Advertisement

நீ என் காதல் புன்னகை -11(2)

அத்தியாயம் -11(2)

“அவ இப்போதான் காலேஜ் படிக்கிறா. உங்களை விட ஏழு எட்டு வயசு சின்ன பொண்ணு அவ”

“அதை காரணமா சொல்லித்தான் நான் முடியாதுன்னு சொன்னேன்”

“அப்புறம் என்னாச்சு?”

“ஷியாமி அவ முடிவுல ரொம்ப ஸ்டராங் ஆஹ் இருக்கா. எனக்கும் பிடிச்சுதான் இருக்கு, ரொம்ப நாள் பிடிக்காத மாதிரியே நடிக்க முடியலை பூவை. ஏன் நான் நல்லா பார்த்துக்க மாட்டேனா?”

“அவர் ஒத்துப்பாரா?”

“நம்பிக்கை இருக்கு, அவன் சம்மதிக்காம எதுவும் நடக்காதும்மா”

“ஷியாமிக்கு எக்ஸாம்ஸ் நெருங்கிட்டு இருக்கு, கொஞ்சம் படிக்கவும் விடுங்க ண்ணா” என்றாள்.

“ஐயோ நாங்க நேர்ல பார்த்துகிட்டே ரொம்ப நாள் ஆகுதும்மா. நானா சொல்றதுக்கு முன்னாடி உதய்க்கு தெரிய வந்தா எப்படி அவன் முகத்துல முழிப்பேன்? போன்ல பேசறதோட சரி, அதுவும் ரொம்ப நேரம் கிடையாது ம்மா. அவன் இங்க வந்ததும் சொல்லிடுவேன்” என்றான்.

“சரிங்க ண்ணா. நானா எதுவும் இப்ப அவர்கிட்ட சொல்லலை, ஆனா வந்ததும் காலம் கடத்தாம சொல்லிடுங்க” என சொல்லி அவனிடம் விடைபெற்று கிளம்பி விட்டாள்.

அன்றே சிவா அனுப்பிய வங்கி கணக்குக்கு முன்பணம் கொடுத்து அந்த வீட்டையே உறுதி செய்து விட்டாள்.

இரவில் புது எண்ணிலிருந்து அழைப்பு வர ஏற்று பேசினால் ஷியாமளாதான் அழைத்திருந்தாள்.

சில நிமிடங்கள் சாதாரணமாக பேசியவள், “அண்ணி…” என தயங்கி பேசாமல் இருக்க,

“உன் அண்ணன்கிட்ட இப்ப எதுவும் நான் சொல்லலை ஷியாமி. ஆனா படிப்பு முடியற வரை அதுலதான் உன் கவனம் இருக்கணும். அவர் வந்ததும் நீங்க சொல்லலைன்னாலும் நான் சொல்லிடுவேன்” என்றாள்.

“இப்ப சொல்லாம இருந்தா போதும் அண்ணி. கண்டிப்பா அண்ணா வந்ததும் அவரை விட்டு சொல்ல சொல்லிடுறேன்” என்றாள்.

பின் ஷியாமளா மூலமாகவும் அவர்கள் காதல் கதை கேட்டுக் கொண்டவள் சிவாவின் குடும்பம் பற்றியும் தெரிந்து கொண்டாள்.

அப்பா இல்லை, அம்மா மட்டும்தான். ஒரே அண்ணன் செகந்திராபாத்தில் வேலையில் இருக்க, அண்ணியின் பிரசவத்துக்காக சிவாவின் அம்மா அங்கு சென்றிருக்கிறார். இங்கு இருப்பது சிவாவின் சொந்த வீடு. தனியார் கட்டுமான நிறுவனத்தில் கட்டிட பொறியாளராக இருப்பவன் உதய் சொந்த நிறுவனம் ஆரம்பித்த உடன் அவனோடு இணைந்து செயல்பட இருக்கிறான்.

மாமியார் குறை சொல்லாத வகையில் நாத்தனாருக்கு சிவா பொருத்தம்தான் என திருப்தி அடைந்த பூவை மீண்டும் படிப்பில் மட்டுமே கவனமிருக்க வேண்டும் என அறிவுரை வழங்கி கைபேசியை வைத்தாள்.

அந்த வார இறுதியிலேயே அண்ணனையும் அம்மாவையும் அழைத்து வர பூவையே ஊருக்கு சென்றாள். இன்னும் லக்ஷ்மனிடமிருந்து இடப் பத்திரம் கைக்கு வரவில்லை. தான் வந்த பிறகு பார்த்துக் கொள்வதாக ஏற்கனவே உதய் சொல்லியிருந்தான்தான்.

இனியும் தன் பிறந்த வீட்டினருக்காக அவனை சார்ந்திருக்க வேண்டாம் எனவும் திருமணத்தின் போது அவன் கொடுத்த பணத்திற்கு ஈடாக இடப் பத்திரத்தை கொடுத்து விட வேண்டும் எனவும் முடிவெடுத்திருந்த பூவை அவளே லக்ஷ்மனை சந்திக்க தனியாக அவனது புது உரக் கடைக்கு சென்றாள்.

பழைய கடையை விட புதுக் கடை பெரிதாக இருக்க இதற்காகத்தானே தங்களை ஏமாற்றினான் என்ற எண்ணம் பூவைக்கு எழாமல் இல்லை. இட விஷயத்தை விட ஜெயந்தனை பாழாக்கியதுதான் அவளுக்கு லக்ஷ்மன் மீது மிகுந்த மன வருத்தத்தையும் கோவத்தையும் கொடுத்திருந்தது.

இவனுடன் சண்டை போட்டு என்ன செய்ய, அண்ணன் என்ன குழந்தையா? அவனே அவனது வாழ்வை சிக்கலாக்கிக் கொண்டான் என எண்ணியவள் கடைக்குள் நுழைய, அவளை கண்டதும் லக்ஷ்மன் முகம் திருப்பிக் கொண்டான்.

பூவை அதையெல்லாம் பெரிது படுத்தவில்லை, இவன் என்ன எனக்கு மரியாதை கொடுப்பது என நினைத்தவள், “இடப் பத்திரம் எப்ப கிடைக்கும் லக்ஷ்மன்?” என நேரடியாக கேட்டாள்.

“நான் ஒண்ணும் ஏமாத்திட மாட்டேன், தருவேன்” என அலட்சியமாக சொன்னான் லக்ஷ்மன்.

“இந்த மாசம் வரை உனக்கு டைம் தர்றேன், அதுக்குள்ளே லேண்ட் பத்திரம் எனக்கு கிடைக்கலைன்னா லீகலா மூவ் பண்ண வேண்டியிருக்கும்” என எச்சரித்தாள்.

“நன்றி கெட்டவங்க வேற எப்படி பேசுவீங்க?” என்றான் லக்ஷ்மன்.

“அதிகமா பேசாத. இந்த வருஷம் குத்தகை பணம் இன்னும் நீ தரவே இல்லை. அத்தோட எல்லா இடத்திலேயும் வாங்குறது விட ரொம்ப கம்மியாதான் வாங்கியிருக்கோம். அதெல்லாம் எந்த வகையில சேர்த்தி?” எனக் கேட்டாள்.

“நான் செஞ்சதுக்கு பதிலாதானே செஞ்ச. அதை விடு, அந்த இடத்தை நானே வாங்கிக்கிறேன். ரெண்டு லட்சம் பணம் தர்றேன், வாங்கிக்க” என்றான்.

“அந்த இடத்தோட மதிப்பு தெரியாத அளவுக்கு முட்டாள் இல்லை நான்”

“ஆமாம் ஆமாம் ரொம்ப பெரிய புத்திசாலிதான் நீ” இளக்காரமாக சொல்லி சிரித்தான்.

“இடம் உனக்கெல்லாம் தர்றதா இல்ல. இந்த நக்கல் நையாண்டி எல்லாம் விட்டுட்டு பத்திரத்தை திருப்பி தர்ற வழிய பாரு”

“ஏன் உன் புருஷன்கிட்ட ஒன்னுமா இல்ல. அதை மாதிரி நூறு இடம் வாங்குற அளவுக்கு வசதிக்காரன்தானே. அதை இத்தனை வருஷம் உழைச்ச எனக்கே கொடுத்தா குறைஞ்சு போவியா?”

“அவரை அவன் இவன்னு பேசுற வேலை வேணாம். உன்னை விட வயசுல மூத்தவர் அவர். அவரை மரியாதை இல்லாம பேசினா அப்புறம் இந்த ஒரு மாசம் டைம் கூட தர மாட்டேன் பார்த்துக்க. இந்த இடம் ஜெயந்தனுக்கு சேர வேண்டியது. பிரச்சனை பண்ணாம கொடுத்திடு. அவர் வந்த பிறகு வேற மாதிரி ஆகிடும் இந்த பிரச்சனை, கோவத்துல என்ன வேணா செய்வார்” என்றாள்.

“ஏய் என்ன நீ ரொம்பத்தான் அவர் அவர் னு பூச்சாண்டி காட்டுற… நான் இல்லைன்னா உன் கல்யாணமே நடந்திருக்காது, அதை தெரிஞ்சுக்க முதல்ல” என்றான்.

“என்ன உளறிட்டு இருக்க?”

“உளறலா? ஹா ஹா…” என லக்ஷ்மன் சிரிக்க பூவை முகம் சுளித்து அவனை பார்த்து நின்றாள்.

“இந்த கல்யாணம் எப்படி நடந்தது தெரியுமா? நான் வந்து சென்னைல உன்கிட்ட கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டது, உன் பெரியப்பாகிட்ட சொல்லி எனக்கு கட்டி தர நிர்பந்தம் பண்ணினது எல்லாமே உன் அவர் சொல்லித்தான். இல்லன்னா இவ்ளோ சீக்கிரம் நீ அந்த அவரை கல்யாணம் செய்திருப்பியா?” எனக் கேட்டான் லக்ஷ்மன்.

அவன் சொல்வதை சரியாக புரிந்து கொள்ளவே பூவைக்கு சில நிமிடங்கள் பிடித்தன. ஆனாலும் நம்பாமல், “பொய் சொல்லாத” என்றாள்.

“பின்னாடி எதுக்கும் உபயோகப் படும்னுதான் எல்லாத்துக்கும் ஆதாரம் வச்சிருக்கேன்” என்றவன் கைபேசி எடுத்து பேங்க் ஸ்டேட்மெண்ட் எடுத்து காட்டினான்.

லக்ஷ்மன் பெண் கேட்டு வந்த நாளுக்கு முதல் நாள் இவனது வங்கி கணக்குக்கு உதய் கணக்கிலிருந்து இரண்டு லட்சங்கள் வழங்கப்பட்டிருந்தது.

“கேஷா ஒரு லட்சம் முன்னாடியே வாங்கியிருக்கேன். அதுக்கு அடுத்த நாள்தான் உன்கிட்ட சென்னைல வந்து பேசினேன்” என லக்ஷ்மன் சொல்ல அதிர்ச்சியில் நிற்க முடியாமல் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டாள் பூவை.

எதற்கெடுத்தாலும் பயம் கொள்ளாமல் எப்போதும் நிமிர்ந்து நிற்பவள், தளர்ந்து உடைந்து போய் அமர அப்படி அவளை பார்த்த லக்ஷ்மனுக்கு அத்தனை மகிழ்வாக இருந்தது.

“இதுக்கே தள்ளாடினா எப்படி? இதுக்கு மேலயும் இருக்கு பூவை. உன் அண்ணனை திரும்ப குடிக்க வைக்க சொன்னதும் அவன்தான். அவன் சொல்லித்தான் ஜெயந்தனுக்கு பணம் அனுப்பினேன், சென்டர்லேர்ந்து வெளில வர வச்சு குடிக்க தூண்டி விட்டேன். ஜெயந்தனுக்கு ஆக்சிட்டென்ட் ஆக காரணமே அவன்தான்” என ஏளன சிரிப்போடு லக்ஷ்மன் சொல்ல சொல்ல பூவைக்கு நெஞ்சடைப்பது போலிருந்தது.

“போதுமா உன் அவர் புராணம்? உன்னை கல்யாணம் செய்றதுக்காக அவன் போட்ட திட்டம் இதெல்லாம்” என்றான்.

“நீ பொய்தானே சொல்ற? ஜெயந்தனுக்கு அடிபட்டப்ப அவர்தான் எல்லா ஹெல்ப்ம் பண்ணினார், அண்ணனுக்காக பிளட் டொனேட்லாம் செய்தார்” என்றாள்.

“நான் இல்லைனு சொல்லலையே, அப்படி செஞ்சதாலதானே உனக்கு அவனை பிடிச்சது? அவனை பிடிச்சிருந்தும் கல்யாணத்துக்கு பிடி கொடுக்காம இருந்தியாம். உடனே உன்னை சம்மதிக்க வைக்க ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவாக்க எனக்கு பணம் கொடுத்து உன்கிட்ட பேசி டென்ஷன் பண்ண சொன்னான்”

“என்னை கட்டிக்க மாட்டேன்னு முன்னாடியே நீ சொல்லிட்ட, அதான் அவன் சொன்னான்னு ஜெயந்தனை திருந்த விடல. அப்படியும் ஒரு சின்ன நப்பாசை இருந்துச்சுதான், ஹாஸ்பிடல்ல உன் நடவடிக்கை பார்த்தப்பவே தெரிஞ்சிட்டு உதய் இல்லாட்டியும் என்னை கட்டிக்க மாட்டேன்னு. எப்படியும் நீ எனக்கு கிடைக்க போறதில்ல, அப்புறம் வர்ற பணத்தை ஏன் வேணாம்னு சொல்லணும்னு நானும் அவன் கேட்டதுக்கு சரின்னு ஒத்துகிட்டேன்”

“நான் கெட்டவன் ஆனதால அவன் உனக்கு நல்லவன் ஆகிட்டான், ஆனா நிஜத்துல அவன் ஒண்ணும் அத்தனை யோக்கியன் கிடையாது. கடைஞ்செடுத்த அயோக்கியன். பக்காவா திட்டம் போட்டு உன்னை கட்டிக்கிட்டான். அவன் என்னமோ பெரிய நல்லவன் மாதிரி பேசுற நீ. அப்படி என்ன நீ பெரிய அழகின்னு உனக்காக இவ்ளோ செஞ்சான்னுதான் இன்னும் எனக்கு புரியலை. ஹூம்… எப்படியோ எனக்கு நல்லா வரும்படி கிடைச்சது” என்றான்.

பூவையின் விழிகளில் நீர் வழிய அவளை பார்த்து குரூரமாக சிரித்தான் லக்ஷ்மன்.

பூவையின் மனதில் வெறுப்பு மட்டும்தான் மண்டிக் கிடந்தது. அப்படி என்ன என்னையே மணந்து கொள்ள வேண்டுமென தீவிரம்? பார்த்த உடன் அத்தனை ஆழமான காதலா? மண்ணாங்கட்டி! அதுதான் அருள் மேடம் அவனோட எண்ணத்தை தெளிவா சொல்லி எச்சரிச்சிருந்தாங்களே…

நான்தான் நான்தான் அறிவு கெட்டு போய் அவன் நடிப்புல ஏமாந்து போய்ட்டேனா?

அவனுக்கு நினைச்சதை எப்படியாவது சாதிச்சுக்கணும்னு பிடிவாதம். அதுக்காக… எதை வேணா பொறுத்துக்கலாம், ஆனா என் அண்ணன் உயிர் போய் உயிர் பிழைச்சு வந்திருக்கான். அந்த ஆக்சிட்டென்ட்ல அவன் இறந்து போயிருந்தா… கடவுளே! இப்ப மட்டும் என்ன… கோடி கோடியா கொடுத்தாலும் அவன் பார்வை திரும்ப வரப் போறதில்லையே.

அந்த குற்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாம என்னை கல்யாணம் செஞ்சு… இப்பவும் அவன் சொல்றதைத்தான் நான் கேட்கணும்னு எவ்ளோ திமிரா பேசுறான்? இனியும் அவன் கூட வாழனுமா? பலவித சிந்தனைகள் சூழ சோபையிழந்து காணப் பட்டவளை பார்த்து உச்சு கொட்டினான் லக்ஷ்மன்.

“என்ன இப்போ… அதான் வசதியான இடத்துல வாக்கபட்டுட்டியே, கண்ணு உன் அண்ணனுக்குதானே போச்சு. விடு நீ நல்லா ஜாலியா இரு. உன்னோட இந்த வசதியான வாழ்க்கைக்கு நான்தான் காரணம், அந்த நன்றியோட இந்த இடத்தை எனக்கே கொடுத்திடு” என்றான்.

கண்களை துடைத்துக் கொண்டு கோவம் தெறிக்க எழுந்து நின்றாள் பூவை. லக்ஷ்மனின் முகம் சுருங்க, “மரியாதையா இந்த மாச கடைசில பத்திரம் என் கைக்கு வரணும், இல்லன்னா இந்த உரக் கடையே நடத்த முடியாத படி செஞ்சிடுவேன், ஜாக்கிரதை!” என எச்சரித்து வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.

Advertisement