Advertisement

அத்தியாயம் இருபத்தி ஏழு :
கண்ணனுடன் பைக்கில் செல்லும் போது அத்தனை மன சுணக்கங்களும் குறைந்து மனம் அமைதியாய் உணர்ந்தது.
அவளின் அமைதிக்கு ஆயுசு இன்னும் ஐந்து நிமிடங்கள் என்று புரியாமல்.
அவன் வீடு சென்று பைக்கை நிறுத்த இவனை பார்த்ததும் நித்யா ஓடி வந்து “ஹேப்பி பர்த்டே அண்ணா” என்றாள்.
பைக்கின் சத்தம் கேட்கவும் அபியை தூக்கி வந்திருந்த கனகாவும் வந்து, “பிறந்த நாள் வாழ்த்துக்கள் கண்ணா” என்று சொல்ல,
பைக்கில் இருந்து இறங்கிய சுந்தரியின் முகம் முதலில் அதிர்ச்சியை தாங்கி பின் ஒரு நிராசையை சுமந்தது. அவளின் முகமே எதோ போல ஆகிவிட்டது. சுந்தரி அங்கேயே நிற்க கண்ணன் அவளை பார்த்துக் கொண்டே தான் இருந்தான்.
“இவ மட்டும் என்கிட்டே எதுவும் சொல்ல மாட்டா, நானே போய் இவ கிட்ட என் பொறந்த நாளுன்னு சொல்லுவேனா, போடி!” என்று நினைத்தவன்,
ஒன்று மே நடவாதது போல “இங்கேயே நிற்பியா உள்ள போக மாட்டியா” என்றான்.
சுந்தரி பொம்மையாய் உள்ளே செல்லவும் கண்ணனுக்கே மனதிற்கு கஷ்டமாக போய்விட்டது.
“என்னடா உனக்கு அவக்கிட்ட ஈகோ?” என்று அவனின் மனசாட்சி கேட்க,
“எனக்கு இல்லை, அவளுக்கு தான் என்கிட்ட இருக்கு” என்று அதற்கு பதில் சொல்லிக் கொண்டான். 
“சரி விடு, உனக்கும் எனக்கும் ஒரு டீல்” என்று மனசாட்சியிடம் பேசினான். “அவ மட்டும் நீங்க ஏன் என்கிட்டே உங்க பர்த்டே வை சொல்லலைன்னு சண்டை போடட்டும், நான் எல்லாம் விட்டு அவக்கிட்ட சாரி கேட்கறேன்”
“ஆனா அவ சண்டை போடலை, நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். அவளா நானான்னு பார்த்துடறேன்” என்று மனதிற்குள் முடிவெடுத்தான். மிக மிக மோசமாய் தோற்று போகப் போவது தெரியாமல்.
உள்ளே சென்ற சுந்தரியிடம் மகன் வந்து தாவ கைகளில் தூக்கி கொண்டாள். அவன் புது உடை அணிந்து இருந்தான். அந்த குட்டி கண்ணனுக்கு அது அழகாய் இருக்க மகனை உச்சி முகர்ந்தாள்.
கண்ணனும் உள்ளே வந்தவன் அவனின் ரூம் சென்று புகுந்து கொண்டான்.
“இன்னும் பத்து நிமிஷத்துல கிளம்பணும்” என்று சந்திரன் சொல்ல,
எல்லாம் ஆளுக்கு ஒரு புறம் வேகமாய் தயாராகினர்.
சுந்தரி அங்கே தனியாய் நின்றிருந்தாள், கூடத்தில் சந்திரனும் சண்முகமும் அமர்ந்திருக்க, அங்கே அமராமல் நின்றிருந்தாள்.
இவள் சோபாவின் பின் சற்று தள்ளி நின்றிருந்தாள், அதனால் சந்திரனிற்கும் தெரியவில்லை, சண்முகத்திற்கும் தெரியவில்லை.
அபியும் சத்தம் செய்யாமல் காலையில் இருந்து அம்மாவை பார்க்காததினால் அவளின் தோள் சாய்ந்து அமைதியாய் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தான்.   
அப்படி நிராதரவாய் நிற்கவும், அதுவும் கண்ணனின் செயலினால் மனம் வேதனையில் இருக்க, மனதிற்கு பழையன எல்லாம் ஞாபகம் வந்தது. அந்த வீட்டில் திருமணம் முடிந்து அவள் இருந்த நாட்கள்.  
விமலா இவர்கள் வந்ததை பார்க்கவில்லை, பூஜை அறையில் பூஜைக்கு வேண்டிய சாமான்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார்.
கண்ணனின் புது உடை அங்கே இருக்க அதை அணிவதற்காக ரூமின் உள்ளே சென்றவன், பின்னோடு சுந்தரியும் வருவாள் என்று நினைக்க அவள் வரவில்லை.
அவள் வரவில்லை என்றதும் “அபி” என்று குரல் கொடுத்தான், அவனை தூக்கிக் கொண்டு சுந்தரி வருவாள் என்று எதிர்பார்த்து.
கண்ணனின் குரலில் உணர்வு வரப் பெற்றவள், “அப்பா கூப்பிடறார் போ” என்று அவனை கண்ணின் ரூம் கதவை திறந்து உள்ளே விட்டு, பூஜை அறையில் விமலா தெரிய அங்கே சென்று விட்டாள்.
அபி மட்டுமே வர மெலிதாக கோபம் வர ஆரம்பித்தது கண்ணனிற்கு.
இதுவரையில் கண்ணன் சுந்தரிக்கு என்று எதுவுமே வாங்கியதில்லை, முதல் முறை அவளுக்கு ஒரு பரிசு வாங்கினான், அவர்கள் வாணி வீட்டு விஷேஷத்திற்கு செல்லும் போது கொடுக்கலாம் என்று நினைத்து.
அப்போது தானே சுந்தரி அவ்வளவு பிடிவாதம் காட்டினால் அதனால் கொடுக்கவில்லை. பின்பு கொடுக்கும்படியான ஒரு இணக்கமான சூழல் இல்லை.
இதோ அவனின் புது உடை எடுக்க அவனின் பீரோ திறக்கவும் அங்கே சுந்தரிக்கு வாங்கிய பரிசு இருக்க, இன்றைக்கு கொடுக்கலாம் என்று தான் அவளை உள்ளே அழைக்க, “அபி” என்றழைத்தான், ஆனால் சுந்தரி வரவில்லை.
மனம் பொறுக்காமல் “சுந்தரி” என்று அவளையே அழைத்தான். விமலாவுடன் பூஜை பொருளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் சுந்தரி.
“போ சுந்தரி, கண்ணன் கூப்பிடறான் பாரு” என்று விமலா சொல்ல, அவரின் பேச்சை தட்ட முடியாமல், அவனை பார்க்கும் விருப்பமில்லாது தான் சென்றாள்.
“ஒஹ், அவனின் பிறந்த நாள், என்னிடம் சொல்ல முடியாதபடி நான் வேண்டாதவளாகி விட்டேனா, இதோ இந்த வீடு தானே என்னை தப்பாய் பேசி துரத்தி விட்டது, கண்ணீர் வரும் போல இருக்க, இல்லை நீ அழக் கூடாது சுந்தரி!” என்று அவளினுள் ஒரு வைராகியம் வந்தமர்ந்தது.   
முதலில் ஒரு நிராசை, இப்போது கோபம், அது ஒரு இறுமாப்பை கொடுத்தது.
உள்ளே சென்றதும், “ஏன் நான் வந்தா, என்னோட உள்ள வரமாட்டியா நீ?” என்றான்.
சுந்தரி பதில் பேசாமல் அமைதியாய் நின்றாள், “என்ன ஏது” என்று ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை.
“வாயை தொறந்து ஏதாவது பேசுடி” என்றான் தளர்வாக.
“பேசலைன்னா பேச விருப்பமில்லைன்னு அர்த்தம்” என்று சுள்ளென்று சொல்ல,
“ஏன் பேச விருப்பமில்லை? என்ன பண்ணிட்டாங்க உன்னை?” என்றான் பொறுமையாகவே.
“அப்போதாவது ஏன் உங்க பொறந்த நாளை என்கிட்டே சொல்லலை” என்று சண்டையிடுவாள் என்று நினைத்தான்.
அய்யகோ, சுந்தரி அதனை கேட்கவில்லை, பதிலாய் “எனக்கு அதை சொல்ல விருப்பமில்லை” என்றாள் முறுக்கி.
சுந்தரிக்கு “நீ என்னை தள்ளி நிறுத்துகிறாய்” என்று கண்ணனிடம் சொல்ல முடியவில்லை, ஆனால் அந்த நிமிடம் மனம் ஸ்பஷ்டமாய் அப்படி தான் உணர்ந்தது கொண்டிருந்தது. அதன் வெளிப்பாடே அந்த பதில்கள்.   
கண்ணனுக்கு ஏனோ கடுப்பாக வந்தது, “ஏன்டா நீ வேற? அவ தான் அப்படின்னு தெரியும் தானே, விட்டுட்டு போகவேண்டியது தானே” என்று மனதிற்குள் தனக்குத் தானே நினைத்தவன்,
“நான் உனக்கு ஒன்னு வாங்கியிருக்கேன்” என்று சொல்லி அதனை பீரோவில் இருந்து எடுக்க திரும்ப,
சுந்தரியின் நாக்கினில் சனி தான் புகுந்து கொண்டது. “எனக்கு தேவையில்லை” என்று சொல்லி அபியை தூக்கி கொண்டு, என்ன? ஏது? என்று உணரும் முன்னமே வெளியில் நடந்து விட்டாள்.
வாணியின் திருமணத்தின் போது பணம் பற்றாமல் போய்விட, அப்போது தானே வேலையை விட்டு வந்தான். கார் வாங்கியது போக மீதம் கொஞ்சம் பணம் இருக்க திருமணதிற்கு பணமில்லை என்றவுடனே கொடுத்திருந்தான், இரண்டரை லட்சம் பணம்.
அதனை ஒரு மாதத்திற்கு முன்பு சண்முகம் திருப்பி கொடுத்திருக்க, அதில் அப்படியே சென்று நகை வாங்கியிருந்தான் சுந்தரிக்கு. அவன் எதுவும் இதுவரை அவளுக்கு வாங்கி கொடுத்தது இல்லை என்பதினால்.
இனி பணம் வந்தாலும் அது அவள் மூலம் தானே, அதனால் அவனுடைய சம்பாத்தியத்தில் இருந்த கடைசி பணம் என்பதால் வாங்கியிருந்தான்.
இன்று கொடுக்க நினைக்க, அவள் என்ன என்று கேட்காமல், அந்த இடத்தில் கூட நிற்காமல் முகத்தில் அடித்தார் போல சொல்லி சென்றது அவனை என்னவோ செய்தது.
“ஏன் நான் பிறந்த நாள் என்று சொல்லாமல் விட்டால் எனக்கு வாழ்த்து கூட சொல்ல மாட்டாளா? நான் எதற்கோ சொல்லவில்லை, ஆனால் அதை ஒரு சர்ப்ரைஸ் என்று கூட இவளால் எடுத்துக் கொள்ள முடியாதா?” என்று தோன்ற அவனுக்கு முகம் விழுந்து விட்டது.
அந்த நகையை சுந்தரிக்கு சர்பரைஸ் கொடுக்க வென்று மிகவும் ஆசையாய் வாங்கினான். அன்று வாணி வீட்டுக்கு போகும் போதும் பிடிவாதம் காட்டி நிற்க, கொடுக்க மனது வரவில்லை. இன்று என்ன என்று கூட பார்க்காமல் வேண்டாம் என்று சொல்லி போகிறாள்.   
கையில் எடுத்ததை பீரோவில் எரிந்து பூட்டினான்.
பின்பு எல்லோரும் கோவில் கிளம்பினர் , சாருவும் நித்யாவும் அண்ணியிடம் சலசலவென்று பேச, சுந்தரி எதையும் காண்பித்து கொள்ளாமல் அவர்களுடன் பேசினாள்.
கோவிலில் பூஜை கொடுக்கும் போதே சந்திரன் “என் பையனுக்கு இன்னைக்கு இருபத்தஞ்ஜாவது பிறந்தநாள்” என்று சொல்லி பூஜைக்கு கொடுத்தார்.
அப்போது கூட சுந்தரிக்கு ஒரு வாழ்த்து சொல்லலாம் என்று தோன்றவில்லை. அந்த சிவன் சன்னதி கூட அவளை அமைதிபடுத்தவில்லை.   
பின்பு பூஜை முடிந்து வந்தவுடனே விமலாவும் கனகாவும் விருந்து அமர்க்களப்படுத்த, கண்ணனுக்கு அந்த கோபத்தில் கூட ஒரு வயதான பெண்மணி பசியோடு இருப்பாரே என்று வடிவு பாட்டிக்கு முதலில் கொண்டு போய் கொடுத்து விட்டு வந்தான். 
பின் எல்லோரும் உண்ண “சுந்தரி எனக்கு வயிறு சரியில்லை அத்தை, எதுவும் வேண்டாம்” என்று சொல்லி, மதியம் சமைத்த உணவில் கொஞ்சம் மோர் விட்டு குடித்து விட்டாள்.
அங்கே சாப்பிடாமல் செல்ல முடியாது, ஆனால் அந்த விருந்தை சாப்பிடவும் இஷ்டமில்லை. அதனால் இப்படி செய்ய, பார்த்திருந்த கண்ணனுக்கு மனது மிகவும் விட்டு போயிற்று. “நான் யார் இவளிற்கு?” என்ற கேள்வி சூறாவளியாய் தாக்கியது. அவனுக்கு உணவே இறங்கவில்லை.
மனதை ஏதோ அழுத்தியது, பாரமாய் உணர்ந்தான்.
அவனாய் சுந்தரியுடன் வாழாமல் அவளை பற்றி தெரியும் முன்னரே சென்று விட்டான். ஆனால் அப்போது அந்த நிமிடம் தோன்றியது சேர்ந்து வாழ்ந்திருந்தாலும் விட்டு செல்ல தான் தோன்றியிருக்கும் என.     
சுந்தரியையும் மகனையும் அழைத்துக் கொண்டு வீடு சென்றவன், அவளிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவள் முன்னால் “எனக்கு அங்க வீட்ல கொஞ்சம் வேலையிருக்கு, ஒரு ரெண்டு நாள் அங்க இருந்துக்கறேன் பாட்டி” என்று சொல்லி அவனின் லேப்டேப்பை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
“பா” என்ற மகனின் அழைப்பிற்கு கூட நிற்கவில்லை,  மகனை பார்த்தால் மனது மாறிவிடுமோ என்று பயந்து திரும்பி கூட பார்க்காமல் சென்று விட்டான்.
அதுவரை அசையாமல் இறுமாப்பில் இருந்த சுந்தரியின் சர்வமும் அசைந்தது, “என்ன போகிறானா?”  
சுந்தரி இதனை கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. என்ன சண்டையிட்டாலும் அவளுடன் தானே இருந்தான். அதனால் செல்லுவான் என்று தோன்றியிருக்கவில்லை. விட்டுச் செல்லுவான் என்று க்ஷணமும் தோன்றியிருந்தால், இப்படி ஒரு கடுமையை காண்பித்து இருக்க அவளிற்கே வந்திருக்காதோ என்னவோ?   
சுந்தரி ஸ்தம்பித்து நிற்க, “என்ன கண்ணு விஷேஷம்? இத்தனை வகை செஞ்சு குடுத்து விட்டிருக்காங்க. மதியமும் இன்னைக்கு சாப்பாடு பலம் தான்” என்று பாட்டி கேட்க,
என்ன சொல்லுவாள்? “உன் ராசாவுக்கு பிறந்த நாள்” என்றா!
பிறகு அவர், “பிறந்த நாள் அதுவுமா உன்னோட இருக்காம ராசா ஏன் அங்க போகுது” என்று கேட்டால், அவள் என்ன சொல்லுவாள்?
“தெரியலை ஆயா” என்று சொல்லி மகனுடன் சென்று படுத்து கொண்டாள்.
அவளுக்கு ஞாபகம் கூட இல்லை, தோட்ட கேட்டை பூட்ட வேண்டும், முன் கேட்டை பூட்ட வேண்டும் என்று, அதெல்லாம் அவள் செய்வதை விட்டு விட்டாளே, எல்லாம் கண்ணன் தானே பார்த்துக் கொள்வான்.
உழைத்தாலும் ஒரு சௌகர்யமான வாழ்க்கைக்கு பழக்கப் படுத்தி இருந்தான். 
சிறிது நேரம் பொறுத்த வடிவு பாட்டி “கண்ணு. கேட்டை பூட்டு, எனக்கு இருட்டுல சரியா கண்ணு தெரியாது” என்றாள்.   
அதன் பிறகே எழுந்து எல்லாம் செய்தாள்.
பின்பு அவளின் வாழக்கை முன்பு போல ஆனது. ஆம்! இரண்டு நாட்களாக கண்ணன் இங்கே வரவேயில்லை, இதோ விடியற் காலையில் நான்கு மணிக்கு ஆரம்பிக்கும் அவளின் ஓட்டம் பழையபடி ஆகியது.
எல்லாம் கண்ணன் பொறுப்பேற்று சுந்தரிக்கு நிறைய வேலை குறைத்து இருக்க, எல்லாம் முன்பு அவள் செய்தது தான். இப்போது ஒற்றையாய் முடியவில்லை, உடல் அலண்டது.
“எங்க சுந்தரி உன் மாமன்?” என்று சிந்தா கேட்க, 
“வேலையாம் சிந்தா அதை பார்க்க அங்க இருக்கார்” என்று முயன்று மிக மிக சாதாரணமாய் சிந்தாவிடம் சொல்ல, அவளுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. 
அப்போதும் “அதுக்கா உன் முகம் இப்படி வாடி தெரியுது, இல்லை அபிக்கு தங்கச்சி பாப்பா ரெடியா?” என்று கேட்க,
“என்கிட்டே அடிவாங்காத ஓடிப் போயிடு” என்று சுந்தரி கத்தி விட்டாள்.
“ஆத்தாடி ஆத்தா! எவடி அவ, உன் மாமன் அவர் வீட்டுக்கு போனா என்கிட்டே ஏண்டி காயற, ஒரு ரெண்டு நாள் அவரை பார்க்காம ஒன்னும் முடியலையோ?” என்று சொல்லியே சென்றாள்.
இதில் அதிகம் தோய்ந்தவன் அபி தான். “பா, பா” என்று அவனின் அப்பாவை தேட ஆரம்பித்து இருந்தான். பைக் சத்தம் ரோட்டில் கேட்டால் கூட கேட் அருகே சென்று பார்த்தான்.
மகனின் இந்த செய்கையை பார்த்ததும் அப்படி ஒரு அழுகை பொங்கியது. எங்கே கண்ணன் தங்களை விட்டு சென்று விடுவானோ என்று அப்படி ஒரு பயமும், மன அழுத்தமும் வந்து அமர்ந்து கொண்டது சுந்தரியிடம்.   
அங்கே கண்ணனோ ஏதானும் அழைப்பாளா? அழைப்பாளா? என்று கை பேசியை, பத்து நிமிடத்திற்கு ஒரு முறை எடுத்து பார்த்தான். ம்கூம்! எந்த அழைப்புமில்லை!
பின்னே அவர்களுக்கே தெரியாமல் அப்பாவின், அம்மாவின், சாருவின் என்று எல்லார் கைபேசியையும் பார்க்க, எதற்கும் அவள் அழைக்க வில்லை.
இங்கே வீட்டில் யார் கேட்டாலும் ஒரு வேலை இன்னும் இரண்டு நாட்களில் முடிக்க வேண்டும் அது தான் இங்கே இருக்கேன் என்று சொல்லி, உணவுண்ண மட்டும் வெளியே சென்று பின்னே ரூமின் உள்ளேயே அடைந்து கிடந்தான்.
என்ன செய்வது என்று அவனுக்கு தெரியவில்லை?
ஒரு அழைப்பு கூட கிடையாதா என்று மனம் வெகுவாக விட்டுப் போயிற்று.
இதற்கு சாரு சென்று அபியை பார்த்து வந்தாள். பின்னே சந்திரன் ஏதோ வேலையாய் அங்கே சென்று வந்தார்.
ஏதோ ஒரு வகையில் சுந்தரியை போய் பார்த்து தான் வந்தனர். யாரிடமும் கண்ணனை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்டதாக தெரியவில்லை.
அபியை தூக்கி வர சொல்லலாம் என்று நினைத்தும் கூட, இப்போது தூக்கி வந்தால் சுந்தரி மிகவும் தனிமையாய் உணர்வால் என்று அவளுக்காக பார்த்தான்.
இருந்த நிராசையில் நண்பர்களிடம் பேசியவன் “எதாவது வேலை இருந்தா சொல்லுங்கடா, பையோடேட்டா உங்களுக்கு மெயில் பண்ணியிருக்கேன்”   என்று சொல்ல ஆரம்பித்து இருந்தான்.
சுந்தரியும் அபியும் எப்போதும் கண் முன்னே நின்றனர். இந்த் நேரத்திற்கு அது பண்ணனுமே பண்ணியிருப்பாங்களா? அந்த பணம் வாங்கலையே? வாங்கியிருப்பாளா? ஒத்தையா இந்நேரம் மோட்டார் போட போயிருப்பா என்று அதிகாலை நான்கு மணிக்கு விழிப்பு வர தோன்றியது.
இப்படியாக இரண்டே நாட்கள் தான் ஆனால் முழுக்க முழுக்க அவர்களின் நினைவே!  
இருந்த கோபத்திற்கு அவளை கன்னம் கன்னமாய் அறையும் ஆத்திரம் கிளம்பியது. “நான் வேண்டாமா உனக்கு? என்னை தேடவே மாட்டாயா நீ?” என்று.  
ஆம்! மனம் முழுவதும் பயமும் அழுத்தமும் இருந்தாலும் கண்ணனை மனது க்ஷணமும் விடாது தேடினாலும், சுந்தரி அதனை சிறிதும் வெளியில், காண்பித்து கொள்ளவில்லை. எப்போதும் போல அவளின் நாட்கள் செல்ல ஆரம்பித்தது.
வெளியில் கொஞ்சமும் காண்பித்து கொள்ளாவிட்டாலும், சுந்தரி ஏகத்திற்கும் உடைந்து போயிருந்தாள்.
மனசு தடுமாறும் அது நினைச்சா இடம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நினைப்பு நெஞ்சி குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்திவச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாராலே
      
   
   

Advertisement