Advertisement

நீ என் காதல் புன்னகை -13(2)

அத்தியாயம் -13(2)

அன்று காலை பதினோரு மணி அளவில் வங்கி பர பரப்பாக இயங்கிக் கொண்டிருக்க உதய் வந்திருந்தான்.

பூவையை பிரிந்து வாடுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் மிடுக்காக எப்போதும் போல அலட்சிய பார்வைக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லாமல் அவள் முன் வந்தமர்ந்தான்.

“இங்க எதுக்கு வர்றீங்க?” எடுத்த உடன் கோவமாக கேட்டாள் பூவை.

“பேங்க் என்ன உன் பாட்டன் வூட்டு பிராப்பர்டியா? உன்னை வீட்டுக்கு வர சொல்லி நேர்லேயே வந்து கேட்டுட்டேன். என்னமோ நான்தான் பெரிய கொலை குத்தம் செய்த மாதிரி முறுக்கிட்டு இருக்க, எவ்ளோ முடியுமோ அவ்ளோ முறுக்கிக்க. இனியும் உன் பின்னாடி வர நானொன்னும் வெட்கங்கெட்டவன் இல்ல” என்றான்.

“அப்புறம் எதுக்கு இங்க வந்திருக்கீங்க?”

“சும்மா மூஞ்சூறு மாதிரி மூஞ்சை காட்டாத. பேங்க்ல கஸ்டமர் சர்வீஸ் சரியில்லன்னு மெயில் அனுப்பிடுவேன்” என்றான்.

“எங்க மெயில் பண்ணனும்னு தெரியுமா? தெரியலைன்னா மெயில் ஐ டி நானே தர்றேன், சரியா அனுப்புங்க” என தோரணையாக சொன்னாள்.

“திமிர் குறையவே இல்லைல உனக்கு? இருக்கட்டும் இருக்கட்டும். இன்னும் ஏறிக்கிட்டே போகட்டும், ஒரு நாள் மொத்தமா வச்சு செய்றேன்”

“உங்க காசுல தின்னு ஒண்ணும் என் திமிர் ஏறல, என் திமிர் குறைக்கிற அளவுக்கு நீங்களும் பெரிய சண்டியர் இல்ல. உங்க மூஞ்சு பார்த்தாலே பத்திக்கிட்டு வருது, எதுக்கு வந்தீங்க இங்க?”

“ஹாஹான் பத்திக்கிட்டு வருதா? வரும் வரும்… எனக்கு மட்டும் உன் முகர கட்டைய பார்க்க ஆசைன்னு நினைச்சியா? என் லோன் வாங்குறதுக்கு உன் முசுட்டு முகத்தைத்தான் வந்து பார்க்க சொன்னாங்க, முடிஞ்சா அட்டெண்ட் பண்ணு, இல்லன்னா மேனேஜர் பார்த்துக்கிறேன் நான்” என்றான்.

அவன் நிஜமாகவவே கடன் பெறுவது தொடர்பாகத்தான் வந்திருக்கிறான் என புரிந்து விவரங்கள் கேட்டாள். அவன் கொடுத்த திட்ட அறிக்கையை வாங்கி மேலோட்டமாக பார்த்து விட்டு அவளிடமே வைத்துக் கொண்டாள். அவனது கன்ஷ்ட்ரக்ஷன்ஸ் ஆரம்பிக்க அரசு அனுமதி கொடுத்ததற்கான சான்றிதழை வாங்கி சரி பார்த்தாள்.

கடன் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் எடுத்து அவனிடம் கொடுத்தவள், “உங்க பிளான் அப்ரூவ் ஆகிடும்னுதான் நினைக்கிறேன். ஃபார்ம்ஸ் பில் பண்ணி கொடுங்க. வாங்குற கடனுக்கு ஃபிஃப்டி பெர்சன்ட் செக்யூரிட்டிக்கு யாராவது சைன் பண்ணனும், இல்லன்னா கொலாட்ரல் செக்யூரிட்டி வேணும். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்றாள்.

“என்னா செக்யூரிட்டி?”

“அது நீங்க வாங்குற கடனுக்கு ஈடா ஏதாவது அசையா சொத்து அடமானமா வைக்கிறது. நல்லா தெரிஞ்சுக்கோங்க விவசாய நிலம் அடமானமா ஏத்துக்க மாட்டோம்”

“ஏன்?”

“அது… சர்ஃபேசி(SARFAESI) ங்கிற சட்டப் படி கடன் திருப்பி செலுத்த முடியலைன்னா நீதிமன்றத்தோட தலையீடு இல்லாம அடமானமா இருக்கிற சொத்தை ஏலத்துக்கு விட்டு கடன் தொகையை நாங்க ரெகவர் பண்ணிப்போம். ஆனா இந்த சட்டப்படி விவசாய நிலத்தை ஏலம் விட முடியாது”

“ஆஹா! விவசாயம் மேல ரொம்ப அக்கறைதான்” நக்கலாக சொன்னவன், “ம்ம்… அப்புறம் என்ன செய்யணும்?” எனக் கேட்டான்.

“அடமானம் வைக்கிற சொத்து உங்களோடதுதானா, வில்லங்கம் எதுவும் இல்லாம இருக்கா அப்படின்னு லாயரோட லீகல் ஒப்பீனியன் வேணும். அடமானமா வைக்கிற சொத்தோட வால்யூ என்னன்னு வேல்யூயேஷன் ரிப்போர்ட்ம் வேணும். கவர்மெண்ட் கைடு லைன் வேல்யூ, இன்னைக்கு மார்க்கெட் வேல்யூ அப்புறம் டிஸ்ட்ரெஸ் சேல் வேல்யூ(distress sale value) எல்லாமே ரிப்போர்ட்ல வேணும். டிஸ்ட்ரெஸ் வேல்யூன்னா…”

“அவசரத்துக்கு அந்த சொத்தை வித்தா குறைந்தபட்சம் என்ன விலைக்கு போகும்ங்கிறது… நான் கேட்கிற டவுட்ஸ்க்கு மட்டும் பதில் சொன்னா போதும். ஒரேயடியா என்னை தத்தியாக்காத” என்றான்.

“உங்களுக்கு தெரியுதோ இல்லையோ எல்லாத்தையும் சொல்ல வேண்டியது என் கடமை”

“ஹ்ம்ம்… மிச்ச கடமையும் ஆத்து” என உதய் சொல்ல பூவை முறைத்தாள்.

“நான் என்ன காபி டீயா ஆத்தி தர சொன்னேன். கடமையாத்தும்மான்னா காளியாத்தா மாதிரி பார்க்கிற”

“நீங்க செஞ்சது செய்றது எல்லாத்தையும் அந்த காளியாத்தா பார்த்துகிட்டுதான் இருக்கா உதய்”

“ம்ம்… நல்லா பார்க்கட்டும். நீ சாமியாடாம மேல சொல்லு” அலட்சியமாக சொன்னான்.

அவன் பேசுவது பூவைக்கு எரிச்சல் வரவழைத்தாலும் அவளது பணி நிமித்தம் ஒன்றும் சொல்ல முடியாமல் விவரங்கள் சொன்னாள்.

“லீகல் ஒப்பீனியன் உங்க பெர்சனல் வக்கீல்கிட்ட வாங்க கூடாது, நாங்க சொல்ற வக்கீல்கிட்டத்தான் வாங்கணும். அதே போல நாங்க சொல்ற வேல்யூயேட்டர் தர்ற ரிப்போர்ட்தான் அக்செப்ட் பண்ணிப்போம்”

“டைட்டில் வெரிஃபிகேஷன் ரிப்போர்ட் வந்த பிறகுதான் லோன் பிராசஸ் பண்ண முடியும். மொத்த அமௌன்ட் ஒரே தவணையில தர மாட்டோம். எங்க பேங்க்கு வேலை பார்க்கிற தேர்ட் பார்ட்டி உங்க சைட் வந்து நடந்திட்டிருக்கிற ஒர்க் பிராசஸ் செக் பண்ணுவாங்க. அவங்க ரிப்போர்ட் வச்சுத்தான் கொஞ்சம் கொஞ்சமா அமௌன்ட் ரிலீஸ் பண்ணுவோம், அப்படியே நீங்க ஒரு இன்சூரன்ஸ் போடற மாதிரி இருக்கும்”

“ஷப்பா… ஒரு வேளை நானும் ஆயிரம் கோடிக்கு மேல கடன் வாங்கினா இதெல்லாம் இல்லாம கூழை கும்பிடு போட்டுக்கிட்டு ஈஸியா கடன் கொடுப்பீங்களோ?”

“ஆமாம் இவர் ரொம்ப நேர்மையானவர்ல… அப்போ இப்படித்தான் குறுக்கு புத்தி போகும். ஆயிரம் கோடி வாங்கிட்டு எங்க ஓடலாம்னு இருக்கீங்க?”

“ஓடி ஒளியரவனா நான்? எது செஞ்சாலும் ஆமாம் நான்தான் செஞ்சேன்னு தில்லா சொல்றவன் டி நான். கொஞ்சமா உன்னை விட்டு பிடிக்கிறேன், இல்லன்னா…” சொல்லாமல் அவளை பார்த்து நக்கலாக சிரித்து கண்களை கண்ட மேனிக்கு அவளது மேனியில் அலைய விட்டான்.

“இல்லன்னா… இல்லன்னா என்ன செய்வீங்க?”

“விடு என்ன இருந்தாலும் ஆஃபீஸ்ல போய் உன் முகம் வெட்கத்துல சிவந்தா நல்லா இருக்காது” என்றவன் நாற்காலியிலிருந்து முன்னே நகர்ந்து சின்ன குரலில், “அந்த வெட்கமெல்லாம் நான் பார்த்து ரசிக்க மட்டும்தான் பூவை” என்றான்.

பூவையின் முகம் கோவத்தில் சிவக்க, முன் போலவே சாய்ந்து அமர்ந்து “கரோலீனா ரீப்பர் சில்லி சாப்பிட்ட சைனாக்காரி மாதிரி இருக்க இப்போ. ரிலாக்ஸ் ஆவு. என் லோன் என்னன்னு பார்த்து முடிச்சு விடு” என்றான்.

“அவ்ளோதான்! இந்த ஃபாரம் பில் பண்ணிட்டு கேட்ருக்க மத்த சர்டிஃபிகேட்ஸ் அண்ட் ப்ரூஃப் எல்லாம் சப்மிட் பண்ணுங்க” என்றாள்.

அவனும் இன்னும் சில சந்தேகங்கள் கேட்டுக் கொண்டு கிளம்பி விட்டான். போகும் போது திரும்பி ஒரு பார்வை கூட பார்க்காமல் அவன் செல்ல இவளுக்குத்தான் உள்ளுக்குள் எதுவோ துடித்தது.

இவன் ஏன் அப்படி செய்தான்? இவனை ஏன் நான் சந்திச்சேன், இவனை ஏன் எனக்கு பிடிச்சு தொலைச்சுது? இவன் ஏன் நல்லவன் இல்லாம போனான்? என் நிம்மதி ஏன் போச்சு? என அவளுள் அடுக்கடுக்காக கேள்விகள் எழ எதற்கும் பதில்கள்தான் தெரியவில்லை.

இரண்டு நாட்களில் லோன் வாங்க எல்லாம் தயார் செய்து கொண்டு வந்திருந்தான். பூவையே கவனமெடுத்து பார்த்து சிலவற்றை சரி செய்ய சொன்னாள்.

“ஏய் நீயே செய்யேன், இதெல்லாம் செம கடியா இருக்கு” என்றான்.

“இங்க நான் உங்க பொண்டாட்டி இல்ல” என கடுப்படித்தாள் பூவை.

“தனி தனியா இருந்தாலும் உறவு ஒண்ணும் மாறாது. இங்கன்னு இல்ல ஐ நா சபைக்கே நீ லீடர் ஆனாலும் நீதான் என் பொண்டாட்டி”

“என்னை கோவப்படுத்தாம இதெல்லாம் கரெக்ட் செஞ்சிட்டு வாங்க உதய்” பொறுமையாகவே சொன்னாள் பூவை.

“எனக்கு தெரியல, நீயே சரி செஞ்சா என்ன இப்போ குறைஞ்சு போக போற? இதுதான் உங்க கஸ்டமர் சர்வீஸ் லட்சணமா?”

“ஹெல்ப் டெஸ்க்னு தனியா இருக்கு, அங்க போங்களேன். எனக்கு வேற வேலை இருக்கு” என்றாள்.

“எங்கேயும் போக முடியாது, மத்தவங்களுக்குத்தான் ஹெல்ப் டெஸ்க், எனக்கு நீ செய்யலாம், நீயே பாரு” என அதிகாரமாக சொன்னவன் இருக்கையில் சட்டமாக அமர்ந்து கொள்ள, “சீரியஸா வேற வேலை இருக்கு உதய். நான் வேணும்னா ஃப்ரீ ஆகிட்டு பார்க்கிறேன். நீங்க வெயிட் பண்ணுங்க” என்றாள்.

“எவ்ளோ நாள் டி வெயிட் பண்றது?” என உதய் ஆழமான குரலில் கேட்க அவனை நிமிர்ந்து கூர்ந்து பார்த்தாள்.

“நீங்க செஞ்சது மன்னிக்க முடியாத தப்பு உதய்”

“எனக்கு அப்படி தெரியல, என்னை மன்னிக்காட்டாலும் பரவாயில்லை. அங்க வந்து என்கூட இரேன்”

“உங்களுக்கு உங்களை பத்தின நினைப்பு மட்டும்தானே… என் அண்ணனை நினைச்சு பார்த்தீங்களா?”

“பார்வை வரும்னு தெரிஞ்சா எவ்ளோ வேணும்னாலும் செலவு செய்து பார்க்கலாம் பூவை. நான் வேற என்ன செய்ய முடியும்? கண்டிப்பா ஏதாவது அவனுக்கு ஏற்பாடு பண்றேன். அதுக்காக நீ ஏன் அங்கேயே இருக்க? உன்னை கல்யாணம் செய்யத்தானே அப்படி செஞ்சேன்?”

“என் கூட இருந்து உன் அண்ணனுக்கு செய்ய வேண்டியதை நாம சேர்ந்து செய்யலாம். அம்மாக்கு கொஞ்சம் உடம்பு முடியலை, பிரஷர் ரொம்ப கூடி போய் ரெண்டு நாள் ஹாஸ்பிடல்ல வச்சு பார்த்தேன். நீ வரலைங்கவும் அவங்களுக்கும் ஃபீல் ஆகுது, இனிமே தப்பா எல்லாம் பேச மாட்டாங்க. ஷியாமி சின்ன பொண்ணு, அவளால எப்படி குடும்பத்தை பார்க்க முடியும்? இப்படி உன் குடும்ப பொறுப்பை தட்டி கழிச்சிட்டு உன் அம்மா கூட போய் இருப்பியா? யோசிச்சு பாரு பூவை”

“லோன் பேப்பர்ஸ் ரெடியானதும் கால் பண்றேன், நீங்க கிளம்பலாம்” என இறுக்கமான முகத்தோடு கூறினாள் பூவை.

உதடுகளை ஒரு பக்கமாக வளைத்து, “இந்த உதய் இறங்கி போகவும் ரொம்ப அலட்சிய படுத்துறீல… இனிமே வான்னு உன்னை கூப்பிட்டேன் உன் கால்ல கிடக்கிறது வச்சு அடிடி” என சொல்லி கோவமாக எழுந்து சென்றான்.

மனம் முழுதும் வேதனை படர இருக்கையில் சாய்ந்து கண் மூடி தன்னை சமன் செய்து கொண்டவள் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.

Advertisement