாவமிக்க கமலா, அடுத்தவர் பற்றி யோசிக்காமல் எதையும் பேசி விடும் கமலா இன்று வெறும் பூத உடல் மட்டுமே.

அந்த வீட்டின் முதலாளியாக இத்தனை வருடங்கள் கோலோச்சி வாழ்ந்தவர் அதே வீட்டில் இருக்க போகும் சொற்ப நிமிடங்களை எண்ணி விடலாம். அவ்வளவுதாங்க வாழ்க்கை!

எல்லாம் முடிந்து மயான கிடங்கிலிருந்து ஆண்கள் வர அதற்குள் குளித்து முடித்திருந்த பூவை, வீட்டு வேலையாள் வைத்து வீடு கழுவி கமலாவை வைத்திருந்த இடத்தில் விளக்கேற்றி வைத்து வேப்பிலை சாறு கிண்ணத்தில் வைத்திருந்தாள். வீட்டு ஆண்கள் குளித்து வந்து விளக்கை வணங்கி திருநீறு இட்டுக் கொள்ள வேப்பிலை சாறை பருக கொடுத்தாள்.

பாவேந்தன் குடும்பம் தவிர மற்றவர்கள் கிளம்பியிருந்தனர். சிவா குளிப்பதற்காக அவன் வீடு சென்றிருந்தான். ஜெயந்தன் காலையிலேயே வந்து மரியாதை செலுத்தி விட்டு உடனே புறப்பட்டிருந்தான். அவனது துணைக்கு சிவா யாரையோ ஏற்பாடு செய்திருக்க புவனா அங்குதான் இருந்தார்.

மீசையும் தலை முடியும் மழிக்கப் பட்டு உதய் என்னவோ போலிருந்தான். பாவேந்தன் முன் நின்று ஓட்டலில் இருந்து வந்திருந்த உணவை அனைவரையும் உண்ண அழைக்க பூவை பரிமாறினாள். பின் பாவேந்தனுக்கு அருள் பரிமாற அவர் பூவையையும் தன்னுடனே அமர்ந்து சாப்பிட செய்தார்.

சோபாவில் கண் மூடி அமர்ந்திருந்த நாதன் மிகவும் தளர்வாக தெரிய பாவேந்தன் அவரை அழைத்து சென்று படுக்க வைத்து அங்கேயே அவர் பக்கத்திலேயே அமர்ந்து ஆறுதலாக பேசிக் கொண்டிருந்தார்.

அருளரசியும் வெண்பாவும் ஷியாமளாவை உறங்க வைத்த பின் அவர்களும் வேறு அறைக்கு உறங்க சென்று விட்டனர்.

அம்மாவை இனி இங்கு இருக்க வேண்டாம் என சொல்லி கால் டாக்சியில் அனுப்பி வைத்த பூவை டைனிங் ஹாலில் அமர்ந்தவாறு தான் இங்கு இருப்பதா கூடாதா என பலமாக சிந்தித்து கொண்டிருந்தாள். அவளை பற்றி தெரிந்தது போல நாதனை உறங்க வைத்திருந்த பாவேந்தன் வந்தார். சரியாக சிவாவும் வந்து சேர்ந்தான்.

“நீ என்ன யோசிக்கிறேன்னு தெரியுதும்மா, நான் சொல்றேன் நீ போக கூடாது” என்றார் பாவேந்தன்.

“ஆமாம் பூவை, இதை சொல்றதுக்கு உன் அண்ணனா எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. உதய்ய பார்க்க வேணாம் நீ. ஷியாமியோட கண்ணு முன்னால அவ அம்மா இறந்து போயிருக்காங்க, அவ மன நிலையையும் திடீர்னு துணையை இழந்திட்டு சின்ன புள்ள மாதிரி தவிக்கிற மாமாவையும் நினைச்சு பாரு. இந்த நிலையில இவங்கள விட்டுட்டு நீ போவியா? உன் மனசாட்சி அதுக்கு இடம் தருமா?” என சிவா கேட்க அவனுக்கு பின்னால் பார்த்தாள் பூவை.

எப்போது வந்தான் என தெரியவில்லை, உதய் நின்றிருந்தான். அமைதியாக நடந்து இவர்கள் அருகில் வந்தவன் எதுவும் சொல்லாமல் கண்ணாடி ஜக்கிலிருந்து குவளைக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டவன் மடக் மடக் என குடித்து விட்டு பூவையை வெறித்து பார்த்தான்.

பார்வையே சரியில்லையே… நீ உடனிருந்து என் அம்மாவை பார்க்காமல் போனாய் என கிறுக்கு தனமாக ஏதாவது சண்டை போடப் போகிறானோ என பயந்து போய் பாவேந்தனும் சிவாவும் கலவரமாக பார்த்திருக்க பூவைக்கு அந்த பயமெல்லாம் இல்லாமல் நேராக அவனை பார்த்து நின்றாள். ஒன்றும் சொல்லாமல் திரும்பியவன் நிதானமாக நடந்து அவனது அறைக்கு சென்றான்.

“எப்படியும் நான் இருப்பேன் நீங்க சம்மதிக்க வைப்பீங்கன்னு அவருக்கு தெரிஞ்சிருக்கு, அதான் என்கிட்ட ஒண்ணும் சொல்லாம போறார். இருன்னு சொல்ல வாய் வருதா பாருங்க அவருக்கு… இருந்தாலும் இவ்ளோ ஆணவம் இவருக்கு ஆகாது அண்ணா” என்றாள் பூவை.

“அவன் பார்வையே அப்படித்தான் பூவை. நான்தான் அவனை பார்க்காத சொன்னேன்ல” சமாதானமாக சொன்னான் சிவா.

“நீ இருப்பா” என சிவாவிடம் சொன்ன பாவேந்தன், “பூவை, நான் உன்கிட்ட எதுவும் கேட்டதில்லை. இப்படி கேட்கிறேன்னு என்னை கேவலமா கூட நினைச்சுக்கோ, ஆனா நான் கேட்கிறது செய்யணும்” என பாவேந்தன் சொல்ல பூவை கலவரமாக அவரை பார்த்தாள்.

“இந்த வீட்லேர்ந்து என் அக்காவாலதானே நீ வெளியேறின, இன்னைக்கு என் அக்காவே உன்னை திரும்ப இங்க வர வச்சிருக்கு. நான் அப்படித்தான் நினைக்கிறேன்” என்றவர் சிறு இடைவெளி விட்டு, “அவன் கூட சண்டை போடுவியோ இல்ல அவன் மண்டையதான் உடைப்பியோ… நான் உனக்கு செஞ்சதுக்கு உபகாரமா இங்க இருந்து… இந்த வீட்டு மருமகளா இருந்து என்ன செய்யணுமோ செய்” என்க பூவை திகைப்பாக பார்த்தாள்.

பாவேந்தன் கைகளை குவிக்க போக சட்டென அவர் கைகளை பற்றிக் கொண்டவள், “உங்க வார்த்தையை மீற மாட்டேன் சார்” என்றாள்.

Advertisement