Advertisement

நீ என் காதல் புன்னகை -12(1)

அத்தியாயம் -12(1)

அண்ணனுக்கு இப்படி நடந்ததுக்கு லக்ஷ்மன்தான் காரணம் என கருதிய போது இந்தளவுக்கு பூவை பாதிப்படையவில்லை. அதுவே உதய் தவறு செய்தான் என தெரிய வர அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. கோவமிருந்தாலும் எதையும் மறைக்காமல் நேராக பேசுபவன் என்றுதான் கணவனை பற்றி நினைத்திருந்தாள், இப்படி குறுக்கு வழியில் செல்வான் என கனவிலும் நினைத்ததில்லையே.

ஒரு வேளை லக்ஷ்மன் பொய் சொல்கிறானா? ஆனால் எதற்காக உதய் அவனுக்கு பணம் கொடுக்க வேண்டும், பொய் போல் தெரியவில்லையே… என யோசித்தவள் உதய் வங்கிக்கு வந்து லக்ஷ்மன் தவறிழைத்ததாக கூறியதும் அவனை தான் இருக்க சொன்னதும், பின் அவனை போக சொன்னதும் நினைவில் வந்தது.

‘அப்போ அவரை போக சொன்னதாலதான் அண்ணனுக்கு ஆக்ஸிடென்ட் நடக்கிற வரை இழுத்து விட்டுட்டாரா? அவரே காரணமா இருந்திட்டு எனக்கு உதவுவது போல நல்லவர் வேஷம் போட்டாரா? லக்ஷ்மனிடம் பேச விடாமல் அருகிலேயே இருந்தாரே… அவன் எதுவும் சொல்லி விடாமல் தடுக்கவா?’

லக்ஷ்மன் தொல்லை செய்ய போய்த்தானே திருமணம் செய்து கொள்ள நிர்பந்தம் ஏற்பட்டது?

நடந்ததும் லக்ஷ்மன் சொல்வதும் மிக சரியாக பொருந்தி இருக்கிறதே, அப்போது உதய் மீதுதானே எல்லா தவறும் என எண்ணி எண்ணி குமைந்து போனாள்.

வீடு வந்த மகளிடம், “எங்க போய்ட்ட பூவை? சாமான் எல்லாம் ஏத்த எப்ப வண்டி வருது?” என புவனா கேட்கவும் தன்னை திடப் படுத்திக் கொண்டு விவரம் சொன்னாள்.

“ஏன் என்னவோ போல இருக்க? அந்த லக்ஷ்மன் எதுவும் பேசிட்டானா உன்னை? நான்தான் மாப்ள வந்ததும் அவன்கிட்ட பேசிக்கலாம் சொன்னேன்ல”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, கொஞ்சம் தலைவலி” என சமாளித்தவள், அண்ணனை காண சென்றாள்.

கட்டிலில் கண்கள் மூடி படுத்திருந்தவன் பார்வை போன அவனது வலது கண்ணை வருடிக் கொண்டிருக்க பூவையின் மனதை யாரோ கசக்கி பிழிவது போலிருந்தது.

உதய்யை எந்த காலத்திலும் தன்னால் மன்னிக்கவே முடியாது என நினைத்துக் கொண்டவள் அம்மாவிடமோ அண்ணனிடமோ இதை பகிர்ந்து கொள்ளவில்லை. தெரிந்து என்னவாகப் போகிறது? தேவையில்லாத மன அழுத்தம் அவர்களுக்கும் வேண்டாமென கருதி அவர்களிடமிருந்து இதை பற்றி மறைத்தே விட்டாள்.

பூவை தன் குடும்பத்தோடு சென்னை வந்து விட சிவா எல்லா உதவிகளும் செய்தான். அவனும் உதய்யின் நண்பன்தானே, அவனிடமும் எந்த உதவியும் பெற மனம் இடம் தராமல் மறுத்தாள்.

“என்ன பூவை? உனக்கும் அவனுக்கும் சண்டைன்னா அது உங்களோட. அவனை வச்சுத்தான் உன்னை எனக்கு தெரியும், ஆனா இப்ப அவன் எப்படியோ அப்படித்தான் நீயும். என்னை செய்யக் கூடாதுன்னு சொன்ன நான் பொல்லாதவனா மாறிடுவேன்” என மிரட்டியே எல்லா உதவிகளும் செய்தான்.

முதலிரண்டு நாட்களும் வீட்டில் சமைக்க சொல்லாமல் எல்லாவற்றையும் ஒதுங்க வைக்க சொல்லி பூவை வங்கி சென்று விட்டாள். மூன்றாவது நாளிலிருந்து வீட்டிலேயே சமைக்க ஆரம்பித்து விட்டார் புவனா. சில நாட்களிலேயே மாப்பிள்ளையுடன் மகள் பேசுவதில்லை என்பதை கண்டு கொண்டவர் இதுபற்றி பூவையிடம் கேட்டார்.

“அப்படியெல்லாம் இல்லைமா, பேங்க்ல இருக்கும் போதே பேசிடுவேன். அவருக்கு நேரமில்லை. இங்க அங்க எல்லாம் டைம் வேற, அவர் சீக்கிரமே தூங்கிடுவார்” என சமாளித்தாள்.

அதிக நாட்கள் தங்கள் பிரிவை பற்றி மறைக்க இயலாது என்றாலும் தற்காலிகமாக தள்ளிப் போட்டாள்.

நாதனும் ஷியாமளாவும் ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தனர். அப்போது பூவை வீட்டில் இல்லை.

“அண்ணி வரலையாங்க அண்ணா?” என அப்பாவியாக கேட்டார் புவனா.

இன்னும் எதுவும் இவருக்கு தெரியவில்லை என புரிந்து கொண்ட நாதனும், “அவளுக்கு பிபி, அடிக்கடி உடம்பு முடியாம போயிடுது. ரொம்ப வெளில கிளம்ப முடியறதில்லை” என உண்மையும் பொய்யுமாக கலந்து கூறினார்.

“எனக்கும் ஜெயந்தனை விட்டுட்டு வர முடியலை. அதான் அங்க வரல, அண்ணிகிட்ட தப்பா எடுக்க வேணாம்னு சொல்லுங்க. பூவையை அங்க போய்டுன்னுதான் சொல்றேன், இங்கேர்ந்துதான் பேங்க் கிட்டக்க, உனக்கு செட் ஆகுற வரை இருக்கேன்னு சொல்றா” என்றார்.

“அதனால என்னம்மா? அவன் வர்ற வரைக்கும் இங்கேயே உங்களுக்கு உதவியா இருக்கட்டும்” என நாதன் கூற புவனாவுக்கு நிம்மதியாக இருந்தது.

பூவை வீடு சென்று வந்தது பற்றி மகனிடம் நாதன் கூற, “நீங்களே போய் கூப்பிட்டும் வரலைதானே அவ? உங்களை யார் அங்க போக சொன்னா?” என கோவப்பட்டான்.

“ஆமாம் டா, உன்கிட்ட கேட்டுத்தான் எல்லாம் நான் செய்யணும். நல்ல அம்மா நல்ல பையன், அப்படியே பூவை மேல அக்கறை இல்லாதவன் மாதிரியே நடிக்காத. எனக்கு புத்திமதி சொல்ல வந்துட்டான், போடா” என சொல்லி வைத்து விட்டார்.

உதய் மேல் அத்தனை கோவத்திலிருந்தவள் அவனுக்கு அழைத்து பேசவே இல்லை. அவனும் இவள் மீது கோவமாக இருக்க இவளுக்கு அழைக்கவில்லை. மனைவியிடம் மட்டுமில்லை அம்மாவிடமும் அவன் பேசவில்லை.

எப்படியும் கைபேசி உரையாடல் மூலம் அம்மாவின் தவறை அவருக்கு புரிய வைக்க முடியாது என தெரிந்ததால் அவனது கோவத்தை பேசாமல் இருந்து கமலாவிடம் வெளிப் படுத்தினான். அதுவும் நன்றாக வேலை செய்தது. தினம் அழுதே கரைகிறார் கமலா. என்ன ஒன்று இதன் பின்னணியிலும் பூவை இருப்பதாக சொல்வதுதான் வேடிக்கை.

ஒரு மாதம் கழித்து உதய் சென்னை வந்தான். ஆவலாக அவனை நோக்கி வந்த அம்மாவுடன் பேசாமல் நேராக அவனது அறைக்கு செல்ல கமலா பேயடித்தது போல நின்றார்.

அவனுடைய அறை பூவை இல்லாமல் வெறிச்சோடி கிடக்க அவனுக்கும் வெறுப்பாக வந்தது. இன்று நான் வருவேன் என தெரிந்தும் அப்படியென்ன அத்தனை வீம்பு அவளுக்கு என மனைவி மீதான கோவத்தை இன்னும் வளர்த்துக் கொண்டான்.

தேனிலவு சென்ற போது “இது பார்க்கையில உன் நினைவு வருது பூவை” என சொல்லி அவனே ஆசை ஆசையாக வாங்கிய இளம் பச்சை வண்ணத்தில் பெரிது பெரிதாக மஞ்சள் பூக்கள் மலர்ந்து சிரித்த படுக்கை விரிப்பு படுக்கையில் விரிக்கப் பட்டிருக்க ஆத்திரத்தோடு அந்த விரிப்பை இழுத்து சுருட்டி மூலையில் தூக்கிப் போட்டவன் வெறும் படுக்கையில் குப்புற விழுந்தான்.

கைபேசி அலற பூவையாக இருக்குமோ என நினைத்து வேகமாக எழுந்து பார்க்க சிவாவின் எண் மின்ன ஏமாற்றத்தோடே ஏற்று பேசினான். வேலை சம்பந்தமாக பேசியவன் நாளை நேரில் சந்திப்பதாக கூறி வைத்து விட்டான்.

கைபேசி திரையில் பூவையின் எண்ணை எடுத்தவனின் விரல் அவளுக்கு அழைக்க போராட்டம் செய்ய என் பேச்சை கேட்காமல் சென்றவள், நான் வந்ததும் வருவதாக சொன்னவள், நான் இன்று வருவது தெரிந்தும் வராமல் போனால் என்ன அர்த்தம்? அவ்வளவு திண்ணக்கமா அவளுக்கு? கைபேசியை மெத்தையின் ஓரமாக தூக்கி போட்டு மல்லாந்து படுத்து கண்களை மூடிக் கொண்டான்.

நெஞ்சில் பாரமாக வந்தமர்ந்து கொண்ட பூவை அவன் மூளையை பிய்த்து உண்ண ஆரம்பித்தாள். எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தான் என அவனுக்கே தெரியவில்லை. நாதன் வந்து அழைக்கவும்தான் எழுந்தான்.

உதய் வந்தது பூவைக்கு தெரியாதோ என நினைத்த நாதன், மகன் முன்னிலையிலேயே மருமகளுக்கு அழைத்து இவன் வந்த செய்தியை சொன்னார். சரியென சொல்லி அவள் வைத்து விட ஏதோ வேலையாக இருப்பதாக எண்ணிக் கொண்டு விட்டு விட்டார். அவர் பேசியதால் அன்று மாலையில் நேராக வீடு வருவாள் என உதய் எதிர்பார்த்திருந்தான்.

சண்டை இல்லாமல் இருந்திருந்தால் அவனே நேராக சென்று அழைத்திருப்பான், இப்போது அவளை மட்டுமே மனம் சுற்றியும் தானாக செல்லவும் அந்த மனம் இடமளிக்கவில்லை.

அண்ணன் வந்திருப்பதால் அரை நாளிலேயே கல்லூரியிலிருந்து வந்து விட்டாள் ஷியாமளா. தங்கையோடு பேசிக் கொண்டே மதிய உணவு உண்டான்.

வீட்டில் சிறிது நேரம் இருந்தவன் வெளியில் கிளம்பி சென்றான். பூவையின் வங்கியை கடக்கும் போது அவனது காரின் வேகம் மெல்ல குறைந்து பின் வேகமெடுத்தது.

இரவு உணவுக்கு வீட்டுக்கு வந்தவன் பூவை இருப்பாளோ என்ற ஆவலோடு உள்ளே வர அவள் இல்லாமல் உள்ளுக்குள் நொறுங்கி போனான். தங்கையோடு சேர்ந்து உணவு உண்டு சிறிது நேரம் பேசியிருந்து விட்டு உறங்க செல்ல அதுவரை பூவை வராமலே போக அவனின் கோவம் கட்டுக்கடங்காமல் பெருகிப் போனது.

அறைக்குள்ளேயே இங்குமங்குமாக உறுமிக் கொண்டே நடந்தவனின் உடலும் மனமும் நடு இரவுக்கு மேல் சோர்ந்து போக ஓரமாக சுருண்டு கிடந்த பச்சை நிற படுக்கை விரிப்பை உதறி படுக்கையில் விரித்தான்.

படுக்கையில் விழுந்தவன் பெரிய மஞ்சள் நிறப் பூக்களை வருடிக் கொடுத்தான். பின் அதே பூக்களை கை கொண்டு ஆவேசமாக குத்த ஆரம்பித்தான். அதிலும் மனம் சமன் படாமல் போக ஓ என கத்த வேண்டும் போலிருக்க, தனது இந்த நிலைக்கு அவள்தானே காரணம் என எண்ணி “பூவை பூவை பூவை!” பற்களை கடித்து அவளது பெயரை சொல்லி சொல்லியே ஓய்ந்து போனான்.

அடுத்த நாள் பூவை அருகில் இல்லாமலே அவனுக்கு விடிய மனம் கசந்து கிடந்தது. உடல் உள்ளே காலியாகி வெறும் கூடாக இருப்பது போல மாயை தோன்ற எழாமல் படுத்தே கிடந்தான். இத்தனை தவிப்பிருந்தும் உடனே சென்று அவளை பார்க்க முடியாமல் முட்டுக்கட்டையாக அவனது அகம்பாவம்.

வந்ததிலிருந்து மகன் எதுவும் பேசாமல் இருக்க கமலாவே வந்து மகனிடம் பேசினார்.

“உனக்கும் நான்தான் கெட்டவளா தெரியறேனாடா?”

“என்னம்மா செஞ்சு வச்சிருக்க? நீ செய்தது சரியான்னு நீயே சொல்லு?” என எரிச்சல் மிக கேட்டான் உதய்.

“இந்த வீட்லேர்ந்து ஏதாவது பொருள் காணாம போயிருக்கா. புதுசா அவங்கதான் வந்தாங்க. அவதான் இதையே பெருசு பண்ணி வீட்டை விட்டு போயிட்டா. சீக்கிரம் உன்னையும் பிரிச்சு அழைச்சிட்டு போய்டுவா. நீதான் பொண்டாட்டிதான் எல்லாம்னு இருக்கியே… நீயும் போவ” என்றார்.

“அவ எனக்கு முக்கியம்னா அவ பின்னாலேயே நாய்க் குட்டி மாதிரி போவேன்னு கிடையாது. அவ என்னோட மனைவிம்மா, எப்படியெல்லாம் அவகிட்ட பேசியிருக்க? உன்னாலதான் இவ்ளோ பிரச்சனை, போம்மா” என்றான்.

“வீட்டை விட்டு போனவளை விட்டுட்டு என்னை சொல்லாத டா. அவங்க எடுக்கலைன்னா என்கூட சண்டை போட்ருப்பா உன் பொண்டாட்டி, பொட்டிய தூக்கிட்டு ஓடியிருக்க மாட்டாதானே”

“ம்மா!” உதய்யின் அதட்டலில் கமலாவின் கண்கள் கலங்க உடலும் நடுங்க ஆரம்பிக்க பதறிப் போனவன் அவரை அமர வைத்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினான்.

“எப்படியெல்லாம் வளர்த்தேன் டா உன்னை? அவளுக்காக என்னையவே பேசுவியா நீ?” எனக் கேட்டு அழ ஆரம்பித்து விட்டார்.

“நான் சொன்னதாலதான் அவ உன்கிட்ட சண்டை போடல, இங்க இருந்தா சண்டை ஆகிடும்னு நினைச்சுதான் போய்ட்டா” என்றான்.

“அப்போ நேத்தே நீ வந்திட்டதானே… இன்னும் ஏன் அவ வரலை? உன்னை அங்க இழுக்க பார்க்கிறா அவ”

கமலாவுக்கு வியர்த்து விட வேகமாக பேசியதில் லேசாக மூச்சு வேறு வாங்கியது.

“அப்படியெல்லாம் நான் எங்கேயும் போக மாட்டேன். இன்னைக்கு வந்திடுவா அவ. நீ ஒழுங்கா ஹாஸ்பிடல் செக் அப்க்கு போறியா இல்லையா? நீ போய் தூங்கு. சாயந்தரம் ஹாஸ்பிடல் போலாம்” என அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்தான்.

பூவை மீது கோவம் என்பதை தாண்டி அவள் இல்லாமல் அவஸ்தையாக உணர்ந்தவன் அதற்கு மேல் பொறுக்க இயலாமல் அந்த நொடியே கோவாவேசமாக பூவையை காண கிளம்பி சென்றான்.

Advertisement