Advertisement

கண்ணன் பேங்க் சென்று வரும் வரையிலுமே உறக்கம் தான். அபியை காலையிலே சந்திரன் வந்து அழைத்து சென்றிருந்தார்.
மகன் இருந்தால் கோழி தூக்கம் தூங்குவாள், அவன் இல்லையென்றதும் சுந்தரிக்கு அப்படி அடித்து போட்டார் போல ஒரு உறக்கம்.
இவன் உள்ளே நுழைய “இந்த புள்ள என்ன இப்படி தூங்குது, என்ன சமைக்கன்னு தெரியலையே, குரல் கொடுத்தாலும் எழுந்துக்கலை” என்று சொல்லிக் கொண்டே வடிவுப் பாட்டி சமைக்க போக,
“என்ன பாட்டி சமைக்க போறீங்களா” என்றான் அதிர்வை விழுங்கி,  
“ஆமாம் ராசா என்னவோ கூப்பிட்டாலும் எந்திரிக்காம அசந்து உறங்குறா சுந்தரி” என்றார்.
“அச்சோ, சுந்தரி சமைத்தாலே கொடுமை, இதில் பாட்டி சமைத்தால் கொடுமையிலும் கொடுமை” என்று உணர்ந்தவன்,
“ஒன்னும் பண்ணாதீங்க, இங்க கொண்டலாம்பட்டில கேட்டரிங் இருக்கு, ஃபோன் போட்டா பையன் சாப்பாடு கொண்டு வந்துருவான், ஒரு அரை மணிநேரத்துல” என்றவன் உடனே உணவை சொல்லியும் விட்டான்.  
கொண்டலாம்பட்டி அவர்களின் பக்கத்துக்கு ஊர், அங்கிருந்து சிறிது தூரமே!
“நீ சொன்னா சரி ராசா” என்று அவர் அமர்ந்து விட, “ஷப்பா” என்று மூச்சு விட்டான், “பர்த்டே அன்னைக்கு கொடுமையான சாப்பாடை சாப்பிட விடாம காப்பாத்திட்ட இறைவா” என,
விமலா அழைத்தார் தான் மாலை வருவதாக சொல்லிவிட்டான். எப்படியும் சுந்தரியை விட்டு போக முடியாது, அப்போது தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டான்.     
அதற்குள் செடி வாங்க நர்சரிக்கு ஆட்கள் வர சிந்தா அவனை அழைத்தாள். அவன் வேலை முடித்து வரவும் சொல்லியிருந்த உணவு வரவும், சிந்தாவை எடுத்து வைக்க சொன்னவன்,
“நிறைய தான் சொல்லியிருக்கேன், நீங்களும் இங்கேயே சாப்பிடுங்க உங்க வீட்டுக்காரர் வந்தாலும் அவரையும் இங்கேயே சாப்பிட வைங்க” என்று சொன்னவன்,
இன்னும் நான்கு மணிக்கு தானே ஆட்கள் பூப்பறிக்க வருவார்கள், வெய்யிலில் சென்று வந்தது அசதியாய் இருக்க, அவனும் உள்ளே சென்று   ஒரு தலையணையை எடுத்து போட்டு கீழே நீட்டி படுத்துக் கொண்டான், கவனமாய் கதவை தாள் போட்டு.
கதவை தாள் போடும் போதும் சுந்தரியின் பேச்சுக்களின் நினைவு, இதோ கீழே படுக்கும் போதும் சுந்தரியின் பேச்சுக்களின் நினைவு.
அதன் தாக்கத்தில் கண்ணனின் முகத்தினில் ரகசிய சிரிப்பு. அது அவன் உறங்கிய பிறகும் அவனின் முகத்தினில் இருக்க, சற்று நேரத்தில் விழித்த சுந்தரி கண்ணில் அது தான் பட்டது.
எழுந்தவள் யோசிக்கவேயில்லை, அவன் முன் மண்டியிட்டு அமர்ந்தாள். “தூங்கும் போது சிரிச்சிக்கிட்டே தூங்கறான், ஆனா முழிச்சிருக்கும் போது மூஞ்ச உர்ருன்னு வெச்சிக்கறான்”  
நல்ல முறுக்கு மீசை, அது அவனின் வயதை விட அவனை பெரியவனாய் காண்பித்தது. அதற்கு தானே அவன் அப்படி மீசை வைத்ததே. சென்னையில் இருந்து இங்கே வந்த பிறகு தான் அப்படி வைத்திருந்தான்.
பின்னே அவனுக்கு என்ன வயது இருபத்தி ஐந்து தானே!
மீசையை அவன் முறுக்கும் அழகே தனி!
அந்த மாதிரி கண்ணனின் மீசையை முறுக்க அவளுக்கு ஆசை, ஆனால் அப்படி ஒரு நெருக்கம் இல்லையே!
அதுவும் தோப்பில் இறங்கி வேலை செய்யவும், அந்த கடின வேலைகள் அவனின் உடலை முறுக்கேற்ற ஆரம்பித்து இருக்க, அவனின் தோள்கள் தினவெடுக்க, புஜங்கள் திரண்டிருக்க, சட்டையை கழட்டி பனியனுடன் உறங்கியிருந்தான், ஆனாலும் அந்த பனியன் அவனின் ஒட்டிய திண்மையான வயிற்றுப் பகுதியோடு பொருந்தியிருக்க… 
“ம்ம் செமையா இருக்கான், அது தான் இவனுக்கு என்னை பிடிக்கலை போல” என்று நினைத்தவளின் முகம் கூம்பி விட்டது.  
சத்தம் செய்யாமல் எழுந்து வெளியே சென்றாள்.
இப்படியாக கணவனை மனைவியும் மனைவியை கணவனும் உறங்கும் போது ரசித்தார்கள். விதி அவர்களை பார்த்து தலையில் தான் அடித்துக் கொள்ளும், “ஏன்டா டேய் என்னங்கடா பண்றீங்க ரெண்டு பேரும்” என்பது போல,  
வெளியே சென்றதும் சமைக்க பரபரப்பாய் பார்த்தாள்.
அங்கே வடிவு பாட்டியும் சின்ராசுவும் உண்ண, சிந்தா பரிமாறிக் கொண்டிருந்தாள்.
“நீ சமைச்சியா” என்று சுந்தரி கேட்க,
“நான் எங்க சமைச்சேன், உன்ற மாமன் தான் சாப்பாடு சொல்லிட்டார், அதுவும் இத்தனை வகை, எதுவும் விஷேஷமா?” என்று கேட்டாள்.  
“என்ன விஷேஷம்? ஒரு விஷேஷமும் இல்லை, அவர் சாப்பிட்டாரா?” என சுந்தரி கேட்கவும், இல்லை என்ற தலையசைப்பை சிந்தா கொடுக்க அவள் சுவர் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
அப்போது கூட எதற்கு இத்தனை வகைகள் ஏதாவது விஷேஷம் இருக்குமோ என்று சுந்தரி நினைக்கவில்லை.   
“நீயும் சாப்பிடு கண்ணு” என்று வடிவு பாட்டி சுந்தரியை பார்த்து சொல்ல,
“இந்தா கிழவி நீ பேசாம இரு, அவ மாமனுக்கு போட்டுட்டு அவ சாப்பிடுவா இல்லை ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடுவாங்க, இதென்ன தம்பி வீட்ல இருக்கும் போது நீ உன் பேத்தியை ஒத்தையா சாப்பிடக் கூப்பிடற” என்று அதட்டினாள்.
“நான் யோசிக்கலை புள்ள, எப்பவும் போல சொல்லிட்டேன்” என்றார் அவர்.
“முன்ன மாதிரி உன் பேத்தி தனி கிடையாது, பெருசு நீதானே சொல்லிக் கொடுக்கணும். என் புருஷன் சாப்பிடும் முன்ன நான் சாப்பிட்டா என் மாமியா என்னை குமட்டுல குத்தும்” என்றாள்.
“எங்கேயோ இருக்குற எங்கம்மாவை ஏண்டி இழுக்கற” என்று சின்ராசு ஆரம்பிக்க,
அவர்களின் சாம்பாஷனையை கேட்டுக் கொண்டு சுவர் சாய்ந்து தளர்வாய் அமர்ந்திருந்தாள்.  
பிறகு அவர்கள் சாப்பிட்டு மீண்டும் நர்சரிக்கு சென்று விட, வடிவு பாட்டி வெளியில் இருந்த கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொள்ள, சிறிது நேரத்தில் கண்ணன் விழித்து விட்டான்.
அவன் வரவும் சிந்தா சொன்னது நினைவு வர, “சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?” என்றாள்.
சுற்றி முற்றி பார்த்தவன் “என்கிட்டயா சொன்ன?” என்று நக்கலாய் கேட்க,
“இல்லை பக்கத்துக்கு வீட்டுக்காரன் கிட்ட சொன்னேன்” என்று அதையும் விட நக்கலாய் சுந்தரி சொல்ல,
“சரி, போய் அவனுக்கே சாப்பாடு போடு” என்ற வார்த்தை வாய் வரை வந்த போதும், அவனின் பிறந்த நாள் அன்று ஒரு சண்டை வேண்டாம் என்று நினைத்தவன்,
“சரியான வாயாடிடி நீ”
“ம்ம், ரொம்ப பெரிய கண்டுபிடிப்பு”
“அதென்ன புதுசா சாப்பாடு எடுத்து வைக்கட்டுமான்னு கேட்கற?”
“வந்து சாப்பாடு போடுடின்னு நீங்க கேட்க மாட்டீங்க, அது தான் நானே கேட்டேன்” என்றாள் விடாமல்.
“பாருடா செய்யறது எல்லாம் இவ, ஆனா குத்தம் மட்டும் என்னைய சொல்வா?” என்று குறை பட்ட போதும் கைகழுவி சாப்பிட அமர்ந்தான்.
அவள் எல்லாம் எடுத்து வைக்க “நீ சாப்ட்டியா?” என,
“இல்லை” என்ற அவளின் தலையசைப்பில் “நீயும் சாப்பிடு” என்றான்.
இருவருக்கும் சேர்த்தே அவள் எல்லாம் வைக்க பேச்சில்லாமல் இருவரும் உண்பதில் மட்டும் கவனம் செலுத்தினர்.
“அப்பா கோவில்ல பூஜைக்கு கொடுத்திருக்காங்கலாம் ஆறரை மணிக்கு நம்மை வரச் சொன்னார். ரெடியாகிடு போகணும்” என்றான் உண்டு முடித்ததும்.
அப்போதும் எதற்கு பூஜை என்று கேட்காமல், “அபியை கூட்டிட்டு வர்றீங்களா?” என்றாள்.
எதற்கு பூஜை என்று கேட்டால் சொல்லிவிடலாம் என்று தான் அப்போது நினைத்தான்.
“இல்லை அம்மா ரெடி பண்ணிடுவாங்க, நீ இங்க பூப்பரிச்சதும் நர்சரில போய் நிற்காம தயாராகிடு, இனிமே ஆறு இல்லை ஆறரை வரைக்கும் தான் நர்சரி இருக்கணும். இருட்டின பிறகு வேண்டாம், சிந்தாவையும் ஆறரை மணிக்கு அனுப்பிடு. நாள் முழுசும் நமக்கு வேலை செய்யணும்னு இல்லை. காலையில எட்டு மணில இருந்து ஆறு வரை போதும்” என்றான்.
காலை ஆறு மணியில் இருந்தே திறந்திருக்கும் இரவு எட்டு வரை, நேரம் மாற்றம் ஏன் என்ற பார்வையை சுந்தரி கொடுக்க,
“வீடு பக்கம்னால எப்போவும் போவோம்னு கிடையாது போதும்” என்று விட்டான்.
“சரி” என்பது போல தலையசைத்தவள்,
நான்கு மணிக்கு சென்று சற்று நேரம் நின்றவள் “பார்த்துக்கோங்க” என்று கணவனிடம் சொல்லி வீடு வந்து விட்டாள்.
கோவிலுக்கு பூஜைக்கு என்பதால் தலைக்கு ஊற்றினால் பரவாயில்லை என்று தோன்ற, தலைக்கு ஊற்றி அதனை காய வைத்து தளர பின்னி புது புடவை கட்டி என்று தயாராக,
அந்த மிதமான ஆரஞ்சு வர்ண டசர் சில்க் உடலோடு கச்சிதமாய் பொருந்தி, அவளின் தோற்றத்தை செழிப்பாய் மாற்றி காட்டியது.  
“ஏன் சுந்தரி போயிடுச்சு” என்று பூ எடைபோடும் போது சிந்தா கேட்க, “கோவிலுக்கு போறோம்” என்ற கண்ணனின் பதிலில், குண்டு மல்லியை நெருக்கமாய் கோர்த்து வட்டமாய் அதனை சேர்த்து கொண்டு வந்தவள் சுந்தரியின் தலையில் வைக்க,
சுந்தரியின் தோற்றமே புதிதாய் தான் இருந்தது.
“என்னடி ஒரு மார்க்கமா தான் இருக்க” என்று சிந்தா கிண்டல் செய்ய,
“ஆத்தாடி எதுவும் கோக்கு மாக்கா பேசாத, நான் கோவிலுக்கு போகணும்” என்று சுந்தரி அவசரமாய் சொன்னாள்.
“ஹ, ஹ” என்று வாய் விட்டு சிரித்த சிந்தா, “நல்லா இருக்க சுந்தரி, இப்படி தலை பின்னு, இப்படியே புடவை கட்டு” என்று சொல்லி சென்றாள்.
கண்ணன் எல்லாம் எடை போட்டு அனுப்பி வந்தவன், இவள் தயாராய் அமர்ந்திருப்பதை பார்த்ததும்,
“பார்றா, அதுக்குள்ள ரெடியா” என்று மனதினுள் நினைத்தவன், வேகமாய் சென்று அவனும் குளித்து வந்து பாட்டியிடம் சொல்லி கிளம்பினர்.  
தேவைகளும் தேடல்களும் தேடாதவரை மட்டுமே தேவையற்றது!  

Advertisement