Advertisement

நீ என் காதல் புன்னகை -10(2)

அத்தியாயம் -10(2)

இரவில் ஷியாமளா வந்து உணவருந்த அழைக்க புதிதாக நட்பு பாராட்டும் அவளிடம் மறுக்க தோன்றாமல் சென்றாள் பூவை. அவளும் அண்ணியுடனே அமர்ந்து சாப்பிட்டாள். கல கலப்பாக இல்லா விட்டாலும் முடிந்த அளவு ஏதேதோ பேசி பூவையை சாதாரணமாக்க முயன்றாள் ஷியாமளா.

“ரொம்ப கஷ்டப்படாத ஷியாமி. அத்தை பேசினது அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது, அதுக்காக அதையே நினைச்சு என்னை வருத்திக்க மாட்டேன். இப்பவும் உன் அண்ணன் இல்லாத சமயம் எதுவும் பேசக்கூடாதுன்னுதான் அமைதியா போறேன். ஆனா இதை அப்படியே விடவும் மாட்டேன், இப்படி இவங்க சொன்னதுக்கு சரியான பதில் எனக்கு சொல்லித்தான் ஆகணும்” என்றாள் பூவை.

ஷியாமளாவுக்கு அண்ணியின் பேசும் தொனி என்னவோ போலிருக்க அமைதியாகி விட்டாள்.

“நீ ஏன் முகம் தொங்க போடுற? நான் இங்க வந்து இத்தனை நாள்ல இன்னைக்குத்தான் என்கிட்ட பேச தோணியிருக்குல்ல என்கிட்ட?” எனக் கேட்டாள் பூவை.

“அச்சச்சோ அண்ணி! உங்ககிட்ட பேசக்கூடாதுன்னு இல்ல, அது… என்னவோ சாரி அண்ணி” என்றாள்.

“விடு, இப்போவாவது பேசணும்னு தோணிச்சே. சாப்பிடு” என்க பின் பொதுவான விஷயங்கள் பேசிக் கொண்டே சாப்பிட்டனர். ஷியாமளாவும் அண்ணியுடன் இலகுவாக உணர்ந்தாள்.

அப்படியே அண்ணன் பற்றி கதைகள் கூற ஆரம்பிக்க மனதில் விஷமம் இல்லாமல் பேசும் ஷியாமளாவை பூவைக்கு மிகவும் பிடித்துப் போனது. இன்று இவள் மட்டும் உடனில்லை என்றால் பூவைக்கு மன பாரம் வெகுவாக கூடிப் போயிருக்கும்.

உதய்யும் பூவையும் பேசிக் கொண்டு இரண்டு நாட்களாகி விட்டன. கமலாவை நாதன் கண்டித்து வைத்திருக்க அவரும் பூவையிடம் வாயாடாமல் இருந்தார். ஆனால் மாமியாரிடம் பேசுவதை முற்றிலும் தவிர்த்தாள் பூவை. அதற்கும் திமிர் பிடித்தவள் என பூவையையே குறை கூறினார்.

அடுத்த நாள் மாலையில் பூவை எப்பொழுதும் விட சீக்கிரமாகவே வீடு வந்து விட கமலாவின் குரல் சமையலறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது. ஈஸ்வரியிடம்தான் பேசிக் கொண்டிருந்தார்.

“இப்ப எனக்கு நேரமே சரியில்லை, அதான் நான் நினைச்சதுக்கு எதிரா எல்லாம் நடக்குது. அவனுக்கு எப்படிப்பட்ட பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ண நினைச்சிருந்தேன்… ஆனா நடந்தது என்ன? ஹ்ம்ம்…” என்றார் கமலா.

“என்னம்மா இப்படி சொல்றீங்க? பூவையம்மா எவ்ளோ தங்கம் தெரியுமா? சீக்கிரம் நீங்களே புரிஞ்சுக்குவீங்க” என்றாள் ஈஸ்வரி.

“என்னடி உனக்கும் மை போட்ருக்காளா அவ. தங்கம் பேர்ல இருந்தா போதுமா? பத்து பவுன் கூட கொண்டு வரல, போதாததுக்கு என் வைர மோதிரத்தை வேற தூக்கிட்டு போற குடும்பம்…” என கமலா சொல்லிக் கொண்டிருக்க,

“அத்தை!” என அலறினாள் பூவை.

ஈஸ்வரி பயந்து போய் திரும்பி பார்க்க முதலில் திகைத்தாலும் அலட்சிமாகவே பூவையை பார்த்தார் கமலா.

“உங்களுக்கு இதுதான் கடைசி, இதுக்கு மேல ஒரு வார்த்தை என் குடும்பம் பத்தி பேசினா உங்களை சும்மா விட மாட்டேன்” என விரல் நீட்டி எச்சரித்தாள் பூவை.

“என்னடி என்ன செய்திடுவ என்னை? இல்லாதது எதையும் சொல்லலையே நான். இப்ப வரை என் மோதிரம் வந்து சேரல. நான்தான் போலீஸ்ல கம்பளைண்ட் கொடுக்கணும்” என சொல்ல பூவைக்கு ஆத்திரம் அதிகமானது. ஆனாலும் வீட்டு வேலையாள் முன் தானும் பேசி குடும்ப விஷயங்கள் வெளியில் செல்வதை விரும்பாதவள் அறைக்கு சென்று விட்டாள்.

மனம் உலை கலமாக கொதித்துக் கொண்டிருக்க ஒரு முடிவுடன் உதய்க்கு அழைத்தாள்.

மனைவியின் அழைப்பை ஏற்றவன், “அடியே மங்கம்மா! என்கிட்ட பேச இத்தனை நாளாடி உனக்கு?” எனக் கேட்டான்.

“நிலைமை தெரியாம ஏதாவது பேசி வாங்கி கட்டிக்காதீங்க” சீறினாள் பூவை.

“என்ன நிலைமை இப்போ என் ஜக்கம்மாவுக்கு?”

“நிறுத்துங்க உதய்! ரெண்டு நாள் கமுக்கமா இருந்திட்டு நானா கூப்பிடவும் நல்லா பேசுறீங்க. உங்க மூட் க்கு தகுந்தாப்ல என்னால மாற முடியாது. மண்டை வெடிக்கிற மாதிரி இருக்கு எனக்கு”

“என்னாச்சு பூவை?”

“பாருங்க, இங்க இருந்தேன்னா உங்க அம்மா கூட பெரிய சண்டை ஆகிடும். நீங்க வந்ததும் வர்றேன், இப்ப கிளம்பறேன்” என்றாள்.

“ஏய் ஏய் என்ன நீ ஏதேதோ சொல்ற? திரும்ப சண்டையா?” பதற்றமாக கேட்டான்.

நடந்ததை சொன்னவள், “வீட்ல வேலை செய்றவங்ககிட்ட போய் மருமகள் பத்தி மருமகள் குடும்பம் பத்தி எல்லாம் பேசுறாங்க. போலீஸ் கம்பளைண்ட் கொடுப்பாங்களாம்… என்ன வகைங்க உங்க அம்மா? இதுக்கு மேலேயும் சகிச்சுக்கிட்டு என்னால இங்க இருக்க முடியாது. நீங்க வாங்க, அப்புறம் வர்றேன்” என்றாள்.

“எங்க கிளம்பற நீ? பேங்க்ல லீவ் சொல்லிட்டு கும்பகோணம் போக போறியா?” எனக் கேட்டான்.

“நீங்க வர ஒரு மாசம் இருக்கு. அவ்ளோ நாள் அங்க போய் இருக்க முடியுமா? நான் ஹாஸ்டல் போறேன்” என்றாள்.

“அப்பாகிட்ட சொல்லி அம்மாவை கண்டிக்க சொல்றேன் பூவை, அப்படியெல்லாம் வீட்டை விட்டு போக கூடாது நீ” என்றான் உதய்.

“மாமா கண்டிக்கிறதுக்கு எல்லாம் உங்க அம்மா அடங்க மாட்டாங்க. என்னையும் பேசக்கூடாதுன்னுதான் சொல்வீங்க நீங்க. யார் சொன்னாலும் என்னால இங்க இருக்க முடியாது. இருந்தா உங்க அம்மாவை திரும்ப கேட்பேன்” என்றாள்.

“ரெண்டுமே கூடாது” என அதட்டலாக சொன்னான் உதய்.

“அப்ப உங்க அம்மா என்ன வேணா பேசலாமா?”

“ஒரு மாசம்தானே பூவை, அதுவரைக்கும் பொறுமையா இரு. கண்டிப்பா இனிமே அம்மா இப்படி பேச மாட்டாங்க” என்றான் உதய்.

“அப்ப இதுவரைக்கும் பேசினதுக்கு என்ன சொல்ல போறீங்க? உங்களுக்குத்தான் அம்மான்னா பெருசா? எல்லோருக்கும் அப்படிதான். என் அம்மா பத்தி எப்படி தப்பு தப்பா சொல்லலாம் அவங்க? உங்க அம்மாக்குத்தான் போலீஸ் கம்பளைண்ட் கொடுக்க தெரியுமா? நானும் கொடுக்கிறேன், வரதட்சணை கேட்டு கொடுமை செய்றாங்கன்னு கொடுக்கவா?” சீறினாள் பூவை.

“ஏய் ச்சீய்! அவங்கதான் புரியாம போலீஸ் அது இதுன்னா நீயும் கூட சேர்ந்துகிட்டு. ஏன் உனக்கு குடும்ப மானத்தை வாங்காம தூக்கம் வர மாட்டேங்குதா?”

“அதென்னங்க, அவங்க என்ன சொன்னாலும் பொறுத்து போக சொல்றீங்க. ஆதங்கத்துல நான் ரெண்டு வார்த்தை கூட பேசிட்டா மட்டும் குடும்ப மானம் வரைக்கும் இழுக்குறீங்க”

உதய்க்கு அன்றைய தினம் அதிகப்படியான வேலைகள். பொதுவாகவே ஆத்திரக்காரன், முகம் பார்க்காமல் பேசும் போது முக தாட்சண்யம் இல்லாமல் வார்த்தைகள் தடித்து விழும் என்ற யோசனை எல்லாம் அவனிடம் இல்லை. ஆனாலும் மனைவி கோவம் கொண்ட உடன் சற்றே தணிந்து,

“அவங்களை சரின்னு சொல்லலை பூவை. நீ நான் வர்ற வரைக்கும் உன் அம்மா வீட்ல இரு. அப்பாவை கொண்டு போய் விட சொல்றேன்” என இப்போது கொஞ்சம் மென்மையாக பேசினான்.

“நீங்க சொல்ற ஐடியா எல்லாம் கேட்டா என் வேலை போய்டும்” என பூவை சொல்ல அவனுக்கு மீண்டும் கோவம் தலைக்கேறியது.

“போனா போகுது. உன் வாழ்க்கை விட வேலை ரொம்ப முக்கியமா?” சீறினான் உதய்.

“என் வாழ்க்கையை விட… அப்படின்னா? புரியலை… என்ன அர்த்தத்துல சொல்றீங்க?” என கண்களை சுருக்கி கேட்டாள்.

“நம்ம வீடு, உன் அம்மா வீடு ரெண்டு இடம் தவிர வேற எங்கேயும் நீ போக கூடாது. அதுக்கு எந்த அர்த்தம் வேணா எடுத்துக்கோ. என் பேச்சு மீறி ஹாஸ்டல் போனா…” என்றவன் சிறு இடைவெளி விட்டு, “ஹாஸ்டல் போகக் கூடாது நீ” என அடித் தொண்டையிலிருந்து அதிகாரமாக சொல்லி விட்டு கைபேசியை வைத்தான்.

கணவன் தன்னிடம் பொறுமையாக பேசி அவனே அவனது அம்மாவிடம் அப்போதே கைபேசியில் கண்டிக்கும் விதமாக பேசியிருந்தாலோ அல்லது அவங்க பேசினா நீ பதில் கொடு என சொல்லியிருந்தாலோ பூவைக்கு இத்தனை கோவம் வந்திருக்காது.

இதற்கு ஒரு தீர்வாக வீட்டை விட்டு செல்கிறேன் என பூவை சொன்னாலும் அது சரியில்லை என்றால் பொறுமையாக சொல்லாமல் அவனும் அதிகப் படியான வார்த்தைகளை விட்டிருக்க தானுமே இப்போது நிதானத்தில் இல்லை என்பது அவளது அறிவுக்கு எட்டியிருக்கவில்லை.

உதய்யின் கோவத்தில் பூவையின் காதோரம் இரண்டும் ஜிவ் என்றிருந்தது. அவனுக்கு எத்தனை திமிர்? பூவை அடுத்து எதை பற்றியும் யோசிக்கவே இல்லை, அரை மணி நேரத்தில் அவளது உடைகளை பேகில் அடைத்தவள் ஹால் வர இன்னும் நாதனும் ஷியாமளாவும் வந்திருக்கவில்லை.

ஈஸ்வரி வேலைகள் முடித்து அவளது வீட்டிற்கு கிளம்ப தயாராக, “மாமா வர்ற வரைக்கும் இருந்து இங்க நடந்ததையும் நான் கிளம்பிட்டேன்னும் சொல்லிட்டு போங்க அக்கா, நான் சொன்னா நம்புறாங்களோ என்னவோ” என்றாள்.

“ஐயையோ எங்கம்மா கிளம்புறீங்க? அம்மாவை கூப்பிடுறேன்” என ஈஸ்வரி உள்ளே விரைய கமலாவே வந்து நின்றார்.

“வீட்டை விட்டு போறாங்க ம்மா” என்றாள் ஈஸ்வரி.

“நான்தான் துரத்தி விட்டேன்னு என் மகன்கிட்ட கதை கட்டி விட திட்டம் போடுறா போலிருக்கு. ஒழுங்கா உள்ள போக சொல்லு அவளை” என கட்டளையாக சொன்னார் கமலா.

மாமியாரை அருவருப்பாக பார்த்த பூவை எதுவும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினாள்.

Advertisement