Advertisement

நீ என் காதல் புன்னகை -1(1)

அத்தியாயம் -1(1)

திருச்சி ரயில் நிலையம் வந்ததும் இறங்கிக் கொண்ட பூவை அவள் தேடி வந்தவர் வீட்டுக்கு எப்படி செல்லலாம் என யோசித்தாள். இங்கிருந்து அவர் வீடு செல்ல லோக்கல் பேருந்து இருக்கிறது என தெரியும், ஆனால் கூட்ட நெரிசலை கண்டு தயங்கினாள்.

இந்த கூட்டமெல்லாம் பூவைக்கு புதிதில்லைதான், ஆனால் கையில் பெருந்தொகை இருக்க எப்பொழுதும் கடைபிடிக்கும் சிக்கனத்தை கைவிட்டு ஆட்டோ ஒன்றை அழைத்தாள். முகவரி சொல்லி எத்தனை ரூபாய் என பேசி விட்டே ஏறி அமர்ந்தாள்.

செல்லும் வழியில் பூ, பழங்கள் என பை நிறைய வாங்கிக் கொண்டாள். முன்னெப்போதும் வாழ்க்கை பற்றி இருக்கும் கலக்கம் இப்போதில்லை. தன் சுயத்தில் நிற்கும் போது கிடைக்கும் தைரியம் அலாதிதானே.

வேலை கிடைத்து எட்டு மாதங்களாகியும் அத்தியாவசிய செலவுகள் போக அனாவசியமாக ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல் சேர்த்து வைத்த தொகை.

இது கொடுத்தே ஆக வேண்டுமென்ற கட்டாயமில்லை. ஆனால் எதிர்காலத்தில் கொடுத்து விட வேண்டும் என கடந்த காலத்திலேயே பூவை தீர்மானித்திருக்க முடிவை மாற்றிக் கொள்ளாமல் வந்து விட்டாள்.

தன்னுடைய வீட்டில் ஒருவனை முகம் நிறைந்த சிரிப்புடன் வரவேற்றுக் கொண்டிருந்தார் பூவை தேடி வந்து கொண்டிருக்கும் பாவேந்தன். அவரால் வரவேற்கப் பட்டவன் உதயசரண், அவரின் அக்கா மகன்.

பாவேந்தன் மனைவி அருளரசியும் வரவேற்கவே செய்தாலும் அவர் முகத்தில் அத்தனை மலர்ச்சி இல்லை.

உதய் கண்களிளும் அவனது உடல் மொழியிலும் ஒரு அலட்சிய பாவம். இதுதான் அருளுக்கு இவனிடம் பிடிப்பதே இல்லை. வாய் திறந்து எதுவும் சொல்லி விட முடியாது, நக்கலாக மனம் புண்படும் படி பதில் கொடுப்பான். அதனால் அவனிடம் எப்போதும் அவர் வார்த்தையாட விரும்புவதில்லை. ஆனால் அருளும் சாமன்யப் பட்டவரில்லை, சமயம் வாய்க்கும் போது பட்டென பேசி விடுவார்.

மருமகனை அமரவைத்து சாதாரணமாக அவன் எப்போது வந்தான், வேலை எப்படி செல்கிறது என்றெல்லாம் விசாரித்த பாவேந்தன், “வெண்பாவை உனக்கு கொடுக்கலைன்னு வருத்த படாத உதய். அது… நாங்க பார்த்த இடத்துல ஜாதகம் பொருந்தி வரலை, அதான்” என சமாதானமாக சொன்னார்.

அது இல்லை காரணமென உதய்க்கு தெரியும். அவர்களின் ஒரே மகள் வெண்பா. உதய் குடும்பத்தில் மகளை தர பாவேந்தன் மனைவிக்கு விருப்பமில்லை. ஆனால் உதய் அதுபற்றி எதுவும் கேட்டுக் கொள்ளாமல் “பரவாயில்லை மாமா, ஜாதகமே பொருந்தியிருந்தாலும் எனக்கு பிடிக்கணும் இல்லையா? நான் வேணாம்னுதான் சொல்லியிருப்பேன்” என்றான்.

வெண்பா அழகான பெண்தான், கடைசி வருடம் பொறியியல் படிக்கிறாள். யாருக்கும் பார்த்தவுடன் பிடிக்கவும் செய்யும். ஆனால் உதய்யிடம் அவளை பார்க்கலாமா என அவன் அன்னை கேட்ட போதே அப்படி வெண்பாவை அவன் மனைவியாக நினைக்க முடியாத காரணத்தால் வேண்டாம் என சொல்லி விட்டான்.

அவனது அன்னைதான் மகன் தன் பேச்சை தட்ட மாட்டான் என்ற நம்பிக்கையில் வெண்பாவை கேட்டது. நேரடியாக அல்லாமல் ஒன்று விட்ட தம்பி ஒருவர் மூலம் தூது விட்டு கேட்க, முடியாது என சொல்லி விட்டார்கள்.

“எனக்கு தெரிஞ்ச ரெண்டு இடத்துல கல்யாண வயசுல பொண்ணுங்க இருக்காங்க உதய். ரெண்டுமே ரொம்ப நல்ல இடம். போட்டோ பாரு, குடும்ப விவரமெல்லாம் நான் சொல்றேன். உனக்கு சரின்னா நான் பேசுறேன், என்ன சொல்ற?” எனக் கேட்டார் பாவேந்தன்.

கணவர் இவ்வாறு கேட்டுக் கொண்டிருக்கும் போதே அருளரசி வந்து அருகில் நின்று கணவனை முறைக்க ஆரம்பித்தார். பாவேந்தனும் கண்களால் மனைவியை அமைதியாக இருக்க சொன்னார்.

ஏற்கனவே இன்னொரு தூரத்து சொந்தத்தில் இங்கு பெண் கொடுக்கலாமா என அருளிடம் அபிப்ராயம் கேட்டு அவர் வேண்டவே வேண்டாம் என சொல்லி அந்த இடம் கூட அமையவில்லை என அம்மாவின் மூலமாக அறிந்தே இருந்த உதய், ஏளனமாக ஒரு சிரிப்பை கண்களில் சுமந்து கொண்டு எல்லாவற்றையும் கவனித்த வண்ணம் அமர்ந்திருந்தான்.

பாவேந்தனுக்கு உதய்யை பிடிக்கும், தனது அக்காவின் வளர்ப்பில் கோவக்காரனாக இருந்தாலும் அடிப்படையில் நல்லவன் என்பது அவரது அபிப்ராயம். அதிலும் ஒரே பெண் எனும் போது உதய்க்கே கொடுத்தால் தங்களது இறுதி காலம் கூட கவலையில்லாமல் செல்லும் என்றும் கூட நினைத்திருந்தார்.

ஆனால் அருள் ஒத்துக் கொள்ளவே இல்லை, “நம்ம பொண்ணு அந்த வீட்ல சந்தோஷமா இருக்க மாட்டா” என வெகுவாக பயமுறுத்த பாவேந்தனும் சரியென விட்டார்.

ஆனாலும் உதய்க்கு அமையவிருந்த இன்னொரு இடத்தையும் தனது மனைவி கலைத்தது தெரியவும், அவரிடம் கோவப்பட்டு சத்தம் போட்டவர் தானே தனது மருமகனுக்கு திருமணத்தை நடத்த விழைந்தார்.

“என்ன உதய், பார்க்கட்டுமா?” என மீண்டும் கேட்டார் பாவேந்தன்.

“இல்ல மாமா, இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்” என்றான் உதய்.

“உனக்கும் கல்யாண வயசு வந்திட்டே உதய். இந்த வருஷம் செய்றதுதான் சரியா இருக்கும். ரொம்ப நல்ல இடம்டா, உனக்கு யாரை பிடிச்சிருந்தாலும் நான் பேசி முன்ன நின்னு எல்லாம் செய்றேன்” என்றார் பாவேந்தன்.

“கொஞ்சம் சும்மா இருக்கீங்களா… யாரை சொல்றீங்கன்னு நல்லா தெரியுது. நீங்க பேசி கல்யாணம் பண்ணி வச்சிட்டு நாளைக்கு ஏதாவது பிரச்சனைன்னா உங்ககிட்டதான் வந்து நிற்பாங்க. தேவையில்லாம அவங்க கூட உறவு முறிஞ்சு போகும். கல்யாணம் வச்சா தாய்மாமாவா எல்லாம் போய் செய்ங்க, நீங்க பொண்ணு பார்க்க கூடாது” என உதய் முன்னிலையிலேயே பொரிந்தார் அருள்.

நிச்சயமாக தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை மாமனிடம் கொடுக்கும் எண்ணம் உதய்க்கு இல்லவேயில்லை. ஆனால் அத்தை இவ்வாறு பேசவும் கோவமாக வந்தது.

பாவேந்தன் சமாதானமாக ஏதாவது பேசலாம் என நினைப்பதற்குள் உதய் முந்திக் கொண்டான்.

“ஏன் ஏன்… எனக்கு பொண்ணு கொடுத்தா என்ன பிரச்சனை வரும்?” என அமர்ந்த இடத்திலிருந்தே கோவமாக கேட்டான்.

“உன்னால வருதோ இல்லையோ உன் அம்மாவால வரும். அவங்க குணம் அப்படி” என அருள் சொல்ல அதற்கு மேல் உதய் பொறுக்கவில்லை.

“உங்களுக்கு மட்டும் ரொம்ப நல்ல குணம்னு நினைப்பா? நான் நினைச்சா உங்க பொண்ணுக்கும் வேற இடம் அமையாம பண்ண முடியும், ஆனா எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா. அதனால சும்மா விடுறேன்” என்றான்.

உதய் சொன்னதில் பாவேந்தனுக்கும் வருத்தம் என்றாலும் மனைவி செய்த காரியமும் சரியல்லவே என்ற நினைவில் சங்கடமாக எதுவும் பேசாமல் இருக்க, அருளுக்கு அப்படி எதுவுமில்லை என்பதால் கோவமாக பேச ஆரம்பித்தார். கடுமையான வாக்குவாதம் வெடித்தது.

கால் மணி நேர பயணத்தில் பூவை சொன்ன முகவரியில் இறக்கி விட்டான் ஆட்டோக்காரன். பணத்தை கொடுத்தவள் அந்த பிரம்மாண்ட வீட்டை ஒரு நொடி தேங்கி நின்று பார்த்தாள். முன்னறிவிப்பின்றி வந்திருக்கிறாள். தான் தேடி வந்தவர் இருக்க வேண்டும், தனது வேலையும் விரைவில் முடிய வேண்டும் என நினைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.

வெளியில் நின்ற வீட்டு வேலையாள் யார் என விசாரிக்க, “பாவேந்தன் சாரை பார்க்க வந்திருக்கேன்” என்றாள்.

அவளை முன் பின் பார்த்தறியாதவன் பயணத்தால் நலுங்கியிருந்த அவளது எளிய தோற்றத்தை பார்த்து விட்டு கொஞ்சமாக தயங்கி, “நீங்க யாருன்னு சொல்லுங்க, நான் கேட்டுட்டு வர்றேன்” என்றான்.

“என் பேர் பூவை, கும்பகோணத்திலேர்ந்து வர்றேன்னு சொல்லுங்க, சாருக்கு தெரியும்” என்றாள்.

அவளை அமரக் கூட சொல்லாமல் அவன் உள்ளே சென்று விட அவளும் அமர்ந்து கொள்ளாமல் பழங்கள் இருந்த பையை மட்டும் ஓரமாக வைத்து விட்டு, கைப்பையை மட்டும் தன்னுடனே வைத்துக்கொண்டாள்.

உள்ளே சென்றவன் இன்னும் வராமல் போக வெளியில் அழகுக்காக தொட்டிகளில் வைக்கப் பட்டிருந்த பலவித செடிகளை பார்வையிட்டுக் கொண்டு நின்றாள் பூவை.

யாரோ ஒருவன் வெளிவருவது தெரிந்தது. முகத்தில் அத்தனை கோவம், அதே கோவத்தோடு வேக வேகமாக வெளியில் கிடந்த ஷூவை அணிய ஆரம்பித்தான். அவனது ஆடையும் தோரணையுமே மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவன் என்பதை அவளுக்கு பறைசாற்றியது.

அவனை தொடர்ந்து பாவேந்தனும் வந்தார். அவரைக் கண்டதும் இவள் அருகே செல்ல முயல, அவர் இவளை கவனித்ததாக தெரியவில்லை. பூவையும் தயங்கி ஓரமாகவே நின்று விட்டாள்.

“இவ்ளோ கோவம் நல்லதுக்கு இல்லடா, உன் தாய்மாமா நான். நீ நல்லா இருக்கணும்னு மனசார நினைக்கிறவன்டா நான்” என சமாதானமாக சொல்லிக் கொண்டிருந்தார்.

அவனோ கொஞ்சமும் கோவத்தை குறைக்காமல், “நானும் அப்படி நினைச்சுதான் நீங்க கூப்பிட்டதும் உங்களை பார்க்க இவ்ளோ தூரம் வந்தேன். என் அம்மா பத்தியே தப்பு தப்பா சொல்வீங்களா?” எனக் கேட்டு எழுந்து நின்றான்.

“உனக்கு அம்மான்னா எனக்கு அக்காடா. நான் தப்பா எதுவும் சொல்லலை. உள்ளதை சொன்னேன்” என பாவேந்தனும் கோவமாக கூறினார்.

“கூட பொறந்திட்டா நீங்க தம்பி ஆகிடுவீங்களா? அதுக்காக என்ன வேணா பேசலாமா? உங்க வைஃபையும் பேச விட்டு வேடிக்கை பார்க்குறீங்க? இனிமே என் அம்மாவை மரியாதை இல்லாம பேசுனீங்க…” விரல் நீட்டி எச்சரிக்கை செய்தவன் முகத்தில் அத்தனை ரௌத்திரம்.

இவர்கள் பேசிக் கொள்வது பூவைக்கு ஏதோ புரிவது போலவும் கூடவே குழப்பமாகவும் இருந்தது. ‘அடுத்தவங்க குடும்ப விஷயம் நமக்கெதுக்கு, வந்த வேலையை முடிச்சிட்டு போய்கிட்டே இருப்போம்’ என நினைத்துக் கொண்டாள்.

“எதுக்குடா இப்படி கோவப்படுற, அது என்ன என் வைஃப்… அருள் உன் அத்தைடா. உன் அம்மா மாதிரியே நீயும் அவளை எதிரி மாதிரியே பார்க்காதடா. நீ முதல்ல உள்ள வா. நாம அப்புறமா பேசலாம்” என தணிவாக கூறினார் பாவேந்தன்.

“எதுவும் நாம பேச வேணாம், இனிமே என்னை பார்க்கவோ பேசவோ டிரை பண்ணாதீங்க” என்றவன் அங்கிருந்து வெளியேற முற்பட, அவன் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டவர் சுற்றிலும் பார்க்க அப்போதுதான் பூவை அவர் கண்களுக்கு தென்பட்டாள்.

முதலில் வியப்பாக பார்த்தவர் கண்களாலேயே வா என்பது போல சைகையால் அழைத்து விட்டு மீண்டும் கண்களை சுழற்ற, சற்று முன் பூவை வந்திருக்கும் விஷயத்தை சொல்ல உள்ளே சென்ற வேலையாள் தென்பட்டான்.

“டேய் பாபு ஓடுடா, கேட்டை இழுத்து சாத்து” என அவனுக்கு கட்டளையிட, அவனுக்கு காது கொஞ்சம் மந்தம் போல, சரியாக புரியாமல் விழித்தான். பூவைக்கு நடப்பது சரிவர புரியாவிட்டாலும் தன் அக்கா மகனை வெளியேறாமல் அங்கேயே இருக்க செய்ய முயல்கிறார் பாவேந்தன் என்பது மட்டும் நன்றாக புரிந்தது.

பாவேந்தனை கையை விட சொல்லிக் கொண்டிருந்தான் உதய். அவன் பலத்தை பிரயோகம் செய்தால் பாவேந்தன் தோற்றுப் போவார், ஆனால் அவன் அப்படி பலத்தை எல்லாம் காட்டவில்லை.

மூலையிலிருந்த மேசையில் வைக்கப் பட்டிருந்த பூட்டு சாவியை ஓடி சென்று எடுத்த பாவை வேகமாக ஓடி சென்று அந்த இரும்பு கேட்டை இழுத்து மூடி பூட்டு போட்டு விட்டாள். பாவேந்தன் மெச்சுதலாக பூவையை பார்க்க உதய் கண்களிலோ கோபாக்னி.

மாமன் கையை வேகமாக தட்டி விட்டவன் பல்லை நெறித்துக் கொண்டு பூவையை நோக்கி வர அவனது உடற்கட்டும் முறுக்கியிருந்த கை முஷ்டியும் நடந்து வரும் வேகமும் பூவைக்கு பயத்தை கொடுத்தாலும் எதையும் காட்டாமல் எச்சரிக்கையாக நின்றாள்.

நொடி நேரம் கூட அவன் தாக்குதலுக்கு தன்னால் தாக்குபிடிக்க இயலாது என புரிந்தவள் சட்டென சாவியை மதில் சுவருக்கு அந்தப் பக்கமாக தூக்கி எறிந்தாள். இரண்டு ஆள் உயரமுள்ள மதில் சுவர் கண்ணாடி சில்லுகள் பதிக்கப் பட்டு யாரும் ஏறி விட முடியாத படி இருந்தது.

கண் மண் தெரியாமல் கோவம் கொள்பவன் போல அவன். ஆத்திரத்தில் பூவையை கையால் வேகமாக தள்ள அந்த வேகத்தில் அவள் கீழே விழுந்து விட்டாள்.

பெரிதான அடி இல்லாத போதும் கையில் சிராய்ப்பு ஏற்பட அந்த இடம் காந்தியது. யாரென தெரியாதவன் தன்னை தாக்கியதில் பூவைக்கு அவமானமாக இருக்க சுய இரக்கம் வேறு சேர்ந்து கொள்ள கண்களில் நீர் நிறைந்து போனது.

Advertisement