Advertisement

நீ என் காதல் புன்னகை -10(1)

அத்தியாயம் -10(1)

“அவன் ஒரு வாரத்துல போக போறான், கூட இருந்து நல்லா பார்த்துப்போம்னு இல்லாம பைய தூக்கிட்டு காலையிலேயே கிளம்பி போற” என மாமியார் சாடினால்,

“ஆமாம் அத்தை நானே சொல்லணும்னு நினைச்சேன். பாவம் மாமா, அவரே எடுத்து போட்டு சாப்பிடுறார், கூட இருந்து பரிமாறி சாப்பிட வச்சா என்ன?” பதிலுக்கு மாமியாரை சாடி அவரின் வாயை அடைப்பாள் பூவை.

“நான் என் பொறந்த வீட்லேர்ந்து போட்டுட்டு வந்த நகை நட்டு வைக்கவே தனியா ஒரு பீரோ செஞ்சாங்க. அந்த அளவு இல்லேன்னாலும் சொல்லிக்கிற மாதிரி கூட இங்க கிடையாது” ஜாடையாக கமலா சொல்ல,

“ஓஹ் அதனாலதான் உங்களை மாமா கல்யாணம் செய்துகிட்டாங்க போல. உங்க பையன் அதெல்லாம் இல்லாமலே என்னைத்தான் கட்டுவேன்னு அடம் பிடிச்சி கட்டியிருக்கார்னா நகை நட்டு போல்ட் விட மதிப்பா எதையாவது என்கிட்ட கண்டிருக்கணும். சும்மாவா உங்க வளர்ப்பாச்சே… அப்போ சரியாத்தான் இருந்திருப்பார்” என சாதாரணமாக கூறி கமலாவின் இரத்த அழுத்தத்தை கூட்டுவாள்.

கணவனிடம் குறை படித்தால், “சும்மா இரு கமலா, அந்த பொண்ணு நல்ல புத்திசாலி, சின்ன வயசுல பேங்க்ல பெரிய பொஷிஷன்ல இருந்தாலும் பந்தா இல்லாம குடும்பத்தையும் எவ்ளோ நல்லா கவனிக்குது. நம்ம பார்த்தாலும் இப்படி அவனுக்கு அமைஞ்சிருக்காது” என்பார் நாதன்.

மகளிடம் குறை படித்தால், “ம்மா நீ சொன்னதை கேட்டுகிட்டு நான் கூட பேசாம இருந்திட்டேன். தேவையில்லாம எதுவும் பேசாம கோவக்கார அண்ணனை கூட நல்லா ஹாண்டில் செய்றாங்க. நான் பேசலன்னாலும் என்னை பார்க்கும் போதெல்லாம் ஸ்மைல் பண்றாங்க, அந்த க்யூட் ஸ்மைல்லதான் அண்ணா விழுந்திட்டார் போலம்மா! அவங்க புடவை கட்டிட்டு ஸ்கூட்டர் ஓட்டுற அழகுக்கு நான் அவங்க ஃபேன் ஆகிட்டேன். ஷீ இஸ் அடாரபிள்” என விழிகள் விரித்து ஷியாமளா பூவையின் புகழ் பாட கமலாவின் காதில் புகை வர ஆரம்பித்து விட்டது.

உதய் பற்றி கேட்கவே வேண்டாம். இவ்வளவு ஏன் ஈஸ்வரி கூட பூவையை பாராட்டி பேச இத்தனை வருடங்களாக வீட்டில் கோலோச்சியிருந்த கமலாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டே இருக்க பூவையின் அம்மாவும் அண்ணனும் வந்த நேரத்தில் வைர மோதிரம் காணாமல் போக குரோதம் கொண்டவர் பழி சுமத்தி பேசினார்.

“கமலா வேணாம் இப்படி பேசாத. நான்தான் ரூம்லேயே ஒழுங்கா தேடிப் பாருன்னு சொன்னேன்ல” என்றார் நாதன்.

தன் அம்மாவை சந்தேகிக்கிறார் என்ற விஷயம் பூவைக்கு புரிய தலைகால் புரியாமல் கோவம் வந்தது. ஆனாலும் நிதானம் தவறாமல், “பார்த்து பேசுங்க அத்தை” என மரியாதையாகவே சொன்னாள்.

கல்லூரி முடித்து அப்போதுதான் வந்த ஷியாமளா, “என்னம்மா?” எனக் கேட்டாள்.

“தராதரம் இல்லாதவங்கள உன் அப்பா பேச்சை கேட்டு உள்ள விட்டேன். அவங்க புத்திய காட்டிட்டு போய்ட்டாங்க” என்றார் கமலா.

“அத்தை பார்த்து பேசுங்கன்னு சொன்னேன், உங்க பையன் சொன்னதாலதான் இங்க தங்க வச்சேன் அவங்களை. உங்களை விட வசதி குறைவானவங்கன்னா என்ன வேணா செய்வாங்கன்னு பேசாதீங்க. நான் பொறுத்து போக மாட்டேன்” என்றாள் பூவை.

“அப்புறம் என் மோதிரம் எங்க போச்சு?” என சத்தமிட்டார் கமலா.

“அதை நீங்கதான் தேடி பார்க்கணும்” என்றாள் பூவை.

“எங்க இருக்குன்னு தெரிஞ்ச பிறகும் இங்க ஏன் தேடணும் நான்?”

“அப்பவே உங்களை பத்தி அருள் மேடம் சொன்னாங்க, நான்தான் பெருசா எடுக்கல, இன்னைக்குத்தான் உங்க சுயம் என்னன்னு முழுசா தெரியுது” என்றாள் பூவை.

அருளை பத்தி சொல்லவுமே கமலாவுக்கு இன்னும் ஆத்திரம் அதிகமாக, “உனக்கெல்லாம் இந்த வீட்டு வாசல்ல கால் வைக்க கூட தகுதியில்லை. மாய மந்திரம் பண்ணி என் பையனை கல்யாணம் செஞ்ச உன்னோட சுயம் திருட்டு வேலை வர செய்ற உன் குடும்பத்தோட சுயம் எல்லாத்தையும் கூட இப்பதான் நானும் தெரிஞ்சுகிட்டேன்” என்றார்.

நாதன் கமலாவின் கையை பிடித்திழுத்து மனைவியை அடக்க, கண்ணில் நீர் வழிய நிற்கும் அண்ணியை பார்த்து மனது கேளாமல் ஆதரவாக பூவையின் தோள் பற்றி, “உள்ள வாங்க அண்ணி” என முதல் முறையாக அவளிடம் பேசினாள் ஷியாமளா.

சமையலறையிலிருந்து ஈஸ்வரி எட்டி எட்டி பார்ப்பது தெரிய பூவைக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. இப்படி ஒன்றை மாமியாரிடமிருந்து பூவை எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த அதிர்ச்சியில் என்ன பேசுவதென சட்டென பிடிபடவும் இல்லை. தன்னை பற்றி கூறியிருந்தால் தாங்கியிருப்பாளோ என்னவோ, அப்பாவி அம்மாவை பற்றி அதிலும் அத்தனை நேர்மை வாய்ந்தவரை இப்படி சொல்லவும் அவளால் தாளவே முடியவில்லை.

ஷியாமளா அண்ணியின் கை பிடித்து அறைக்கு அழைத்து சென்றாள்.

“அம்மா புரியாம பேசுறாங்க அண்ணி. அண்ணன் வந்ததும் கண்டிப்பா கேட்பார், ஃபீல் பண்ணாதீங்க அண்ணி” என்றாள்.

பூவை ஒன்றும் சொல்லாமல் உதடுகள் துடிக்க அமர்ந்திருக்க, “இருங்க, நான் காபி எடுத்திட்டு வரேன்” என சொல்லி சென்றவள் முதல் வேலையாக அண்ணனுக்கு அழைத்தாள். உதய் எடுக்காமல் போக அவசரம் என செய்தி அனுப்ப இரு நிமிடங்களில் அவனே அழைத்தான்.

“என்னாச்சு ஷியாமி, எல்லாரும் நல்லா இருக்காங்கதானே?” எடுத்ததும் பதற்றத்தோட கேட்டான்.

அம்மா பேசியது, பூவை கண் கலங்கி நின்றது என ஒன்று விடாமல் எல்லாவற்றையும் ஒப்பித்தாள்.

“அப்பாகிட்ட பேசி கண்டிக்க சொல்றேன் அம்மாவை. நீ அவளை போய் பாரு ஷியாமி. தைரியமானவதான், அழுதிருக்கான்னா ரொம்ப அப்செட் ஆகியிருக்கணும்” என்றான்.

“ஆகாம… இந்த அம்மா ஏன் இப்படி இருக்காங்க. நிறைய தமிழ் படம் பார்த்து கெட்டு போய்ட்டாங்க. எனக்கென்னமோ நிஜமாவே மோதிரம் காணாம போச்சான்னு டவுட்டா இருக்குண்ணா”

“ஊஃப்ப்… தெரியல ஷியாமி. அந்த மாதிரி இருக்காதுன்னுதான் நினைக்கிறேன், எங்கேயோ காணாடிச்சிட்டு பூவை மேல உள்ள கோவத்தை இப்படி காட்டுறாங்க போல. நீ போய் அவளை பாரேன், நானும் பேசுறேன்” என சொல்லி வைத்தான்.

ஷியாமளா காபி கொண்டு வந்து தர பூவையின் கைபேசி ஒலித்தது. உதய்யின் பெயர் ஒளிர, “காபி குடிச்சிட்டே பேசுங்க அண்ணி” என சொல்லி சென்று விட்டாள் ஷியாமி.

பூவைக்கு காபி குடிக்கவெல்லாம் தோன்றவே இல்லை. ஆனாலும் என்றுமில்லாத அதிசயமாக ஷியாமளா கொடுத்திருக்க அழைப்பை ஏற்காமல் காபி கோப்பையை எடுத்துக் கொண்டாள். உதய் மீண்டும் மீண்டும் அழைக்க எடுத்து பேசினாள்.

“அம்மாக்காக ரொம்ப சாரி பூவை, ஏதோ புரியாம பேசிட்டாங்க, நான் வந்து என்னன்னு கேட்கிறேன். நீ வருத்தப்படாத” என்றான்.

“இதைதான் நீங்க சொல்வீங்கன்னு எனக்கு தெரியும், அதனாலதான் போன் எடுக்கல. பேசிட்டீங்க இல்ல… அப்போ வைங்க” என கோவமாக சொன்னாள் பூவை.

“அவங்க செஞ்சது தப்புதான் பூவை, நான் நேர்ல வந்து கேட்கிறேன்னுதான் சொல்றேன். இப்ப என்னால என்ன செய்ய முடியும்?”

“நான் எதுவும் அவங்கள பேசிடக் கூடாதுன்னுதானே இப்பவும் இவ்ளோ அவசரமா போன் போட்டீங்க? அதையும் சொல்லிட்டு தயவு செஞ்சு வைங்க” என எரிந்து விழுந்தாள்.

“நான் இல்லாதப்ப எதுவும் பேசாத. அப்பாகிட்ட பேசிட்டேன், அவர் அம்மாவை திட்டியிருப்பார். கண்டிப்பா நான் அம்மாகிட்ட இதை பத்தி கேட்பேன். போன்ல பேசினா சரியா வராது, நேர்ல கேட்கிறேன். நீயா எதுவும் பேசாத, பெரிய சண்டையாகிடும் பூவை” என்றான்.

“என்கிட்ட சொல்ல நினைச்சதை சொல்லியாச்சுன்னா வைங்க உதய்” என கோவமாக பல்லை கடித்துக் கொண்டே கூறினாள் பூவை.

“உனக்குத்தான் கோவப்பட தெரியுமா? தூரமா இருக்கிற மனுஷனை நிம்மதியாவே இருக்க விட மாட்டீங்களா? இங்க எவ்ளோ முக்கியமான மீட்டிங்ல இருக்கேன் தெரியுமா? நீ கஷ்டப்படுவியேன்னு போன் பண்ணினா எவ்ளோ அலட்சியமா பேசுற நீ” என கத்தினான் உதய்.

“அப்படி ஒண்ணும் மீட்டிங் விட்டுட்டு வந்து பேசுற அளவுக்கு நான் முக்கியம் இல்லை உங்களுக்கு, போங்க உங்க மீட்டிங்க்கு” என சொல்லி பூவையே அழைப்பை துண்டிக்க, பேசிக் கொண்டிருக்கும் போது இவ்வாறு செய்தது உதய்யை இன்னும் கோவமாக்கியது.

மீண்டும் மனைவிக்கு அழைக்காமல் மீட்டிங் சென்று விட்டான். அதற்கு பின் பூவையாக அவனுக்கு அழைக்கவும் இல்லை, அறையை விட்டு வெளியில் வரவும் இல்லை.

நாதன் கண்டிக்கும் விதமாக பேசியும் ஷியாமளா எவ்வளவோ எடுத்து சொல்லியும் கமலா அவரது தவறை புரிந்து கொள்வதாக இல்லை.

“இத்தனை வருஷத்துல இப்படி ஏதாவது காணாம போயிருக்கா? அதெப்படி அவங்க வந்ததும் காணாம போகும்? இல்லாதவங்கன்னா ஆசை வரத்தான் செய்யும், நான் எதுவும் சொல்லலை. ஆனா அது ராசியான மோதிரம், அதை மட்டும் திருப்பி தர சொல்லுங்க” என்ற கமலாவை என்ன செய்வது என அப்பாவுக்கும் மகளுக்கும் புரி படவே இல்லை.

ஒரு வழியாக உதய் வரும் வரை இது பற்றி பேசக் கூடாது என சொல்லி கமலாவின் வாயை அப்போதைக்கு அடைத்து வைத்தார் நாதன். மருமகளிடம் போய் பேசவும் தயக்கமாக இருக்க மகளை அனுப்பினார்.

ஷியாமளாவும் பக்குவம் இல்லாத கல்லூரி படிக்கும் பெண். என்ன பேசுவதென தெரியவில்லை. நன்றாக பழகியிருந்தால் பரவாயில்லை, இன்றுதான் பேசவே ஆரம்பித்திருக்கிறாள். அண்ணியின் அறைக்கு சென்று வெறுமனே நிற்க, நல்ல மனநிலையில் இருந்திருந்தால் கண்டிப்பாக வரவேற்று நல்ல விதமாக பேசியிருப்பாள் பூவை.

மாமியாரின் பேச்சு ஒரு பக்கமும் அம்மாவை ஒன்றும் சொல்லி விடாதே என்ற கணவனின் பேச்சு மறு பக்கமுமாக அவளை பாடாய் படுத்திக் கொண்டிருக்க ஷியாமளாவிடம் எதுவும் பேசாமலிருந்தாள். அண்ணிக்கு தன் மீதும் கோவம் போல என எண்ணி வெளியில் வந்து விட்டாள் ஷியாமளா.

Advertisement