Advertisement

அத்தியாயம் இருபத்தி எட்டு :
யாரை பார்ப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் துரைகண்ணன்.
ஆம்! ஒரு சிறு அசம்பாவிதம், சிறுவாகப் போய்விட்டதில் கடவுளுக்கு அவன் நன்றி செலுத்தாத நேரமேயில்லை.
இரண்டு நாட்களாய் அப்பாவை காணாத மகன் ஒவ்வொரு வண்டி சத்ததிற்கும் கண்ணனை தேடினான்.
சாரு கூட முதல் தினம் மாலை சொல்லியிருந்தாள், “அபி, உன்னை தேடறாண்ணா, நான் இருக்கும் போதே வண்டி ரோட்ல சத்தம் கேட்கவும், அப்பா அப்பான்னு ஓடறான். நான் தான் பிடிச்சு தூக்கிக்கிட்டேன்” என்று சொல்லவுமே,
துரைகண்ணனுக்கு மனதே சரியில்லை!
அடுத்த நாள் காலையில் அவள் கல்லூரி கிளம்பும் முன்னமே “போய் அபியை தூக்கி வந்து இங்க விட்டுட்டு போ” என்றான்.
தங்கை சந்தேகமாய் பார்க்கும் முன்னரே “சாயந்தரம் என் வேலை முடிஞ்சிடும், நான் கொண்டு போய் விட்டுக்கறேன்” என்றான். சாரு தான் மிகவும் ஷார்ப் ஆகிற்றே. ஏற்கனவே கேட்டிருந்தாள் அப்படி என்ன பெரிய வேலை அண்ணியும் பையனையும் விட்டு இங்க வந்து உட்கார்ந்திருக்க என்று.
ஏதேதோ சொல்லி சமாளித்திருந்தான்.
சாருவும் இப்போது அபியை அழைக்க என்று சென்று, “அண்ணா குழந்தையை கூட்டிட்டு வரச் சொன்னான் அண்ணி” என்றதுமே சுந்தரி மறுத்து விட்டாள்.
“என்னவோ காலையில இருந்து அழுதுட்டே இருக்கான், என்னோடவே இருக்கட்டும்” என்று சொல்லி விட்டாள்.
உண்மையில் அனுப்பக் கூடாது என்பது இல்லை, மகனை பார்க்கும் ஆவலில் எப்படியும் கண்ணன் வருவான். அப்போது அவளும் அவனை பார்க்கலாம் என்ற ஒரே காரணம் தான்.
“அண்ணா அண்ணி அனுப்பலை” என்ற தகவலோடு, “எனக்கு காலேஜ்க்கு டைம் ஆச்சு” என்று சாரு கிளம்பிவிட, அப்படி ஒரு கோபம் கண்ணனுக்கு.
செய்யும் வகை தெரியாது உள்ளுக்குள் பொங்கி கொண்டிருக்க, மதியம் போல சிந்தாவின் அழைப்பு.
பதட்டமான குரலில் “தம்பி, நம்ம அபியை வண்டி இடிச்சிடுச்சு” என்று சொன்னது தான் போதும், மேலே என்ன என்று கேட்கும் திராணி கூட அற்றவனாக, கைபேசியை கீழே நழுவ விட, அது பாகம் பாகமாக கழன்றது.
ரூமை விட்டு வெளியே வேகமாய் வந்தால், வீட்டில் யாருமில்லை, அம்மாவும் சித்தியும் எங்கேயோ போயிருக்க, சந்திரனும் சண்முகமும் கூட இல்லை.
அவசரமாய் வீட்டை பூட்டினான், பரவாயில்லை கார் இருக்க அதனை எடுத்துக் கொண்டு அவ்வளவு வேகமாக விரைய, இவன் சென்ற நேரம் யாரோ நூத்தி எட்டிற்கு அழைத்துக் கொண்டிருந்தனர்.
கூட்டம் கூடி இருந்தது!
அது ஒரு பைக் இவனதை போலவே, அதனை ஓட்டி வந்த இளைஞன் குழந்தைக்கு ஏதும் ஆகிவிட்டதோ என்று நடுங்கிக் கொண்டிருந்தான்.
இவர்கள் வீடு இருப்பது செர்விஸ் ரோடில், அதனை தாண்டி பை பாஸ் ரோட், பொதுவில் டூ வீலர் மட்டுமே அதிகமாய் அந்த பக்கம் வரும்.
சுந்தரி, சிந்தா, அபி மூவரும் நர்சரியில் இருக்க, அப்போது தான் யாரோ செடி வாங்கி சென்றிருந்தனர், அதனால் நர்சரியின் கேட் திறந்து தான் இருந்தது.
அபி இருக்கும் போது அவன் ரோடிற்கு சென்று விடுவான் என்று எப்போதும் அதனை திறந்து வைக்க மாட்டாள், ஓபன் கேட் தானே, அதனால் உள்ளே ஆள் இருப்பது வெளியில் இருப்பவருக்கு தெரியும். அதனால் திறந்து வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.  
இப்போது கேட் திறந்து இருக்க, அவர்களும் கவனிக்கவில்லை.
அப்படி வரும் போது அந்த இளைஞன் ஹாரன் அடித்துக் கொண்டு வர, அப்பாவோ என்று பார்க்க சில நொடிகளே என்ற போதும் அபி வேகமாய் வெளியில் ஓடினான்.
அதனை நொடியில் கவனித்து விட்ட சுந்தரியும் “அபி” என்று கத்திக் கொண்டே பின்னே ஓட, பைக்காரனும் கவனித்து சடன் ப்ரேக் அடிக்க,
என்ன முயன்றும் குழந்தையை வண்டி தட்டி விட, அவன் தூக்கி எறியப் பட்டான்.
ஆனால் தெய்வாதீனமாக தூக்கி எறியப்பட்ட அபி, அங்கே வெளி கேட்டில் சுவரோரமாய் யாரோ எடுத்து செல்வதற்காய் வைத்திருந்த கட்டி வைத்திருந்த வைக்கோல் போரில் விழ, அவனுக்கு அடி ஒன்றுமில்லை, ஆனால் குழந்தை மயங்கியிருந்தான்.
அவன் தூக்கி எறியப்பட்டதை பார்த்ததுமே இங்கே சுந்தரியும் மயங்கி இருந்தாள்.
பைக்காரனும் சடன் ப்ரேக் அடித்ததில் அவனுமே வண்டியில் இருந்து தூரமாய் விழுந்திருந்தான், என்ன ஹெல்மெட் அணிந்திருந்தான் அதனால் தலையில் அடி இல்லை, மற்றபடி அவனுக்கும் கையில் பலத்த அடி, கையை அசைக்க கூட முடியவில்லை. இன்னும் அதனை என்ன என்று கூட கவனிக்கவில்லை.    
வடிவு பாட்டி அங்கே வந்தவர் இருவரையும் பார்த்து அப்படி ஒரு அழுகை.
இப்படி நடந்திருக்க தகவல் தெரிந்த ஐந்து நிமிடத்தில் உயிரை கையில் பிடித்து தான் கண்ணன் வந்திருந்தான்.
அவனுக்கு சுந்தரி மயங்கியது தெரியாது!
வந்து பார்த்தால் வடிவு பாட்டி சுந்தரியை மடியில் போட்டு அழ, சிந்தா அபியை கையில் வைத்து கண் கலங்கி நின்றிருந்தாள்.
அந்த காட்சி! அப்பப்பா மனதில் தோன்றிய ஒரு பயம், ஒரு பிசைவு, வார்த்தைகளின் வர்ணனைக்கு அப்பாற்பட்டது.  வேகமாய் அருகில் வந்து அபியை கையில் வாங்கி அபி அபி என்று கன்னத்தை தட்டிக் கொண்டே மனைவியை ஆராய்ந்தான். பின் மகனின் தலை, மூக்கு, காது என்று ஆராய, நடந்ததை பார்த்திருந்த சிந்தா “வைக்கோல் போர் மேல தான் விழுந்தான். ஆனால் வண்டி இடிச்சது” என்றதும் மகனின் உடலையும் ஆராய, காயம் எதுவும் கூட இல்லை.   
“பையனை பைக் இடிச்சதை பார்ததும் சுந்தரி மயங்கி விழுந்துட்டா” என்று சொல்ல,  
அந்த பைக் இளைஞனை எல்லோரும் சுற்றி வளைத்திருக்க “என் மேல தப்பு இல்லீங்க, குழந்தை தான் ஓடி வந்துடுச்சு” என்று அவன் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்.
நிச்சயம் அவன் சுதாரித்து இருக்க வில்லையென்றால் இந்நேரம் பெரிய அசம்பாவிதம் ஆகியிருக்கக்கூடும்.
உண்மையில் அவனுக்கு தான் சேதாரம் அதிகம். குழந்தைக்கு என்ன ஆகிட்றோ என்ற பதைப்பில் இருந்தான்.  
கண்ணன் அதற்கு மேல் நொடியும் தாமதிக்கவில்லை.   
இருவரையும் தூக்கி இவன் காரில் வைக்கவும், வடிவுப் பாட்டியும் மயங்கி இருந்தார்.
வீட்டின் உள் சென்று பணத்தை எடுத்து, வீட்டைபூட்ட நேரமில்லாமல் சிந்தாவை வீட்டில் விட்டு சுந்தரியின் கைபேசியை எடுத்துக் கொண்டு அங்கிருந்த, சின்ராசு மற்றும் வேறு இருவரோடு, ஹாஸ்பிடல் விரைந்தான்.
பதட்டம், பதட்டம், பதட்டம் மட்டுமே! சுந்தரியினதும் வடிவுப் பாட்டியினதும் மயக்கம் என்று தெரியும். ஆனால் அபிக்கு தூக்கி எறியப்பட்டதில் என்னவாகிட்றோ என்று பயம்.
இதோ எல்லோரையும் எமெர்ஜென்சிக்கு அழைத்து போயிருக்க, அதன் பிறகே சுந்தரியின் கைபேசியில் இருந்து அப்பாவிற்கு அழைத்தான்.
அவர்கள் எல்லோரும் ஒரு அரை மணி நேரத்தில் வந்து விட்டனர்.
“பாட்டியும், பையனும் கண்முழிச்சிட்டாங்க, எதுக்கும் எங்கேயும் அடி இருக்கான்னு செக் பண்றோம், குழந்தை அழறான் உள்ள வாங்க” என்று அழைக்க கண்ணன் சென்றான். வீரிட்டு அழுது கொண்டிருந்த அபி அவன் அருகில் செல்லவும் அவனை பார்த்ததும் “பா” என்று தாவ,
நிச்சயம் கட்டிலில் இருந்து கீழே விழுந்திருப்பான். ஓடிச் சென்று தான் கண்ணன் பிடித்தான்.
குழந்தையை அணைத்து பிடித்தவனுக்கு சூழ்நிலையின் கணம் தாங்காமல் கண்கள் கலங்கியது. சுந்தரி இன்னமும் கண் விழிக்கவில்லை.
மகனை அணைத்துப் பிடித்து தட்டி கொடுக்க அவனின் அழுகை மட்டுப் பட்டு தேம்பல் ஆகியது.
அங்கிருந்த டாக்டரிடம் “சர் ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே” என்றான்.
“நாங்க பார்த்தவரைக்கும் ஒன்னும் இல்லை, வண்டி ரைட் சைட் ஷோல்டரை ஹிட் பண்ணியிருக்கு. அதனால அங்க மட்டும் கண்ட்யுஷன் இருக்கு”
“பணம் பிரச்சனையில்லை டாக்டர், நீங்க எங்க எங்க சஸ்பக்ட் பண்றீங்களோ, அங்க எல்லாம் நல்லா பார்த்துடுங்க, ஸ்கேன் எக்ஸரே எதுன்னாலும் எடுங்க” என்று பதட்டமாய் பேசினான்.
“தேவைன்னா எடுத்துக்கலாம்” என்று அவர் சொன்ன போதும், மகனின் தலையை மீண்டும் மீண்டும் ஆராய்ந்தான், அடி எதுவும் பட்டிருக்கிறதா என்று. “மயங்கிட்டான் தானே ஒரு எம் ஆர் ஐ எடுத்துடுவோம்” என்று வேறு சொல்ல செய்தான்.
“சரி நாளைக்கு எடுக்கலாம், இப்போதைக்கு அவனுக்கு ஒன்னுமில்லை, நல்லா இருக்கான், அந்த பாட்டியும் நல்லா இருக்காங்க, அதிர்ச்சியில மயங்கிட்டாங்க, ட்ரிப்ஸ் மட்டும் போட்டிருக்கோம். ஆனா உங்க மனைவி தான் இன்னும் எழுந்துக்கலை”
“ஏன்?” என்று கண்ணன் கவலையாகக் கேட்க,
“அது ஒரு மாதிரி ஷாக், எலக்ட்ரோலைட்ஸ் குடுத்துட்டு இருக்கோம், மோஸ்ட்லி கொஞ்சம் நேரத்துல முழிச்சிடுவாங்க” என்றார்.
“குழந்தையை வெளில வெச்சிருங்க” என்று அவர் சொல்ல, குழந்தையை தூக்கி வெளியில் வந்தான்.
எல்லோரும் மாற்றி மாற்றி அவனின் அருகில் வர, மீண்டும் ஒரு அழுகை ஆரம்பித்தது அபியிடம், “ம்மா, ம்மா” என்று அவனின் அம்மாவை கேட்டு.
அவனின் அப்பாவின் தாடையை அவனின் பிஞ்சு கைகளால் பிடித்து அழ, “அம்மா, அபிக்கு சாக்கி வாங்க போயிருக்காங்க” என்று சமாதனம் செய்தான்.
குழந்தை அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு தேம்பினான். பார்த்த அனைவருக்குமே மனம் நெகிழ்ந்தது.
“சுந்தரியும் பாட்டியும் எப்படி இருக்காங்க?” என்று விமலா கேட்க,  
“பாட்டி கண் முழிச்சிட்டாங்க, சுந்தரி இன்னும் இல்லை” என்று அவன் சொல்லவும்,
எல்லோரும் சுந்தரி கண் விழிப்பதற்காக கணக்கும் இதயத்துடன் காத்திருந்தனர்.
இதில் அந்த பைக்காரனும் அந்த ஹாஸ்பிடல் தான் வர, அவனுக்கு கையில் எலும்பு முறிவு, “இவன் பைக்ல தான் பா அபிக்கு அடிபட்டது” என்று கண்ணன் சொல்ல, வேகமாய் சந்திரன் எழுந்தார் அவனை ஒரு கை பார்க்கும் எண்ணத்துடன்.
அவனோ அருகில் வந்தவன் “குழந்தைக்கு ஒன்னுமில்லையே” என்று கண்ணனின் கையினில் இருந்த அபியை ஆராய்ந்தான்.
“இல்லை” என்ற கண்ணன் “உங்களுக்கு ரொம்ப அடியோ” என்றான்.
“கைல தான் பிராக்சர், ஆபரேஷன் பண்ணனும் சொல்றாங்க, இங்க முதலமைச்சர் காப்பீடு திட்டம் இருக்கு இலவசமா பண்ணிக்கலாம் சொல்றாங்க, அப்பா கோயம்பதூர் போயிடலாம்னு சொல்றார்” என்றவன் “வர்றேங்க” என்று சொல்லிச் செல்ல,
“டேய், என்னடா நீ அவனை சும்மா விடற” என்று சந்திரன் கோபப்பட்டார்.     
“பா, அவன் மேல தப்பில்லை. சிந்தா கூட சொன்னாங்க சடன்னா ப்ரேக் அடிச்சிட்டான், இல்லை அபிக்கு ரொம்ப அடிபட்டிருக்கும்னு. அதான் விட்டுட்டேன்” என்றான் கண்ணன்.   
ஆனாலும் மனதிற்குள் “இப்படி பண்ணிட்டியேடா அபி” என்று மகனை கடிந்து கொண்டான்.
எல்லோரும் ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் அவர்கள் பணத்திற்கு தடுமாறுவது தெரிந்தது, அதனை பார்த்த கண்ணன், சந்திரனிடம் பணம் கொடுத்து கொடுக்கச் சொன்னான்.
சந்திரன் “வேண்டாம்” என்றார், “அப்பா அவன் மட்டும் சமயத்தில ப்ரேக் போடாம இருந்திருந்தா நம்ம அபிக்கு மோசமா அடிபட்டிருக்கும், குடுங்க” என்றான்.
இப்படியாக பஞ்சாயத்துக்கள் நடந்து முடிந்தன, அதுவரையிலும் சுந்தரி விழிக்கவில்லை.    

Advertisement