Advertisement

அத்தியாயம் இருபத்தி ஆறு :
உறங்கியும் உறங்காமலும் இரவை கழித்ததினால் மனது சோர்வை உணர,
காலை தோட்ட வேலை முடிந்ததும் “நர்சரியை நீ பார்த்துக்கோ, நான் கொஞ்சம் நேரம் தூங்கறேன் சிந்தா, யாரும் செடி வாங்க வந்தா நீயே பார்த்துக்கோ, என்னை எழுப்பாதே இல்லை மாமாவை கூப்பிட்டு விடு”  என்று சிந்தாமணியிடம் சொன்னாள்.
ஆம்! கண்ணனிடம் பேசும் போது “மாமா” என்ற அழைப்பெல்லாம் இன்னும் வரவில்லை. வாங்க, போங்க, சில சமயம் அபி அப்பா, ஆனால் மற்றவர்களிடம் பேசும் போது “மாமா” என்றோ “என் மாமன்” என்றோ சொல்லப் பழகியிருந்தாள்.
சிந்தாவோ அருகில் ஆள் இருக்கிறார்களா என்று கூடப் பார்க்காமல், “என்னடி நைட்டெல்லாம் ஓவர் டைம் ஓவரா ஓடுதோ? அசதியா தெரியற?” என்று கண்ணடிக்க,
“ஏய், ஒழுங்கா வேலைய பாருடி, ஆன்னா ஊன்னா இவ ஒருத்தி” என்று புலம்பிக் கொண்டே நடந்தவள், “ஆமாம் நைட்டு ஓவர் டைம் ஓடுது, அது வெளில ஓடாம என் மேல ஓட கதவை பூட்டி வெச்சிருக்கேன்” என்று சலித்துக் கொண்டே செல்ல,
அங்கே தான் எதோ வேலையாய் கண்ணன் இருக்க அவனின் காதினில் நன்கு விழுந்தது.
“அடப் பாவிங்களா, பசங்களை விட இந்த பொண்ணுங்க பேசுறாங்களே” என்று மனதிற்குள் .வியந்தவன், .
“இவ என்னை தேடறாளா, அதுக்கா ராத்திரி தூங்காம கூட உட்கார்ந்து இருந்தா” மனதிற்குள் குழம்பி விட்டான். சுந்தரி தன்னை தேடுவாள் என்று நம்ப முடியவில்லை. அப்படி அவள் தேடுவது மாதிரி கண்ணன் உணர்ந்ததே இல்லை. என் மனைவி என்ற உணர்வு ஏகத்திற்கும் இருந்தாலும் மனதிற்கு நெருக்கமாக இது வரை உணர்ந்ததில்லை.
உண்மையில் கண்ணனை பற்றி சுந்தரிக்கு ஒன்றுமே தெரியாது. சுந்தரியை பற்றி கண்ணனுக்கு தெரியவிட்டதில்லை. அவனாய் பேச்சுக்கள் ஆராம்பிக்கும் போதே குத்தல் பேச்சு எட்டி பார்க்கும், பின் அவனிற்கு பேச்சை தொடர மனதிருக்காது.
ஒரு கட்டத்தில் கண்ணன் விட்டு விட்டான், உள்ளது உள்ளப்படி இருக்கட்டும் என்று.    
சில முறை நினைத்திருக்கிறான், பரவாயில்லை எனக்கு தண்ணி தம்முன்னு எதுவும் பழக்கமில்லை, இல்லை இவ பண்ற டார்ச்சர்க்கு நான் அடிக்ட் ஆகியிருப்பேன் என்று.   
எப்போதும் எதுவும் சொன்னால் முடியாது என்று தான் நிற்பாள். எல்லாம் அவளுக்காக மட்டுமே இருக்கும். பின்பு சலித்து விட்டு விட்டான்.      
“சரியான பிடிவாதத்துக்கு பேர் போனவ, புருஷன்னு எனக்கு இதுவரை இவ்வளவு கூட செஞ்சதில்லை, என்ன சமைக்கிறாலோ அதை நானா போட்டு நானா சாப்பிட்டு, என்ன என் துணியை எப்படியோ துவைச்சிடறா?
“இவ என் பொண்டாட்டியா என்ன? ஜஸ்ட் ஹவுஸ் மேட், சேர்ந்து வசிக்கறோம், சேர்ந்து வாழலை” என்று மனதிற்குள் நினைத்தவனுக்கு தெரியவில்லை அதெல்லாம் செய்யக் கூடாது என்று சுந்தரிக்கு எதுவுமில்லை.   
முதலில் தெரியவில்லை, இப்போது கவனித்து பார்த்து செய்ய நினைக்கும் போது இவன் முறுக்கி கொண்டு நிற்கின்றான்.
என்னவோ அவளின் பேச்சு சுவாரசியமாய் தோன்ற, என்ன செய்கிறாள் என்று பார்ப்போம் என்று நினைத்து வீட்டின் உள்ளே சென்றான்.
காலையில் இருந்து அம்மா தங்கைகள் என்று அழைத்து பேசியது மனதை ஒரு நல்ல நிலையில் வைத்திருந்தது. ஆம்! இன்று அவனின் பிறந்த நாள். இதோ சுந்தரிக்கு தெரியாது.  
சாரு ஒரு ஓட்டை வாய் எப்படியும் அவளின் அண்ணியிடம் சொல்லிவிடுவாள் என்று தெரிந்து நீ சொல்லக் கூடாது என்றிருந்தான். சாருவும் ஏன் எதற்கு என்றெல்லாம் துருவவில்லை.     
வடிவு பாட்டி ஹாலில் அமர்ந்து நாடகம் பார்த்து கொண்டிருக்க, அவள் ரூமின் உள் இருப்பது புரிந்தது.  
ஏதோ எடுப்பது போல உள்ளே சென்றான். அவள் வந்து ஒரு பத்து நிமிடம் தான் இருக்கும்.
நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். இரு கைகளையும் தலைக்கு மேல் நீட்டி, கால்களையும் நன்றாக நீட்டி படுத்து, வாய் சற்று பிளந்து இருக்க, அதுவே சொல்லியது அவளின் உறக்கத்தின் அளவை.
அபி எப்போதும் அப்படி தான் தூங்குவான்.    
அருகில் சென்று நின்று பார்த்தான். பார்த்தான் என்றும் சொல்லலாம், அவளின் தோற்றத்தை அளவிட்டான் என்றும் சொல்லலாம்.   
அவனுடனான திருமணத்தின் போது அவனின் தோள் உயரம் இருந்தது போல தான் இருந்தாள். ஆனால் இப்போது வளர்ந்து விட்டாள். முன்பு கவனித்து கிடையாது, இப்போது யோசித்து யோசித்து பார்த்தான். அவளின் தோற்றத்தை, ம்கூம் சற்றும் நினைவு வரவில்லை. ஆனால் இப்போது கவனித்தால் ஆங்காங்கே எல்லாம் கச்சிதமாய் இருக்க, நல்ல வடிவான பெண் என்று தோன்றியது.
அவளின் மங்கலான உடையும், நேர்த்தியற்ற புடவை கட்டும் அவளை மங்கிக் காட்ட, இப்போது அதனை மாற்றியதில் செழிப்பாய் தெரிந்தாள்.
முன்பு அவனுக்கு அசிங்கமாய் தோன்றிய முகத்தின் பரு இப்போது அழகாய் தோன்றியது.
உண்மையில் சுந்தரியிடம் அவன் காணும் மாற்றங்கள், அவளின் தோற்ற மாற்றங்கள் மட்டுமல்ல, அவனின் பார்வை மாற்றம் கூட.
சுந்தரி அப்படி ஒன்றும் பெரிய அழகியல்ல, ஆனால் பார்க்க பார்க்க கவரும் அழகி. அது அவளின் முக லட்சணம் கொடுக்கும் அழகு, உழைப்பு கொடுக்கும் அழகு, அதையும் விட அவளின் கர்வம், அது கொடுக்கும் அழகு.
ஆம்! சுந்தரி சற்று கர்வியே அதன் கொண்டே அவளால் நிமிர்ந்து நிற்க முடிந்தது.    
“என்ன பேச்சு பேசுகிறாள்?” வாய் அதிகம் தான் என்று தோன்ற பார்த்திருந்தான், “என்னை திட்டுவதிலும் சரி, மற்றவற்றிலும் சரி” என்று தோன்ற புன்னகை.
“நீ இடத்தை என் பேர்ல இருந்து மாத்தாத வரைக்கும் உன் பேச்சு கா தான், போடி!” என்று பார்த்தவன்,
“முன்ன விட கொஞ்சம் பளபளன்னு இருக்காளோ” என்று தோன்றியது
அவள் பெப்பரப்பே என்று தூங்க, வயிற்றுப் பகுதி புடவை விலகி வயிறு தெரிய, அதில் அபி பிறந்ததினால் உண்டான ஸ்ட்ரெச் மார்க்ஸ் இருக்க, அதனை பார்த்தவன், அதை தடவி பார்க்க கை போக , பின்பு அந்த கையை பின் இழுத்து, இன்னொரு கையால் புடவையை சரி செய்தான்.
“கண்ணு முழிச்சிருக்கும் போது தடவணும் தம்பி, அதுதான் வீரனுக்கு அழகு, புள்ள தூங்கும் போது தடவி பார்ப்பியா, கேவலம்டா” என்று அவனுக்கு அவனே பேசிக் கொள்ள, ஒரு புன்னகை முகத்தினில்  
“உனக்கு ஹார்மோன் ஆக்ஷன் சரியில்லை போல தம்பி” என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டு,
“எனக்கு இவள் மேல் ஆசையும் மோகமும் வரவில்லையா? காதல் அந்த வார்த்தை எங்களுக்குள் வருமா? அப்போது எங்களுக்கு இருப்பது என்ன? அன்பா இல்லை கணவன் மனைவி என்ற உறவின் கட்டாயமா?”
என்னென்னவோ யோசனைகள் எல்லாம் அவளை பார்த்தபடியே.
பின்பு உறங்கும் போதும் அவளின் முகத்தினில் தெரிந்த இறுக்கம் அவளின் பிடிவாதத்தின் அளவை காண்பிக்க,   
“எவ்வளவு அலட்சியம், எனக்கு கோபம் வரும்னு தெரிஞ்சும் நிறைய விஷயம் பண்றா. சரியான திமிர்!” என்று நினைத்துக் கொண்டே உடை மாற்றி பேங்க் வேலை இருக்க சென்றான். ஆனால் நிச்சயம் கோபமில்லை. சுந்தரி தன்னை தேடுகின்றாள் என்று தோன்ற அது ஒரு உவகையை கொடுத்தது.    
அவனுக்கு மனதில் அந்த நிலம் வேறு உதைத்துக் கொண்டே இருந்தது. பின்னே பத்து நாட்களாக இவன் முறுக்கி திரிய, இன்னும் நிலத்தில் போய் என்ன என்னென்ன செய்ய வேணும், பராமரிக்க ஆட்கள் தனியாய் நியமிக்க வேண்டும். தினக் கூலி வேண்டாம், மாத சம்பளம் சொல்வோமா, இப்படி பல யோசனைகள்.
இங்கானால் அவர்கள் பக்கம் இருக்கிறார்கள். அது தனியாய் ஒரு இடத்தில் இருக்கின்றது. அதற்கு பாதுகாப்பு செய்ய வேண்டும், அதையும் விட அதன் விளைச்சலையும் பார்க்க வேண்டும்.  
இன்னும் சுந்தரிக்கு அந்த யோசனைகள் இருந்த மாதிரி தெரியவில்லை.
அவனுக்கு எங்கே தெரியும் சுந்தரிக்கு கணவனை பற்றிய யோசனைகள் மட்டுமே என்று. ஆம்! கணவன் பார்த்துக்கொள்ளட்டும் என்ற யோசனையும் கூட, அந்த மண் அவளின் உயிர் மூச்சு, அதன் செழுமை அவளின் சுவாசம், எப்படி அவள் விடுவாள்.
ஆனால் தான் எதுவும் கேட்டால் பார்த்தால் ஏற்கனவே அவனின் பெயரில் வாங்கிய கோபத்தில் இருப்பவன், ஒதுங்கி விட்டால் என்ன செய்வது என்று ஒதுங்கி நின்றாள்.
எப்போதும் பராமரிக்கும் ஆட்களிடம் இப்போதைக்கு பார்த்துக் கொள்ளுங்கள் என்று சின்ராசு மூலமாக சொல்லி பணமும் கொடுத்திருந்தாள். இது கண்ணனுக்கு தெரியாது.      
இப்படி நிலம் மண் செடி மரம் கொடி என்று பார்த்திருந்த சுந்தரியை, சிவனே என்று இருந்த பிள்ளையை, இந்த சிந்தா வேறு அவ்வப்போது பேசி உசுப்பேற்ற, கணவனோ பேசாமல் கடுப்பேற்ற, இங்கோ அவள் கம்மென்று தான் இருந்தாள். ஆனால் வாழ்க்கை ஜம்மென்று ஒன்றும் இருக்கவில்லை.
சுந்தரிக்கு கணவனின் அன்போ? காதலோ? ஆசையோ? என்னவோ ஒன்று, மனது வேண்டும் வேண்டும் என்றது.

Advertisement