Advertisement

நீ என் காதல் புன்னகை -14(1)

அத்தியாயம் -14(1)

ஜெயந்தனை சென்னையில் இருக்கும் பிரபலமான எலும்பு முறிவு மருத்துவரிடம் காண்பிக்க ஏற்பாடு செய்து கொடுத்த சிவா அவனே அவனது காரில் மருத்துவமனை அழைத்து வந்திருந்தான்.

இன்னுமொரு அறுவை சிகிச்சை செய்தால் ஜெயந்தன் நன்றாக நடக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவர் கூற பூவையும் எப்பொழுது செய்யலாம் என விவரங்கள் கேட்டுக் கொண்டு பின் சிவாவின் காரிலேயே வீட்டிற்கு வந்தனர்.

புவனா காபி கலந்து சிவாவுக்கு கொடுத்தார்.

“ஜெயந்தன் நல்லா நடக்க வாய்ப்பிருக்குன்னு சொல்லிட்டாங்களே. கவலை படாதீங்கம்மா” என்றான் சிவா.

“என்ன நடந்தாலும் பார்வை வரப் போறதில்லதானே தம்பி? என்ன வேலை பார்த்து பொழைப்பான்? எந்த பொண்ணு இவனை கல்யாணம் செய்யும்?” என வருத்தமாக கேட்டுக் கொண்டே உள்ளே சென்று விட்டார் புவனா.

“அம்மா எப்பவும் புலம்பல்தான். நீங்க காபி சாப்பிடுங்க ண்ணா” என்றாள் பூவை.

“அவங்க கவலையும் நியாயம்தானேம்மா. என்ன செய்யலாம்னு இருக்க நீ?” காபி பருகிக் கொண்டே கேட்டான்.

“அவனுக்குன்னு இடம் இருக்கு அண்ணா, அதை வித்து அந்த பணத்துல அவனுக்கு செய்ய முடிஞ்ச மாதிரி தொழில் வச்சு கொடுக்க நினைச்சிருக்கேன். முதல்ல அண்ணனை நல்லா நடக்க வைக்கணும். இந்த லக்ஷ்மன் என்னன்னா வா ரெவின்யூ கோர்ட்கு போலாம், அங்க பேசலாம்னு சொல்லி இடப் பத்திரத்தை இன்னும் தராம இழுத்தடிக்கிறான்” என்றாள்.

“நான் உதய்கிட்ட சொல்லவா ம்மா? கிறுக்குத்தனம் செய்றவனுக்கெல்லாம் அவன்தான் லாயக்கு”

“உதய்க்கு எதுவும் சொல்றதா இருந்தா நானே சொல்லிக்க மாட்டேனா ண்ணா? அவர் உதவில கிடைக்கிற எதுவும் எனக்கு வேணாம் அண்ணா. முத அவர் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்க ஏற்பாடு செய்யணும்” என்றாள்.

“ரெண்டு பேரும் இன்னும் எவ்ளோ நாள் முட்டி மோதிகிட்டு இருப்பீங்கன்னு பார்க்கிறேன்”என அலுப்பாக சொல்லி சென்ற சிவா அடுத்த நாளே பரந்தாமன் என்ற வக்கீலை காண பூவையை அழைத்து சென்றான்.

“இவர் நான் வேலை பார்த்த கம்பெனியோட லீகல் அட்வைசர் பூவை. உன் பிரச்சனைக்கு இவர் யோசனை சொல்வார்” என செல்லும் வழியிலேயே அவரை பற்றி எல்லாம் கூறினான்.

லக்ஷ்மன் செய்ததை பூவை விளக்கமாக சொல்ல எல்லாம் கேட்டுக் கொண்ட பரந்தாமன், “இது பெரிய விஷயமே இல்லை மா. பொதுவா நம்ம சட்டம் குத்தகை தாரர்களுக்கு ஃபேவர் பண்றது போலத்தான் இருக்கும். சட்டுனு அவங்கள வெளில போக சொல்ல முடியாது. முத்திரை தாள் ஒப்பந்தம் கூட அவசியமில்லை, வெறும் வெள்ளை தாள்ல போட்ட ஒப்பந்தம் கூட செல்லும். சிவில் கோர்ட் போகாம ரெவின்யூ கோர்ட்லேயே பேசிக்கலாம்” என்றார்.

“இதையெல்லாம் சொல்லித்தான் சார் தர மாட்டேன், நேர்ல வா பேசிக்கலாம்னு சொல்றான். அந்த இடத்தை குறைஞ்ச தொகைக்கு அவனே வாங்கிக்கலாம்னு திட்டம் போடுறான்” என்றாள்.

“சட்டம் குத்தகைதாரருக்கு ஃபேவர் பண்ணுதுன்னா உரிமையாளருக்கு பாதிப்பு ஏற்படுத்துதுன்னு அர்த்தம் இல்ல. சரியான லாபம் வந்தும் ஒப்பந்த தொகை கொடுக்காமலோ அந்த இடத்தை மிஸ்யூஸ் செய்தாலோ குத்தகை காலம் முடிஞ்சு கால அவகாசம் கொடுத்த அப்புறமும் வெளியேறாம போனாலோ இல்ல அந்த இடம் உரிமையாளரோடது இல்லன்னு மறுத்தாலோ உரிமையாளர் பக்கம் தீர்ப்பாகும். நீங்களும் உடனே ஒண்ணும் வெளியேற சொல்லலையே, தேவையான டைம் கொடுத்திருக்கீங்களே. இடப் பத்திரம் அடமானம் வச்சிருக்கிற விஷயம் ஒண்ணு போதும்” என்றார்.

பூவை கண்கள் மிளிர பார்க்க, “கவலை படாதீங்க அலறி அடிச்சுக்கிட்டு அவனே பத்திரத்தை கொண்டு வந்து தருவான். இல்லன்னாலும் ரெவின்யூ கோர்ட்க்கே தைரியமா போங்க, உங்க பக்கம்தான் தீர்ப்பு கொடுப்பாங்க” என்றார்.

நம்பிக்கை வரப் பெற்றவளாக என்ன செய்யலாம் என பூவை கேட்க, தானே பார்த்துக் கொள்வதாக சொன்ன பரந்தாமன் சில விவரங்கள் மட்டும் கேட்டுக் கொண்டார்.

அன்றைய நாளிதழ்களில் வந்திருந்த விளம்பரம் பார்த்து லக்ஷ்மனின் முகம் அவமானத்தில் சிறுத்து போனது.

அதாவது இடத்தை பற்றிய விவரங்கள் போட்டு அந்த இடத்தின் மீது லக்ஷ்மன் என்பவருக்கு எவ்வித உரிமையும் கிடையாது. எனது கட்சிக் காரர் புவனாவின் பெயரில் இருக்கும் நிலத்தை குத்தகையாக பெற்று அதில் லாபம் பெற்றும் குத்தகை தொகையை சரிவர செலுத்தாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார். அத்தோடு நில்லாமல் பத்திரத்தை மிரட்டி வாங்கி சென்றிருக்கிறார்.

அது சம்பந்தமாக காவல்துறையில் முறையாக புகார் அளிக்கப்பட உள்ளது. அந்த இடம் மீது அவருக்கு எந்த வித உரிமையும் இல்லையாதலால் அந்த இடப் பத்திரம் நம்பி யாரும் கடன் தந்திருந்தால் அதற்கு என் கட்சிக் காரர் பொறுப்பேற்க மாட்டார் என லக்ஷ்மன் பெயர், அவனது உரக் கடை மற்றும் வீட்டு விலாசம் எல்லாம் தெளிவாக போட்டு தமிழில் வெளிவரும் முக்கிய நாளிதழ்களில் எல்லாம் அரைப் பக்கத்துக்கு விளம்பரம் வந்திருக்க அவனுக்கு நாக்கை பிடுங்கிக் கொள்ளலாம் போலிருந்தது.

இப்போதுதான் அவனது அன்னை சாந்தா அவனுக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்க எப்படி நல்ல இடமாக அமையும்? என அவர் வேறு சத்தம் போட்டார். இந்த விளம்பரத்தை விட வேறு ஒன்று அவனை பயமடைய செய்திருந்தது. பத்திரத்தை இன்னும் திருப்பி தராமல் இழுத்தடித்தால் எந்த அளவுக்கு தன் நிலை மோசமடையுமோ என பயந்து போனான் லக்ஷ்மன்.

கடன் கொடுத்த நபர் வேறு காச் மூச் என்று கத்த உடனடியாக பணம் புரட்டி பத்திரத்தை மீட்டுக் கொண்டு பூவைக்கு அழைத்து தன்னிடம் வந்து வாங்கிக் கொள்ளும்படி சொன்னான். காரணம் என்னவென்றால் சென்னை செல்லவே அவனுக்கு அத்தனை பயமாக இருந்தது. அந்த பயத்திற்கு காரணம் அங்கு சென்றால் உதய்யை சந்திக்க நேரிடுமோ என்பதுதான்.

சிவாவுக்கு அழைத்து பூவை விஷயம் சொல்ல, “நீ போக வேணாம் மா, நான் வேற வேலையா கும்பகோணம் வரை வந்தேன், நானே போய் வாங்கிக்கிறேன். என்கிட்ட தர சொல்லி அவனுக்கு சொல்லிடு” என சொல்லி விட்டான்.

பத்திரத்தை வாங்கி வந்த சிவா அதை பூவையிடம் ஒப்படைக்க, வாங்கி சரி பார்த்து விட்டு சிவாவிடமே திரும்ப கொடுத்து உதய் கொடுத்த பணத்திற்கு ஈடாக அவனிடமே ஒப்படைக்க சொன்னாள்.

“என்ன பூவை இது? ஏதோ சாதாரண சண்டைனு நினைச்சா அவன் வந்து ஒரு மாசமாகியும் இன்னும் பிரிஞ்சே இருக்கீங்க? எப்ப சரியாகும் உங்க பிரச்சனை?” அக்கறையாக கேட்டான் சிவா.

“வேற பேசுங்கண்ணா. நீங்க உங்க விஷயத்தை இன்னும் அவர்கிட்ட சொல்லலையா?”

“எங்கம்மா… எப்ப பாரு உர்ருன்னு இருக்கான். இப்ப போய் எப்படி சொல்றது? இன்னும் ஷியாமி படிப்பு முடியலைதானே? அப்புறம் பார்த்துக்கலாம்” என்றான்.

“அவருக்கா தெரிஞ்சா கோவ பட போறார் ண்ணா”

“அது அப்ப பார்த்துக்கலாம்”

“ஹ்ம்ம்… மறக்காம இதை கொடுத்திடுங்க” என சொல்லி சென்று விட்டாள்.

உதய்யிடம் அந்த பத்திரத்தை சிவா கொடுக்க அவன் கேள்வியாக பார்த்தான்.

“கல்யாணத்தப்போ நீ அஞ்சு லட்சம் பணம் கொடுத்திருந்தியாம்? இது அவங்க இடப் பத்திரம், பணம் திருப்பி தற்ற வரைக்கும் இதை உன்கிட்ட அடமானமா வைக்குது பூவை” என்றான் சிவா.

தாடையை தடவிக் கொண்டே சிவாவை நக்கலாக பார்த்தவன், “நீ என் ஃப்ரெண்ட்தானே டா மடையா, நீ ஹெல்ப் பண்ணினா மட்டும் ஏத்துப்பாளாமா அந்த சுயமரியாதை சிங்கம்?” எனக் கேட்டான்.

“நான் பூவையோட அண்ணனாகி ரொம்ப நாளாச்சு. அதனால நான் ஹெல்ப் செய்யலாம், சொல்லப் போனா என் தங்கச்சிகிட்ட என்ன வம்பு பண்ணி தொலைச்சேன்னு உன் சட்டையை பிடிச்சு கேள்வி கேட்க கூட எனக்கு ரைட்ஸ் இருக்குடா மவனே” என்றான் சிவா.

“ஓஹ் நீ அவன் அண்ணனா… வாடா அவளுக்கு எங்கேர்ந்து இவ்ளோ ஏத்தம் வந்துச்சுன்னு இப்போதானே தெரியுது. அண்ணனா புத்திமதி சொல்லி புருஷன் வீட்டுக்கு அனுப்பி வைக்க துப்பு இல்லாதவன் என் சட்டையை பிடிப்பியா? எங்க பிடிடா… என் சட்டையை பிடிடா பார்க்கிறேன் ராஸ்கல்!” விடைத்துக் கொண்டு சிவாவை மோதுவது போல வந்தான் உதய்.

“இந்தா பாருடா ஐ க்நோ ஐ க்நோ சொல்ற ரகுவரன் இப்போ இல்லேன்னாலும் அந்த கேரக்டரோட க்ளோனிங் நீதான்னு அப்பப்ப நிரூபிக்காத. உன் பாடி பில்டிங் எல்லாம் காட்டி மிரட்டினா பூவைகிட்ட போய் இவன் ரகுவரன் மட்டுமில்லை மா, நம்பியார், அசோகன்லேர்ந்து அர்ஜுன் தாஸ் வரை பிச்சு பிச்சு செஞ்சு வச்ச கலவைன்னு உன்னை பத்தி இன்னும் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி ரெண்டு பேருக்கு இடையிலேயும் பெரிய சுவர் எழுப்பி விட்ருவேன். மரியாதையா இந்த பத்திரத்தை பிடி” என்றான் சிவா.

உதய் கொலை வெறியோடு அவனை பார்க்க, “என் வாழ்க்கையில நான் செஞ்ச மகா பெரிய தப்பு உனக்கு ஃப்ரெண்ட் ஆகி தொலைச்சதுதான். எப்படியெல்லாம் என் உயிரை வாங்குற நீ? கடுப்பேத்தாம வாங்கி தொலையேன்டா” என சிவா கத்த, பின் ஒன்றும் சொல்லாமல் பத்திரத்தை வாங்கி வைத்துக் கொண்டான் உதய்.

“என்னடா பொசுக்குன்னு ஒண்ணும் சொல்லாம வாங்கி வச்சுக்கிட்ட?”

“என்ன சொல்ல சொல்ற? அந்த வீம்பு பிடிச்சவ எவ்ளோ தூரம் போறான்னு பார்க்கிறேன். லோன் ஷேங்ஷன் ஆக நாம இன்னும் கொஞ்சம் வேலை முடிச்சு வச்சிருக்கணும். நேர்ல வந்து பார்த்திட்டுதான் ஷேங்ஷன் பண்ணுவாங்க. அதை என்னன்னு பாரு”

“இடையில இந்த கார்ப்பரேஷன் ஆளுங்க வேற இத்தனை ஆழம் ஏன் நோண்டுனீங்க அது ஏன் அப்படி இது ஏன் இப்படின்னு ரொம்ப பிரச்சனை செய்றானுங்க. லம்பா எதிர்பார்க்கிறானுங்க போல. அப்பா அவருக்கு தெரிஞ்ச மினிஸ்டர் மூலம் மூவ் பண்ணலாம்னு சொன்னார், அது என்னன்னு பார்க்கணும்” என சொல்ல சிவாவும் அதற்கு மேல் பூவை பற்றி பேசவில்லை.

ஜெயந்தனுக்கு அறுவை சிகிச்சை ஏற்பாடாகியிருக்க சிவாவிடம் எப்படி உதவி கேட்டுக் கொண்டே இருப்பது என பூவை தயங்க அவள் கேட்கும் படியே வைக்கவில்லை சிவா. ஜெயந்தன் நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருக்க புவனாவுடன் சிவாதான் துணைக்கு இருந்தான். ஜெயந்தனை வீட்டில் விட்ட பிறகுதான் அவனது வேலைகளை கவனிக்க சென்றான் சிவா.

ஜெயந்தனை பார்க்க வீட்டுக்கு வந்த நாதன் நலன் விசாரித்து விட்டு பூவையிடம் நேரடியாக “எப்பம்மா வருவ நம்ம வீட்டுக்கு?” எனக் கேட்டார்.

“தர்ம சங்கடம் செய்யாதீங்க மாமா. உங்க மகனை விட்டுக் கொடுக்கவும் முடியாம முழு மனசா ஏத்துக்கவும் முடியாம நான் ரொம்பவே தடுமாறிட்டுதான் இருக்கேன். வீம்பு பிடிக்கிறேன்னு நீங்களும் நினைக்காதீங்க மாமா. இப்படியே விடுங்க, சரியாகுறப்போ ஆகட்டும்” என்றாள்.

“உதய்க்கு கொஞ்சமும் குறைஞ்சது இல்லம்மா உன் பிடிவாதம். ஆனாலும் ரெண்டு பேருமே ஏதோ ஒரு வகையில ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுத்துக்காமத்தான் இருக்கீங்க. அது ஒன்னுதான் இப்ப எனக்கு ஆறுதலா இருக்கு” என சொல்லி கிளம்பி விட்டார்.

‘அவர் என்ன என்னை விட்டு கொடுக்காம இருக்காறாம்? சும்மா அவர் பையன்னு அடிச்சி விட்டுட்டு போறார்’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் பூவை.

முன்னர் உடன் பிறப்பு என்ற பாசம் ஜெயந்தன் மீது இருந்தது. இப்போதெல்லாம் தன்னை கொண்டல்லவா இவனுக்கு இப்படி ஆகி விட்டது என்ற குற்ற உணர்ச்சியும் சேர்ந்து கொள்ள ஜெயந்தன் வாழ்வை சீர் படுத்தா விட்டால் தனக்கு நிம்மதியே இல்லை என்பது போல அண்ணனை பற்றி தீவிரமாக சிந்தித்தாள் பூவை.

ஐந்து லட்சம் பணத்திற்கு வட்டி போட்டு உதய்யிடம் கொடுத்து பத்திரத்தை மீட்க வேண்டும். இடத்தை நல்ல விலைக்கு விற்று ஜெயந்தனுக்கு நல் வாழ்வு அமைத்து தர வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தாள்.

கட்டுமான பணிகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான் உதய்.

உதய்யின் தொழிற்கடன் உறுதியாகி இருக்க அதற்காக வங்கிக்கு வந்தான் உதய். வாடிக்கையாளர் எனும் நிலையில் வைத்தே பூவை அவனிடம் பேச அவனும் இன்னும் முறுக்கிக் கொண்டு வேறு பேசாமல் வந்த வேலையை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

ஒருவரை ஒருவர் தெரிந்தது போல கூட காட்டிக் கொள்ளா விட்டாலும் இருவரது மனதின் புலம்பல்கள் உள் கூட்டில் ஓங்காரமிட்டுக் கொண்டே இருந்தன.

Advertisement