Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்பது :
அன்றைய இரவு இருவருமே உறங்கவில்லை. வேறொன்றுமில்லை அபி உறங்க விடவில்லை. மனைவியை அணைத்து படுத்து சில நிமிடம் கூட இருக்காது. அணைப்பில் இருவரின் தடதடக்கு இதயத்தின் ஓசையை மற்றவர் உணர்ந்து கொண்டு இருக்கும் போதே அபி சிணுங்க ஆரம்பித்தான்.    
தூக்கி எறியப் பட்டதில் பயந்திருந்தான் போல, அழ ஆரம்பித்து விட்டான். பின் அது தூங்கா இரவு தான், அவர்களுக்கு மட்டுமல்ல வீட்டினர் அனைவருக்கும்.
அப்படி ஒரு அழுகை அபி, என்ன அழுகை என்று சந்திரன் வந்து கதவை தட்ட, குழந்தையை தூக்கி கொண்டு ஹாலிற்கு வந்து விட்டனர்.
கையில் வைத்து நடந்து கொண்டிருந்தால் மட்டும் அழுகை குறைந்தது. ஆனால் தேம்பல் இருக்க, பின்பு அப்படியே உறங்கினான். 
இரவு முழுக்க சுந்தரியும், கண்ணனும் மட்டும் மாற்றி மாற்றி வைத்திருந்தனர். வேறு யாரிடமும் அவன் செல்லவில்லை.
ஆளுக்கு ஒரு புறம் ஹாலில் படுத்துக் கொண்டனர், யாரும் அவர்களை தனியே விட்டு செல்லவில்லை.
இப்படியே நான்கு மணியாக, “நான் போய் மோட்டார் போடறேன்” என்று கண்ணன் கிளம்பினான்.
அவன் போய் மோட்டார் போட்டு பூப்பறிக்க ஆட்கள் வந்ததும் அவர்களை விட்டு வர ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகியது. வந்து பார்த்தால் அபியை வைத்துக் கொண்டு இன்னும் நடை பயின்றால் சுந்தரி.
அவளிடம் இருந்து வாங்கியவன் “நீ போய் கொஞ்சம் நேரம் தூங்கு” என்றான்.
“நீங்க தூங்கலை”
“எனக்கு பழக்கம் தான், சில சமயம் ஃபுல் நைட் வேலை பார்ப்பேன். நான் பகல்ல தூங்கிக்குவேன். நீ தூங்கி எழுந்தா தான் இவனை பார்க்க முடியும்” என்று சொல்லி அவளை உறங்க அனுப்பினான்.
உறங்கியது தான் தெரியும் சுந்தரிக்கு, அவள் எழுந்த போது மதிய உணவு நேரமே ஆகியிருந்தது.
அடித்து பிடித்து எழுந்தாள். இரவு முழுவதும் உறங்காதது, இப்போது உறங்கி எழுந்த பின்னரும் தலை பாரமாய் வலித்தது.
வெளியே வந்தால், சாரு கால் நீட்டி அமர்ந்திருக்க அவளின் மடியில் தலை வைத்து கால்களுக்கு இடையில் உடலை வைத்து அமைதியாய் அபி உறங்கிக் கொண்டிருந்தான், அவன் மட்டுமல்ல இரவு சரியாக உறங்காததால் வீடே உறக்கத்தில்.
“நீ காலேஜ் போகலை சாரு” என்று சுந்தரி கேட்க,
“அபி ஒரே அழுகை, அண்ணா மட்டும் என்ன பண்ணுவான்? அதான் நான் லீவ் போட்டுட்டேன், நித்யாவும் போட்டுட்டா” 
“உங்க அண்ணா எங்கே”
“அவன் உங்க தோப்பு வரைக்கும் போயிருக்கான் வேலை இருக்காம்” 
சுந்தரி அசதியாய் அமர்ந்து விட, “என்ன பண்ணுது அண்ணி” என்றாள்.
“தலை பாரமா இருக்கு” என்று சுந்தரி சொல்ல,
“சாப்பிடுங்க முதல்ல” என்று சாரு சொன்ன போதே கண்ணன் வந்திருக்க, இப்படியாக இரண்டு நாட்கள் அபி படுத்தி எடுத்தான். அதுவரையிலும் அவர்கள் அங்கே தான்.
சுந்தரியை பொறுத்த வரை அங்கே அவள் விருந்தாளி அவ்வளவே, ஒட்ட முடியவில்லை. அவள் அந்த வீட்டின் மருமகள் என்ற உணர்வு வரவேயில்லை.
இரண்டு நாட்கள் கழித்து கிளம்பும் போது, “பா, இங்க இருக்குற சுந்தரிக்கு கொடுத்த பொருள் எல்லாம் எடுத்துக்கறேன், உபயோகிக்காம சும்மா தானே கிடக்கு. அங்க வீட்ல இதெல்லாம் இல்லை” என்றான்.
“அதை தானே டா நீ அங்க போன போதே நான் சொன்னேன். நீ தான் என்னை வீட்டை விட்டு துரத்துறீங்களான்னு சொன்ன” என்றார் அவர்.
“அப்போவும் நான் தான் சொன்னேன், இப்போவும் நான் தான் சொல்றேன்” என்றவன்,
அப்போதே ஒரு வண்டி வைத்து பொருட்களை தூக்க, அளவாய் பொருட்கள் இருந்த சுந்தரியின் வீடு இப்போது பொருட்களால் நிறைந்திருந்தது.
இந்த பொருட்கள் எடுக்கும் படலம் எதற்காக. கண்ணனுக்கு அந்த கட்டிலும் மெத்தையும் வேண்டும். அதை மட்டும் எடுத்துப் போகிறோம் என்று சொல்ல முடியாதே.
பின்னே அந்த கட்டிலில் தான் சில நிமிடங்கள் என்றாலும் மனைவியை அணைத்துப் படுக்கிறான், அதற்காக மட்டுமே!  
பின்னே என்ன தான் செய்ய?
சுந்தரி இவன் முகம் பார்த்தாலே ஓடுகிறாள், கண்ணனிடம் “உன்னை தேடினேன்” என்ற பொருள் வரும் படி பேசிய பிறகு  முடிந்தவரை அவனை தவிர்க்கிறாள்.
அதுவுமில்லாமல் ரூமிற்கு உறங்க மட்டும் தானே செல்கிறார்கள். தனியாய் பேச நேரமில்லை என்பதனை விட நேரம் உருவாக்கி கொள்ளவில்லை.
இரவில் பேச்சு சத்தம் கேட்டால் கூட சிணுங்கினான் அபி.
சுந்தரிக்கு வேறு வழியில்லாமல் ஒரு அமைதியான உறக்கம் மகனை அணைத்தபடி.
அப்போதும் கண்ணன் சுந்தரியை அணைத்துப் பிடித்தால் கையை எடுக்கும் வரை சுந்தரி உறங்க மாட்டாள். உடல் தளரவே தளராது. ஆடாது அசங்காது அவனின் அணைப்பில் இருப்பாள். இவளா சிந்தாவிடம் அந்த பேச்சு பேசுவாள் என்று கண்ணனுக்கு வியப்பாய் இருக்கும். வெறும் பேச்சு தான் போல என்று மனதிற்குள் பெரிய நக்கல் கிளம்பினாலும் வெளியில் காண்பித்து கொள்ள மாட்டான்.    
அவளின் உறக்கம் கெடக்கூடாது என்பதற்காக சில நிமிடங்கள் மட்டும் கை போடுபவன் பின்னே அவள் தூங்கட்டும் என்று விலகி படுத்துக் கொள்வான்.
சுந்தரிக்கு வீடு வந்ததும் தான் நிம்மதி ஆகிற்று. அபியை கண்ணனிடம் விட்டு தோட்டத்தை ஒரு சுற்று சுற்றி வந்தாள். பின்னே நர்சரியில் போய் சிறிது நேரம் அமர்ந்திருந்தாள்.
“என்ன எல்லாம் விட்டுட்டு போன மாதிரி அப்படியே இருக்கா? இல்லை எதுவும் காணோமா?” என்றான் கிண்டலாக.
சுந்தரி பதிலே சொல்லவில்லை. அவளுக்கு என்ன சொல்வது என்று கூட தெரியவில்லை. அவனிடம் மனதை சொல்லி விட்ட பிறகு அவளால் இயல்பாய் இருக்க முடியவில்லை. கண்ணனிடம் வார்த்தையாட முடியவில்லை. ஒரு பெரும் தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.  
தயக்கம் மட்டுமல்ல ஒரு ஏமாற்றம் கூட!
தன் மனதை சொல்லி விட்ட போதும் அதற்குரிய பிரதிபளிப்பு கண்ணனிடம் இல்லையோ என்பது போல.
இதோ இங்கே வீட்டிற்கு வருவதற்கு கூட சுந்தரி தான் சென்று கண்ணனிடம் பேசினாள். நாம அங்க வீட்டுக்கு போகலாமா என்று?
“நானும் வரணுமா?” என்றான்.
“என்ன கேள்வி இது?” என்று நிமிர்ந்து முறைத்து கண்ணனை பார்த்தவளுக்கு பின்பு தான் ஞாபகம் வந்தது, அவன் கோபித்து இங்கே வந்தது. முறைப்பு சற்றும் மாறாமல் “நீங்களும் வரணும்” என்று சொன்னாள்.
மீண்டும் ஒரு சண்டையை கிளப்ப சற்றும் கண்ணனிற்கு எண்ணமில்லை. அம்மாடி! அன்று அங்கே சென்று கண்ட காட்சி இன்னும் அவனை இரவு பகல் பாராமல் பயம் கொள்ள செய்தது.
அவன் அதனை யாரிடமும் காண்பித்து கொள்ளவில்லை.
மகனை கையில் ஏந்தி ஒருவர் நிற்க, மனைவியை மடிதாங்கி ஒருவர் இருக்க, இருவருக்கும் என்னவோ என்று பதறிய க்ஷணம், ஹப்பா அழியா காட்சி கண் முன்.
இருவரும் அப்படி எதுவும் ஆகாமல் அவனோடு இருக்கிறார்கள் என்பதே கண்ணனுக்கு போதுமானது.
சுந்தரி என்ன தான் கோபப்படுத்தினாலும், அலட்சியப் படுத்தினாலும், திமிர் காண்பித்தாலும், தான் அதற்கு கோபம் கொள்ள கூடாது என்று மனதிற்கு அவனே பல முறை சொல்லிக் கொண்டான்.
ஆனாலும் ஒரு கெத்து காண்பிக்க வேண்டும் என்பதற்காக, “நீ வரணும்னு சொன்னா வர்றேன். ஆனா இது என் வீடு, என் இஷ்டத்துக்கு தான் நீங்க இங்க இருக்கணும்ன்ற மனநிலையில நீ என்னை வெச்சிருந்தா எனக்கு அங்க வர்றது இஷ்டமில்லை, சும்மா சும்மா சண்டை போட்டுட்டு முகத்தை திருப்பிக்கிட்டு, இதுக்கு நாம சேர்ந்து வாழ ஆரம்பிச்சு இருக்க வேண்டாம், பிரிஞ்சது பிரிஞ்சதாவே இருந்திருக்கலாம்” என்று சொல்ல,
அவளின் கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி!
“என்ன பிரிவா?” என்பது போல,  என்ன முயன்றும் சுந்தரியின் கண்களில் நீர் கோர்த்து.
“அடக்கடவுளே, இவ என்ன பண்ணினாலும் நான் போகமாட்டேன்னு நினைச்சிருப்பா போல, இந்த ஷாக்க குடுக்கறா” என்று நினைத்தவன்,
“சரி, நான் வர்றேன், போகலாம், அப்பா அம்மா கிட்ட சொல்றேன், நீ ரெடியாகு” என்று வந்து விட்டவன், இதோ வீட்டிற்கும் வந்து விட்டார்கள்!
இப்போது “எல்லாம் சரியா இருக்கா?” என்று கண்ணன் கிண்டல் பேச, வீட்டிற்கு வந்த உற்சாகத்தில் சுந்தரியின் வாய் பூட்டு திறந்து, இயல்பாய் கண்ணனிடம் பேசினாள்.   
“ம்ம், பத்து தென்னை மரத்தை காணோம் , நாலு மாமரத்தை காணோம்” என்று அவள் பதில் கடுப்படிக்க,
இவனோ அதற்கும் மேலே சென்று,  
“நாலு சாமந்தியை காணோம், ரெண்டு முல்லையை காணோம், பச்சை கலர் ரோசாவை காணோம்னு சொல்லேன்” என்றான் சற்றும் சிரிக்காமல். உதடு மட்டுமே சிரிப்பை காண்பிக்காமல் இருந்தது, கண்கள் ஏகத்திற்கும் சிரித்தது.     
அந்த பாவனையில் சுந்தரிக்கு சிரிப்பு வர, சிரிப்பை காண்பிக்காமல் முகத்தை திருப்பி உள்ளே சென்றாள்.
“பாருடா உங்கம்மாவை” என்று அபியிடம் பேச, அவனுக்கு என்ன புரிந்ததோ அப்பாவை பார்த்து முறைத்தான் .
“அடேய் அபி, நீ அப்பா மாதிரி ஜாலியா இருக்கணும். உங்கம்மா மாதிரி டெர்ரரா இருக்கக் கூடாது” என்று பேசினான்.
ஆம்! துரை கண்ணன் ஒரு ஜாலியான ஆண்மகன் தான். அவன் இருக்கும் இடமே சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது, பள்ளியில், கல்லூரியில், இவன் சிரிக்காமல் சீரியசாய் பேசி, சுற்றி இருக்கும் அனைவரையும் சிரிக்க வைத்து, அவர்கள் மாட்டி நிற்க இவன் ஒன்றுமே தெரியாதவன் போல இருப்பான்.
அதெல்லாம் ஒரு கனாக் காலம் அவனின் வாழ்க்கையில், திருமணதிற்கான வயதோ பக்குவமோ இல்லாமல் திடீரென்று சுந்தரியுடன் நடந்த திருமணம், அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் எல்லாம் அவனை மாற்றி இருந்தது.    
ஒரு பெருமூச்சோடு எழுந்தவன், மகனோடு உள்ளே சென்று அங்கே அப்பா வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த சுந்தரியின் பொருட்களை எல்லாம் ஒழுங்கு செய்ய ஆரம்பித்து இருந்தான்.
இதோ ரூமின் உள் புகுந்தவன், கட்டில் உள்ளே இருக்க, மெத்தை தனியாய் இருக்க, அதை ஒழுங்கு செய்து, அந்த டிரெஸ்சிங் டேபிள் கண்ணாடி தனியாய் இருக்க, அதை மாட்டி, சுந்தரிக்கு கொடுத்த பீரோவும் கொண்டு வந்திருக்க, அதை திறக்கவும், அங்கிருந்த அவனின் பொருட்கள் உடைகள் எல்லாம் சரிந்தன. அங்கே வீட்டில் இருந்ததில் அவனின் உடைகள் வைத்திருந்தனர்.
அவசரமாய் முடிவெடுத்ததால் எதுவும் வெளியே எடுத்து கட்ட வில்லை, இப்போது அது தப தபவென்று விழ,
அபிக்கு அதனை பார்த்ததும் ஒரே குஷி, அந்த துணிகளில் மீது ஏறி குதிக்க போக, அவனை பிடித்து நிறுத்துவதே பெரும் பாடாய் இருந்தது.
“சுந்தரி இவனை பிடி” என்று குரல் கொடுத்தான்.
அதுவரை தன் ஆயாவிடம் பேசிக் கொண்டிருந்த சுந்தரி உள்ளே வந்தாள்.    
“என்ன இது இப்படி கீழ கிடக்கு?” என்று பேசிக் கொண்டே நிற்க,
“தூக்குடி முதல்ல இவனை” என்று கத்தினான்.
பின்னே இப்போது தான் எல்லாம் பூட்டினான், இப்போது உடையும் அடுக்க வேண்டும் என்றால் கடுப்பாய் வந்தது.
“எதுக்கு கத்துறீங்க?” என்று மகனை தூக்கினாள். ஒரு உரிமையான பேச்சு. இரண்டு நாட்களாய் அவனின் ஐந்து நிமிட அணைப்பு கொடுத்ததோ?  
“பின்ன கத்தாம, இதெல்லாம் கொட்டிடிச்சு. யார் அடுக்குவா? என் பொண்டாட்டியா அடுக்குவா?” என்றான் சுந்தரியை வம்பிழுக்கும் த்வனியில்.  
“ஏன் உங்க பெண்டாட்டி அடுக்க மாட்டேன்னு உங்க கிட்ட சொன்னாளா?” என்று கேட்டபடி வர,
“அப்போ அடுக்கு” என்றபடி எழுந்தவன் கட்டிலில் படுத்துக் கொள்ள,
“ஒஹ், நான் தான் உங்க பொண்டாட்டியா” என்றாள்.
கண்ணன் ஏதாவது பதில் உரைப்பான் என்று பார்த்தால் அவன் அமைதியாகிவிட,   “இவனை பிடிங்க” என்று மகனை அவனிடம் கொடுத்தாள்.
திமிறி இறங்க முற்பட்ட அபியை “டேய், அப்பா கிட்ட அடி வாங்காத , இப்படி ஓடி ஓடி தான் இழுத்து வெச்சிருக்க” என்று கண்ணன் கடிய..
“ஷ், அப்பாவோட படு” என்று சுந்தரியும் பேச,
இரண்டு பேரின் அதட்டலில் அப்பாவின் அருகில் படுத்தான்.
படுத்தவனை உறக்கத்திற்கு தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான்.
“இதை அடுக்கவா இந்த சத்தம்” என்று நொடித்துக் கொண்டே புடவையை ஏறக் கட்டி இடுப்பில் சொருகி, இன்னும் விழாமல் பீரோவில் இருந்ததை அவளாய் கீழே எடுத்து வைக்க வைத்தாள்.
“என்னடா அதிசயம் இது நம்ம கிட்ட முகத்தை திருப்பாம சாதாரணமா பேசறா?” என்று கண்ணன் நினைக்க,
அப்போது தான் அன்று அவன் தூக்கி எறிந்த நகைப்பெட்டி தட்டுப் பட, அதனை என்னவென்று தெரியாமல் எடுத்து படுக்கையில் வைத்தாள். அது பரிசு பொருள் கொடுக்கும் காகிதம் சுற்றப் பட்டு இருந்தது.  
சுந்தரிக்கு இன்னம் அது கண்ணன் அவளிற்காக வாங்கிய பரிசு என்று தெரியாது. அதை தான் அன்று வேண்டாம் என்று சொன்னோம் என்றும் தெரியாது, அதையும் விட வேண்டாம் என்று சொன்ன நிகழ்வு அவளின் நினைவில் சற்றும் இல்லை.
கண்ணன் எதையும் காண்பித்து கொள்ளவில்லை, மனைவி குனிந்து நிமிர்ந்து உதறி அவனின் உடைகளை அடுக்கும் அழகை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என் துணியை புருஷன்து ஆசையா மடிக்கிறாளா , இல்லை என்னை துவைச்சு தொங்கப் போடறாளா” என்ற நினைப்பு வர அவனின் முகம் புன்னகையை பூசியது.  
வேலை என்று வந்து விட்டால் சுந்தரியின் கவனம் அதில் மட்டுமே, தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் கண்ணன் கண்ணில் கருத்தில் எதிலும் பதியவில்லை.    
தட்டி கொடுக்கவும் அபி உறங்கி விட, இடையில் திரும்பி பார்த்தவள் “அச்சோ தூங்கிட்டான், அப்புறம் நைட் தூங்க மாட்டான்” என்றாள் சலிப்பது போல,
“அதனால என்ன? அவனை தூங்க வெச்சு நமக்கான நேரம்ன்னு ஏதாவது இருக்கா? நம்ம பிடிப்பே அவனை சுத்தி தானே!” என்றான்.
கண்ணனின் குரல் அதன் மூலம் வந்த வார்த்தைகள் என்ன சொல்ல முயன்றது என்று சுந்தரிக்கு புரியவில்லை, சுந்தரி கண்ணனை பார்க்க..
சுந்தரியின் புறம் திரும்பி தலைக்கு ஒரு கையை முட்டுக் கொடுத்து இன்னும் வாகாய் படுத்து, மற்றொரு கையால் மீசையை முறுக்கிக் கொண்டே அவளை பார்த்தான்.
அந்த அவனின் செய்கையில் அவனையே விழியெடுக்காமல் பார்த்தாள். அவனின் மீசையை முறுக்கி பார்க்கும் ஆசை பேராவலாய் உள்ளே கிளர்ந்தது.
சுந்தரி தன்னை ரசித்து பார்க்கிறாள் என்று உணராத கண்ணன் அவளிடம் பேசினான்,
ஏனென்றால் அவனின் கண் முன் இருந்தது அவனின் மனைவி மட்டுமல்ல, அவன் வாங்கிய பரிசும் தான். அது அவனை பார்த்து கேலியாய் சிரிப்பது போல தோன்றியது.  
“நீ வேண்டாம்ன்னு சொன்ன என்னோட கிஃப்ட்” என்று படுக்கை மேல் அவள் வைத்த நகை பெட்டியை காண்பித்தான்.
அப்போதும் சுந்தரி நின்று கொண்டே இருந்தாள்.  
அவனை ரசித்து பார்த்த கனவு கலைந்த நொடி, அவன் என்ன சொல்கிறான் என்று கிரகிக்க முற்பட்டாள்.
“அதை கைல கூட எடுக்க மாட்டியா?” என்றான் ஆதங்கமாய்.
“எதை?” என்றாள் புரியாதவளாய்
அப்படியே ஒரு கோபம் பொங்க, மீண்டு அதை தூக்கி எரியும் ஆவேசம் கண்ணனுக்கு கிளம்பிய போதும், தன்னை முயன்று கட்டுப் படுத்தி மறுபுறம் திரும்பி படுத்துக் கொண்டான்.
என்னவோ மீண்டும் கோபம் அவனுக்கு என்று புரிந்தது, ஆனால் என்ன என்று புரியவில்லை.
தயங்கி தயங்கி “என்ன கோபம்?” என்றாள்.
அவனிடம் பதில் இல்லை.
மெதுவாய் அந்த கட்டிலில் அமர்ந்தவளின் கை தானாய் அந்த பரிசு பொருளை தூக்கி தூர வைத்தது.
அவளின் கவனம் கூட அதில் இல்லை, அதற்கு தான் கோபம் என்றும் புரியவில்லை.
மெதுவாக அவனின் தோளை தொட்டு “என்ன கோபம்?” என,
என்ன என் அருகில் அமர்ந்து என்னை தொட்டு பேசுகிறாளா, வேகமாய் கண்ணன் திரும்பினான்.
அந்த வேகத்தில் பயந்து “என்ன?” என்றவள் எழப் போக,
“எழுந்த தொலைச்சிடுவேன், நக்கல் பேசற நீ? நான் தான் உங்க பொண்டாட்டியான்னு? திமிர் தாண்டி உனக்கு, பொண்டாட்டின்னு ஏதாவது எனக்கு உரிமையா செஞ்சிருந்தா தெரிஞ்சிருக்கும்” என்றான். என்ன முயன்றும் குரல் கோபமாய் தான் வந்தது.   
பயம் போய் ரோஷம் மிகுந்து “அப்படியா நான் உங்க பொண்டாட்டின்னு என்ன செஞ்சு காண்பிக்கணும் உங்களுக்கு?” என்றாள்.
வந்து இரண்டு மணி நேரமே ஆன போதும் மீண்டும் முட்டிக் கொண்டு நின்றனர்.  
ஒரு ஒற்றை அணைப்பு, ஒரு ஒற்றை முத்தம் எல்லாம் அவர்களுக்குள் தகர்த்து விடும் என்று சொல்ல முடியாவிட்டாலும் அந்த நேரத்தின் அவசிய தேவை அவர்களுக்குள்.
அதை உணர்த்துவது யார்?     
    
    
    

Advertisement