Advertisement

நீ என் காதல் புன்னகை -1(2)

அத்தியாயம் -1(2)

“ச்சேச்ச உதய்! என்ன காரியம்டா செஞ்சு வச்சிட்ட?” என தன் மருமகனை கண்டித்துக் கொண்டே பூவையை எழுப்பி நிறுத்தினார் பாவேந்தன்.

“என்ன மாமா, எதுக்கு என்னை போக விடாம இப்படி கலாட்டா செய்றீங்க? அப்போ இப்படித்தான் செய்வேன்” என தெரியாத பெண்ணை தள்ளி விட்ட குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் அலட்சியமாக சொன்னான் உதய்.

பூவையின் கண்களுக்கு அவன் ஏதோ பேண்ட் சட்டை போட்ட நாகரீகமில்லாத காட்டுமிராண்டி போலவே தெரிந்தான். அந்த வேலையாள் உள்ளே சென்று நடந்ததை கூறியிருப்பான் போலும், அவசரமாக ஓடி வந்தார் அருளரசி.

அருளரசிக்கு பூவையை யாரென தெரியவில்லை, கணவரது முகம் பார்க்க, “கும்பகோணத்து நடேசன் பொண்ணு” என்றார்.

“வாம்மா, உள்ள வா” என கைபிடித்து அழைத்தார் அருளரசி.

“இல்ல, இருக்கட்டும்மா. சார் எனக்கு கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கத்தான் வந்தேன். வாங்கிகிட்டீங்கன்னா நான் கிளம்பிடுவேன். இப்போ கிளம்பினாதான் ஈவ்னிங் நான் ஊருக்கு போக முடியும்” என அழுகையை அடக்கி குரலை திடப் படுத்திக் கொண்டு சொன்னாள் பூவை.

“பணமா? என்ன பணம் மா?” என விசாரித்தார் பாவேந்தன்.

“நான் படிக்க கொடுத்தீங்களே… அந்த பணம்” என விளக்கம் சொன்னாள் பூவை.

உதய் காதில் வாங்கினாலும் பெரிதாக அலட்டாமல், “கேட் திறந்து விட்டா நான் போய்டுவேன், இல்லன்னா கார் வச்சு உங்க கேட் உடைச்சு தள்ளிட்டு போவேன்” என மிரட்டலாக கூறினான்.

அருளரசி கோவமாக கணவரை பார்க்க, “நீ இந்த பொண்ணை அழைச்சிட்டு உள்ள போயேன், நான் வர்றேன்” என கெஞ்சுதலாக கூறினார் பாவேந்தன்.

“இல்லையில்லை, நான் கிளம்பறேன்” அவசரமாக பூவை உள்ளே செல்ல மறுக்க, அவளையும் கெஞ்சுதலாக பார்த்தார் பாவேந்தன். மற்ற நேரமாக இருந்தால் பூவையுடன் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு அனுப்பி வைத்திருப்பார், ஆனால் உதய் கீழே தள்ளிய பிறகு அவளை அப்படியே அனுப்ப மனம் வரவில்லை.

“சாப்பாட்டு நேரமாகிட்டே. நீ வா சாப்பிட்டு போகலாம்” என அருளரசியும் வற்புறுத்தி அழைக்க பழப் பையை எடுத்துக் கொண்டு தயக்கத்தோடே உள்ளே சென்றாள் பூவை.

உதய் செய்த செயலில் பாவேந்தனுக்கு கோவம்தான். ஆனால் உடனே அது பற்றி பேசினால் இன்னும் முறுக்குவான் என யோசித்தவர், “நான் உன் அம்மா பத்தி எதுவும் பேசலை உதய். ஆனா எத்தனை வருஷம் கழிச்சு இங்க வந்திருக்க, இப்படித்தான் சண்டை போட்டுட்டு போவியா? உள்ள வா, ப்ளீஸ்டா” என கெஞ்ச, விருப்பமில்லா விட்டாலும் உதய்யும் உள்ளே வந்தான்.

வரவேற்பறையின் சோபாவில் அமர்ந்திருந்த பூவை உதய்யை கண்டதும் எழுந்து நின்றாள். ஆனால் அவளது பார்வையில் துளியும் மரியாதை இல்லை.

பார்வை மூலமாகவே யாரையும் தாழ்வாக உணர வைக்க முடியுமா? அப்படித்தான் கண்களில் அத்தனை அலட்சியத்துடன் பூவையை பார்த்த உதய், ‘நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா?’ என்பது போல அவளுக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டான்.

பூவையும் கோவமாக அவனை பார்க்க, அது கொஞ்சமும் அவனை பாதிக்கவில்லை என புரிந்து அவளது முகத்தை திருப்பிக் கொள்ள, “நீ உள்ள போம்மா” என சொல்லிக் கொண்டே வந்தார் பாவேந்தன்.

இதற்கு மேல் இன்னும் எங்கே உள்ளே செல்வது என யோசித்தவள் நிதானமாக தன் கைப்பையிலிருந்து பணக் கட்டுகளை எடுத்தாள்.

“நீங்க எனக்கு செஞ்சதுக்கு எதுவும் ஈடாகாதுன்னு எனக்கு தெரியும், ஆனாலும் முடியும் போது திருப்பி தர்றதுதானே சரியா இருக்கும்? இதுல ரெண்டைரை லட்சம் இருக்குங்க சார், வாங்கிக்கோங்க” என சொல்லி நீட்டினாள்.

“அடடா உள்ள வைம்மா” என்றவர், “அருளரசி” என குரல் கொடுத்தார். மனைவி வரவும், “இந்த பொண்ணை தனியா விட்டுட்டு எங்க போன நீ?” என கொஞ்சம் கோவமாக கேட்டார்.

“சாப்பாடு ரெடி ஆகிட்டான்னு பார்க்க போனேன், ஏன் அதுக்குள்ளே உங்க அக்கா மகன் வேற ஏதும் செய்து வச்சிட்டானா?” இடக்காக கேட்டார் அருள்.

“என்ன அருள் நீயும் சேர்ந்துகிட்டு! எனக்குதான் அக்கா மகனா? உன் அண்ணன் மகன் இல்லையா?” என மனைவியிடம் கேட்டார்.

“யாரும் என்னை அப்படி உணர வைக்கலை. இப்ப இவன் என்ன செஞ்சான் அதை சொல்லுங்க” என்றார் அருள்.

“அத்தை ரொம்ப ஆசை படறாங்க போல மாமா. வேற ஏதாவது பெருசா செஞ்சு வைக்கவா?” நக்கலாக கேட்டான் உதய்.

அருள் கோவமாக ஏதோ சொல்லப் போக பாவேந்தன் கண்களால் அவரை அடக்க ஏனோ அந்த சூழலில் அந்நிய ஆளாக அங்கிருக்கவே பூவைக்கு பிடிக்கவில்லை.

“சார் ப்ளீஸ், எனக்கு போகணும்” என அழுத்திக் கூறினாள் பூவை.

“இந்த பணம் எனக்கு வேணாம் மா. உதவியா செஞ்சதை எப்படி திரும்ப வாங்கிக்க முடியும்? என்னை அவ்வளவு மோசமானவனா நினைச்சி வச்சிருக்கியா?” எனக் கேட்டார் பாவேந்தன்.

“சார்! உங்களை தப்பா எல்லாம் நினைப்பேனா? இப்ப நான் வேலைக்கு போறேன், இந்த பணத்துல நீங்க வேற யாருக்காவது உதவி செய்யலாம் இல்லையா? நான் சம்பாதிக்கும் போது இந்த பணத்தை திருப்பி தரலைன்னா எனக்கு தூக்கமே வராது சார். ப்ளீஸ் வாங்கிக்கங்க சார்” என்றாள் பூவை.

அப்போதும் பாவேந்தன் வாங்காமல் நிற்க, “நான் திருப்பி கொடுக்கிறதால உங்களுக்கு கூட வேற யாரும் ஹெல்ப்னு கேட்டா மறுக்க தோணாது” என்றாள்.

“அப்ப நீயே வேற யாருக்கும் உதவி செய்திடும்மா” என்றார்.

“கண்டிப்பா சார், என்னால முடிஞ்ச உதவிய வேற யாரும் தேவைப்படுறவங்களுக்கு செய்வேன். ஆனா இது உங்க பணம், இதுல நீங்கதான் உதவி செய்யணும்” என புன்னகை முகமாக பூவை கூற கோவத்தில் கனன்று கொண்டிருந்த உதய்யின் விழிகள் ஆர்வமாக அவளை பார்த்தன.

அவளது சாதாரண தோற்றத்தை அவளது மெல்லிய புன்னகை தேஜஸ் நிறைந்ததாக அவனுக்கு காட்ட, தனது பார்வையை விலக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் உதய்.

பாவேந்தனுக்கு பூவை கொடுத்த பணத்தை இப்போது மறுக்க தோன்றவில்லை. வாங்கி மனைவியின் கையில் கொடுத்தவர், “இன்னும் நீ நல்ல பொசிஷனுக்கு வரணும் பூவை. அதுதான் எனக்கு சந்தோஷம்” என்றார்.

அதற்கு சிரிப்புடன் தலையை அசைத்தவள், “எனக்கு நேரமாகிட்டு, நான் கிளம்பறேன் சார்” என்றாள்.

“சாப்பிட்டுதான் போகணும்” என்றார் அருள்.

“இன்னொரு நாள் கண்டிப்பா சாப்பிடுறேன்” என்றவள் பழங்களையும் அருளிடம் கொடுத்தாள். சாப்பிட்டு செல்லலாம் என மீண்டும் அருள் வற்புறுத்த அழகாக மறுத்து விட்டு நடந்தாள்.

அந்த சூழலில் பூவை அசௌகரியமாக உணர்கிறாள் என புரிந்து கொண்ட பாவேந்தனும் அவளிடம் பின்னர் பேசிக் கொள்ளலாம் என நினைத்து மேலும் அவளை அங்கு இருக்க வற்புறுத்தாமல் விடை கொடுத்தார்.

“ஓய்! எப்படி கேட் ஏறிக் குதிச்சு போவியா?” எனக் கிண்டலாக கேட்டான் உதய்.

ரோஷமாக அவனை நோக்கி திரும்பியவள், “சாருக்கு சொந்தக்கார பையன்கிறதாலதான் உங்களை சும்மா விடுறேன்” என்றாள்.

“உங்க சாருக்கு நான் சொந்தமெல்லாம் இல்லை. என்னை சும்மா எல்லாம் நீ விட வேணாம்” என்றான் உதய்.

சண்டை போடுகிறானா என உதய் முகத்தை ஆராய்ந்து பார்த்த பாவேந்தன் அவன் முகத்தில் தவழ்ந்த புன்னகை கண்டு குழம்பி போய் நின்றார்.

“நீங்க அவர் சொந்தம் இல்லை, உங்களை என்ன செஞ்சாலும் எனக்கொன்னுமில்லைன்னு சார் சொல்லட்டும்” நிமிர்வாக கூறினாள் பூவை.

“அம்மா பூவை! விடும்மா, இவன் கோவக்காரன். இவன் அப்படி செஞ்சதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்றார் பாவேந்தன்.

“அச்சோ சார்! நீங்க போய்…” சங்கடமாக தவித்தாள் பூவை.

பாவேந்தனிடம் அடக்கமாக பேசுவதும் அருளோடு அழகிய புன்னகையால் அவரால் மறுக்க முடியாதபடி பேசுவதும் தன்னிடம் அழுத்தமாக ஆவேசத்தை காட்டுவதும் பெரியவர் மன்னிப்பு கேட்டதில் கண்களையும் முகத்தையும் சுருக்கி தவிப்பதும் என பூவையை ரசிக்க தொடங்கியிருந்தது உதய் உள்ளம்.

“நான் செஞ்சதுக்கு நான்தான் மாமா மன்னிப்பு கேட்கணும், நானே கேட்கிறேன்” என உதய் சொல்ல பாவேந்தனுக்கு மட்டுமில்லை அருளரசிக்கும் ஏகப்பட்ட ஆச்சர்யம்.

“அப்படியா நிஜமா மன்னிப்பு கேட்க நினைக்குறீங்களா?” எனக் கேட்டாள் பூவை.

“சந்தேகமே வேணாம். இதுநாள் வரை நான் யார்கிட்டேயும் மன்னிப்பு கேட்டதே இல்லை. பட் நிஜமாவே உன்னை தள்ளியிருக்க கூடாதுன்னு தோணுது…”

“சாரி வேணாம், அதுக்கு பதிலா வேற ஒண்ணு செய்ங்க போதும்” என அவன் பேசிக் கொண்டிருக்கும் போது இடையிட்டு கூறினாள்.

உதய் கண்களில் மட்டுமல்ல மனதிலும் சுவாரஷ்யம் பிறக்க, “என்ன என்ன செய்யணும்?” எனக் கேட்டான்.

“சார் ஏதோ உங்ககிட்ட பேசணும் சொன்னார், கோவப்படாம அவர் பேசி முடிக்கிறவரை காது கொடுத்து கேளுங்க அது போதும்” என்றாள்.

உதய் இதழ்களில் அலட்சியமும் ரசனையும் கலந்த சிரிப்பு. தாடையை தடவிக் கொண்டே பூவையின் கண்களை பார்க்க அதில் தெரிந்த வெளிச்சத்தில் இன்னும் ஆழ்ந்து பார்த்தான்.

“ம்ம்… உன் சார் சொல்றதை கேட்டுக்கிறேன்” என்றான்.

இறுகிய முகத்தோடு அவனிடம் தலையை மட்டும் அசைத்தவள் பாவேந்தனிடம் மீண்டும் விடைபெற, “நிஜமாவே கேட் ஏறிக் குதிக்க போறியா?” எனக் கேட்டான் உதய்.

கைப்பையிலிருந்து சாவி எடுத்து காண்பித்தவள், “நான் தூக்கி போடவே இல்லை, சும்மா தூக்கி போடுற மாதிரி காட்டினேன். பூட்டினப்பவே பேக்ல போட்டுக்கிட்டேன்” என்றாள்.

“இவன் எல்லாத்திலேயும் அவசரக்காரன் பூவை. ஆனாலும் உன்னை தள்ளினது தப்பு, நீ மனசுல வச்சுக்காத” என்றார் பாவேந்தன்.

“உங்களுக்காக இதை பொறுத்துக்கலாம் சார். நான் வர்றேன், சாவி வெளியில வச்சிட்டு போறேன்” என சொல்லி சென்று விட்டாள்.

“சாப்பிட வாடா” என உதய்யை பாவேந்தன் அழைக்க, “யாரு மாமா இந்த பொண்ணு?” எனக் கேட்டான் உதய்.

“தெரிஞ்சி நீ என்ன செய்ய போற?” எனக் கேட்டார் பாவேந்தன்.

“எனக்கு இவளை பிடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்” என சாதாரணமாக சொன்னான் உதய்.

“உதய்!” என பாவேந்தன் அதிர,

“ஒரு பொண்ணு வாழ்க்கைய கெடுக்க நீங்க துணை போகக் கூடாது” என கட்டளை போல சொன்னார் அருளரசி.

“ஆஹாங்! அப்ப இந்த பொண்ணு வாழ்க்கை கெட்டதாவே வச்சுக்கோங்க அத்தை. இவதான் என் மனைவி. வாங்க வந்து சாப்பாடு போடுங்க” அதிராமல் சொல்லி விட்டு சாப்பிடுமிடம் செல்ல நடந்தான் உதய்.

“அவன் ஏதோ விளையாட்டா பேசுறான், நீ வந்து சாப்பாடு போடு” என மனைவியிடம் சமாதானமாக சொன்னார் பாவேந்தன்.

அவர்கள் இருவரையும் திரும்பி நின்று பார்த்து தலையை மறுப்பாக ஆட்டி சிரித்த உதய் மீண்டும் நடந்து உள்ளே செல்ல, பாவேந்தனும் அருளரசியும் விக்கித்து போய் பார்த்திருந்தனர்.

Advertisement