Advertisement

கிட்ட தட்ட ஒரு மணி நேரம் கழித்து கண் விழித்தவள் “அபி” என்று ஒரு கத்து கத்த, பரவாயில்லை அந்த நேரத்தில் அங்கே அவர்கள் மட்டுமே அவளும், பாட்டியும்.
“மா, உன் பையன் நல்லா இருக்கான்” என்று அந்த சிஸ்டர் சொல்ல,
“சிஸ்டர் கூப்பிட்டு விடுங்க” என்று அங்கிருந்த மருத்துவர் சொல்ல,   
கண்ணன் அபியை தூக்கி கொண்டு உள்ளே வரவும், மகனை பார்த்ததும் அப்படி ஒரு அழுகை!
“அவனுக்கு ஒன்னுமில்லை, நல்லா இருக்கான்” என்று கண்ணன் சொல்ல சொல்ல அழுகை அதிகமாக, “ப்ச், அழாத ஒன்னுமில்லைன்னு சொல்றேன் தானே” என்று பெரிதாய் அதட்டல் இட, அதற்குள் அம்மாவின் அழுகையை பார்த்து அபி அழ ஆரம்பித்து இருந்தான்.
“பையன் பயப்படறான் பாரு, யாருக்கும் எதுவுமில்லை, அமைதியா இரு” என்று அவன் திரும்ப ஒரு அதட்டலிட, அதன் பிறகே அழுகை தேம்பலாய் மாறியது.
இப்படியாக அவர்கள் வீடு வரும் போது எட்டு மணி.
அபியை சமாளிபதற்குள் போதும் என்றாகியது. நச்சு நச்சு என்று அழுது கொண்டே இருந்தான். ஹாஸ்பிடலா இல்லை, தோளில் ரத்தம் கட்டியது வலிப்பதாலா, இல்லை தூக்கி எறியப் பட்டதில் பயந்திருந்தானா, இல்லை அம்மாவின் அழுது சோர்ந்த முகமா தெரியவில்லை.   
வடிவு பாட்டியை அவர்களின் வீட்டில் விட்டு சிந்தாவையும் சின்ராசையும் துணைக் கமர்த்தி, இங்கே கண்ணன் அவனின் வீட்டிற்கு மனைவியையும் மகனையும் அழைத்து வந்திருந்தான்.
இங்கே வீடு என்று தெரிந்த உடனே சுந்தரி மறுத்துப் பேச வாயெடுக்க, “உனக்கு போறதானா போ, அபி என்னோட தான் இருப்பான்” என்று கண்ணன் சொல்லிவிட,
என்ன அபியை விட்டு இருக்க முடியுமா? அதுவும் மதியம் நடந்ததில் ஏதாவது ஆகியிருந்தால், அவ்வளவு தான் யோசிக்க கூட முடியவில்லை. அந்த பயத்தில் வாக்காடாமல் கண்ணன் சொன்ன படி செய்தாள்.
மற்ற நாளாய் இருந்தாள் சுந்தரி இங்கே இரவு தங்குவதற்கு ஒத்துக் கொண்டு இருக்கவே மாட்டாள் இப்போது பயந்திருந்தாள். அதுவும் காலையில் கண்ணா கூப்பிட்ட போது அனுப்பியிருந்தால் இப்படி நடந்திருக்காதோ என்ற குற்ற உணர்ச்சி.  
“பையனை பைக் இடிக்க விட்டு, என்ன பண்ணிட்டு இருந்த?” என்று யாரும் கேள்வி கேட்பார்களோ என்று, அதையும் விட அபி தூக்கி எறியப் பட்ட காட்சி இன்னும் கண்முன் இருக்க, அதன் தாக்கமும் பயமும் இருந்தது.
சுந்தரிக்கு சற்றும் குறையாமல் கண்ணன் பயந்திருந்தான். அபிக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால், தனியாய் மகனையும் மனைவியையும் பார்த்துக் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.
அபி வீடு வந்ததும் அழுகை சற்று குறைந்து, எல்லோரோடும் ஒட்டிக் கொண்டான் அதுவரை அப்பாவை விட்டு அசையவில்லை.
ஆனால் சாரு சுந்தரியை பார்த்ததும் பிடித்துக் கொண்டாள். “காலையில நான் வந்தேன் தான அபியை கூப்பிட, என் கூட ஏன் அனுப்பலை? அனுப்பியிருந்தா இப்படி ஆகியிருக்குமா?” என்று அண்ணியிடம் சண்டை பிடிக்க,
ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் இருந்த சுந்தரிக்கு கண்களில் நீர் வந்தது.
அவளை மட்டுமல்ல கண்ணனையும் விட வில்லை. “நேத்தே நான் உன்கிட்ட சொன்னேன் தானே, அண்ணா பையன் உன்னை தேடறான். வண்டி சத்தம் கேட்டா ஓடறான்னு, அப்படி என்ன உனக்கு பெரிய வேலை பொடலங்கா வேலை. இங்க உட்கார்ந்து என்ன பண்ணின? காலையில நீ போய் அபியை பார்த்து இருக்கணும் தானே” என்று கத்தி விட்டாள்.
“யாரும் வேணும்னு செய்வாங்களா?” என்று சந்திரன் சமாதானம் செய்ய,
“பா, நீங்க சும்மாயிருங்க, தெரியாம நடந்தா சொல்லாம். நான் தான்  நேத்து ரெண்டு பேர் கிட்டயும் சொன்னேனே” என்றவள்,   
“நீ வாடா செல்லம், அப்பாவும் அம்மாவும் வேண்டாம் உனக்கு. அத்தை போதும் வா” என்று அவனை தூக்கி கொண்டு இட்லியை போட்டு வெளியில் வேடிக்கை காண்பித்து ஊட்ட படியில் அமர்ந்து கொண்டாள்.
அபராஜிதனும் சமத்தாய் அத்தை மடி மெத்தையடி என்று அமர்ந்து கொண்டான். ஓடவில்லை, சாப்பிட முரண்டு பிடிக்கவில்லை, அவனின் செப்பு வாயை திறந்து அழகாய் வாங்கி கொண்டான்.
சுந்தரியும் அவர்களோடு வந்து அமரப் போக,
“ஹாஸ்பிடல் போயிட்டு வந்தது. போ, போய் குளிச்சிட்டு வேற ட்ரெஸ் மாத்து” என்றான் கண்ணன்.
“ட்ரெஸ்சா அது எங்க இருக்கு?” என்ற பாவனையை கொடுக்க,  
அவன் அதற்கு பதில் எதுவும் சொல்லாமல், சாருவிடமும் “அவனுக்கு சாப்பிட வெச்ச உடனே, அவனுக்கும் உடம்பு துடைச்சு ட்ரெஸ் மாத்து” என்றான்.
“எல்லாம் எங்களுக்கும் தெரியும். பையனை அடிபட விட்டுட்டு பேச்சை பாரு. என்னைவிட சின்னவனா இருந்த என்கிட்டே அடி வாங்கி இருப்ப நீ, என் பட்டு குட்டி எவ்வளவு பயந்திருக்கும்” என்று அபியை அணைத்து பிடித்து அண்ணனை பார்த்து மிரட்டலாய் பேசினாள். நித்யா எல்லாம் வேடிக்கை மட்டுமே.  
“போடி” என்று அவளை பார்த்து சொல்லி, “வா” என்பது போல சுந்தரியை பார்த்து தலையசைத்து போனான். 
இதுவரை சுந்தரியிடம் “எதுக்குடி பையனை அடி பட விட்ட” என்று அவன் கேட்கவேயில்லை, சண்டையும் பிடிக்கவில்லை. அதுவே சுந்தரிக்கு ஒரு பயம் கொடுத்தது!
அதுவும் காலையில் கண்ணன் கேட்டும் அனுப்பவில்லை, அந்த பயம் வேறு இருக்க, இப்போது சாரு வந்ததும் சொல்லிக் காண்பிக்க, ஒரு சொல்லொணா பயப்பந்து தொண்டையிலும் வயிற்றிலும் உருண்டது.
மௌனமாய் அவனை பின் தொடர்ந்தாள்.
அவனின் ரூம் செல்லவும் “வாணி கல்யாணத்துக்கு இங்க வந்தப்போ ஒரு ரெண்டு புடவை இங்க வெச்ச ஞாபகம் இல்லையா?” என்றான்.
ஆம்! சுந்தரிக்கு ஞாபகமில்லை, அவள் அதனை எடுத்து குளிக்க செல்ல, “தலைக்கு ஊத்தாதே” என்று சொல்லி அவன் கதவை மூடி வெளியே சென்று விட்டான்.
சுந்தரி குளித்து உடை மாற்றி வர அரைமணி நேரம் ஆனது. அவளுக்கு இருந்த பயத்தில் வேகமாய் குளிக்கக் கூட வரவில்லை. கையில் ட்ரிப்ஸ் ஏற்ற குத்தியிருந்தது வேறு வலித்தது.
அவளை வீட்டை விட்டு அனுப்பிய பின் இங்கே இரவு தங்குவதும் இது தான் முதல் முறை, மனதில் அதுவும் ஒரு சஞ்சலம். 
அதையும் விட கண்ணனின் மனதில் என்ன ஓடுகின்றது என்று தெரியவில்லை.  
அதுவும் இதுவரை அவளை பரிவாய் பார்த்திருந்த எல்லோரும், இப்போது சாரு குழந்தையை அனுப்பவில்லை என்று பேசியவுடன் கோபமாய் பார்ப்பது போல ஒரு தோற்றம்.
அவள் வெளியே வரவுமே அது சரி என்பது போல், சந்திரன் அவளிடம் “உனக்கு நிறைய வேலை சுந்தரி, பாரு இங்க விமலா நாள் முழுசும் சும்மா தான் இருக்கிறா, காலையில இங்க அனுப்பிடு, அப்புறம் உன் வேலை முடிஞ்ச பிறகு கூப்பிட்டுக்கோ” என்றார்.
சுந்தரிக்கு எதுவும் பேச முடியவில்லை, சரி என்பது போல ஒரு தலையசைப்பு.
அதற்குள் அபிக்கு தூக்கம் வந்திருக்க, அம்மாவை தேட ஆரம்பித்து இருந்தான். சாரு அவளிடம் கொண்டு வந்து கொடுத்தாள்.
அங்கே சோஃபாவில் அமர்ந்திருந்த கண்ணன், “ரூம்ல அவனை தூங்க வை” என்று சொல்ல, மகனை தூக்கிக் கொண்டு சென்றவள் வெகுவாக தயங்கி, அபியை அந்த படுக்கையில் படுக்க வைத்து, அவளும் பக்கத்தில் படுத்தாள். அந்த மெத்தை சுகமாய் அவளை உள் வாங்கியது.
சுந்தரியின் அப்பா தேடித் தேடி தேக்கு மரம் எடுத்துக் கொடுத்து செய்த, முழுவதும் தேக்கிலான கட்டில். அதற்காக பார்த்து பார்த்து ஆட்களை வைத்து தைத்த இலவம் பஞ்சு மெத்தை!
“என் புள்ள வம்சம் தழைக்கணும், அவங்க சீரும் சிறப்புமா வாழணும்” என்று நினைத்து வாங்கியது. என்ன கெட்டுப் போயிற்று? மக்கள் செல்வத்துக்காக பலர் தவமிருக்க, இதோ அபி அவளின் அணைப்பில். ஆனால் இன்னும் வாழ தான் ஆரம்பிக்கவில்லை.
மகனை தட்டி கொடுக்க சில நிமிடத்தில் உறங்கி விட்டான். இவளுக்கு தான் வெளியே செல்ல தயக்கமாய் இருந்தது. அப்படியே படுத்திருந்தாள்.
சிறிது நேரம் கழித்து கண்ணன் வந்து எட்டி பார்த்தவன், மகன் உறங்கி விட்டான் என்று தெரிந்ததும் “வா சாப்பிடலாம்” என்றான்.
“இல்லை பசிக்கலை”  
“உனக்கு பசிக்குதா இல்லையான்னு நான் கேட்கலை, வா சாப்பிடலாம்ன்னு சொன்னேன்” என்றான் அதிகாரமாய்.  
அப்போதும் சுந்தரி தயங்க, “பரவாயில்லை வா, என் பிறந்த நாள் இல்லை இன்னைக்கு. சாதாரண நாள் தான். எந்த கொண்டாட்டமும் இல்லை. அதனால் நீ பழைய சாப்பாடு சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது” என்று நிதானமான குரலில் உரைத்தான்.
சுந்தரிக்கு கண்களில் நீர் நிறைந்தது. அதற்கு மேல் மறுத்துப் பேசாமல் எழுந்து கொண்டாள்.  அவனோடு நடந்து வந்தவள் கண்டது எல்லோரும் உறங்க போயிருக்க, இவர்கள் இருவர் மட்டுமே!
கண்ணனே சென்று இருவருக்கும் தட்டு எடுத்து வந்து வைத்தான், பின் அவனே இருவருக்கும் பரிமாறினான். ஒன்றும் பேசாமல் இருந்த உடல் களைப்பிலும் மன களைப்பிலும் வேகமாய் உண்டு விட்டாள்.
பின்பு எல்லாம் எடுத்து வைத்து உறங்க போக, அவள் சென்ற பிறகே கண்ணன் வந்தான்.
அபியை நடுவில் விட்டு சுவர் ஓரமாய் இவள் படுத்துக் கொண்டாள். அதிசயமாய் கீழே உறங்கும் நினைப்பு வரவில்லை. அந்த வீட்டில் அந்த கட்டிலில் முன்பே படுத்திருந்ததால் அவளுக்கு தனியாய் கீழே படுக்க தோன்றவில்லை.
கண்ணன் வந்து மற்றொரு புறம் படுத்துக் கொண்டவன், அபியை தூக்கி தன் மேலே போட்டு கொண்டான். அவனுக்கு ஏதேனும் ஆகியிருந்தால், மகனின் உறக்கம் கலையாமல் இறுக்கிக் கொண்டான்.
மகனை தட்டிக் கொடுத்துக் கொண்டே “கவனமா இருக்கணும் தானே, எப்படி கவனமில்லாம இருந்த?” என்றான் தணிவாகவே.
“ஏண்டி விட்ட? அப்படி என்ன உனக்கு கவனமில்லாம? ஒரு பையனை ஒழுங்கா உனக்கு பார்க்க தெரியாதா?” என்று இப்படிப் பட்ட வசவுகளை எதிர்பார்த்து சுந்தரி காத்திருக்க, இப்படி ஒரு அமைதியான அணுகுமுறையை எதிர்பார்க்கவில்லை.
மகனே உலகம் என்று வாழ்பவள், தெரியாமல் கூட இப்படி நடக்க விடமாட்டாள், ஆனாலும் நடந்து விட்டது. வீணாய் சுந்தரி மீது கோபப்பட்டு என்ன பயன் என்றே அமைதியாய் பேசினான்.   
“பார்த்துட்டே தான் இருந்தேன், பக்கத்துல தான் இருந்தான். ரோடுல வண்டி சத்தம் கேட்கவும் சிட்டா ஓடிட்டான்” என்றவளுக்கும் கண்களில் அந்த காட்சியை நினைத்து, அந்த நேரமும் உடம்பு அவளையறியாமல் தூக்கிப் போட்டது. 
“அவன் தான் என்னை தேடறான்னு தெரியும் தானே, அவனை என்கிட்டே அனுப்பியிருக்கறதுக்கு என்ன?” என்று கேட்ட குரலில் சற்று காரம் தெரிய,
கண் முன் விரிந்த காட்சியில், அப்போது வரை இருந்த பயத்தில், அவளையுமறியாமல் வார்த்தைகள் வெளிவந்தன..  
“அவன் மட்டுமா உங்களை தேடினான். நானும் தான் தேடினேன். நான் அனுப்பலைன்னா அவனை பார்க்க நீங்க வருவீங்க, எனக்கும் உங்களை பார்க்கணும் போல இருந்தது” என்று சொல்லும் போதே அழுகை வந்து விட, சொன்ன விஷயமும் மனதிற்கு ஏதோ செய்ய, சுவரை நோக்கி திரும்பி படுத்துக் கொண்டாள், கண்ணன் தன் முகம் காணாதவாறு
உடல் அழுகையில் குலுங்கியது.
குழந்தை தூக்கி எறியப்பட்டதில் இருந்து இருந்த பயத்திலும் பதட்டத்திலும், இப்போது அவளையையும் அறியாது அவளை நியாயப்படுத்த அவளே சொல்லிவிட்டாள்.
கண்ணன் எப்படி உணர்ந்தான் என்றே தெரியவில்லை.
அந்த அமைதியில் சுந்தரி அழும் சத்தம் தான் கேட்டது.
மகனை பக்கவாட்டில் படுக்க வைத்தவன், அவளை நெருங்க நினைக்கும் போது, மகன் சிணுங்க, சுந்தரி நிமிடத்தில் அழுகையை நிறுத்தி மகனிடம் திரும்பினாள். ஆனால் அதற்குள் கண்ணன் தட்டி கொடுக்க ஆரம்பித்து இருந்தான்.
கண்ணனுக்கு அந்த புறம் மகன் இருக்க, இவளுக்கும் மகனிற்கும் நடுவில் கண்ணன். சுவரோரமாய் படுத்து இருந்தவள் எழுந்து இறங்கி வந்து மகனுக்கு அருகில் படுத்து மகனை அணைத்துக் கொண்டாள்.
மீண்டும் இருவருக்குமிடையில் மகன்.   
கண்ணன் தட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தாலும், சிணுங்கி கொண்டிருந்த அபி, இப்போது அம்மாவின் அணைப்பில் சிணுங்களை நிறுத்தி உறக்கத்திற்கு செல்ல, அவர்களை பார்த்தபடியே கண்ணன் இருக்க,
அவசரப்பட்டு உண்மையை சொல்லி விட்ட தன் செயல் தனக்கே பிடிக்காமல், கண்களை மூடிக் கொண்டாள் சுந்தரி.     
சிந்தனை சிதற சிந்திவிட்ட வார்த்தைகள் சித்தம் கலங்கச் செய்ய கண் திறக்கவேயில்லை.
அவளை குறித்து அவளே வெட்கியவளாக, இதுவா நீ என மனதில் புதிதாய் ஒரு போராட்டம்!  
ஆனால் கண்ணனுக்கு சுந்தரியின் வார்த்தைகள் அவளை புரிய வைக்க, மனைவியை அணைத்தே ஆக வேண்டும் என்ற உந்துதல்.   
கண்ணன் எழுவது படுக்கையில் அசைவுகளில் புரிந்தது!
ஆனாலும் சுந்தரி கண் திறக்கவில்லை. மனம் மட்டும் திக் திக் என்று அடித்துக் கொள்ள அவளின் இதயம் துடிக்கு ஓசை அவளுக்கே கேட்க.
மனைவிக்கு இந்த புறம் வந்தவன் அங்கே மிக சிறியதாக தான் இடம் இருக்க, அதில் படுத்தான். இருந்ததே கொஞ்சம் இடம் அப்போது நெருங்கி தானே படுக்க வேண்டும்!
படுத்தவன் அவளை அணைத்து கொள்ள, அவனில் இருந்து விலக முற்பட்டாள். “நீ அசைஞ்சா அபி எழுவான், அதையும் விட நான் கீழ விழுவேன், இங்க இடமில்லை” என்ற கண்ணின் பேச்சு அவளை அப்படியே இருக்க செய்ய,
“ஒரு குழந்தையே பொறந்துடுச்சு, இப்போ தான் கட்டி பிடிச்சு தூங்கப் போறேன். அதுக்கு கூட விட மாட்டியா” என்று சலிப்பாக கண்ணன் பேச அதற்கு பிறகு சுந்தரியிடம் எந்த அசைவு மில்லை.

Advertisement