Advertisement

கண்ணனின் மனம் என்ன முயன்றும் அதற்கு ஒப்பவில்லை. “ஆசையாசையாய் ஒருவன் தன் மகளை திருமணம் செய்து வைக்க, அவளை விரட்டி விட்டு விவாகரத்தும் கொடுத்து, பின் இப்போது சேர்ந்த பிறகு அந்த மனிதனின் உழைப்பில் வந்த பணத்தில் இவன் பேரில் இடமா?” – மனதை வாள் கொண்டு அறுத்தது.
அதற்காக விட்டு செல்லவும் முடியாது. ஏற்கனவே சென்று வந்திருக்கிறான். இனியும் சென்றால் தலையிறக்கம் அவளுக்கோ, எனக்கோ, யாருக்கோ ஒருவருக்கு தானே? அதையும் விட அபி அவனை எப்படி விட முடியும்? அதையும் விட சுந்தரி, அவளையும் விட முடியாதே!
முன்பு போல அவன் ஒன்றும் சிறு பையன் அல்லவே, ஆத்திரத்தில் முடிவெடுத்து, அவகாசத்தில் வருந்துவதற்கு!
இன்னம் வெளியில் தான் உறங்குகிறான், சுந்தரியும் சொன்னால், “உள்ள வந்து படுங்க” என்று.
“இவ்வளவு நாள் கூப்பிட்டியா? இப்போ மட்டும் என்ன? போடி!” என்று விட்டான். சொல்லத் தான் முடியும் அதற்கு மேல் என்ன செய்வது என்று சுந்தரிக்கும் தெரியவில்லை.
இப்போதெல்லாம் அவளின் மனம் நினைக்க ஆரம்பித்தது, தனக்கு திருமண வாழ்க்கை வாழ தெரியவில்லையோ? இல்லை இவனுடன் எனக்கு ஒத்துப் போகவில்லையோ? என்பது போல.  
பொறுத்து பொறுத்து பார்த்த வடிவு பாட்டி இன்று அவனுக்கு முன்பாக அந்த கட்டிலை இடம் பிடித்துக் கொண்டார்.
அவரும் சுந்தரியிடம் சொல்லி பார்த்தார். அவளோ “நான் கூப்பிடறேன் அவர் வரலை” என்று விட்டாள்.
அதனால் விரைவாக வந்து அவன் உறங்கும் கயிற்றுக்கட்டிலை பிடித்து விட்டார்.
“நான் இங்க தூங்கறேன் ராசா, நீ உள்ள படு!” என்று விட்டார்.
“அவ ஏதாவது செஞ்சா அடிச்சுக் கூட திருத்து ராசா, ஆனா இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் இருக்காதீங்க” என்று சொல்லும் போதே அவரின் கண்கள் கலங்கி விட்டது.
“ஏன் பாட்டி ஏன்? நானு உங்க பேத்தியை அடிக்கறது! நீங்க என்னை அடி வாங்க வைக்க ப்ளான் போடறீங்க” என்று சிரிப்போடே சொன்னவன், “அவ அடிச்சு திருத்தற அளவுக்கு என்ன தப்பு பண்றா? நீங்க சொல்லலாமா இப்படி?” என்றான் சுந்தரியை விட்டுக் கொடுக்காமல்.  
“அவ தப்பு பண்ணலைன்னா நீ ஏன் ராசா தள்ளி நிக்கற?”  
“பாட்டி நீங்க என்கிட்டயே போட்டு வாங்கறீங்க, இதெல்லாம் வேண்டாம்” என்று செல்லமாய் மிரட்டியவன், “நான் உள்ள போகணும் அவ்வளவு தானே போறேன்” என்றவன்,
“நீங்களும் உள்ள படுங்க, காத்து விசு விசுன்னு அடிக்குது. விடியக் காலையில குளிரும் அதிகமா இருக்கு, நீங்க உள்ள படுங்க” என்று சொல்லி விட்டான்.  
பின் கண்ணன் படுக்கை அறை வர, இவனை அங்கே பார்த்ததும் அப்போது தான் அம்மாவின் அருகில் உறங்க சிணுங்கிக் கொண்டிருந்த அபி, அப்பாவை பார்த்ததும் குஷியாகி என்ன என்று சுந்தரி அனுமானிக்கும் முன்னரே கட்டிலை விட்டு இறங்கி விட்டான்.
அச்சோ அடிபட்டதோ என்று பதறி இருவரும் பார்க்க, இல்லை, அப்பாவை பார்த்த குஷி ஓடி வந்து கால்களை பிடிக்க,
“ஏன்டா இவ்வளவு நேரம் உங்கப்பாவோட தானே இருந்த? என்னடா ரொம்ப நாள் பிறகு பார்க்கற மாதிரி இந்த குதி குதிக்கற?” என்று சுந்தரி சலிக்க,
“ம்ம்கூம், அதெல்லாம் அபராஜிதனின் காதினில் விழுந்தால் தானே”
“பா, தூக்கி, தூக்கி” என, மகனை தூக்கி முத்தமிடவும் அதனை ஆசையாய் பார்த்திருந்தாள்.
பின் “நீங்க ரெண்டு பேரும் மேல படுத்துக்கோங்க, நான் கீழ படுக்கறேன்” என்று சொல்ல,
“என்ன புதுசா? இவ்வளவு நாள் நான் இங்க கீழ படுக்கும் போது சொல்ல தோணலை, இப்போ மட்டும் என்ன?” என்றவன்,
“நாங்க கீழ படுக்கறோம்” என்று போர்வையும் தலையணையும் எடுக்க,
“அபி சரியா தூங்க மாட்டான் அவனுக்கு உடம்பு வலிக்கும்”
“எங்கம்மா கூட என்னை இப்படி தான் வளத்தாங்க, ஆனா நான் இப்போ தூங்கலை. எங்கம்மா பெத்த மகனை இப்படி தானே விட்ட, இப்போ நீ பெத்த மகன் மட்டும் என்ன ஒஸ்தி?” என்றான்.
இத்தனை நாள் பேசக் கூட இல்லை, இன்று இடக்கு மடக்காயேனும் பேசுகிறானே என்று நினைத்தவள் பதில் எதுவும் பேசவில்லை. அவளுக்கு அவன் உள்ளே வந்ததே போதுமானதாய் இருந்தது.
இன்னும் சமையலறையில் ஒதுங்க செய்யவில்லை. மகன் உறங்கியதும் செல்லலாம் என்று நினைத்திருக்க, இப்போது கண்ணன் வரவும் அவனிடம் விட்டு வெளியே சென்றாள்.   
பின் வேலை முடித்து அவள் வந்த போது அப்பாவின் நெஞ்சினில் சுகமாக அவன் உறங்கியிருந்தான். கண்ணன் கண்மூடி இருக்க அவன் உறங்கி விட்டானா இல்லையா என்று கூட அவளுக்கு தெரியவில்லை.
கண்ணன் மகனை இறுக்கி அணைத்திருக்க, இப்போது அபியை தூக்குவதா வேண்டாமா தெரியவில்லை. மகனை மார்பில் சொகுசாய் துயில் கொள்ள செய்திருந்தான். கீழே படுக்க போடவில்லை.  
சரி அப்பாவிடம் தூங்கட்டும் என்று நினைத்து அவள் மேலே கட்டிலில் படுக்க, அபி பிறந்ததில் இருந்து, அபியை பக்கம் போட்டு தட்டி கொடுத்து தூங்கி பழகி விட்டாள். அவன் அருகில் இல்லாமல் தூக்காம் வருவேனா என்றது
விடி வெள்ளியின் வெளிச்சத்தில் அப்பாவையும் மகனையும் பார்த்தே விழித்திருந்தாள், உறக்கம் வரவேயில்லை.
இப்போது ஒரு பக்கமாக கண்ணன் படுத்து அபியை அணைத்து பிடித்திருந்தான்.
அதையே ஏக்கமாய் பார்த்திருந்தாள் சுந்தரி!
அந்த மாதிரி கண்ணன் அவளை அணைத்ததே இல்லை. சுந்தரி கண்ணனின் கைக்குள் அடங்கி அவனின் மார்பில் துயில் கொண்டதேயில்லை.
“அவன் சொன்னதை நான் கேட்கவில்லை தான். ஆனால் ஒரு நாள், ஒரு இரவு கூட இங்கே அவன் வீடு வந்த பிறகும் என் அருகில் இப்படி படுத்ததேயில்லையே”
“அப்போது எதற்கு வந்தான்? ஊருக்காகவா இல்லை மகனிற்காகவா?”
“எனக்காக வரவில்லையா? நான் நன்றாக இல்லையா?” அவன் நன்றாய் இருக்கிறான்! அதனால் அவனுக்கு என்னை பிடிக்கவில்லையா? அதனால் தான் அருகில் வரவே மாட்டேன் என்கிறானா?” என்றவளுக்கு அப்போதே எழுந்து கண்ணாடி பார்க்க ஒரு உந்துதல்!
மெதுவாய் சத்தம் செய்யாமல் எழுந்து அங்கே சுவரில் மாட்டியிருந்த கண்ணாடி பார்த்தாள்!
“அப்படி ஒன்றும் பெரிய அழகில்லை தான் நான், ஆனால் சகிக்க முடியாமல் என் முகம் இல்லையே” என்ற எண்ணம் ஓடியது, பின் தன் மேல் எதுவும் அவனுக்கு ஒவ்வாத வாசனையோ என்று தோன்ற தன்னையே கழுத்தை திருப்பி தன்னையே முகர்ந்து கொண்டாள்.
அதுவும் எதுவுமில்லை. இப்போது தான் அவள் மாலை தோட்டத்தில் இருந்தது வந்ததுமே குளித்து வேறு புடவை கட்டிக் கொள்கிறாளே!
அதுவும் அவளுக்கு பொருத்தமான வண்ணங்களில் உடலோடு கச்சிதமாய் பொருந்திய ஜாக்கெட்டும் புடவை கட்டும் என மாறிவிட்டாள். கண்ணன் மிகவும் விரும்பிய மாற்றம், ஆனால் அவனின் கண்ணில் பட்டதாக கூட தெரியவில்லை.  
இதோ சென்ற வாரம் சாரு வேறு அவளுக்கு பேஸ் பேக் ஒன்று வாங்கி கொடுத்திருக்க அதை வேறு தினமும் போடுகிறாளே!
ஒரு மதிய வேலை தோட்டத்தில் எல்லோரும் வேலையாய் இருக்க “வேண்டாம், வேண்டாம்” என்று சுந்தரி மறுக்க மறுக்க ஒரு பெண்ணை அழைத்து வந்து அவளுக்கு ஐ ப்ரோ செய்து பேஷியல் செய்து விட்டாள் சாரு. இன்னும் சுந்தரியின் முக வசீகரம் கூடியது. இதோ அவளின் முகத்தில் இருக்கும் சிறு பருக்கள் கூட அவளுக்கு அழகாய் தான் இருந்தது.   
அதெல்லாம் நினைவு வர இப்போது முகத்தை திரும்ப கண்ணாடியில் பார்க்க, எப்படி பார்த்தாலும் முன்பு போல ஏனோ தானோ வென்று இல்லை, நன்றாய் இருப்பதாய் தான் சுந்தரிக்கு எண்ணம்.
“என்ன நிறம் கொஞ்சம் குறைவு நான்! ஆனால் கருப்பில்லையே! என் உடல் கட்டும் வடிவாய் தானே இருக்கிறது!”
முன்பாவது அருகில் சற்று நெருங்குவான், கன்னத்து முத்தங்கள் தாராளமாக இருக்கும், இதழ் முத்தம் அது முத்தமா அவளுக்கு தெரியாது அவன் வைப்பதும் தெரியாது, எடுப்பதும் தெரியாது.  
ஆனால் இப்போதெல்லாம் இரண்டடி தள்ளி தான் நிற்கிறான்.  
என்னவோ தெரியவில்லையே என்று மனம் முழுவதும் நிராசை சூழ்ந்தது.
கணவனோடும் மகனோடும் படுக்க பேராவல் எழுந்தது. என்னவானாலும் அவளாய் அருகில் சென்று படுக்க முடியவில்லை.  படுக்கையில் சுவர் சாய்ந்து அமர்ந்தவள் முகத்தை காலில் புதைத்து கொண்டாள்.
அபி அருகில் படுத்திருப்பதால் கண்ணன் உறக்கத்தில் புரண்டவன், மகனை திருப்பி ஒரு பார்வை பார்க்க, அவன் ஆழ்ந்து உறக்கத்தில் இருக்க, போர்வையை எடுத்து அவனுக்கு சரியாய் போர்த்தி விட்டான்.
சுந்தரியை பார்க்க அவள் அமர்ந்திருந்த கோலம் அவனை வேகமாக எழுந்து அமர வைத்தது.
“என்ன சுந்தரி? என்ன ஆச்சு? ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க?”  
அவனின் குரலில் நிமிர்ந்து அவனை பார்த்தவள், மெல்லிய குரலில்  “தூக்கம் வரலை” என்றாள்.
“ஏன் உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?”  
“ம்ம், உன்னை கட்டி பிடிக்கணும்னு தோணுது” என்று சொல்லிவிடலாமா என்று வாய் வரை வந்ததை உள்ளே விழுங்கியவள், “அவ்வளவு வெட்கம் கெட்டவளா நீ?” என்று தோன்ற மலுக்கென்று கண்களில் நீர் வந்தது.
“இல்லை, நல்லா தான் இருக்கேன்” என்றவளின் கண்களில் மெல்லிய நீர்படலம்.
“என்ன உன் பையனை பிடிங்கிட்டேன்னு தான் இப்படி இருக்கியா?” என்றான் சுள்ளென்று கோபம் பெருக. முன்பே இப்படி ஆனது தானே!
“இல்லை சொன்னா நம்பணும்” என்று சுந்தரியின் குரலில் சீற்றம் ஏறியது.
“அப்புறம் ஏண்டி அர்த்த ராத்திரில இப்படி உட்கார்ந்து இருக்க” என்று கண்ணன் கடுப்புடன் கேட்க,
“ம்ம் வேண்டுதல்” என்று நக்கல் குரலில் சொன்னவள், அமைதியாய் படுத்துக் கொண்டாள்.
“ஏத்தம் ஏறிப் போச்சுடி உனக்கு” என்று அவனும் மகனின் அருகில் படுக்க,
“முடிஞ்சா ஏறி அடக்க வேண்டியது தானே” என்று மனதில் நினைத்தாலும் சொல்லவில்லை.   
பனி படர்ந்த கனவுகள்!
பனித்திரை கண்ணிலா? முன்னிலா?  
   

Advertisement