Advertisement

நீ என் காதல் புன்னகை -13(1)

அத்தியாயம் -13(1)

புவனா பேசிய அடுத்த நாள் காலையிலேயே அக்கா வீட்டிற்கு வந்து நின்றார் பாவேந்தன். திருமணத்தின் போது பார்த்த தம்பி இன்று திடீரென வரவும் ஓரளவு காரணம் புரிய “வாடா” என வரவேற்றார் கமலா.

வந்த உடனே வேறெதுவும் பேசாமல் “உதய் எங்கே?” என அவர் கேட்க அண்ணனை அழைத்து வந்தாள் ஷியாமளா.

மிக சாதாரணமாக வந்தவன் மாமாவை “வாங்க” என அழைத்து விட்டு அவருக்கெதிரே அலட்டிக் கொள்ளாமல் அமர்ந்தான். அப்போதுதான் குளித்து வந்த நாதன் மச்சானை வா என அழைத்து விட்டு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தார்.

“என்னடா நடக்குது இங்க? நல்லா பார்த்துப்பேன்னு நீ சொன்னதால உன் மேல உள்ள நம்பிக்கையில அந்த பொண்ணை கட்டி வச்சேன். இப்படி வீட்டை விட்டே அனுப்பி வச்சிட்டியே” என குற்றம் சாட்டினார்.

“அவ போனப்போ இவன் இங்க இல்லவே இல்லை. தேவையில்லாம அவனை குறை சொல்லாத” என்றார் கமலா.

“நான் அவன்கிட்டதான் பேசுறேன் க்கா. இப்ப உன் தம்பியா இங்க வரலை, பூவை என் பொண்ணு மாதிரி. அவ சார்பாதான் வந்திருக்கேன். நீ எதுவும் பேசக்கூடாது” என பாவேந்தன் தன் அக்காவிடம் கண்டிப்பாக சொல்ல கமலா முறைத்தார்.

மனைவி இங்கு இருந்தால் காரியத்தையே கெடுப்பாள் என பயந்து போன நாதன் கமலாவை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

உதய் அமைதியாக மாமனை பார்த்திருக்க, “பதில் சொல்லுடா” என்றார்.

அப்போதும் அவன் அமைதி காக்க, ஷியாமளா நடந்த அனைத்தையும் மாமனிடம் கூறி, “அண்ணிகிட்ட அம்மா மன்னிப்பு கேட்டா வருவாங்களோ என்னவோ” என்றாள்.

“நான் உன் அம்மா பத்தி சொன்னப்ப அப்படி சிலிர்த்துகிட்ட, இப்ப பார்த்தியா? உதவியா செஞ்சதை நான் கேட்காமலே திருப்பி கொடுத்த பொண்ணை பெத்தவங்கடா அவங்க. உன் அம்மா மோதிரம் நிஜமா காணாம போச்சா? முத அதை விசாரிச்சியா?” எனக் கேட்டார்.

“மாமா!” என அவன் போட்ட சத்தத்தில் ஷியாமளா அரண்டு போய் பாவேந்தன் கையை பிடித்துக் கொண்டாள்.

“அவன் என்னமோ சத்தம் போடுறான், சண்டையாக போகுது, விடுங்க என்னை” என சொல்லி கமலா அறையை விட்டு வெளியேற பார்த்தார்.

“உன் தம்பி பார்த்துப்பான். நீ போனாதான் சண்டை இன்னும் பெருசாகும். சும்மா இங்கேயே இரு” என மனைவியை அங்கேயே சிறை பிடித்தார் நாதன்.

உதய் சத்தத்திற்கெல்லாம் அதிராமல் அவனை அழுத்தமாக பார்த்தார் பாவேந்தன்.

“உங்ககிட்ட முன்னாடி சொன்னதுதான், என் அம்மா பத்தி எதுவும் பேசாதீங்க. யாருக்கும் அந்த உரிமை இல்லை. உங்க பொண்ணு மாதிரின்னு நீங்க சொல்றவளை இங்க வந்திருந்துகிட்டு என் அம்மாகிட்ட நியாயம் கேட்க சொல்லுங்க, நான் வர்ற வரை பொறுமையா இருக்க சொன்னா வீட்டை விட்டு போவாளா அவ?” சீறினான் உதய்.

“அப்புறம் உன் அம்மா பழி சுமத்துறதை பொறுத்துக்கிட்டு இங்கேயே கிடந்திருக்கணுமோ?” நக்கலாக கேட்டார் பாவேந்தன்.

“நான் வந்து கேட்கிறேன்னு சொல்லியிருந்தேன். நான் சென்னை வந்ததும் வர்றேன்னு சொல்லிட்டு போனவ நான் வந்தும் இங்க வந்து சேரலை. இருந்தும் பெரிய மனசு பண்ணி நானே நேர்ல போய் அவளை கூப்பிட்டேன், அவதான் வரலை. என்னன்னு அந்த ராங்கியை போய் கேளுங்க. முடிஞ்சா பேசி இங்க அனுப்பி வைங்க. எனக்கு முக்கியமான வேலை இருக்கு” என்ற உதய், தங்கையை பார்த்து, “மாமாவை நல்லா கவனி ஷியாமி” என சொல்லி கோவமாக வெளியில் சென்று விட்டான்.

பாவேந்தன் மருமகள் முகத்தை பார்க்க நாதனும் வந்தவர் நடந்ததை கேட்டறிந்து கொண்டு, “இவனை பத்தி தெரியாதா? பூவைகிட்ட பேசிப் பாரேன் பாவேந்தா” என்றார்.

“இதெல்லாம் சரியில்லை மாமா, நீங்களுமா அக்கா பேசுறதை பார்த்திட்டு இருந்தீங்க?” குறையாக கேட்டார் பாவேந்தன்.

“ஷியாமியை கேளு, என் பேச்செல்லாம் எடுபடல. ரெண்டு வாரம்தான் சேர்ந்து வாழ்ந்தாங்க, ஆனா அதுவரை நல்லாத்தான் இருந்தாங்கடா. நான் ஹாஸ்டல் போய் கூப்பிட்டப்ப இந்த பய வந்ததும் வர்றேன்னுதான் சொல்லிச்சு. இப்ப என்ன தகராறு நடந்துச்சுன்னு தெரியல. நீ பூவையை எப்படியாவது இங்க அழைச்சிட்டு வந்திடு, அப்புறம் சரியாகிடுவாங்க” என்றார்.

“இவனுக்காக இல்ல மாமா, அந்த பொண்ணு வாழ்க்கை சரியாகனும், அதுக்காக போறேன். ஆனா அக்கா இனி இப்படி பேசாம நீங்கதான் பார்த்துக்கணும்” என்றார்.

“நான் என்ன பார்க்கிறது, உதய்தான் வந்திட்டானே, அவனே அவன் அம்மாவை பார்த்துப்பான். பூவையை மட்டும் அழைச்சிட்டு வந்து இங்க விட்டிடு” என மன்றாடுவது போல கேட்டுக் கொண்டார் நாதன்.

காலை உணவை அங்கேயே முடித்துக் கொண்டு பூவைக்கு கைபேசியில் அழைத்தவர் அவளை வீட்டிலேயே இருக்க சொல்லி நேரே அங்கு சென்றார்.

“அக்கா செஞ்சதுக்கு அவன் என்ன பண்ணுவான் பூவை? இந்த ஒரு முறை அவங்களை மன்னிச்சு அங்க போம்மா” என சமாதானமாக சொன்னார்.

“மன்னிக்கனும் சார், இது விஷயமா நீங்க எதுவும் பேசாதீங்க. இது மோதிரத்துக்காக அத்தை பேசினதுக்காக இல்லை, இது… வேற பிரச்சனை” என்றாள்.

“அப்படியென்னம்மா பிரச்சனை?” என அவர் கேட்க புவனாவும் ஜெயந்தனும் கூட ‘இது என்னடா புதிதாக?’ என்பது போல அவளை பார்த்தனர்.

ஆனால் உதய் பற்றி அவளறிந்த உண்மைகளை அவளால்தான் யாரிடமும் எதுவும் உடைத்து சொல்ல முடியவில்லை.

தான் உயிராக நேசிக்கும் கணவனை பற்றி தவறாக சொல்ல நா எழவே இல்லை. யாருக்கும் தெரிந்தாலும் என்ன செய்து விடப் போகிறார்கள், இங்கே ஜெயந்தனும் அம்மாவுமே எனக்காக பழியையும் நடந்த பாதகத்தையும் தாங்கிக் கொண்டு அவனோடு சேர்ந்து வாழத்தான் சொல்வார்கள், ஏன் பாவேந்தன் சார் கூட மறந்து மன்னித்து வாழ சொல்வார்.

அவனை பற்றி மற்றவர்கள் தவறாக நினைப்பதை தாள முடியாமல் அவனை மன்னித்து சேர்ந்து வாழவும் முடியாமல் இந்த உண்மை யாருக்கும் தெரியாமலே போகட்டும் என அமைதி காத்தாள்.

“சொன்னாத்தானேமா தீர்த்து வைக்க முடியும்? சொல்லும்மா பூவை” என வற்புறுத்தினார்.

“அது எங்களுக்குள்ள சார், யார்கிட்டேயும் சொல்ல விரும்பல, ப்ளீஸ் இதுக்கு மேல என்னை கம்பெல் செய்யாதீங்க சார்” என்றாள்.

பூவை சொல்லப் போவதில்லை என்பதை உணர்ந்து மீண்டும் என்னவென வற்புறுத்தி கேட்காமல், “சரி பண்ண முடியாத பிரச்சனையாம்மா?” என மட்டும் கேட்டார்.

பூவையின் தலை மேலும் கீழுமாக ஆம் என்பது போலாட அதற்கு மேல் அவரும் என்ன செய்வார்.

குற்ற உணர்ச்சியோடு புவனாவை பார்த்தவர், “என் மேலதான் தப்பு, அவன் என்ன சொல்லியிருந்தாலும் நான் இந்த கல்யாணத்தை தடுத்திருக்கணும். என்னை மன்னிச்சிடுங்க ம்மா” என்றார்.

புவனா மறுப்பாக தலையசைத்து அழ, “ஐயோ சார், உங்க தவறு எதுவுமில்லை. நீங்க என்னை எச்சரிக்க செய்தீங்கதானே… உதய்யை கல்யாணம் செய்துகிட்டது முழுக்க முழுக்க என்னோட முடிவு. எனக்கு இப்படி நடக்கணும்னு இருக்கு, விடுங்க. அப்புறம் தவறா எடுக்காதீங்க சார் என்னால லீவ் எடுக்க முடியாது, பேங்க் போகனும். நீங்க இருந்து சாப்பிட்டுத்தான் கிளம்பனும்” என்றாள் பூவை.

“இல்லம்மா நானும் கிளம்பறேன்” என சொல்லி அப்போதே அவர் கிளம்பி விட்டார்.

பின் பூவையும் புறப்பட, “தனியா வாழறதுன்னு முடிவே பண்ணிட்டியாடி? உங்க ரெண்டு பேரையும் இப்படி பார்க்க நான் என்ன பாவம் செஞ்சேன்? எனக்கெல்லாம் எதை நினைச்சும் சந்தோஷ படக்கூடாதுன்னு சாபமா?” புலம்பினார் புவனா.

“உன் பொண்ணு யாரையும் சார்ந்து இல்லாம சொந்த கால்ல நிற்குறா? அவ்ளோ பெரிய ஆக்சிட்டென்ட்லேர்ந்து உன் பையன் மீண்டு வந்து உயிரோட உன் கண்ணு முன்னாடி நிற்குறான். நடக்கிற நல்லதை மட்டும் எண்ணும்மா” என சொல்லி பூவையும் கிளம்பி விட்டாள்.

ஜெயந்தனுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. இன்னும் வாக்கர் உதவியுடன்தான் நடக்கிறான், கோவக்காரா உதய்யிடம் பேசவே பயமாக இருந்தது. அவன் கோவ முகம் நினைவு வர நெஞ்சுக்குள் சொல்லொனா திகில் பரவியது. என்னவோ எல்லாம் தன்னால்தானோ என கலக்கமாக வேறு இருக்க உள்ளுக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தான்.

இப்படியாக உதய், பூவை இருவரும் ஒரே ஊரில் இருந்தும் வெவ்வேறு வீடுகளில் தங்கிக் கொண்டு பேச்சு வார்த்தைகளே இன்றி இருந்தனர். யாராலேயும் எதுவும் செய்ய முடியவில்லை, காரணம் தெரிந்தாலாவது ஏதாவது செய்வார்கள். இவர்கள் காரணத்தையே வெளியிட மறுக்க பிரிவு இன்னும் பயங்கரமாக பலப் பட்டுக் கொண்டிருந்தது.

Advertisement