Advertisement

நீ என் காதல் புன்னகை -12(2)

அத்தியாயம் -12(2)

பன்னீர் ரோஜா நிறத்தில் பருத்தி புடவை கட்டி கொஞ்சமாக குண்டு மல்லிகை தலையில் சூடி நடந்து வந்து கொண்டிருந்தாள் பூவை. இங்குதான் வருவாள் என அவளுக்காக பார்க்கிங் ஏரியாவில் காத்திருந்த உதய் தூரத்திலிருந்தே அவளை பார்த்திருக்க அப்படியே நின்றான்.

பூவை நெருங்கி வரவும்தான் இயல்புக்கு திரும்பினான். வேறு ஏதோ சிந்தனையிலிருந்த பூவை இவனை கவனித்திருக்கவில்லை.

பூவை அவளது ஸ்கூட்டர் நோக்கி நடக்க அவளது கையை இறுக பற்றி நிறுத்தினான் உதய். அவனை பார்த்தவள் நொடி நேரம் திகைத்து பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவனை முறைத்தாள்.

உதய் தன் பிடியின் இறுக்கத்தை கூட்ட பூவை கையை விலக்க முயல, “என்னடி ரொம்ப திமிர் காட்டுறியா என்கிட்ட? மரியாதையா வீட்டுக்கு கிளம்பு” என்றான்.

“லக்ஷ்மன்கிட்ட பணம் கொடுத்து என்ன செய்ய சொன்னாலும் செய்வான், அப்படி அரட்டி மிரட்டி என்னையும் நீங்க நினைச்சதை செய்ய வைக்கலாம்னு பார்க்குறீங்களா?” அழுத்தமான குரலில் கேட்டாள் பூவை.

அவளது கையை விட்டவன் நெற்றி சுருக்கினான், பின் சிறிதும் குற்ற உணர்ச்சி இல்லாமல் நேராக அவளை பார்த்து அலட்சியமாக சிரித்தான்.

“என்ன… பணத்துக்காக என்ன வேணா செய்றவன் எப்பவும் வெளில சொல்ல மாட்டான் எனக்கு தெரியவே வராதுன்னு நினைச்சுட்டு இருந்தீங்களா?”

“ஆமாம் டி, அவனுக்கு பணம் கொடுத்து நான் நினைச்சதை நடத்திக்கிட்டேன்தான், என்னங்கிற இப்போ?”

“எப்படிங்க இப்படி… கொஞ்சமும் கில்டியாவே இல்லையா உங்களுக்கு?”

“உன்னை ஒண்ணும் ஏமாத்தி ரோட்ல விட்டுட்டு போக நினைக்கல, எனக்கு என்ன குறைச்சல்? உன்னை முறையா கல்யாணம் செஞ்சு என் மனைவியா நல்லா வாழ வைக்க நினைச்சதுக்கு எதுக்கு எனக்கு கில்டி ஆகணும்? நான் செஞ்சது உனக்கு தப்பா பட்டா நான் ஒண்ணும் செய்ய முடியாது. நீதான் எல்லாத்திலேயும் கரெக்ட்ங்கிற மாதிரி என்னையவே கேள்வி கேட்காத, என் பொறுமை போறதுக்குள்ள ஒழுங்கு மரியாதையா என்னோட கிளம்பு, நீ இருக்க வேண்டிய இடம் அதுதான்”

“உங்களால என் அண்ணன் பாதிக்க பட்டிருக்கான்”

“என்ன என்னால பாதிச்சிட்டான் அந்த இடியட்? அந்த பொறம்போக்கு ஒழுங்கா இருந்திருந்தா உனக்கு எந்த கஷ்டமும் வந்திருக்க போறதே இல்லை. ஆக்ஸிடென்ட் ஆகி அந்த பரதேசி படுக்கலைன்னு மட்டும் வை உன்னை இன்னும் கஷ்டப்படுத்தியிருப்பான்”

“போதும் நிறுத்துங்க உதய்!” கத்தினாள் பூவை.

“என்னடி அவன் என்னமோ பெரிய பாசமலர் மாதிரி அவனை சொன்னா உனக்கு இவ்ளோ கோவம் வருது. அந்த குடிகாரனால என் அப்பாம்மா முன்னாடி அவமானப் பட்டு கலங்கி போய் நின்னதெல்லாம் மறந்து போச்சா? அந்த ராஸ்கலுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு வேற திமிரா பேசின”

“வாயை மூடுங்க உதய்! செஞ்ச தப்பை இன்னும் உணரக் கூட இல்ல நீங்க, போராடி உயிர் பிழைச்சு வந்து பார்வை போய் செஞ்ச தப்புக்காக ஃபீல் பண்ணிட்டு இருக்கான் என் அண்ணன். அவனை போய்… ச்சீ நீங்க எல்லாம் மனுஷனா?”

“இப்ப வரை மனுஷனா மட்டும் இருக்கிறதாலதான் உன் கன்னத்துல நாலு அப்பு அப்பி உன்னை தூக்கிட்டு போகாம நின்னு பேசிட்டு இருக்கேன்… ஆனா நீ என்னை மிருகமா மாத்தாம விட மாட்ட போலிருக்கு”

“என்னைக்கு நேர்வழி தவறி போனீங்களோ அன்னைக்கே நீங்க அரக்கனா மாறிட்டீங்க. என் அண்ணன் நிலைக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?”

“அரக்கன்… ஹ்ம்ம்… வெல் செட்! அப்புறம் என்ன உன் அண்ணாத்தேக்கு பதில் வேற சொல்லணுமா? இப்பவும் அவனுக்கு நீ செய்றது எதையும் தடுக்காம விட்ருக்கேனே… அது போதாதா? உன் அண்ணன்கிறதாலதான் நானும் அவனுக்கு ஏதாவது செய்றதா நினைச்சிருக்கேன், உன் வீம்பால அதையும் வீணா கெடுத்துக்காத”

“போதும்! அவனுக்கு நீங்க செஞ்சது வரை போதும், நானே அவனை பார்த்துக்குவேன்”

“நல்லா பார்த்துக்க, நான் வேணாம்னு சொல்லலை. முத வீட்டுக்கு வா”

“பொய் சொல்லி ஏமாத்தி நினைச்சதை குறுக்கு வழில அடைய நினைக்கிற கெட்ட புத்தி உள்ள உங்களோட நான் வாழவே விரும்பல, அப்புறம் எதுக்கு உங்க வீட்டுக்கு வரணும் நான்?”

ஆவேசமாக கையை ஓங்கியவன், “அடிச்சேன்னா பல்லு எல்லாம் பேந்திடும். ஓவரா பேசாம கிளம்பு இங்கேர்ந்து” என சொல்லி கையை இறக்கியவன் சட்டென அவள் கையை பிடித்திழுத்தான்.

“வாடின்னா வாயடிச்சிட்டா நிற்குற, மொத்த கொழுப்பையும் இன்னைக்கு ஒரே நாள்ல குறைச்சி விடுறேன்” என உதய் சொல்ல அவன் இழுப்புக்கு செல்லாமல் போராடினாள் பூவை. நல்ல வேளையாக சிவா வந்து விட்டான்.

“டேய் என்னடா செஞ்சிட்டு இருக்க? கையை விடு” என சிவா அதட்ட அவனை பார்த்து முறைத்தவன் பூவையின் கையை விடவே இல்லை.

“மச்சி யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? பொறுமையா பேசலாம், விடுடா” என கெஞ்சலாக சிவா சொல்ல பூவைக்கும் அவமானத்தில் கண்கள் கலங்க ஆரம்பிக்க பின்னரே மனைவியின் கையை விட்டான் உதய்.

“இனிமே உங்க ஃப்ரெண்ட்கிட்ட பேச எனக்கு ஒன்னுமில்ல ண்ணா. என்னை பார்க்க வர வேண்டாம்னு சொல்லிடுங்க” என சிவாவிடம் சொன்ன பூவை வேகமாக ஸ்கூட்டரில் அமர்ந்து கொள்ள உதய் கோவமாக அவளது ஸ்கூட்டரை நிறுத்த செல்ல சிவா அவனை பிடித்துக்கொண்டான்.

“என்ன செய்ய போற? பிரச்சனை ஆச்சுன்னா செக்யூரிட்டி வந்து நிற்பான். நிதானமா இருடா” என சிவா சொல்லிக் கொண்டிருக்க பூவை சென்றிருந்தாள்.

சிவா அவனது வீட்டிற்கு உதய்யை அழைத்து சென்றான்.

“என்னடா சண்டை உங்களுக்குள்ள?” எனக் கேட்க, சொல்லாமல் முறைத்தான் உதய்.

“சரி சொல்ல வேணாம். எனக்கென்னமோ உன் மேலதான் தப்புன்னு தோணுது, இல்லன்னா பூவை இவ்ளோ பிடிவாதமா போயிருக்காது. என்ன எதுவும் அதிகப்படியா வார்த்தையை விட்டுட்டியா? இந்த கோவத்தை ஒழிச்சு கட்டிட்டு, வீட்டுக்கு போய் பொறுமையா பேசி அழைச்சிட்டு போ” என்றான் சிவா.

“ஏய் சும்மா நான்தான் தப்பு நான்தான் தப்புன்னுட்டு. இனிமேல்லாம் கெஞ்சிட்டு இருக்க முடியாது. வந்தா வர்றா, வராட்டா போறா. நான் கூட இல்லாம நல்லா பட்டு தெளிஞ்சு அவளே வருவா, அப்ப வச்சுக்கிறேன் கச்சேரி. நீ நம்ம கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் விஷயம் பத்தி சொல்லு” என பேச்சை மாற்ற சிவாவும் அதை பற்றி பேச ஆரம்பித்தான்.

பேசி முடித்து ஒரு காபி குடித்து சிவாவின் வீட்டிலிருந்து கிளம்பிய உதய், பூவையின் வீட்டுக்கு செல்லவே இல்லை. நேராக அவனது வீட்டுக்கு சென்றவன் அறைக்குள் முடங்கிக் கிடந்தான்.

மதிய சாப்பாட்டுக்கு கமலா வந்தழைக்க அமைதியாக சென்று சாப்பிட்டவன், மாலையில் அம்மாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றான். பரிசோதித்த மருத்துவர், “டேப்லெட்ஸ் சரியா எடுக்குறீங்களா இல்லையா? பிபி ரொம்ப ஹையா இருக்கு. வேற எதையாவது நினைச்சு டென்ஷன் ஆகுறீங்களா?” எனக் கேட்டார்.

“அதெல்லாம் இல்லை” என கமலா சொன்னாலும் தான் பேசாத வருத்தம் என்பது உதய்க்கு புரிந்தே இருந்தது.

“வேற டேப்லெட்ஸ் எழுதி தர்றேன், பதினைஞ்சு நாள் கழிச்சு திரும்ப வாங்க. டயட் ஒழுங்கா ஃபாலோ பண்ணுங்க, முக்கியமா ரிலாக்ஸ் ஆஹ் இருங்க” என அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்.

பூவையை கண்டபடி அம்மா பேசியதை கண்டிக்க இருந்தவன் அவரது உயர்ந்த இரத்த அழுத்தம் காரணமாக ஒன்றும் கேட்காமல் விட்டான். அவராகவே, “உன் பொண்டாட்டி வந்திடுவான்னு சொன்ன, எங்க அவ?” எனக் கேட்டார்.

“அவ அண்ணனுக்கு முடியலை, கொஞ்ச நாள் அங்க இருந்திட்டு வருவா” என சொல்லி வேறு பேச்சை மாற்றி விட்டான். அப்பா மற்றும் தங்கையிடமும் அதையே சொல்லி வைத்தான்.

உதய் வந்தது சிவா மூலமாக புவனாவுக்கு தெரிய வர அவரும் மகளை கேள்வி கேட்டார்.

“ஒரு சின்ன பிரச்சனை, சீக்கிரம் சரியா போய்டும்” என்றாள்.

“என்னடி சொல்ற? மாப்ளகிட்ட எதுக்கு சண்டை போட்ட? எதுவா இருந்தாலும் அனுசரிச்சு போடி. நீ இப்பவே அங்க கிளம்பு” என பயந்து போனவராக சொன்னார்.

“நீ ரொம்ப குழம்பாம எனக்கு சாப்பாடு எடுத்து வை, பசிக்குது” என சொல்லி செல்ல புவனாதான் மிகவும் கலங்கி போய் விட்டார்.

மறுநாள் சிவா வீட்டிற்கு சென்ற புவனா புலம்பி தள்ள, “நீங்க வந்திட்டு போனப்போ உதய் அம்மாவோட மோதிரம் காணாம போச்சாம்” என ஆரம்பித்து அந்த பிரச்சனையை கூறினான்.

“பூவை கோச்சுக்கிட்டு ஹாஸ்டல் வந்தது உதய்க்கு பிடிக்கல. அப்ப ஏதோ பேசிட்டான்னு நினைக்கிறேன் மா. அவன் ஊருக்கு வந்த அடுத்த நாள் பூவைய கூப்பிட வந்திருந்தான். பூவைதான் வர முடியாதுன்னு சொல்லிட்டு. இதுதான் எனக்கு தெரிஞ்சது. இதுக்கு மேல ரெண்டு பேரும் வாய தொறக்க மாட்டேங்குறாங்க. நாம தலையிட்டா பிரச்சனை இன்னும் பெருசா போய்டும்” என்றான்.

“இப்படியே எப்படி தம்பி விடுறது? பையன் வாழ்க்கைதான் இப்படி ஆகிப் போச்சுன்னா பொண்ணு வாழ்க்கையுமா இப்படி ஆகணும்? அவளும் சொன்னா கேட்கிற மாதிரி தெரியலை, என்னைதானே சொன்னாங்க, சொன்னா சொல்லிட்டு போறாங்க, இதுக்கு மேல எவ்வளவோ பார்த்தாச்சு. இவ வாழ்க்கை சரியானா போதும்” என்றார்.

“உதய்யோட மாமாக்கு அழைச்சு விஷயத்தை சொன்னா என்னம்மா?” என யோசனை கேட்டான் சிவா.

“நல்ல யோசனை தம்பி, அவர் நம்பர் பூவைகிட்டதான் இருக்கு” என்றார்.

தனியே சென்று ஷியாமளாவிடமிருந்து பாவேந்தன் கைபேசி எண் பெற்று புவனாவிடம் கொடுத்தான்.

சிவா வீட்டிலிருந்தவாறே பாவேந்தனுக்கு அழைத்த புவனா சுருக்கமாக விஷயத்தை கூற அவர் நேரில் வருவதாக கூறினார்.

“மாப்ளயோட மாமா சொன்னா இவ கேட்டுப்பா. அவர்தான் என் கடைசி நம்பிக்கை தம்பி” என்றார் புவனா.

“இப்படி நீங்க பயப்படற அளவுக்கெல்லாம் உதய் விட மாட்டான் மா. இது எல்லா ஹஸ்பண்ட் வைஃப்க்கு வர்ற பிரச்சனைதான், சரியாகிடும்” என ஆறுதலாக சொல்லி அனுப்பி வைத்தான் சிவா.

பாவேந்தனுக்கு மனமே சரியில்லை. அவர் வேண்டாம் என சொல்லியிருந்தால் கண்டிப்பாக பூவை உதய்யை மணந்திருக்க மாட்டாளே. என்னவோ அவருக்கு உதய் மீதுதான் தவறிருக்கும் என அழுத்தமாக தோன்றியது.

யாருக்கும் அடங்க மாட்டானே அவன், பூவையைதான் ஏதாவது சமாதானம் செய்து அவனோடு சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என அவரும் பூவையை பற்றி எளிதாகவே நினைத்துக் கொண்டார்.

Advertisement